Thursday, 26 September 2013

பேதி மருந்து

இந்த காலத்து மக்கள் ஸுக்கு இந்த அனுபவம் சுத்தமாக இருக்கவே இருக்காது என்று நம்புகிறேன். நாங்களெல்லாம் சின்னக்குழந்தை ஆக இருந்த போது  எப்படி அரை ஆண்டுத்தேர்வு முழுஆண்டுத் தேர்வுகளிலிருந்து தப்புவது என்பது   முடியாதோ அது போல வருடம் இரு முறை இந்த பேதி மருந்திலிருந்து தப்ப முடியாது  என்பது பிரம்மா தலையில் எழுதிய எழுத்து .எந்த சாஃப்ட் வேராலும்
அழிக்கவே முடியாது.
ஒருசுப யோக ஞாயிற்றுக்கிழமைதான் பொதுவாக இதற்கென்று தேர்ந்து எடுப்பார்கள் .அதாவது யாருக்கும் பரீட்சை  இல்லாத நாள் ,அமாவாசை பரணி கார்த்திகை  போன்ற நாள் நட்சத்திரம்  எல்லாம் பார்த்து முகூர்த்த தேதி குறிப்பதற்கு எவ்வளவு கவனம் எடுப்பார்களோ  அந்த ரேஞ்சுக்கு பேதி மருந்து சாப்பிட  நாள் குறிப்பார்கள் .


எங்க அப்பா ரொம்பவே கோபக்காரர் .மருந்து சாப்பிட தகறாரு பண்ணினால் நம்மளை அடிக்க மாட்டார் ,கையில் அகப்பட்ட சாமானை கீழே போட்டு உடைத்துவிடுவார் .அது முகம் பார்க்கும் கண்ணாடி யாக இருந்தால் அதை அள்ள வேண்டிய வேலை அம்மாவுக்குத்தான் , பாவம் அம்மா.நிறைய முறை கண்ணாடி அள்ளியிருக்கிறார்கள் .

அந்த மருந்தை முழுங்கவே  முடியாது.எங்களைச் சொல்லிக் குற்றம் இல்லை.இது பற்றி பட்டி மன்றம் நடத்தினால்  அது சர்வ நிச்சயமாக மருந்து கம்பெனி செய்த குற்றமே என்று எப்படியாகப் பட்ட நடுவரும் தீர்ப்பு  சொல்வார்கள் ,என் கசப்பு உன் கசப்பு இல்லை அப்படி ஒரு கசப்பு கசக்கும் பாருங்கள். விவரிக்க வார்த்தைகளே இல்லை.

எப்படியோ எங்க பெரிய அக்கா மட்டும் மூக்கை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு ( மூக்கை அழுத்திப் பிடித்துக்கொண்டால் வாயில் முழுங்கும்போது கசப்பு தெரியாதாம்.கண்டுபிடிப்பு ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு இருக்கில்லே   )குடித்து விடுவார்கள் .நானும் எங்க சின்ன அக்காவும் அந்த டெக்னிக்கை ட்ரை  பண்ணினோம் .
ம்ஹூம்  தோல்வி தான்.
மூக்கை பிடிப்பதிலும் சில லாவகங்கள் உண்டு என்பதே பிற்பாடுதான் புரிந்தது. மூக்கை  சரியாகப் பிடிக்காவிட்டால் நாக்கில் overstay
பண்ணிகொண்டிருக்கும் மருந்து மூக்கு வழியாக வந்து மூக்கே கசக்க ஆரம்பிப்பது போன்ற ஒரு உணர்வு வரும்.கொஞ்சம் சர்க்கரை குடுப்பார்கள்

