Tuesday, 10 June 2014

காரமான கடுகு சைஸு பதிவு


குடும்ப வேலைகள் ஜாஸ்தி ஆனபடியால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை .

எனவே ஒரு குட்டியூண்டு ஆனால் க்யூட்டான ஒரு பதிவு.

 நேற்று வழக்கம் போல் ஹி..... ஹி .... பிசியாக இருந்தபோது ஒரு போன்

வந்தது. பிரமோஷனல் அழைப்பு.

மேடம் .... நாங்கள் எங்கள் நிறுவனத்தின் ஆண்டு நிறைவைக் கொண்டாடும்

விதமாக மக்களிடையே சேமிப்பு பற்றிய விழிப்புணர்வு  குறிப்பாக  Future savings

(எதிர்கால சேமிப்பு ) ஏற்படுத்தும் வகையில்     .......

நான் அந்தப் பெண்ணைத் தொடரவிடாமல் Future savings  பற்றியா என்றேன் .

அந்தப் பெண் மிக உற்சாகம் அடைந்து  ஆமா மேடம்  ஆமா மேடம்  என்றாள்.

சரி  எனக்கு ஒரு உதவி செய்வாயா என்றேன் .

என்ன உதவி தேவை சொல்லுங்க எது வேணாலும் செய்வோம் என்றாள்.

ஒண்ணுமில்லே  மேட்டர்  ரொம்ப சிம்பிள்  எனக்கு Future income க்கு வழி செய்து

கொடுத்தால்  நான் என்Future savings   சை உங்களிடம் போடுகிறேன் என்றேன் .

பதிலே பேசாமல் போனை வைத்து விட்டாள்.

 நாம எப்பூடி ?

Thursday, 24 April 2014

ஓட்டுப் போட்டேன் !


 தேர்தல் சமயத்தில் எல்லோரும் எழுதித் தீர்த்து விட்டார்கள் .அதுவும் பக்கம் பக்கமாக !
நாம மட்டும் ஒண்ணுமே எழுதலேன்னா எப்புடி ?
அதன் விளைவுதான் இந்த சிறிய பதிவு.

காலை நேரம் என் மகனுக்கான காலை உணவு (எங்களுக்கும்  சேர்த்துத்தான்). தயாரித் துக் கொண்டிருந்தேன் பையன் குளித்து முடித்து ஓட்டுப் போட கிளம்பினான்
.நானோ செம பிஸி 
எங்கே ஓட்டுப் போடத்தானே?
ம் ...
அப்படீன்னாக்க என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
சும்மா ஒரு லுக் விட்டான் .பாருங்கள்

வேலைக்காரியும் அம்மா கீழே போய் ஓட்டு போடப்போறேன் .

ஏதாவது செய்யணுமா என்றாள்.

சரி அவ்வளவு தூரம் போறியே அப்படியே என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
அம்மா ....நீங்க இருக்கிங்களே .....  என்று சொல்லிவிட்டு மேலே ஒன்றும் பேசவில்லை .

என் கணவரிடமும் இதையே சொன்னேன் .

அவரும் இதே போல்  மறுத்துவிட்டார்.

எல்லா மானேஜ்மெண்டு புத்தகங்களும்
திறமையாக வேலைகளை delegate அல்லது  அவுட் சோர்சு பண்ணும் என்கிறார்கள் .

யாரும் செய்தால் தானே .

பிறகு நானே போய் ஓட்டுப் போட்டு வந்தேன் .

Sunday, 20 April 2014

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !: கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும் எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது...

கர்வமும் ஒரு அழகே !


கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி

நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும்

எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது என்றும்

சங்க கால மற்றும் சமகால இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது

மற்றும் பாடப் புத்தகங்களில் மனப்பாடப்பகுதிக்கு இது சம்பந்தப்பட்ட

செய்யுள்கள் களை உருத்தட்டாத நம்மவர்கள் குறைவு.

ஆனால் எனக்குச் சின்ன வயசிலிருந்தே எனக்கு இதில் சுத்தமாக

உடன்பாடில்லை ,

பக்திக்கதைகளும் சரித்திரக் கதைகளும் பல  உதாரண கதா  பாத்திரங்களைக்

கொண்டு இதை விலாவரியாக விளக்குகிறது.

ஹிட்லர் முசோலினி ஆகியவர்களின் சுயசரிதையும்  போன நூற்றாண்டின்

வாழ்ந்து அழிந்த மனிதர்களின்  உதாரணமாக சின்னக் குழந்தைக்குக் கூட

போதிக்கப்பட்டது.

நானும் கூட மார்க்குக்காக மட்டுமே நெட்டுருப் போட்டேன் .

அதை எதிர்த்து நான் வாதம் செய்தால் 'திமிர் ' என்ற பட்டம்  மற்றும்

      'விதண்டா வாதம் வீண் நேரம்  'என்ற அறிவுரைகளால்

என்  வாதத்தின் பக்கம் உள்ள நியாயத்தைப் பலரும்

ஏன் உண்மையைச் சொன்னால் ஒருத்தர் கூட ஏற்றுக்கொள்ளவில்லை .

 சரி இப்பவாவது சொல்லுவோம் யாராவது ஒத்துக்கிறாங்களா பாப்போம் .

 கர்வமும் ஒரு அழகே !

கர்வத்தைப் போய்  அழகு என்று சொல்வதா என்று கோபப்பட வேண்டாம் .

கர்ணன்  படத்தில் மஞ்சள் முகம் நிறம் மாறி என்ற பாடலில் சிவாஜி தனக்கு

குழந்தை பிறக்கப் போகிறது என்று "க ர்ணன் தந்த பிள்ளை என்றால்" என்ற

வரிகளுக்கு  கர்வமாக ஒரு லுக் விடுவதை கிட்டத்தட்ட 50 வருடங்கள்

ஆகியும் இன்றும் நாம் ரசிக்கவில்லையோ ?

 கர்வமும் அழகாக இருப்பதால்தானே  நாம் ரசிக்கிறோம்

வீரபாண்டியக் கட்டபொம்மனின் கர்ஜிக்கும் கர்வ  வசனம் பற்றி  அதிகம்

சொல்லவேண்டியதே இல்லை.

