Thursday, 24 April 2014

ஓட்டுப் போட்டேன் !


 தேர்தல் சமயத்தில் எல்லோரும் எழுதித் தீர்த்து விட்டார்கள் .அதுவும் பக்கம் பக்கமாக !
நாம மட்டும் ஒண்ணுமே எழுதலேன்னா எப்புடி ?
அதன் விளைவுதான் இந்த சிறிய பதிவு.

காலை நேரம் என் மகனுக்கான காலை உணவு (எங்களுக்கும்  சேர்த்துத்தான்). தயாரித் துக் கொண்டிருந்தேன் பையன் குளித்து முடித்து ஓட்டுப் போட கிளம்பினான்
.நானோ செம பிஸி 
எங்கே ஓட்டுப் போடத்தானே?
ம் ...
அப்படீன்னாக்க என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
சும்மா ஒரு லுக் விட்டான் .பாருங்கள்

வேலைக்காரியும் அம்மா கீழே போய் ஓட்டு போடப்போறேன் .

ஏதாவது செய்யணுமா என்றாள்.

சரி அவ்வளவு தூரம் போறியே அப்படியே என் ஓட்டையும் போட்டுடேன் என்றேன் .
அம்மா ....நீங்க இருக்கிங்களே .....  என்று சொல்லிவிட்டு மேலே ஒன்றும் பேசவில்லை .

என் கணவரிடமும் இதையே சொன்னேன் .

அவரும் இதே போல்  மறுத்துவிட்டார்.

எல்லா மானேஜ்மெண்டு புத்தகங்களும்
திறமையாக வேலைகளை delegate அல்லது  அவுட் சோர்சு பண்ணும் என்கிறார்கள் .

யாரும் செய்தால் தானே .

பிறகு நானே போய் ஓட்டுப் போட்டு வந்தேன் .

Sunday, 20 April 2014

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !

நினைவுகள்: கர்வமும் ஒரு அழகே !: கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும் எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது...

கர்வமும் ஒரு அழகே !


கர்வம் என்றாலே எதோ டாஸ்மாக் சமாச்சாரம் மாதிரி

நம்மை எங்கோ படு பாதாளத்தில் தள்ளிவிடும் என்றும்

எந்த சூழ்நிலையிலும் கர்வம் என்பதே கூடாது என்றும்

சங்க கால மற்றும் சமகால இலக்கியங்களிலும் கூறப்படுகின்றது

மற்றும் பாடப் புத்தகங்களில் மனப்பாடப்பகுதிக்கு இது சம்பந்தப்பட்ட

செய்யுள்கள் களை உருத்தட்டாத நம்மவர்கள் குறைவு.

ஆனால் எனக்குச் சின்ன வயசிலிருந்தே எனக்கு இதில் சுத்தமாக

உடன்பாடில்லை ,

பக்திக்கதைகளும் சரித்திரக் கதைகளும் பல  உதாரண கதா  பாத்திரங்களைக்

கொண்டு இதை விலாவரியாக விளக்குகிறது.

ஹிட்லர் முசோலினி ஆகியவர்களின் சுயசரிதையும்  போன நூற்றாண்டின்

வாழ்ந்து அழிந்த மனிதர்களின்  உதாரணமாக சின்னக் குழந்தைக்குக் கூட

போதிக்கப்பட்டது.

நானும் கூட மார்க்குக்காக மட்டுமே நெட்டுருப் போட்டேன் .

அதை எதிர்த்து நான் வாதம் செய்தால் 'திமிர் ' என்ற பட்டம்  மற்றும்

      'விதண்டா வாதம் வீண் நேரம்  'என்ற அறிவுரைகளால்

என்  வாதத்தின் பக்கம் உள்ள நியாயத்தைப் பலரும்

ஏன் உண்மையைச் சொன்னால் ஒருத்தர் கூட ஏற்றுக்கொள்ளவில்லை .

 சரி இப்பவாவது சொல்லுவோம் யாராவது ஒத்துக்கிறாங்களா பாப்போம் .

 கர்வமும் ஒரு அழகே !

கர்வத்தைப் போய்  அழகு என்று சொல்வதா என்று கோபப்பட வேண்டாம் .

கர்ணன்  படத்தில் மஞ்சள் முகம் நிறம் மாறி என்ற பாடலில் சிவாஜி தனக்கு

குழந்தை பிறக்கப் போகிறது என்று "க ர்ணன் தந்த பிள்ளை என்றால்" என்ற

வரிகளுக்கு  கர்வமாக ஒரு லுக் விடுவதை கிட்டத்தட்ட 50 வருடங்கள்

ஆகியும் இன்றும் நாம் ரசிக்கவில்லையோ ?

 கர்வமும் அழகாக இருப்பதால்தானே  நாம் ரசிக்கிறோம்

வீரபாண்டியக் கட்டபொம்மனின் கர்ஜிக்கும் கர்வ  வசனம் பற்றி  அதிகம்

சொல்லவேண்டியதே இல்லை.

இலங்கேஸ்வரன் நாடகத்தில்

ஆர்எஸ் மனோகரின் கர்வமான நடையையும்  வசனங்களையும்

ரசித்து  பல நாட்கள் அந்த நாடகத்தை வெற்றிகரமாக ஓட விட்டதும் நாம்தான்.