சில சமயங்களில் சர்க்கரையை முதலில் சாப்பிட்டு பின் மருந்து சாப்பிடுவோம் .என்ன  ஜாலம் பண்ணினாலும் அந்த கசப்பு வாயிலேயே  குறைந்தது ஒரு மணி சாவகாசம் குடியிருந்து விட்டுத்தான் போகும்.
மருந்து உள்ளே போனதும் வேலை ஆச்சு என்று நிம்மதியாக இருக்க முடியாது.
சில .......... சில என்ன பல சமயங்களில்  வாந்தி வரும் ,
அவ்வளவு தான் .
மறுபடியும்  முதலிலே இருந்துதான் .
அடுத்த படியாக toilet  போனியா போனியா என்று உயிரை வாங்குவார்கள் . அடுத்த படியாக அது தொடர்பான பல கேள்விகளை ( நாகரிகம் கருதி விலாவாரியாக எழுதவில்லை )  கேட்டு மீதம் இருக்கும் உயிரையும் வாங்கிய பிறகு  அடுத்த கொடுமை மிளகு ரசம் போட்ட சாதம் தான் அன்று .
பல முறை toilet யாத்திரை போய் நாமே ஒரு வழியாக ஆகிவிடுவோம் .
நம்மளை ஒரு வழியாக ஆக்கியபின் தான் பெற்றோருக்கே ஒரு நிம்மதி வரும் போலே!
ஒரு ஐந்து ஆறு வயது வரை தான் (விவரம் புரியாத வயதில்லையா)நான் என் பெற்றோர்களை படுத்தினேன் . பிறகு படுத்தவே இல்லை 
எனக்கென்று பேதி மருந்து சாப்பிடுவதில் ஒரு தனி பாணி ஏற்படுத்திக்கொண்டேன் 
.ரொம்ப சமர்த்தாக மருந்து குடித்துவிடுவேன். 
என்னை ஒரு முன் மாதிரியாகக் கூட சொல்லிக்  கொண்டிருந்தார் என் அப்பா.
அதன் ரகசியத்தை எங்க அப்பா விடம் கூட   (93 வயது வரை வாழ்ந்தார்) சொல்லவில்லை .
அந்த டெக்னிக் பற்றி தெரிந்து கொள்ள நீங்களும் ஆவலாக உள்ளீர்கள் இல்லையா ?
உங்களுக்குச் சொல்லாமலா ?
இப்பொழுது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் .
மருந்தை வாங்கி நாமே வாயில்  ஊற்றிக் கொள்ளவேண்டும் .
அம்மாவையோ அப்பாவையோ இந்த விஷயத்தில் கண்டிப்பாக நம்பவே கூடாது.
 மருந்தை  வாயில்  ஊற்று வது போல் பாசாங்கு செய்ய வேண்டும் .
ஆனால் மருந்தை முழுங்கக் கூடாது .
மருந்து கசந்தால் என்ன மாதிரி நடிக்கணுமோ  அப்படி நடிக்கணும் . சொதப்பினால் நாம் அவுட்டு.
மறக்காமல் மருந்து சாப்பிட்ட டம்ளரை நாம்தான் கழுவி வைக்கணும் .
Out sourcing  கூடவே கூடாது.
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் என்ற உண்மையை மறந்திடக்கூடாது.

மூன்றாவது முக்கிய பாயிண்டு      toilet   பக்கம் அடிக்கடி  ஓடவேண்டும்.
டயர்டாக இருப்பது மாதிரி பாவ்லா எல்லாம் காமிக்கணும் .
எப்படியோ நம்ம மேலே சந்தேகம் வராதபடிக்கு சந்தர்ப்பத்தைப் பொறுத்து நடிக்கணும்.
 இப்படியே ஒரு மூன்று வருடம் ஓடியது .
கொஞ்சம் வளர்ந்த பின் டெஸ்ட்  பரிட்சை அது இது என்று தப்பித்தது பெரிய கதை.Tuesday, 24 September 2013

திண்டுக்கல் தனபாலன்: நீயே உனக்கு என்றும் நிகரானவன்

திண்டுக்கல் தனபாலன்: நீயே உனக்கு என்றும் நிகரானவன்: வணக்கம் நண்பர்களே... நமக்குள் சொல்லக்கூடாத ரகசியம் : தோல்விகள் மட்டுமல்ல... துன்பங்களும் தான்... படிக்காதவர்கள் Click → இங்கே கண்ணொளி PLAY ...