இலங்கேஸ்வரன் நாடகத்தில்

ஆர்எஸ் மனோகரின் கர்வமான நடையையும்  வசனங்களையும்

ரசித்து  பல நாட்கள் அந்த நாடகத்தை வெற்றிகரமாக ஓட விட்டதும் நாம்தான்.


ஒரு பத்து வருடம் முன்  படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின்

கர்வமான நடிப்பை ரசித்ததும் சாட்சாத் நாம்தான்!

அட  விடுங்க அதெல்லாம் !

கர்வமா இருக்கிற வயசுப் பொண்ணுகளை ரசிக்கண்ணே

 " அவ கர்வம் கூட ஒரு தனி அழகுடா "ன்னு

  சில பேர் ஒரு குரூப்பா அலையரதில்லையா என்ன?

எல்லாருமே கர்வமா இருக்கறதை மனசுக்குள்ள ரசிச்சுகிட்டு

வெளியிலேபிடிக்காதமாதிரி  வேஷம் போடறாங்க!

இதுதான் உண்மை !

இவ்வளவு சொல்லியும் நான் சொல்றதை நீங்க நம்ப மறுக்கிறீங்களா?

எங்கே கொஞ்சம் கர்வமாக ஒரு லுக் வுட்டுகிட்டு

கண்ணாடியிலே உங்க மூஞ்சியை பாத்துட்டு

அப்புறம் சொல்லுங்க .


ஹி  ஹி   கர்வத்துக்கும் ஒரு தனி அழகு  இருக்கில்லே ?

Sunday, 6 April 2014

கடவுள் நம்பிக்கை


கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய
விவாதம் காலம் காலமாக நடக்கிறது .

அதிதீவிர நாத்திகர்கள் கடைசியில் தீவிர ஆத்திகர்கள் ஆவதும் ,அதே போல் ஆத்திகர்கள் நாத்திகர்கள் ஆவதும் உண்டு .

இதில் எது சரி எது தப்பு என்ற விவாதத்திற்குள் நான் நுழையப் போவதில்லை

என்னைப் பொறுத்த வரை நான் கடவுளை நான் வேண்டியதைக் கொடுக்கும் ஒரு மேஜிக்  பவராகத் தான் நினைத்து வந்திருக்கிறேன் .

 கேட்டதைக் கொடுத்தால் காணிக்கை போட்டும் நன்றி சொல்லியும் கொடுக்காவிட்டால் கடவுளைத் திட்டவும் செய்யும் சராசரி மனுஷிதான் .நான்

ஆனால் கடவுள் பக்தியில் ஒரு சௌகரியம் இருப்பதை என் அபார்ட்மெண்ட் வேலைக் காரப் பெண்மணி எனக்கு  அறிவுறுத்தினாள்.

அவள் கணவன் ஒரு குடிகாரன் .
குடித்து விட்டு கண்ட மேனிக்கு கலாட்டா செய்யும்
  பெறு மதிப்பிற்குரிய டாஸ்மாக் வாடிக்கையாளர் .

குடிக்காத நேரங்களில் என்னவோ நல்லவன்தான்.

அவ்வப்போது அவளுக்கும் அடி விழும் .

அவளுக்கு வயது 50க்கு மேலே இருக்கும் .
மகன்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது .
ஆனாலும்  மகன்களுக்கு நிரந்தர வருமானமில்லை .
கணவனும் மனைவியும் இங்கேயே படுத்து வாழும் ஜீவன்கள்

இந்த பதிவு எழுதும் போது அவன் குடித்து விட்டுத் தான் வெளியில் கத்திக் கொண்டு இருக்கிறான்.

வேலைக் காரப் பெண்மணிஅவ்வப்போது கடவுளைத் திட்டுவாள் .
கணவனைத் திட்டுவாள் .
அதே சமயம் ஒரு சின்ன சாமி போட்டோ வுக்கு ஓசியில் கிடைக்கும் பூக்களையும்  தினமும் மறக்காமல் போடுவாள் .

இன்று காலை என் வீட்டுக்கு அவள் வந்திருந்தாள் .
கழுத்தில் ருத்திராட்ச மாலை எல்லாம் போட்டிருந்தாள்.
நெற்றியில் சந்தனம்+ குங்குமம் + பெரிய விபூதிப் பட்டை  தலையில் பூ இத்யாதிகளுடன்  இருந்தாள்.
என்ன இப்படி இருக்கிறாய் .பக்தி முத்தி விட்டதா என்றேன் .

கதவைச் சாத்துங்கம்மா என்று சொல்லிவிட்டு
மெல்லிய குரலில்
"அதில்லேம்மா .
நா இப்ப மாலை போட்டிருக்கேன்னா  நா சாமிக்கு சமானம் .
புருஷன் குடிச்சிட்டு வந்தாலும் என்னை அடிக்க முடியாது
.அவரும் அடிக்க பயப்படுவாரு
அப்படியும்குடி போதையிலே  அடிச்சாருன்னக்க நா சாமி வந்த மாதிரி குதிப்பேன் .

மிரண்டு ஒடிருவாரும்மா.
அடி தாங்க முடியலேம்மா
வேறே வழி" என்றாள்.

 கடவுளை ஒவ்வொருவரும் அவரவர் வழியில்
புரிந்துகொண்டு அவரை நம் சௌகரியத்திற்கு
 ஏற்ப உபயோகித்துக் கொள்கிறோம்
அவ்வளவே !
இதில் வாதம் தேவை இல்லை


Monday, 24 March 2014

சங்கம் எத்தனை சங்கமடி

ரொம்ப நாளா வீட்லே most of the time  இல்லாததாலே வீடே ஒரு வழியாக ஆயிருச்சு .
ஒரு  மெகா ஆப்பரேஷன் பண்ணி ஒரு வழியா பழையபடி கொண்டுவந்திட்டேன்.

அதனால் தான் பதிவே எழுதலை.

