Saturday, 30 April 2016

கோஹினூர் வைரம் நம் நாட்டுக்குத் திரும்ப வந்துவிட்டால் ......

கோஹினூர் வைரம்  நம் நாட்டுக்குத் திரும்ப வரவேண்டும் என்ற கருத்து  நிலவி வருகிறது . பரவலாக ஏகப்பட்ட விவாதங்களும் தொடர்கின்றன

 அப்படி நம் நாட்டுக்கு  கோஹினூர் வைரம் வந்துவிட்டால் ......
 என்னென்ன நடக்கும் என்று யோசித்துப் பார்த்தேன் .

 முதலில் அதை எந்த ஊரில் வைப்பது என்பது பற்றி நாடு தழுவிய 
சர்ச்சைகள் 
,போராட்டங்கள் ....
 தீக்குளிப்புகள் .
 பார்லிமென்ட் சரிவர நடக்காது .
எதிர்க் கட்சிகள் வெளி நடப்பு
 என்றைக்கு வேறு நல்ல மேட்டர் இல்லையோ அன்றைக்கு டி. வி. சானல்கள் இந்த மாட்டரைக் கையில்  எடுத்துக் கொண்டு   வெட்டியாக  ஆனால் பாப்புலராக இருக்கும் ஆட்களைப்  பிடித்து  வைத்துக் கொண்டு அவர்களின் அபிப்பிராயம் அது  இது  என்று   ஒட்டிவிடுவார்கள்.

.ஏகப்பட்ட சரித்திரச் சான்றுகளுடன் பேசுவார்கள் .

,அதில் மசாலா  சேர்த்த மாதிரி எக்கச்சக்கமாக  உணர்ச்சி வசப்படுவார்கள்.
.கண்ணீர் விடுவார்கள் .

தேவையே இல்லாமல் ஆங்கர் வேறு உசுப்பேத்து கிறமாதிரி 
உச்ச  ஸ்தாயியில் அப்பப்ப ஒரு கத்து கத்துவார் .

அப்புறம் ஒரு வழியாக இடத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு  (இதுக்கே நாம ஒரு வருஷம் ஆக்கிடுவோம்  (நான் சொல்ற ஒரு வருஷங்கிறது ரொம்ப பாஸ்ட் )

அடுத்து பாதுகாப்பு . நாமதான்   சில சமயங்களில் பைலையே தொலைச்சுடுற  ஆட்கள் .ஆச்சே.அதனாலே  எத்தனை  அடுக்குப் பாதுகாப்பு  போடுறதுன்னு  ஒரு கமிட்டி போட்டு 
திரும்ப .....
முதல்லேருந்து....சர்ச்சை ..........


பாதுகாப்பா  இருக்கற வரை பிரச்னை இல்லை , அப்புறமா   நம்ம  சினிமாப் பாட்டிலே  வாராது வந்த வைரமே ” என் அழகு   கோஹினூர் வைரமே ".." கோஹினூர்  மணியே  , கோகிலமே .”அதுவே இதுவே ....ன்னெல்லாம் வரும் .

 அப்புறம்  காதல் என்ற  வார்த்தையை ஒரு  வழி பண்ணி 
 (பட டைட்டில் )எக்கச்சக்கமா  படங்கள் வந்த மாதிரி   முதலில் கோஹினூர் என்ற பெயரில் வந்த படம் வெற்றிப் படமாக அமைந்து விட்டால் கோஹினூர் வைரம் என்கிற வார்த்தையை வைத்து   ஏகத்துக்கும் விளையாடுவார்கள்   நம்ம ஆட்கள்

( இந்தியில் ஏற்கனவே  கோஹினூர்  என்று ஒரு படம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன் ).
 பிறகு இந்த டைட்டிலுக்கு வரி விலக்கு பற்றி ஒரு பிரச்னை நாம ஆரம்பிப்போம் 
. இது தமிழ் வார்த்தை அல்ல என்று ஒருத்தர் கோர்ட்டுக்குப் போவார்...

.இதை வச்சு வாட்ஸ் அப்  ட்விட்டர்  இந்த ஏரியாவெல்லாம்  ஒரு கலக்கு கலக்கிட்டுதான் மேட்டர்  கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கும்.

 கோஹினூர்  கேக் கோஹினூர்  பிஸ்கெட்   கோஹினூர்  ஸ்கூல்  ,கோஹினூர் காலேஜ் ப் டெக்னாலஜி   கோஹினூர்  இன் ஃ போ  டெக்    என்றெல்லாம்  வரும் .

  மக்களும்  கோஹினூர்  கோஹினூர் செல்வி.கோஹினூர்செல்வன் என்றெல்லாம் பேர் வைத்துக் கொள்வார்கள்.