"இளமை "ஆங்கில கவிதை

"இளமை " என்னும் ஆங்கில கவிதை ,. இது ஒரு ஆங்கில கவிதையாக இருந்தபோதிலும்ஆச்சரியப் படத்தக்க வகையில்   இது ஆங்கிலேயர்களை விடவும் ஜப்பானியர்களை மிகவும் கவர்ந்த கவிதை .
இந்த கவிதை சாமுவேல் உல்மேன் என்ற அமெரிக்கரால் இயற்றப்பட்டது.
இது அவரின் 77வது வயதில் எழுதப்பட்ட கவிதை .இந்த கவிதை அவர் இறந்த பின் ஜெனரல் டக்லஸ் மெக் ஆர்தர்  என்ற வரால் அவரது டோக்கியோ அலுவலகத்தில் ஃ பிரேம் பண்ணி தொங்கவிடப்பட்டு இருந்தது.
அவர் அடிக்கடி தனது பேச்சுகளிலும் இந்த கவிதை வரிகளை மேற்கோள் காட்டுவார்.இந்த கவிதைவரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ஜப்பானியர்கள் இதை மனப்பாடம் செய்து கொண்டனர். பானசோனிக்  கம்பெனி தலைவர் மத்சுசிதா தன்னை  இந்த கவிதை பெரிதும்  ஊக்குவித்தது என்பார். பிரபல அரசியல்வாதிகளும்  பத்திரிகையாளர்களும் கூட இந்த கவிதையை  மேற்கோள் காட்டுவார்கள்.
பல பள்ளிகளில் இந்த கவிதையை கட்டாயமாக மனப் பாடப்பகுதியாகாவும் ஆக்கினார்கள்..
இந்த கவிதை பற்றி நான் சுமார் 20 வருடக்களுக்கு முன்பு ஜப்பானிய மொழி படிப்பேன் என்று கனவில் கூட நினைத்துப்பார்க்காத கால கட்டத்தில்  ரீடர்ஸ் டைஜஸ்ட் டில் படித்தேன்.மனதின் ஒரு ஓரத்தில் "மெமொரி "யில் ஸ்டோர் பண்ணி வைத்திருந்தேன்,  பல முறை அந்த கவிதையை எங்கே தேடுவது என்று தெரியாமல் பிறகு இன்று எதேச்சையாக  ஏதோ ஞாபகம் வர  நெட்டில்  துழவினேன் . ஜப்பானியர்களை ஊக்குவித்தத கவிதை என்று மட்டும் தான் தெரியும்.
மற்றவைகளை மறந்துவிட்டேன்,பிறகு ஒரு வழியாக   "கண்டேன் சீதையை "தான் .
 இதோ அந்த கவிதை.
YOUTH POEM

By: Samuel Ullman

    Youth is not a time of life - it is a state of mind, it is a temper of the will, a quality of the imagination, a vigor of the emotions, a predominance of courage over timidity, of the appetite for adventure over love of ease. Nobody grows old by merely living a number of years. People grow old only by deserting their ideals. Years wrinkle the skin, but to give up enthusiasm wrinkles the soul. Worry, doubt, self-distrust, fear and despair - these are the long, long years that bow the head and turn the growing spirit back to dust. Whether they are sixteen or seventy, there is in every being's he
    art the love of wonder, the sweet amazement at the stars and starlike things and thoughts, the undaunted challenge of events, the unfailing childlike appetite for what is to come next, and the joy and the game of life. You are as young as your faith, as old as your doubt; as young as your self-confidence, as old as your fear, as young as your hope, as old as your despair. When the wires are all down and all the innermost core of your heart is covered with the snows of pessimism and the ice of cynicism, then you are grown old indeed. But so long as your heart receives messages of beauty, cheer, courage, grandeur and power from the earth, from man and from the Infinite, so long you are young.