 கடைக்குப் போயிருந்தேன் .
ஒரு ரெண்டு பேர் பேசிட்டு இருந்தாங்க
ஒருத்தர் சொன்ன காமெண்டு சூப்பரா இருந்திச்சு .

வேலண்டின் டே வெங்காய டே வெளக்குமாத்து டே ன்னு அமெரிக்காகாரன் மாதிரி கொண்டாடினாலும்
நம்ம ஆளுங்க ளோட விளக்கெண்ணை புத்தி போகாது ..
லவ் பண்ணுவாங்க ஆனா ஜாதி பேர் சொல்லி காதலுக்கு குட் பை சொல்லிடுவாங்க
தேர்தலில் கூட ஜாதி மேட்டர் ரோலு ரொம்பவே !
ஃ பேஸ் புக்லெ கூட எல்லா சாதிக்காரனும் சங்கம் வச்சிருக்காங்க

அல்லார் மனசிலேயும் ஜாதிதான் நிக்கிது என்றார் .

 வீட்டுக்கு வந்த பின் ஃ பேஸ்புக் திறந்து பார்த்து சங்கம் என்று key வோர்ட்  போட்டு தேடினால் வா................ஆவ் !

 கீழே பாருங்களேன் !எவ்வளவு இன்டரஸ்டிங் ஆன சங்கங்கள் !

நீங்களும் பெரிய வாவ் போடுவீர்கள் !

இதில் வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்கிற பெயரில் ஏகப்பட்ட வெர்ஷன் உள்ளது சிலவற்றில் ஊர் பேர் வைத்தும்  வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்கிற பெயரில்சங்கங்கள் பல உள்ளன  .
அவைகள் எல்லாவற்றிலுமேகிட்டத்தட்ட  சிவ கார்த்திகேயன் போட்டோ தான் .!
அதன் பின் வடிவேலு  !
அவற்றில்
கம்ப்யுட்டர் மவுசுக்கு எலி மருந்து வைப்போர்சங்கம்

சனிகிழமயை சரக்கு போட்டுட்டு கொண்டாடும் சங்கம் என்கிற

சங்கங்களின் போட்டோ நெஜமாகவே கிரியேட்டிவ் ஆக இருந்தது .

சரி  சங்கங்களின் பெயர்களைப் பார்ப்போமா ?

கேள்வி கேட்போர் சங்கம்

பெண்களை கண்டால் கண்களை மூடுவோர் சங்கம்

பெண்ணை பார்த்தா மண்ணை பார்போர் சங்கம்.


முகம் கழுவும் முன் முகநூல் பார்ப்போர் சங்கம்

வேலை இல்லாமல் ஃபேஸ்புக் யூஸ் பன்னுவோர் சங்கம்

காடுனா சிங்கம் இருக்கனும் பேஸ்புக் னா எங்க சங்கம் இருக்கணும்

Like'க்குகாக life'ஐ தொலைத்தோர் சங்கம்

பேஸ்புக்கால் வீணாப்போனவர்கள் சங்கம்

லைக் கிடைக்காமல் வாடுவோர் சங்கம்

ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் திருடும் சங்கம்

வெட்டியா பேஸ்புக்கில் பிஸியா இருப்போர் சங்கம்

தார் road-ல் படுத்து தாறுமாறாக யோசிப்போர் சங்கம்

வெட்டியா இருந்தாலும் வெறித்தனமா யோசிப்போர் சங்கம்

குப்பற படுத்துகிட்டு குசும்பா யோசிப்போர் சங்கம்

வெட்டியாய் முட்டி முட்டி யோசிப்போர் சங்கம் (இதற்க்கான வடிவேலு படம்  கச்சிதமாக இருந்தது)


முட்ட மார்க் எடுத்தாலும் மூக்கு-ல விரல் வைக்கிற மாதிரி யோசிப்போர் சங்கம் (கவர் போட்டோ சிரிக்கவைத்தது )

பயங்கரமா யோசிப்போர் சங்கம்

காதலியால் கழற்றி விடப்பட்ட காளையர் சங்கம்

காதலியை விட கடைசி பெஞ்சை நேசிப்போர் சங்கம்

காதலிக்காதோர் சங்கம்

காதல நம்பி நாசமா போனவங்க சங்கம்

காதலை வெறுக்கும் அனைவரையும் வரவேற்கும் சங்கம்

 காதல் தலைவலியை தூக்கி எறிந்த காளையர் சங்கம்

காதலால் கழட்டி விடப்பட்டோர் சங்கம்

காதலை சேர்த்து வைப்போர் சங்கம்

காதல் தோல்வியடைந்தார் சங்கம்

காதலித்து கடன் பட்டோர் சங்கம்


நக்கலடிப்போர் நல சங்கம் .

இஷ்டப்பட்டு கஷ்டப்படுவோர் சங்கம்

கடன் வாங்கி கஷ்டபடுவோர் சங்கம்

பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிப்போர் சங்கம்

ஊமை குசும்பு  பண்ணுவோர்  சங்கம்


பாசக்கார பய புள்ளைங்க சங்கம்

சோறு வாங்கிக்கொடுத்திட்டு சொல்லிகாட்டுவோர் சங்கம்

சும்மா இருப்பவர்களை சொரன்டி விடுவோர் சங்கம்

மிஸ்டு கால் மட்டுமே கொடுப்போர் நல சங்கம்.

எதிரில் வந்த பிகரை நம்பி எதிர் காலத்தை தொலைத்தோர் சங்கம்
  
Feel பண்ணாத Female சங்கம்.