ஒரு பத்து வருடம் முன்  படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணனின்

கர்வமான நடிப்பை ரசித்ததும் சாட்சாத் நாம்தான்!

அட  விடுங்க அதெல்லாம் !

கர்வமா இருக்கிற வயசுப் பொண்ணுகளை ரசிக்கண்ணே

 " அவ கர்வம் கூட ஒரு தனி அழகுடா "ன்னு

  சில பேர் ஒரு குரூப்பா அலையரதில்லையா என்ன?

எல்லாருமே கர்வமா இருக்கறதை மனசுக்குள்ள ரசிச்சுகிட்டு

வெளியிலேபிடிக்காதமாதிரி  வேஷம் போடறாங்க!

இதுதான் உண்மை !

இவ்வளவு சொல்லியும் நான் சொல்றதை நீங்க நம்ப மறுக்கிறீங்களா?

எங்கே கொஞ்சம் கர்வமாக ஒரு லுக் வுட்டுகிட்டு

கண்ணாடியிலே உங்க மூஞ்சியை பாத்துட்டு

அப்புறம் சொல்லுங்க .


ஹி  ஹி   கர்வத்துக்கும் ஒரு தனி அழகு  இருக்கில்லே ?

Sunday, 6 April 2014

கடவுள் நம்பிக்கை


கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய
விவாதம் காலம் காலமாக நடக்கிறது .

அதிதீவிர நாத்திகர்கள் கடைசியில் தீவிர ஆத்திகர்கள் ஆவதும் ,அதே போல் ஆத்திகர்கள் நாத்திகர்கள் ஆவதும் உண்டு .

இதில் எது சரி எது தப்பு என்ற விவாதத்திற்குள் நான் நுழையப் போவதில்லை

என்னைப் பொறுத்த வரை நான் கடவுளை நான் வேண்டியதைக் கொடுக்கும் ஒரு மேஜிக்  பவராகத் தான் நினைத்து வந்திருக்கிறேன் .

 கேட்டதைக் கொடுத்தால் காணிக்கை போட்டும் நன்றி சொல்லியும் கொடுக்காவிட்டால் கடவுளைத் திட்டவும் செய்யும் சராசரி மனுஷிதான் .நான்

ஆனால் கடவுள் பக்தியில் ஒரு சௌகரியம் இருப்பதை என் அபார்ட்மெண்ட் வேலைக் காரப் பெண்மணி எனக்கு  அறிவுறுத்தினாள்.

அவள் கணவன் ஒரு குடிகாரன் .
குடித்து விட்டு கண்ட மேனிக்கு கலாட்டா செய்யும்
  பெறு மதிப்பிற்குரிய டாஸ்மாக் வாடிக்கையாளர் .

குடிக்காத நேரங்களில் என்னவோ நல்லவன்தான்.

அவ்வப்போது அவளுக்கும் அடி விழும் .

அவளுக்கு வயது 50க்கு மேலே இருக்கும் .
மகன்களுக்கும் கல்யாணம் ஆகிவிட்டது .
ஆனாலும்  மகன்களுக்கு நிரந்தர வருமானமில்லை .
கணவனும் மனைவியும் இங்கேயே படுத்து வாழும் ஜீவன்கள்

இந்த பதிவு எழுதும் போது அவன் குடித்து விட்டுத் தான் வெளியில் கத்திக் கொண்டு இருக்கிறான்.

வேலைக் காரப் பெண்மணிஅவ்வப்போது கடவுளைத் திட்டுவாள் .
கணவனைத் திட்டுவாள் .
அதே சமயம் ஒரு சின்ன சாமி போட்டோ வுக்கு ஓசியில் கிடைக்கும் பூக்களையும்  தினமும் மறக்காமல் போடுவாள் .

இன்று காலை என் வீட்டுக்கு அவள் வந்திருந்தாள் .
கழுத்தில் ருத்திராட்ச மாலை எல்லாம் போட்டிருந்தாள்.
நெற்றியில் சந்தனம்+ குங்குமம் + பெரிய விபூதிப் பட்டை  தலையில் பூ இத்யாதிகளுடன்  இருந்தாள்.
என்ன இப்படி இருக்கிறாய் .பக்தி முத்தி விட்டதா என்றேன் .

கதவைச் சாத்துங்கம்மா என்று சொல்லிவிட்டு
மெல்லிய குரலில்
"அதில்லேம்மா .
நா இப்ப மாலை போட்டிருக்கேன்னா  நா சாமிக்கு சமானம் .
புருஷன் குடிச்சிட்டு வந்தாலும் என்னை அடிக்க முடியாது
.அவரும் அடிக்க பயப்படுவாரு
அப்படியும்குடி போதையிலே  அடிச்சாருன்னக்க நா சாமி வந்த மாதிரி குதிப்பேன் .

மிரண்டு ஒடிருவாரும்மா.
அடி தாங்க முடியலேம்மா
வேறே வழி" என்றாள்.

 கடவுளை ஒவ்வொருவரும் அவரவர் வழியில்
புரிந்துகொண்டு அவரை நம் சௌகரியத்திற்கு
 ஏற்ப உபயோகித்துக் கொள்கிறோம்
அவ்வளவே !
இதில் வாதம் தேவை இல்லை