ஹைதராபாத் கடுகு

நாங்கள் ஹைதராபாத்தில் குடியிருந்த போது நானும் வேலைக்குப் போய் கொண்டிருந்த படியால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள தஞ்சை மாவட்டத்திலிருந்து ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு  வந்திருந்தோம் .அவள் பிறந்து வளர்ந்தது  எல்லாம் தமிழ் நாடாக இருந்த போதிலும்  ஹைதராபாத் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.
ஹைதராபாத்தில் வேர்கடலை நான்கு நான்கு  பருப்புகளாக இருக்கும் . அங்குள்ள துவரம்பருப்பு ரொம்பவே ருசியாக இருக்கு ,அந்த ருசி நம்மூர் பருப்புக்கு வரவே வராது ,அந்தூர் அரிசி அப்படியே சாப்பிடலாம் தொட்டுக்கறதுக்கு ஒன்னும் கூட வேண்டாம் ,என்று சொல்லுவாள்.பிறகு அங்கிருந்து மாற்றல் ஆகி சென்னை வந்த பின் நான் யாரையும் வீட்டோடு வைத்துக்கொள்ளவில்லை .
மறுபடி எனக்கு ஒரு முறை உடல் நலம் குன்றிய போது என் அப்பா அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.ஆபிசுக்கு லீவு போட முடியாததால் அவளை ஒரு  மாதம்உதவிக்கென்று வைத்துக்கொண்டேன் . என் கணவர் வெளி மாநிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததால் எனக்கும்  உதவி தேவைப்பட்டது.
அப்பாவும் அவளும் ஒரு செவ்வாய்கிழமை வந்தார்கள் .அன்று ஒரு கல்யாண ரிசப்ஷன் இருந்ததால் நான் வீட்டில் சாப்பிடவில்லை.
அவள் இரவு தோசை செய்திருக்கிறாள் .ஆனால் தேங்காய் சட்னி என்னவோ நல்லாவே இல்லை சட்னியில் என்னவோ பிரவுன் கலரில்  மிதந்தது  என்று என் பசங்கள் இருவரும் குற்றப்பத்திரிகை வாசித்தார்கள் .அதற்கு அவள் இந்தூர் கடுகே சரியாகப் பொரியமாட்டெங்குதும்மா  ஹைதராபாத் கடுகு எண்ணையிலே போட்ட என்னமா பட பட என்று பொறியும் .இந்தூர் கடுகு அப்படியே  பூத்து வருதும்மா என்றாள்.
எண்ணையை ஒழுங்கா காய வை அப்புறம் கடுகு போட்டு பொறி ன்னு சொல்லிட்டு நான் பசங்களுக்கு பாடம் சொல்லிகொடுக்க போய்விட்டேன் .
காலையும் மதியமும் எப்போதுமே சப்பாத்திதான் . அது நான் செய்து விடுவேன்
புதன்கிழமை பசங்கள் திட்டவட்டமாக சட்னியில் கடுகு போடாதே என்று சொல்லி விட்டார்கள்
வியாழக்கிழமை அன்று சாயந்திரம் இருவரையும் என் அப்பா கட்டாயப்படுத்தி சாம்பார் சாதம் சாப்பிடவைத்த  போது வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுவிட்டு என்னிடம் மறுபடியும் கம்பிளைண்டு !
என் அப்பா  வேறு என்னிடம் உன் பசங்களுக்கு சாம்பார் அருமையே புரியவேயில்லை .சாம்பார் வாசனையை அந்த கடுகு வாசனை தூக்கி அடிக்குது என்று சொல்லி அந்த சாம்பாருக்கு ஒரு பாரத ரத்னா அவார்டு குடுக்காத குறை !
வெள்ளிக்கிழமை சாயந்திரம் எங்க அப்பாவின் கொடுமை தாங்காமல் என் பசங்கள் ஏதோ செய்து சாப்பிடாமல் தப்பித்து ஒடி விட்டார்கள் .
வெள்ளிக்கிழமை இரவே என்னிடம் சனிக்கிழமை சாயந்திர டிபனுக்கான காசை வாங்கிகொண்டு விட்டார்கள் .
வெள்ளிக்கிழமை  இரவு எங்க அப்பா அவளிடம் ஏதோ பூமத்தியரேகை அட்சரேகை  என்றெல்லாம் சொல்லஇங்கிலீஷ் மீடியத்தில்படிப்பதால்  அது சரிவர புரியாமல்  என் சின்ன மகன்  என்ன சொல்கிறீர்கள்  என்று கேட்டிருக்கிறான் .
என் அப்பாவும் இது ஜாக்ரக்பி ஃ  டா   என்று சொல்லியிருக்கிறார் .
என் பையன் அவளுக்கு ஏன் தாத்தா  ஜாக்ரக்பிஃ  சொல்லித்தருகிறார் போய்
கேளு  கேளு என்று நச்சரித்தான் .
போய்  கேட்டேன்.
பூகோளரீதியாக  ஒரு தாவரத்தின்  /தானியத்தின் தன்மை பூமத்தியரேகை
அட்சரேகை  கடல் மட்டத்திலிருந்து உயரம் ,கடலிலிருந்து உள்ள தூரம்
இவற்றை பொறுத்து மாறும் ,அதனால் தான் சென்னையின் கடுகு சரிவரப் பொரியவில்லை என்ற உலக மஹா கண்டுபிடிப்பை  விளக்கமாக விவரித்துகொண்டிருந்தார்.
எனக்கோ எரிச்சல் ! ஆமா  இப்போ அவ 12வது பரிட்சையா எழுதுகிறாள் .
வெட்டி வேலை ! என்று மனதில் நினைத்தேனே தவிர வாயைத்திறக்கவில்லை.
 ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமை  காலையில் பசங்களை எழுந்து படிக்க சொல்லிவிட்டு நான் சமைத்தேன் .
அந்த வீடு மிகவும் சிறியது , நானும்அப்பா வேலைக்காரி மகன்களுடன்  பேசிக்கொண்டே சமைக்கும்பொழுது கடுகு தாளித்தேன். பட பட என சத்தம் கேட்டதும்  என்னங்க  உங்களுக்கு மட்டும் எப்படி  இப்படி பட பட ன்னு
பொரியுது என்று வாயைப்  பிளக்க  எங்கே கடுகை காமிங்க  என்று கேட்டாள்.
கடுகு டப்பாவை காண்பித்தேன் .இந்த டப்பாவா கடுகு டப்பா , நான் அந்த டப்பாவில்  இருந்த கடுகுல்லெ பொறித்தேன்  என்று (Leaf tea)
   டீ இலைகள் இருந்த டப்பவைக்காட்ட  பையன்கள் பயங்கரமாக  வாரினார்கள் .
தாத்தா எப்படி எப்படி கடுகு வாசனை சாம்பார் வாசனையை தூக்கி  அடிக்குதா ?என்று எங்க  அப்பாவை வேறு  கிண்டல் !
எல்லாம் அவளுக்கு வெள்ளெழுத்து  வந்துவிட்டதால்  வந்த வினை !