கல்யாணம் பண்ணி கதறுவோர் சங்கம்

இடி விழுந்தாலும் இடியாத இளைஞர் சங்கம்

எப்பவுமே வருத்த படாத வாலிபர் சங்கம்

மொக்கை போடும் வாலிபர் சங்கம்

வருத்தபடாத எஞ்சினீயர் சங்கம்

தப்பை எட்டி பார்போர் சங்கம்

சிரிச்சே சீரழியும் சங்கம் - S.S.S

 Engineering சேர்ந்து நொந்து போனோர் சங்கம்

இன்ஜினியரிங் சேர்ந்து நாசமாகி போனோர்சங்கம்

அதிரடியாக அரட்டை அடிப்போர் சங்கம்

கொஞ்சகூட வருத்தபடாத வாலிபர் சங்கம்

தேவை இல்லாத ஆணியை புடுங்குவோர் சங்கம்

எந்த பக்கமும் சாயாத சங்கம்

Exam ஐ ஒழிப்போர் சங்கம்

எக்ஸாம் எழுதி இடிஞ்சு போனோர் சங்கம்

பார்டர்ல பாசாகும் மக்குபசங்க சங்கம்

டென்சன் ஆகாத டெரெர்ஸ் சங்கம்

அரியர் வைத்து அறம் காப்போர் சங்கம்

Examக்கு முதல் நாள் மட்டும் படிப்போர் சங்கம்

கனவில் கார் ஓடுவோர் சங்கம்

கம்ப்யுட்டர் மவுசுக்கு எலி மருந்து வைப்போர்

தீயா வேலை செய்வோர் சங்கம்

அனுபவம் இல்லாம advice பண்ணுவோர் சங்கம்

KAARI துப்பினாலும் Kavalaye படாத சங்கம்

படிப்போரை கல்லால் அடிக்கும் சங்கம்

எவ்வளவு அடி பட்டாலும் திருந்தாத சங்கம்

  கல்யாணம் செய்துவிட்டு கடுப்பில் இருப்போர் சங்கம்

  கல்யாணம் ஆகாமல் கவலைப்படுவோர் சங்கம்

  "கருப்பா இருந்தாலும் கலையா இருப்போர் சங்கம்"

பரதேசிகளை நண்பர்களாக வைத்திருப்போர் சங்கம்

  தண்டவாளத்தில் தலை வைத்துப் படுப்போர் சங்கம்

தலயை எதிர்போரை தலையை எடுக்கும் சங்கம்

Powerstar-ஐ ஏளனம் செய்வோரை எண்ணெய் ஊற்றி எரிக்கும் சங்கம்


என்ன நடந்தாலும் போனில் photo எடுக்கும் வாலிபர் சங்கம்

புல் மப்பில் யோசிப்போர் சங்கம் ------உறுபினர்கள் வரவேற்க படுகிறார்கள்

காலையில் எட்டு மணிக்கு வேலைக்கு போவோரை போட்டு தள்ளுவர் சங்கம்

மத்தவன் கஷ்டப்பட்டு போட்டத நோகாம ஷேர் பண்ணுவோர்  சங்கம்

Odi Poravangala Theadi Poora Sangam OPTP ஓடி போரவங்கல தேடி போர சங்கம்

Danger ஐ Deposite பண்ணி வீண்வம்பை வட்டியாக வாங்குவோர் சங்கம்

கிட்டத்தட்ட same   டாபிக்குகளில் இன்னும் நிறைய உள்ளது .

சூப்பரா இருக்கில்லே

தமிழனுக்கு உள்ள கிரியேட்டிவிட்டிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு !


டிஸ்கி :ஆனால் இது வரை பூரிக்கட்டையால் அடிப்போர் சங்கமும் 
பூரிக்கட்டையால் அடி வாங்குவோர் சங்கமும் ஆரம்பிக்கவில்லை.

Sunday, 9 March 2014

விடுமுறைக்குப் பின் ......

 கடந்த 5 வாரங்களாக வேலைக்குப் போக ஆரம்பித்ததால் பிளாக் பக்கம் வரவில்லை . காலை 7.45க்குக் கிளம்பினால் திரும்பி வர 8 மணி ஆகிறது என்பதால் நெட்டில் மெயில் மட்டும் செக் பண்ணிவிட்டு படுத்துவிடுவேன் .
ஆபிசில் தான் 9 மணி நேரம் கம்பியூட்டர் கூட பேசிக் கொண்டிருப்பதால் வீட்டுக்கு வந்தபின் கம்பியூட்டரில்  ஏன்திரும்பவும் என்று பிளாக் எழுதவில்லை .
நேற்று வெளி வேலை இருந்ததால் பாரி முனை சென்றேன் . சரி திரும்ப வரும்போது ஆட்டோ வில் வரலாம் என்றால் பழைய கதை தான்.அதே போல மீட்டர் கணக்கு வராது என்கிறார்கள் ஒரு வழியாக ஒரு ஆட்டோ டிரைவர் மீட்டர் போட்டார் .ஆனால் அந்த ஆட்டோ மீட்டர் மிக விநோதமாக 00:7t:7t
என்று காட்டியது . இதில் எதோ உள் கூத்து இருக்கு என்று புரிந்தது.ஒரு பத்துஆட்டோ வாவது பேரம் பேசினேன் . யாருமே மீட்டர் பற்றி கண்டுகொள்ளவே இல்லை .
நமக்கேன் வம்பு என்று பேசாமல் பஸ்ஸில் வந்து விட்டேன் .கிட்டத்தட்ட
ஒரு மாதமாக சென்னைக்குள் எங்குமே போகவில்லை .ஆபிஸ் விட்டால் வீடு வீட்டை விட்டால் ஆபிஸ் .
ஆபீஸிற்கும் போய்க்கொண்டு தினம் தினம் அல்லது வாரத்திற்கு ஒரு மூன்று
பதிவாவது போடும் பதிவர்களின் திறமை கண்டு நான் வியக்கிறேன்.
எனக்குத்தான் நேர நிர்வாகம் தெரியவில்லையோ?
ஆனால் நான் சமையல் செய்வதால் நமக்கு நேரமில்லை என்று என்னை நானே சமாதனப்படுத்திக் கொள்கிறேன்.0
சென்ற வாரம் வயநாடு பக்கம் சொந்த வேலையாக சென்றிருந்தேன்.முது மலைக் காடு பக்கம் சென்றிருந்தேன். அழகோ அழகு காட்சிகள் .காமிராவின் உள்ளே சில காட்சிகளை சுயநலமாக திருடிக்கொண்டு வந்தேன் ,.
 --  --------என்ன மாதிரி இருந்தாலும் குரங்கு மட்டும் எப்படியோ அழகாகத்தான் இருக்கிறது ரகசியம் என்னவோ தெரியவில்லை.
மீண்டும் அடுத்த வாரம் சந்திக்கிறேன் .