சிலபேர் நியுமராலஜிப்படி என்று கோஹினூர் என்ற பெயரில்  ஸ்பெல்லிங்கு மாற்றம் கூடச் செய்துகொள்ள வாய்ப்பு இருக்கிறது .

 எலக்ஷன் வரும்போது எந்த கட்சியின்  ஆட்சி யில்  கோஹினூர் வைரம் கொண்டு வரப்பட்டதோ அந்த கட்சி இதை ஒரு பெரிய சாதனையாகச் சொல்லிகொள்வார்கள்.  

இத்தனை பேர் பூந்து விளையாடும் போது  நம்ம ஜோசியர்களும் அவர்கள் பங்குக்கு இதனால் இந்தியப் பொருளாதாரம் , பங்குச் சந்தை , தலைவர்கள்தானியங்களின் மகசூல், அரசியல் கட்சிகள்  இவர்களுக்கு ஏற்படக்கூடிய சாதக பாதகங்களை அக்கு வேறு ஆணி வேறாக அலசி எடுத்து விடுவார்கள் .

இதனால் இந்தியத் துணைக் கண்டத்தில் சுனாமி ,பூகம்பம் பெரு வெள்ளம் வறட்சி இவைகள் வருமா
அது வராம  இருக்கனும்னாக்க என்ன  பண்ணனும்  என்றெல்லாம் ஆலோசனைகள் வரும் 


எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பாதிப்பு இல்லை .
,பாதிப்பு இருக்கும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன
எந்தக் கிழமையில் செய்யணும்,
  எந்தக் கோயிலுக்குப் போகணும் என்று வார இதழ்கள் ,டி வி சானல்களில் சொல்லுவார்கள்
சிலர் வெகு சிரத்தையாக நோட்ஸ் எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டு  பரிகாரம் செய்வார்கள் .

பத்தாதற்கு நகைக் கடைக் காரர்கள் வேறு  (REPLICA )  கோஹினூர் தோடு, கோஹினூர் நெக்லஸ்  கோஹினூர் மோதிரம்  அப்படி இப்படின்னு  விற்பனையைக் கூட்ட யுக்தி பண்ணுவார்கள்


 மாணவர்களுக்கு கோஹினூர் வைரம்  பத்தி  ஒரு CHAPTER சேர்த்துவிடுவார்கள்  ,
  பரிட்சையில்  முக்கிய கேள்வி  லிஸ்டில்   புதுசா ஒரு ஐட்டம் சேந்துடும் .

ஆஹா ! பி ஹெச் டி பண்ணும் மாணவர்களுக்கு ஒரு டாபிக் கிடச்சுது .

Sunday, 24 April 2016

நான் ரசித்த பாசுரங்கள் -1


பாசுரங்கள் பற்றி எண்ணங்கள் எழுத்துக்கள் என்ற பதிவர் எழுதியது என்னைப் பதிவு எழுதுமாறு தூண்டியது .


 நான் சென்னையில் தங்கியிருந்த போது கன்னிமாரா நூலகம் அருகே தங்கி இருந்ததால் நிறையப் புத்தகங்கள் படிப்பேன் .
அதில் ஒரு புத்தகத்தில் அண்ணா அவர்களிடம்   தமிழில் நல்ல புலமை பெற என்ன செய்ய வேண்டும் என்ற போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் படி என்று  சொன்னாராம் . (எந்தப் புத்தகம் என்றெல்லாம் கேட்காதீர்கள் . 35 வருஷம் முந்திப் படித்தது .)

அதைப் படித்ததும் எனக்கு நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஒரு ஆர்வத்தில் படிக்க  ஆரம்பித்தேன் .

ஆனாலும்  வேலை விஷயமான புத்தகங்களும் நிறையப் படிக்க வேண்டி இருந்ததால் நான் முழு கவனமும் அதில் செலுத்த முடியவில்லை .

 என் தாய் வேறு தமிழ் வித்வான் படித்திருந்தார் . அவர் ஆங்கில மீடியத்தில் படித்ததால்  ஆங்கிலமும் நன்றாகத் தெரியும் . இரண்டு மொழிகளின் நல்ல புத்தகங்கள் எழுத்தாளர்கள் எனக்கு அறிமுகப் படுத்திய பெருமை அவரையே சாரும் . என் அம்மாவும் என்னை  திவ்யப் பிரபந்தம் படிக்குமாறு ஊக்குவித்தார்கள்.படித்ததில் நான் ரசித்த சில பாசுரங்கள் .