Sunday, 15 September 2013

வாஸ்து மளிகை

வாஸ்து  என்ற ஒன்று மனிதர்களை எப்படி எல்லாம் ஆட்டிப்படைக்கிறது  என்று நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியமில்லை .
என் நோக்கமும் அதுவல்ல .
சரி வாஸ்து பார்ப்பது சரியா தப்பா என்று ஆராய்வதா வாக்குவாதமா  என்று கேட்டால் அது வும்  இல்லை . அது முழுக்க முழுக்க நீயா நானா கோபிநாத்தின்   ஏரியா  . நான் நுழையத் தயாரில்லை .
 பார்க்காமலேயே கோப்பெரும்  சோழனும் பிசியராந்தையரும்
நட்பு கொண்ட மாதிரி நானும் கோபியும் ஒருவரை ஒருவர்  பார்க்காமலேயே  உர்  உர்  ஆகவேண்டாம் என்று தீர்மானித்துவிட்டேன்  ,
 பிறகு என்னதான் நோக்கம் என்றால்  மேலே படியுங்கள் புரியும்.
 ஒரு இரண்டு வருடம் முன்பு  என் மகன் ஹைதராபாத்தில் பணி புரிந்த போது  நான் போய்  ஒரு 20 நாள் தங்கியிருந்தேன் . நான் முன்பே அங்கு 7 வருடங்கள் பணி புரிந்த காரணத்தால்  என்னால் தனியாக எங்கும் ஊர் சுற்றும் தெகிரியம்  உண்டு. மொழி பிரசினை கிடையாது.
என்னிடம் இருந்த சின்ன பர்ஸ் கிழிந்து விட்டதாலும் வேறு சில சாமான்கள் வாங்க வேண்டியும் நான் கோடி என்ற இடத்துக்கு போனேன் . அங்கே ஒரு 12 வயது மதிக்க்கூடிய  ஓர் பையன் வாஸ்து  பர்ஸ்  வாஸ்து பர்ஸ் என்று கூவிக்கொண்டு  சூரியா  ஒரு படத்தில் அபிநய சரஸ்வதி சரோஜா தேவி உபயோகித்தது என்று சொல்வாரே அந்த ரேஞ்சில் இந்த பர்ஸ்  நமது ராமர்
 என் டி ஆர் , மற்றும்  ஏ  . நாகேஸ்வர ராவெல்லாம் இந்த பர்ஸ்  வாங்கியதன் பின் தான் பிரபலம் ஆனார்கள். இந்த பர்ஸ்சை இவர்கள் குடும்பம் மட்டுமே ஒரு சிலருக்கு மட்டுமே செய்து கொடுத்த தாகவும் ,இப்பொழுது  மாநிலமும் மன்பதையும் பயனுறும் வகையில் இப்பொழுது நிறைய செய்து அதுவும் ஏழைகள் கூட வாங்க வகை செய்யும் விதமாக  மிகவும் சல்லிசாகவும் விற்பதாகக் கூறினான்
பிறகு ஒரு  50 வயது மதிக்கத்தக்க  ஒரு ஆள் வந்து  தெனாலி யிலிருந்து . வருவதாகவும்  போன முறை  ஹைதராபாத் வந்த போது  பர்ஸ் இவனிடம் வாங்கியதிலிருந்து  பணத்திற்கு தட்டுப்பாடே இல்லை என்று சொல்லி ஒரு 10 பர்ஸ் வாங்கினான் . அதைப்  பார்த்து  ஒரு நாலு பேர் பர்ஸ் வாங்க அவன் பேச்சு சாதுரியத்தை கேட்டவே  கும்பல் கூடியது..
 இது  ஒரு அக்மார்க் பொய் என்று தெரிந்தும் நான் என் தேவை கருதியும் 20 ரூபாய் பர்ஸுக்கு  எட்டு கொட்டேஷன் வாங்குவார்களா,இதுக்கொசரம் கோடி  ஏரியா வுக்கே பாதயாத்திரை  போகணுமா என்ற  (சோம்பேறித்தனமா   ?) என்ற அறிவும் உணர்த்த நானும் ஒரு பர்ஸ் வாங்கினேன்.
 பிறகு வேறு இடங்கள் சுற்றி  செகந்திராபாத் பஸ்  ஸ்டாண்ட் வந்தேன் .