Saturday, 8 February 2014

ஜாதக தோஷங்கள்

ஜாதகம் பற்றி எனக்கு அவ்வளவாகத் தெரியாது ,

ஆர்வம் உண்டு . இவ்விடம் ஜோதிடம் பார்க்கக்  கற்றுத்தரப்படும் போன்ற அறிவிப்புக்களால் ஈர்க்கப்பட்டாலும்  சரி ........பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டு விட்டேன்.

 பொதுவாக கால சர்ப்ப தோஷம் என்று ஒன்று இருப்பதாகச் சொல்வார்கள் .

எனக்குத் தெரிந்த ஒருவர் தனக்கு ஜாதகம் பார்க்கும் பொது என்னையும் கூட்டிச் சென்றார் .
அவருக்கு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அவர் வீட்டில் ஒரு முறை நல்ல பாம்பு ஒன்றை யாரோ அடித்து விட்டதாகவும் அந்த தோஷம் அவருக்கு இருப்பதால் சில காரியத் தடை இருப்பதாகவும் சொன்னார்.இதே போல் என் தாய் மாமா வீட்டிலும்  நல்ல பாம்பை அடித்தால் அவர்கள் வீட்டில் ஒரு மரண நிகழ்வு நடக்கும்   

அதன் பின்னணியில் ஒரு நிஜ நிகழ்வு ஒன்று உண்டு 

  என் பாட்டி என் மாமா சின்னக் குழந்தையாக இருக்கும் போது   அவர் தூங்கிக் கொண்டிருந்த  தூளி மீது பாம்பொன்று சுற்றி இருந்ததாகவும் பிறகு என் பாட்டி 

அந்தப் பாம்பிடம் "நாகராஜா நாகராஜா என் மகனை நீ ஒன்றும் செய்து விடாதே உன் பெயரை எங்கள் வம்சத்தில் இனி வைப்போம்"

 என்று சொன்னபின் பாம்பு முன்று முறை தரையில் அடித்துவிட்டு ஒன்றும் செய்யாமல் பொய் விட்டதாம் ,

இரண்டு தலை முறை ஆனா பின்பும் நாக என்ற பெயருடன் அந்த குடும்பத்தில் ஒருவர் பெயர் வைத்துள்ளதைக் காணலாம் .

சில வருடங்கள் கழித்து என் தாத்தா காலை செய்தித் தாள் படித்துக் கொண்டிருக்கும் பொது கால் தொடையில் ஏறி அமர்ந்து இருந்ததாம் .

என் தாத்தா ஒன்றுமே செய்யவில்லயம் பக்கத்தில் இருந்தவர்கள் யாரையாவது கூப்பிடலாமா என்ற  போது  " வேண்டாம் "என்று ஜாடை காட்டி விட்டு "கம் "என்று இருந்தாராம்   .பிறகு அந்தப் பாம்பு சரசர என் எங்கே சென்றது என்றே தெரியாதாம் 

அதே போல் என் அப்பா ஒரு முறை வீட்டுக்கு வந்த  நல்ல பாம்பு ஒன்றை அடித்து இருக்கிறார்,
 ஆனால் அது சாகவில்லை எப்படியோ தப்பி ஒடி விட்டது . 

பிறகு ஒரு இரண்டு நாள் கழித்து மறுபடியும் வந்து வீட்டையே சுற்றி வந்திருக்கிறது, அந்த சமயம் என் அப்பா  நைட் டுட்டி .என் அம்மாவும் வேலைக் காரப் பெண்ணும் மட்டும் இருந்திருக்கிறார்கள் . ஒரு வீட்டுக்கும் மற்றொரு  வீட்டுக்கும் இடையே ரொம்ப தூரம் . எப்படியோ ரோடில் போற ஆளிடம் சேதி சொல்லி  அரிக்கன் விளக்கு வைத்து தேடினால் மறுபடியும் பாம்பு எஸ்கேப் .

தொடர்ந்து ஒரு வாரம் எங்க அப்பாவையே தேடி வந்து பிறகு ஒரு வழியாக ஒரு நாள்  இரவு முழுவதும் ஆட்கள் வீட்டைச் சுற்றி பாம்புக்காக வெயிட்  பண்ணி அதை அடித்துக் கொன்றிருக்கிறார்கள் .


 அதனால் என்ன தெரிகிறது என்றால் பாம்பு உனக்குக் கெடுதல் பண்ணமாட்டேன் என்று சொன்னால் அந்த சத்தியத் தை மீறுவதில்லை .

.ஆனால் அதற்குத் துன்பம் விளைவித்தால் அவர்களை ஒரு கை பார்த்து விட்டுத்தான் மறு வேலை போல!

 நாமும் மற்ற ஜீவ ராசிகளைக் கொள்ளாமல் இல்லை .
நான் கூட வெஜிடேரியன் என்று பேரே தவிர  "உயிர் வதை " செய்கிறேன். கரப்பான் பூச்சி எறும்பு பூரான் சில வண்டுகள் கூடக் கொன்றிருக்கிறேன் .
என்ன ஒரு வித்தியாசம் என்றால் கொல் வேனே தவிர அவைகளைத்  தின்பதில்லை 

கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்ற ஒரு நீதிப் படி அசைவ உணவு 
சாப்பிடுவதும் தப்பில்லை . சரி மேட்டரை  டச் பண்ணனுமே 

 பாம்பை கொன்றால் தப்பு அது ஜாதகத்தில்  reflect ஆகிறது .
அது மாதிரி நாம் கொன்ற மற்ற  உயிரினங்களின் பாவம் ஏன் reflect ஆவதில்லை  ?
பாம்புக்கு   மட்டும் ஏன் ஒரு ஸ்பெஷல் preference?
 மற்ற ஜீவராசிகளெல்லாம் என்ன இளிச்சவாய் ஜென்மங்களா?
அதுங்க ளைக் கொன்ன தோஷம் கிடையாதா?

