Friday 25 October 2013

வாகனங்களும் ஒரு வளர்ந்த பயிரே

 "இன்றைக்கு .........ஊரில் நாலு பஸ்ஸைக்  கொளுத்திட்டாங்களாம்.
மூணு பஸ்ஸை  அடிச்சு நொறுக்கிட்டங்களாம் .
ஒரு ரெண்டு  பஸ்ஸை  மிக்சர் மாதிரி தூள் பண்ணிட்டாங்களாமே   "  


ஒரு பத்து வருடம் முன்பு இது போன்ற வாய் வழிச் செய்திகள் , தொலைக்காட்சியின் காணொளிச்செய்திகள்    மற்றும் செய்தித்தாள் செய்திகள் என்னை சுத்தமாக சொல்லப்போனால்  ஒரு கடுகளவு கூட பாதித்ததில்லை .

ஒரு வேளை நான் சொந்தமாக பஸ்ஸூ எதுவும் வைத்திருக்காத காரணமா  என்னவோ  தெரியவில்லை .
 நான் முதன் முதலில் இது போன்ற வாகனங்களைக் கொளுத்தும்
நிகழ்வுகளைப் படிக்க நேரிட்டது 1960 களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்   போதுதான் .
அப்போது நான் ஏழு அல்லது எட்டு வயதுச்சிறுமி யாக இருந்த காலம் .அப்போதுதான்
" அட !கோபம் வந்தால் பஸ்ஸை நொறுக்கலாம் போலே "
என்ற   உலக மகா உண்மையை உணர்ந்து கொண்டேன்

ஆனாலும் இது வரை எந்த பஸ் மீதும் கல்லை விட்டு எறிந்ததில்லை
.பயமா அல்லது .பஸ்ஸின்  அருகே கல் எதுவும் என் கண்ணுக்கு அகப்படாததும் ஒரு காரணமா  என்றும் தெரியவில்லை .
வாழ்நாளில்  அப்படி ஒரு வீர சாகசம் பண்ணவில்லை என்பது நிஜம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின் பல முறை பல பஸ் எரிக்கும் நிகழ்வுகளைப்  படித்த போதும் கூட
 "இது என்ன புதுசா  ? நார்மலாக நடக்கும் ஒரு நிகழ்வுதானே"  என்று
அந்த செய்தியின் முழு விவரமும் படிக்காமலே அடுத்த பத்திக்கு கண்  ஒரு  லாங் ஜம்ப் செய்துவிடும்.
 அந்த பஸ் எரிப்புகள் பற்றி கவலைப் பட்டதும்  கிடையாது ..

.மேலும்  பலரால்  இது  சமூக அவலங்கள்  மற்றும் சமூக அநீதியைத்  தட்டி கேட்கும் ஒரு ஜனநாயக முறை என்பது போன்ற எண்ணம் எழுத்துவடிவில் சொல்லப் படாவிட்டாலும் மனதளவில் நினைக்கப் படுவது மறுக்கப் படமுடியாத உண்மை .

ஒரு பத்து வருடம் முன்பு கார் பஸ் போன்ற வாகனங்கள் நம்மை வேண்டும் இடத்திற்கு ஏற்றிச் செல்லும்  நாலு சக்கரம் கொண்ட ஒரு தகரக் கூடு என்ற அளவில் தான் ஆட்டோமொபைல் பற்றிய எனது அறிவு இருந்தது
.அது பற்றி தெரிந்துகொள்ள  ஆர்வம் இல்லாதது
எனது  தொழில் வங்கிப் பணி என்பதாலும்
வாகனங்கள் எதுவுமே ஓட்டத்தெரியாத காரணத்தாலும்
என்று கூடச்  சொல்லலாம் .

ஆனால் நான் ஒரு கார் உற்பத்தி பண்ணும் தொழிற்சாலையில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்த போதுதான்  நான்  இதுவரை வாகனங்களின் மீது கொண்ட எண்ணத்தைத்   தலை கீழாய்ப்  புரட்டிப் போட்டு விட்டது .
வாகனங்களின் ஒரு ஒரு சிறிய பாகங்களுக்குக் கூட பல முறை "டிரையல் ரன் கள் " செய்யப்படுகின்றன .
அந்த சரியான சைஸு செய்வதற்குள் எத்தனையோ பேர்  எவ்வளவு பாடு பாடுபடுகின்றனர் .
அதுவும்  பாகங்கள் உற்பத்தி பண்ணும் இடம் என்பது  சுகமான குளிர்சாதனம் உள்ள இடம் கிடையாது.
 ஏப்ரல் ,மே மாதங்களில் ஆஸ்பெஸ்டாஸ்  கூரையின் கீழ் வேலை செய்யும் கடுமை அதுவும் ஆசுவாசமாக உட்கார்ந்து அல்ல நின்று கொண்டே ! வார்த்தைகளில்  விவரிக்க இயலாது.
சுற்றிவர மிஷின்களும் அதன் சத்தமும் சில சமயங்களில் நெருப்பு
உபயோகிக்கும்  பர்னர்களும், எண்ணெய் கசியும் மெஷின்களும் .பெட்ரோல் வாசம் மற்றும் பெயிண்ட் வாசம் இவைகளுக்கிடையில் தான் ஒவ்வொரு  வாகனமும்  தயாரிக்கப் படுகின்றன.
 அதுவும்  வாகனத்தின் கீழ்ப்   பகுதியை  மேல் பகுதியுடன் பொருத்தும் தொழிலாளி கழுத்தை மேலே நோக்கி  வைத்துக்கொண்டு தான் வேலை செய்யவேண்டும் .
அப்பப்பா!
நடுவே ஏதாவது  மனிதத் தவறால் சரியாகப் பொருந்தவில்லை என்றால்  வீண்  என்று மறுக்கப் பட்டுவிடும்.
தொழிற்சாலையில் உள்ள கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை வெகு கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை .

விவசாயத்தில் எப்படி நடந்துகொண்டே உழவேண்டும் , குனிந்துகொண்டே நாற்று நடவேண்டும் ,களை எடுக்கவேண்டும்
அதுபோல வாகனத் தயாரிப்பிலும்  பல விதமான உடல் உழைப்பும் ,பலரின் உழைப்பும் ,மூளையும்   அடங்கி உள்ளது.
இதைப் பார்த்தபின் ,அதுவும்  நேரிடையாக நானும் இதில் ஒரு பங்களித்தபின் 'எங்கேயாவது
"பஸ்ஸை  அடிச்சு நொறுக்கிட்டங்களாம் .
 மிக்சர் மாதிரி தூள் பண்ணிட்டாங்களாமே "
என்று படித்தால்  நான் சொந்தமாக பஸ் வைத்திருக்கா விட்டாலும் சத்தியமாக மனது வலிக்கிறது.
என் தனி ஒரு மனுஷியால்  முடிந்தது  பலரின் கவனத்தை ஈர்க்கும்  வகையாக ஒரு பதிவு மட்டுமே எழுத முடியும் .
இந்த பதிவால் ஒரு பஸ் மட்டுமாவது சேதம் ஆவதிலிருந்து காக்கப் பட்டால்
இந்த பதிவிற்குப் பெருமை என்பதை விட அந்த பஸ்சிற்கு நன்மை என்பதே நிஜம் .


 இந்த பிரச்னையை  உளவியலாக நோக்கினால்  பொருட்களைப்பற்றிய நமது கற்பித்தலே   என்று நான் நினைக்கிறேன்.
நமது சமூகத்தில் பொதுவாக ஒரு உணவு தானியத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு ஸ்குரூ விற்கோ அல்லது ஆணிக்கோ கொடுப்பதில்லை .நாம் குழந்தையாக இருக்கும்போது நமது வீட்டுப் பெரியவர்களால் அரிசி மணிகள் வீணாக்கக்கூடாது என்று கற்பிக்கப் பட்டோமே தவிர ஒரு குண்டூசி ஆணி இவைகளும் அரிசி மணி போல கருதப்படவேண்டியவை என்று போதிக்கப் படாத காரணமும் அடங்கும்  என்றே நான் நினைக்கிறேன்.
எனவே இனிவரும் தலைமுறைக்காவது இதைப்  பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவோம்

தவிர அரசாங்கமும் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு  அறுபது எழுபதுகளில் விளம்பரம் கொடுத்தது போல வாகன உற்பத்தியில் உள்ள பல விதமான கஷ்டங்களையும் சுருக்கமாக விளக்கி வாகனங்களை சேதப்படுத்துவது தவறு .நிச்சயமாக வீர தீர சாகசச் செயல் அல்ல என்பதை விளம்பரம் மூலம்  புரிய வைக்கலாமே !10 comments:

 1. நல்ல யோசனை தான்... செயல் பட்டால் நல்லது...

  ReplyDelete
 2. பேருந்துகளைக் கொளுத்துபவர்களிடம் போய் இதையெல்லாம் சொல்வது விழலுக்கு இறைத்த நீர் போல்தான் முடியும். அவர்களுக்கு தங்களுடைய உணர்வுகளை ஏதாவது ஒரு வகையில் வெளிப்படுத்த வேண்டும். அவ்வளவுதான். அது நடப்பது இங்கு மட்டுமில்லையே. வளர்ந்த நாடுகள் எனப்படும் மேற்கத்திய நாடுகளிலும் போராட்டக் காரர்கள் வாகனங்களை கொளுத்துவது மிக மிக சகஜம். கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்தால் அத்தகைய குற்றங்கள் குறைந்துவிடும் என்று வாதிடுவதுபோல்தான் உள்ளது இந்த பரிந்துரையும். ஆனால் உங்களுடைய நோக்கம் நல்லதுதான். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. அழிவு செய்வதையே குறிக்கோளாகக் கொண ஒரு வன்முறைக் கும்பலிடம் இந்த அறிவுரைகள் என்ன பயனுமில!ஆனால் உங்கள் ஆழமான கவலையும் வருத்தமும் நியாயமானதே!என்ன செய்ய?

  ReplyDelete
 4. அத்தகைய செயல்களைத் தூண்டிவிடுவதே அரசியல்வாதிகள்தானே...வேறு எந்த தைரியத்தில் இவர்கள் இப்படியெல்லாம் செய்கிறார்கள்...நம்மைக்காப்பாற்ற யாரோ ஒருவர் இருக்கிறான் என்ற தைரியத்தில்தான்...ஒரு தனிமனிதன் தைரியமாக ஒரு வாகனத்தை உடைத்தால் விட்டுவிடுவார்களா...

  ReplyDelete
 5. உங்களின் கவலையும் வருத்தமும் நியாயமானதே.

  ReplyDelete
 6. அழகு,
  உங்களின் சிந்தனை போக்கின் மாற்றம் அதன் காரணம் சும்மா நச் ...
  இந்தப் பதிவு பரப்ப படவேண்டும் நன்றி

  ReplyDelete
 7. we have aayutha puja to honour the tools ,but we hav not taken it seriously perhaps!

  ReplyDelete