ஒரு டீக்கடையில் இருந்த ஆளை ஒருத்தன் சத்தமாக சீக்கிரம் வா மாமா என்றான். யாரென்று பார்த்தால் நம்ப 12 வயது வியாபாரியும்  தெனாலி யிலிருந்து .  வந்ததாக சொல்லப்பட்ட ஆளும்  !
 பிறகு  கோடி"யில் செய்த மாதிரியே!
 சே! என்ன செட்டப்புடா!
 என்று நினைத்தாலும் எனக்கு அது  ஒன்றும் தப்பாக தெரியவில்லை.
 ஏனென்றால் " என் மேனி அழகின் ரகசியம் ..... என்று பெரிய பெரிய தயாரிப்புகளுக்கு  பிரபல அழகிகள்  விளம்பரம் தந்த போது யாருமே அது உண்மையா  என உரசிப்பார்த்தோமா என்ன,  அப்புறம் இதை மட்டும் ஏன் ?
அவன் ரேஞ்சிற்கு இதுதான் முடியும். . ஓகே  !
 ஆனாலும் வீட்டுக்கு வந்தும் கூட அவனின் வியாபார உத்தி  எனக்குப் பிடித்திருந்தது.
பிறகு நான் என் வீட்டு  வேலை ஆபிஸ் வேலை களில்  பிசியாக இருந்த காரணத்தால் அவனுடைய உத்தியை பின்பற்ற முடியவில்லை.
சரி இப்போ டயம் இருப்பதால் நானும் அவன் போல் செய்யலாம் என்று ரூம் போடாமல் யோசித்து ஒரு  பிசினஸ் செய்யப் போகிறேன் . இதில் நீங்களும் பங்கேற்கலாம்.
 சரி என்ன பிசினஸ்  என்றால் வாஸ்து அரிசி வாஸ்து துவரம்பருப்பு போன்ற அனைத்து சூப்பர் மார்கெட் சமாசாரங்களும்  !
உதாரணமாக எங்களது வாஸ்து நிலத்தில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் வாஸ்து பிரகாரம் ஆரம்ப கால கட்டங்களில்  வானத்தை பார்த்து தான் வளர வைப்போம்.
பிறகு அறுவடைக்கு முன் வாஸ்து ரூல்ஸ் படி  நாம் வாழும் பூமியை நோக்கி வளர்ப்போம். ( இது எப்படி?)
இது எங்கள் குடும்பம் மட்டுமே செய்து வந்தது. இதற்கு  ஒரு அறு நூறு வருட சரித்திரம் உள்ளது. இதை யார் வேண்டுமானாலும்  பழைய ஏடுகளில் பார்க்கலாம். ஆனால் ஒன்று அந்த ஏடுகள் பிராப்தம் உள்ளவர்களுக்கு  மட்டுமே கிடைக்கும். ( இது சூப்பரா இருக்கில்ல )
 இதற்காக தமிழகமெங்கும் .... (. ஏமாத்தறதுன்னு  பிளான்  போட்டாச்சு, அப்புறம் எதுக்காக தமிழ் நாடு மட்டும் ) என  இல்லாது உலகம் முழுவதும் மற்றும் செவ்வாய்  புதன் கிரகங்களில் உள்ளவர்களிடம் இருந்தும் ஏஜென்சி மற்றும் முகவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,
 ( ஒரு ஆயிரம் இனா  வானாவாவது   அப்ளை பண்ணாது?)
 முகவர் கட்டணம்  ரூபாய் 10000.
 பார்த்து காமெண்டு போடும் பதிவர்களுக்கு 50% சலுகை உண்டு.
இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே!
 ( அப்புறம் நாங்களே ஓடிடுவோமில்லே )
 எனவே உங்கள் ஏஜென்சிக்கு முந்துங்கள்.
 அணுக வேண்டிய முகவரி
  வாஸ்து மளிகை
 எண்  420, ஃ பிராடு தெரு.
ஜேப்படி அவின்யு ,
டுபாக்கூர் நகர்,
 