Friday, 7 February 2014

JOB SATISFACTION

உடல் நிலை மறுபடியும் பாதிக்கப் பட்டதால் இடையில் ஒரு தடங்கல் .

JOB SATISFACTION என்ற ஒரு டாபிக் பல்லாண்டுக் காலமாக பலராலும் பலவிதமான ஆய்வுக்கட்டுரைகள் ,கட்டுரைகள்  மற்றும் டி,வி யிலும் பலராலும் விஸ்தாரமாகவும் விவரமாகவும் விவாதிக்கப் பட்டிருந்தாலும் நான் என்ன புதுசா எழுதிக்கிழிக்கப் போகிறேன் என்ற நினைப்பை தூக்கி தூரமாக வைத்துவிட்டு இந்தப் பதிவைப் படிக்கவும்.


எங்களது அபார்ட்மெண்டின் கௌவுரமாகவும்   official   ஆகவும் சொன்னால் செக்யுரிட்டி
 உண்மையாகச்சொன்னால்  ஒரு சிலருக்கு  வீட்டு வேலைக்காரி வெங்காயம் பூண்டு உரித்துக் கொடுக்கும்  வேலைக்காரி கம் மோட்டார் ஆன் பண்ணுபவள் கம்  etc   etc
அப்பப்போ உக்காந்தபடியே தூங்கும் கலையில் அவளை மிஞ்ச ஆள் கிடையாது.,அப்படியாகப்பட்ட ஒரு கணவனும் அவன் மனைவியும் தான் எங்களது வாச்மேன் .
அவள் வேலைகளில் மிக முக்கியம் என்று மற்றவர்களால் நினைக்கப் படுவதும் அவள் மிக மிகப் பெருமையுடனும் செய்யும் வேலை அபார்ட்மெண்டின்நுழைவாயிலில் கார் போன்றவைகளை நிறுத்தவிடாமல்
பார்த்துக்கொள்வது, மற்றும்  காரை யார் வெளியில் எடுக்கும் போதும் வண்டி போக்கு வரத்தைப் பாத்து சொல்வது.

இந்த  வேலைகளில் நம்பளை மாதிரி ஆளுங்களுக்கு செம எரிச்சல் வரும்

ஏன்னா எவனுமே எத்தனை தரம் சொன்னாலும்  கேட்கவே மாட்டான்.

எங்கள் ஏரியா கடைகள் மிகுந்தது .
பக்கத்தில் ரெண்டு வங்கிகள்  .சூப்பர் மார்கெட்  மற்றும் ஓட்டல் சரவணா பவன் வேறு .......நீங்கள் ஊகித்துக் கொள்ளலாம்.
இவளும் ஒழக்குக்கு  புடவை ஜாக்கெட் மாட்டிவிட்ட சைசில் இருப்பாள் ,

ஆனால் குரல் மட்டும் .......  பதினெட்டுப் பட்டிக்கும் ஈஸியாக் கேக்கும் லவுட் ஸ்பீக்கர் இல்லாமலேயே ...

காரில் வருபவர்கள்  இவளின் பேச்சை கௌரவம் கருதிக்  கேட்கவே
   மாட்டார்கள்

.டிரக்  டெம்போக் காரர்கள் இவளை ஒரு கேலிப் பொருளாகத் தான் நினைப் பார்கள்
.இருந்து ம்  ஒரு சில பயந்த ஜென்மங்கள் வண்டியை இவள் சொல்லி தள்ளி நிறுத்திவிட்டால் இவளுக்குப்  பெருமை தாங்காது.

 போகிறவர் வருகிறவர் பக்கத்து பில்டிங் வாச்மேன் எல்லாரிடமும் தம்பட்டம் அடித்துக்கொள்வாள் .

அபார்ட்மெண்டில் இருந்து வெளியே யாரும் காரை எடுக்கும் போது
ஆவ்......ஆவ் ....
ரயிட்லெ ........ரயிட்லெ ......
.கொஞ்சம் லெப்டு   ..........
தோ....தோ .... சைக்கிள் தம்பி  அய்யா கார் எடுக்குறார்  
அப்பால நவுரு .......போன்ற செட் டயலாக்குகளை  ஒரு டிராபிக் போலீஸ்  தோரணையிலே தான் சொல்லுவாள் .

அரசாங்கம் கொடுத்த 300 சதுர அடி அபார்ட்மெண்டினை ஒரு மகனுக்கு .... மற்றொரு எதோ அனாமத்தாகக் கிடைத்த ஒரு அபார்ட்மெண்டினை  மற்றொரு மகனுக்குக் கொடுத்துவிட்டு அவளும் கணவனும் இங்கே தான் ஜாகை,குளியல் உணவு எல்லாம்.

சில நாள்தான் மகனிடமிருந்து உணவு வரும் .வராத நாட்களில் பக்கத்திலிருக்கும் டீக்கடை வஸ்துக்கள் .

தினமும் காலை நாலு மணிக்கு எழுந்து பால் பாக்கெட் வாங்கி வந்து வீடு வீடாக விநியோகம் செய்யும் வேலை..
அதனால் காலைத்தூக்கம் என்பது  முடியாத ஒன்று .

இரவிலும் லேட்டாக வருபவர்களுக்கு கதவு திறக்கணும் .
எனவே அடிக்கடி தூக்கம் கெடும்

மகன்கள் வேறு அப்பப்போ காசு கேட்டுத் தொந்தரவு பண்ணுவார்கள் .

கந்து வட்டிக்காரன் வேறு   recovery கென்று  வந்து தொல்லை கொடுப்பான் .

இது அத்தனைக்கும்  சிகரம் வைத்தாற்  போல் கணவன் இரவு பகல் என்ற வித்தியாசமின்றி எப்பொழுதுமே தமிழ் நாட்டு அரசின் வருமானத்திற்கு வழிவகுக்கும் எண்ணம் கொண்டவன் .
தண்ணி அடித்துவிட்டு ஒரு பெரிய கலாட்டா பண்ணிவிட்டு நெடுஞ்சாண்  கிடையாக கிடத்துவதும் இவள் தலை எழுத்து..
இருந்தும் அந்த டிராஃபிக்  போலீஸ் வேலையை enjoy  பண்ணித்தான் செய்கிறாள்

Sunday, 26 January 2014

ஹைக்கூ '

சரி .நம்மளையும்  ஒரு கவிதாயினி ஆக்கிய ஒரே காரணத்திற்காக
ஒரு குட்டி ஹைக்கூ '


வாழ்க்கை என்னவோ பாடம்
 கற்றுக் கொடுக்கத்தான் செய்கிறது.
ஆனால் நாம்தான்
எப்பவும் போலே கடைசிப் பெஞ்சில் .

Tuesday, 21 January 2014

ஆஹா சரியாச்சு

ஒரு வழியாக எங்க வீட்டு நெட் கனெக்ஷன் சரியாச்சு !
கிட்டத்தட்ட ஒரு 15 நாளாக என்ன காரணம் என்றே தெரியாமல் நெட் சரிவர
 வேலை செய்யவில்லை .
அதன் காரணமாகத் தான் ஒரு பதிவு இரண்டு முறை பதியப் பட்டது.
நானும் பதிவு போடணுமே என்கிற   ஒரு காரணத்திற்காக 
பழைய எழுதி வைத்திருந்த டிரா ஃ ப்டில்  வைத்திருந்த ஒன்றை எடுத்துப் பதிவாகப் போட்டேன்.
சில பதிவுகளப் படித்தாலும் பின்னூட்டம்  போட இயலவில்லை .
என் பின்னூட்டத்தைப் பேஸ்ட் செய்வதற்குள் திரும்ப டொக்காகிவிடும்.
என்னவோ பண்ணி சரியாக்கியச்சு!
இனிமே சுறு சுறுப்பாக  ஆகணும் 

வாஸ்து விளக்கு

நேற்றைய HINDU பத்திரிகை 7 ம் பக்கத்தில் வாஸ்து விளக்கு பற்றிய ஒரு விளம்பரம் பார்த்தேன்.
அதுதான் இது.நான் முன்பு வாஸ்து  மளிகை என்பது பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.
உடனே எனக்கு அது தான் டக் என நினைவுக்கு வந்தது.

அட எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாரேன் !

அது சரியா தப்பா என்ற விவாதம் செய்யாமல் அந்த ஐடியாவைப் பார்க்கவேணும்.

ம்ஹும்  ..
ஒரு ஐடியாவை concrete  ஆக வடிவமைக்கணும் .

அந்த ஐடியாவை அழகாக மார்கெட்டிங் செய்யத் தெரியணும் .

அதுக்கும் ஒரு திறமை வேணும் .
அது அவங்க கிட்டே இருக்கு

 நான் சீரியஸாக அப்படி ஒரு வியாபாரம் செய்வதாக எண்ணமின்றித்தான் அந்தப் பதிவைப் போட்டிருந்தேன் .

ஆனால் நிஜமாகவே எதாவது ஒரு பொருளைக் கடையில் வாங்கி அதில்  வாஸ்து என்ற அடைமொழியை அந்தப் பொருளின் பெயர் முன்பு சேர்த்துவிட்டால் போதும் போலத் தெரிகிறது.

 நாட்டில்  நானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆக முயற்சி செய்யணும்

Thursday, 16 January 2014

கறை நல்லது என்கிற மாதிரி கடுப்பேத்தறதும் நல்லதே .

  ஆம் .கறை நல்லது என்கிற மாதிரி கடுப்பேத்தறதும் நல்லதே .

முதலில் தியரிப் படி விளக்கம் கொஞ்சம் தேவை .
ஏன்னா கடுப்பேத்தறது பத்தி நிறைய எழுதலாம்ன்னு இருக்கேன்..

பொதுவாக் கடுப்பேத்தறது அப்படின்னு சொன்னா குறைந்த பட்சம் இரண்டு  எதிர் எதிர் அணி   பார்ட்டிங்க தேவை.

.ஆனா அதிக பட்சத்துக்கு அளவே இல்லை .

 என்னா மெம்பருங்க எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆக கடுப்பேத்துவது   கடுப்பேத்தற அணிக்கு சுவாரசியமாக இருக்கும். 

எதிரணிக்கு  பயங்கரமாக கடுப்பு எங்கோ எகிறும்.

சில சமயங்களில் இது கொலை வெறியாக மாறி சிராய்ப்பில் இருந்து ஆரம்பித்து வெட்டுக் காயம் மற்றும் கொலை அளவு வரை கூடப் போக சான்சு இருக்கு.

குடும்ப லெவல்லெ இருந்து    ,பள்ளி ,   ஆபீஸ் , அரசியல் கட்சி  மற்றும்  நாடு தாண்டிய அளவிலும் கடுப்பேத்துவது உண்டு.

 பதிவர்களில் நான் பரம  சாது to the power of n என்பதால் பதிவு மூலம் கடுப்பேத்துவது பற்றி எனக்கு   லவலேசமும் தெரியாது.

 என்னை மாதிரி இல்லாமல்  கடுப்பேத்தாத நாளெல்லாம் வீண் என்று நினைக்கும் மகா நல்லவர்கள் கூட உண்டு.

 முன்னுரை இது போதும் என்று நினைக்கிறேன்.

நான்   ஏழாங்கிளாஸ்  படிச்சுட்டு இருந்த சமயம்.
வயசு என்னவோ பத்துதான்.
 மணி இரவு எட்டு .

அடுத்த நாள் கணக்கு  ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

என்ன காரணமோ தெரியலே  என்ன குட்டிக் கரணம் போட்டாலும்  புஸ்தகம் பின்னாடி அந்த மடையன் கொடுத்த விடை வரலை . கொஞ்சம் பக்கத்திலே விடை இருந்தாக் கூடம் எதையாவது ரவுண்டு போட்டு சமாளிக்கலாமுன்னு பாத்தா என் விடைக்கும் புஸ்தக விடைக்கும் பல கிலோ மீட்டர் தூரம் ..