Wednesday, 11 September 2013

தன்னம்பிக்கை என்றால் இதுவல்லவோ தன்னம்பிக்கை !  நான் ஒரு கம்பெனிக்கு மொழிபெயர்ப்பாளராக போன வருடம் சென்றிருந்தேன் . அந்த  கம்பெனியில் இருந்த ஒரு சிறிய புல்லின் புகைப்படம் இது.
PA250101.JPG  மிகச்சிறிய  புல் அது. . அதன் மீது யாரோ ஒரு ஸ்பாஞ்சை தூக்கிப் போட்டுவிட்டார்கள் ..அந்த புல்லை விட நிச்சயம் 100 மடங்கு க்கு மேலே எடை கொண்ட ஸ்பான்ஜ் அது. ஆனாலும் கொஞ்சம் கூட அசராமல்  அந்த புல் அந்த ஸ்பான்ஜ் உள்ளே புகுந்து எப்படியோ மேலே வளர்ந்து விட்டது..அந்த புல்லின் உயரம் 15
 செ .மீ க்கும் குறைவு என்பதாலும் எனக்கும் போட்டோ திறமைகள் பத்தாது என்பதாலும் என்னால் முடிந்தவரை எடுத்த போட்டோ !
 தன் மீது  அவ்வளவு  பெரிய பாரத்தைப் போட்டவுடன் அந்த புல்
 எந்த வாஸ்து  நிபுணரிடம் போகமுடியும் ?
எந்த ஜோசியக்காரரிடம்  போகமுடியும் ?
எந்த மதக்கடவுளை எப்படித் தேடிப் போகமுடியும் ?
அதற்கு யார் ஊக்கம் கொடுத்தார்கள்?
எந்த அரசு இலவசமோ ,நிதி உதவியோ  (subsidy கொடுத்தது?
கூட அதற்கு பார்ட்னர் யாரும் உண்டோ ?
யாரிடம் போய் தன்  கவலையை சொல்லமுடியும்?
யோசித்துப்பாருங்கள்

ஒரு அறிவுள்ள ஒரு புல் தன்னை ஆம்  தன்னை மட்டுமே நம்பியது.
ஸ்பான்ஞ்சின் அடிவாரத்திலிருந்து ஒரு புல்லால்  உள்ளே புகுந்து வளருவது என்பது ரொம்பவே கஷ்டம்..
எப்பொழுதெல்லாம்  மனச்சோர்வு அடைகிறேனோ அப்பொழுதெல்லாம் இந்த போட்டோவைக் கண் முன்னே நிறுத்தி என்னை நானே ஊக்கப்படுத்திக்கொள்வேன் .


Monday, 9 September 2013

பதிவர் சந்திப்பு 2013

பதிவர் சந்திப்பு 2013 பற்றி எல்லோரும் எழுதி ஓய்ந்த பின் இவ்வளவு சுறுசுறுப்பாக ஏன்  எழுதுகிறேன் என்று பலரும் நினைக்கலாம் .நான் எழுதும் பதிவுகள் யாராலும் படிக்கப்படுகிறதா என்றே  தெரியாத நிலையில்  ( என் பதிவிற்கு பின்னூட்டங்கள்  எதுவுமே  இல்லாமல் இருந்தது )எனக்கு ஒரு மெயில் .ஸ்கூல் பையன் அவர்களின் பின்னூட்டம் .
ஸ்கூல் பையன் அவர்களுக்கு  என் நன்றி.
நான் கேட்காமலே எனக்கு எப்படி செய்வது  என்பதை விளக்கினார் .
பிறகுதான் என் பதிவிற்கும் பின்னூட்டங்கள் இருந்தததைப் பார்த்தேன்
ஆஹா நாம் எழுதுவதை படிக்கவும் தமிழ் கூறும்  நல்லுலகில் நாலு பேர் இருக்கிறார்கள் என்றதும்  நடிகை ரேகா  ஒரு இந்திப் படத்தில் என் கால் தரையிலேயே இல்லை  என்று பாடுவதுபோல் ஒரு டான்சு  ஆடிவிட்டுத்தான் இந்த பதிவை எழுதுகிறேன் .
 எனது உடல் நிலை 3 மாதங்களாக  சரியில்லாத காரணத்திலால் என்னால் வேலைக்குப் போகவில்லை .மன அழுத்ததிலிருந்து விடுபட ஏதாவது செய்ய நினைத்த போது ஒரு பிளாக் ஆரம்பிக்கலாமா என நினைத்தேன் .அதில் தமிழ்வாசி பிரகாஷின் பிளாக் உதவியாக இருந்தது .திண்டுக்கக் தனபாலன் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தார் .அந்த சமயம் தான் பதிவர் திருவிழா நிகழ்ச்சி பற்றி பார்த்தேன் , திருமதி சசிகலா அவர்களை தொடர்பு கொண்டு  பதிவர் திருவிழா வந்தேன்.
புது மனிதர்களாக இருந்ததால் நான்தான்  நிறைய பேரிடம் பேசவில்லை .