 நான் அன்னைக்கி  எதும் மூஞ்சில முழிச்சேனோ   தெரியாது.

இல்ல என்  நேரமான்னும் சொல்லத்  தெரியலே.

யோசிச்சு யோசிச்சுப் பாத்துட்டு 
அப்புறம் ஒரு வழியா எங்க பெரிய அக்காகிட்டே  சொல்லிகுடுன்னு கேட்டேன்.

அங்கதான்  புடிச்சுது சனி.

கணக்கு நடுப்பற எதோ  ஒரு நம்பரை 13 ஆல் பெருக்கி 16 ஆல் வகுக்கணும்.

நான் எப்பவுமே  எதோ ஒண்ணாலே பெருக்கி அப்புறம்  3 ஆல்     பெருக்கி  சமாளிச்சுக்குவேன்

நான் அந்தப் 13 ஆல் பெருக்கும் போது சின்னப் புள்ள ராத்திரி எட்டு மணிக்குத் தூக்க கலக்கத்திலே தப்பு பண்ணிட்டேன்  போல ....

 தப்பைக் கரெக்ட் பண்ணி இந்த பாரு விடை அப்படின்னு லட்டு மாதிரிக் கையிலே கொடுக்கறதுதான் ஒரு பெரிய மனுஷங்களுக்கு அழகு.

அதை வுட்டுட்டு  எங்கே 13 ஆம் வாய்ப்பாடு சொல்லுன்னு   தேவையில்லாமல் ஆரம்பிக்க ...


நான் திரு திருன்னு முழிக்க
 செத்த நேரத்திலே வீட்டையே கலவர பூமியாக்கிட்டாங்க !


பட்டப் பகலில் 13 ஆம்   வாய்ப்பாடு சொல்லுன்னு பெரியவங்க கிட்டே கேட்டாலே ததிங்கினத்தோம் !

வெவரம் புரியாத பத்து வயசுப் பாப்பா கிட்டே அதுவும் ராத்திரி எட்டு மணிக்கு தூக்கக் கலக்கத்தில் கேட்பது தப்பு என்று எந்தக் கோர்ட்டும் தீர்ப்பு சொல்லும்.

 ஒரே கத்தல் எங்க அக்கா.

சின்னப் பொண்ணுன்னு ஒரே செல்லம் . 
என்னை மட்டும் எப்படிப் பாடப் படுத்தினீங்க  ஆய் ஊய் ன்னு  ஒவராக் கத்த...

 எங்க அப்பா என் படிப்புப் பக்கம் அவ்வளவா  வராம ஒதுங்கிக்கிற  டைப்பு.


ஆனா எங்க அப்பா பெரிய அக்காவைப்  படுத்தி எடுத்தது  எங்கள் உறவினரிடையே ரொம்பப் பிரசித்தம்.

சும்மா கிடந்த எங்க அப்பாவை உசுப்பி விட்டு அவர் என்னடான்னாக்க சின்னக்  குழந்தைன்னு கூடம் பாக்காம  ரெண்டாம் வாய்ப்பாடுலெருந்து சொல்லுன்னு  வறு  வறுன்னு  வறுக்க.. 


 அஞ்சாம்  வாய்ப்பாட்டு வரை தான் ரீல் ஓடுச்சு.

ஆறாம் வாய்ப்பாட்லேருந்து  ஊத்திகிச்சு.


முதல்ல வாய்ப்பாட்டை படி கணக்குக்கு  அப்பறம் போகலாம்ன்னு  எங்க அப்பா  ஒரு தீர்மானம் போட்டார்.

இந்த சத்தத்தில் எங்க அம்மாவும் சந்திலே பூந்து சிந்து பாடற மாதிரி சாயந்திரம்  ஸ்கூல் விட்டு வந்ததும் பையைத் தூக்கி வீசிட்டு விளையாடப் போ சொல்றேன் உன்னை நாளைலேருந்து கவனிச்சுக்கிறேன் ;
படிச்சு முடிச்சாதான் இனிமே வெளையாட்டெல்லாம் ன்னு  பயமுறுத்த ....
 (பையையும் தூக்கிட்டுப் போயா விளையாட முடியும் )

என்னடா நமக்கு வந்த சோதனைன்னு  நொந்துட்டேன்.

மணி  ஒம்போதாச்சு. ஆறாம் வாய்ப்பாடு மட்டும் ஒப்பேத்திட்டு மிச்சத்தை நாளைக்கு சொல்றேன்னு தப்பிச்சுட்டேன்.

அன்னைக்கு எங்க அக்கா முகத்திலே ஒரு வெற்றிக் களிப்பு  !

இலங்கையில் தோற்ற இராவணன் மாதிரி சோகம் தாளலை எனக்கு !

தூங்கிட்டு மறுநாள் எப்படியோ திட்டிகிட்டே எங்க அப்பா அந்தக் கணக்கைப் போட்டுக் குடுத்தாங்க 
காப்பி அடிச்சு ஹோம் ஒர்க் முடிச்சாச்சு  !


அந்த காலத்தில் சைல்ட் ஹெல்ப் லயன் கூடக் கிடையாது .


இப்படி ஒரு குருப்பாக் கடுப்பேத்தின அன்னைக்கு நான் போட்ட தீர்மானம் என்னன்னாக்க  என்ன ஆனாலும் சரி இதுங்க கிட்டே சந்தேகம் கேக்கவே கூடாதுன்னு ...

  நம்மளே  முட்டி மோதி படிச்சுக்கணும்.

சந்தேகத்தை கேட்டா சொல்லிக்குடுக்க தெரியாம வெட்டிக் கேள்வி கேட்டு நம்ம தூக்கத்தையும்  மனசையும் கெடுக்குதுங்க ....

அதிலேருந்து  படிப்பு  முடியறவரை யாரையுமே சந்தேகம் கேக்கவே மாட்டேன். நல்லாவும் படிச்சேன்.

இப்ப சொல்லுங்க  

கடுப்பேத்துவது  நல்லதுதானே !