ஆனால் நிகழ்ச்சி என்னைப்பொருத்த வரை திருப்தியாக இருந்தது .
நிறைய புது மனிதர்களை சந்தித்தேன்.
நிறைய புது விஷயங்களை கற்றுக்கொண்டேன் .
இதுவரை பார்க்காத ஒரு புது உலகத்தில் நுழைந்த ஒரு உணர்வு..
உணவு ரொம்பவே சூப்பர்,
ஒவ்வொருவருக்குள்ளும்  இருந்த தனித்  திறமைகள் என்னை ஆச்சரியப்பட வைத்தது,
மிக மிக   நாகரிகமான முறையில் நடந்தது.
விசில் சத்தம் இல்லை என்றால் கலகலப்பு இருந்திருக்காது .
மதியம் வெக்கை அதிகமானதாலும்  தூக்கம் வந்துவிட்டதாலும் மூன்று  மணிக்கு கிளம்பிவிட்டேன் .
மிக மிக திருப்திகரமான ஒரு நிகழ்ச்சி .

Sunday, 8 September 2013

பூனையின் மண்ணாசை

 மனிதன் மட்டுமே மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை கொண்டவன் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன்.ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்று  என்  எண்ணத்தையே புரட்டி போட்டுவிட்டது.பூனைக்கும் கூட நம்மளை மாதிரியே சொல்லப்போனால்  நம்மளை விடக்கூட அதிகமான மண்ணாசை இருக்கு.
எங்க வீடு ஒரு அபார்ட்மெண்ட் . எங்க வீட்டுக்குப்பின்னால் ஒரு நடிகை குடியிருக்கிறார் .  அவர்தான்  பூனை வளர்க்கிறார். ஆனாலும்  அந்த  பூனை முக்கால் வாசி நேரம் எங்க  அபார்ட்மெண்ட்டில்தான்   வாடகை இன்றி  குடியிருப்பு..
நடிகையின்   பூனை என்பதாலோ என்னவோ  அபார்ட்மெண்ட் வேலையாட்கள் முதல் கீழே சூப்பர் மார்கெட்டில் உள்ளவர்கள் வரை எல்லோருக்கும் செல்லம்.
ஆனால் எனக்கும் அதற்கும் ஏழாம் பொருத்தம் ..சும்மா போய்க்கொண்டு இருக்கும் என்னை பார்த்து சிநேக பாவமாக 'மியாவ்" சொல்வதில்லை.
 நானும் கொஞ்சம் கடிசாகத்தன்  பார்ப்பேன்.
  தொடர்ந்து ஒரு பத்து  நாட்களாக எங்க வீட்டு பால்கனியில்  உள்ள"  ஸ்லாப் " பில் வந்து குடிபுகுந்து  ராத்திரி பகல் என்று பார்க்காமல்  ஒரே காட்டுக்கத்தல் .
தூககம் வேறு கெட்டுப்போனது.
 விரட்டினாலும் போவதில்லை .ஒரு நாள் அது எங்கேயோ போயிருந்த போது 
 காலியாக இருந்த இடத்தில் வேறு சில சாமானை வைத்துவிட்டேன்..
கொஞ்ச நாழி கழித்து திரும்பி  வந்த பூனை  என்னமோ  அதும் பேர்ல பட்டா போட்ட  இடத்தை  நான் ஆக்கிரமிப்பு செய்து விட்ட மாதிரி என்னை வாழ் நாளிலேயே யாரும் முறைக்காத ஒரு முறைப்பு  லுக் !பூனை பாஷையிலேயே ஒரு அரை மணி சாவகாசம்  என்ன என்னவோ திட்டியது. பத்தாதற்கு என் மகன்  வேறு  பூனை மொழியில் டிகிரி வாங்கிக்கிழித்த மாதிரி  உன்னைக் கெட்ட வார்த்தை எல்லாம் சொல்லி  திட்டுது  என்று பூனையின் மியாவுக்கு  கோனார் நோட்ஸ் போட்டான் ,
அதற்கு பிறகு  இன்னமும் எங்கள் இருவருக்கும்  இடையே  கார்கில் பார்டரில் உள்ள நிலையே தொடருகிறது.