   குழந்தைகள் தன் கால் கட்டை விரல்களைப் பிடித்து வாயில் தூக்கி வைத்து இருக்கும் காட்சி என்பது ஒரு அழகு .
அதை ஒரு ஸ்டேஜில் தான் குழந்தைகள் செய்யும் .ப்ரீ கேஜி போகும் குழந்தை அவ்வாறு செய்யாது. வடக்கே அது குழந்தையின் ஒரு உடற்பயிற்சி என்றும் கூறுகிறார்கள் .அதைத் தடுக்கக் கூடாது என்பார்கள் .

ஒரு சிலர் அப்படிக் காலை வாயில்வைக்கும்  நேரம் கிருஷ்ணர் அந்தக் குழந்தையின் உடம்பில் இருக்கிறார் என்கிறார்கள் .

 ஆனால் நாம் அந்த அழகை ரசிக்க விரும்பினாலும் ஏதாவது இன்பெக்ஷன் ஆகிவிடுமோ என்று பயந்து வாயிலேருந்து காலை எடு என்போம்

 என் குழந்தைகள் அவ்வாறு செய்ததை நான் ரொம்பவே ரசித்தேன் .
அதையே தான் பெரியாழ்வாரும்


சீதக்கடலுள் அமுதன்ன தேவகி
கோதை குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே பவளவாயீர் வந்து காணீரே
 என்கிறார் .


 நாம்தான் அந்தக் குழந்தையை சீ ..சீ ...காலை எடு என்போம்
ஆனால் குழந்தைக்கு அது ரொம்ப டேஸ்டா இருக்கும் போல .
ஆனால்  நல்லது  கெட்டது  எனப் பிரித்து அறியத்தெரியாத குழந்தைஅது
 ( கண்ணன் அப்படிப்பட்ட குழந்தையா என்ன ? )

பெரியாழ்வாரின் தாய்மை  நெஞ்சம்  அவரைப்  பேதைக் குழவி என்று சொல்ல வைக்கிறது.
எச்சில் பட்ட காலைப் போய் கழுவு ஓடு ...ஓடு என்று நாம் விரட்டுவோம் .

 ஆனால் பெரியாழ்வார் அந்த ப் பாதங்களை " பாதக் கமலங்கள் " என்கிறார் .

குழந்தையின் எச்சில் பட்ட சாப்பாடு மிச்சம் இருந்தால் அம்மா அய்யய்யோ  அது பத்து என்று ஒதுக்குவதில்லையே .
அது மாதிரியான தாய்மை  நிலையில் இருக்கிறார் பெரியாழ்வார் .
 தாமரை போன்ற அந்தக் கால்களை வந்து  பார்க்குமாறு நம்மை அழைக்கிறார் .


 அடுத்து  
சிறு குழந்தையின் கால் விரல்கள் ஒன்றோடொன்று  நன்றாக ஒட்டிக்கொண்டு  ஒரே மாதிரி சேர்ந்தாற்போல் இருக்கும் .அதில் அந்த நகங்கள்   Alignment  அப்படி ஒரு அழகாக இருக்கும்  . விரல்களைப் பிரித்து விட்டாலும் திரும்பப் போய்  ஒரு சேர ஒட்டிக்கொண்டு விடும் .என் குழந்தைகளின் அந்த  வளரும் நிலையை நான் ரசித்தது மட்டுமல்லாமல் என் இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் பையனும் அதை ரசித்தான்.சின்னவனின் கால் விரல்களைத் தடவித் தடவிப் பார்ப்பான் .

 பெரியாழ்வாருக்கு அந்த  விரல்களில் முத்து மணி, வைரம் நற்பொன் இவைகளை மாற்றி மாற்றி வைத்துப் பதித்துச் சேர்த்து செய்தாற் போலத் தோணுகின்றதாம் .
எனக்குக் கூட தான் தோணுச்சு..
ஆனால் அதைப் பாட்டா  எழுதத் தோணலியே .

 அங்கேதான் பெரியாழ்வார் நிற்கிறார்

 குழந்தையைப் பத்து மாதம் சுமந்து பெற்ற தாயாக இல்லாவிட்டாலும் அவரின் தாய்மையான மனம் அவரை  இப்படிப் பாடவைக்கிறது.


முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப்பதித்துத் தலைப்பெய்தாற்போல் எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவா காணீரேஒண்ணுதலீர் வந்து காணீரே.

  என்னிடம் திவ்யப் பிரபந்தம் உள்ளது .
 அவ்வப் போது படித்து  அடிக் கோடு இட்டுள்ளேன்

 . நான் ரசித்தவைகளை எழுதத் தூண்டிய பதிவர் எண்ணங்கள் எழுத்துக்கள் அவர்களுக்கு நன்றி .

என்னடா இது சைனீஸுக்கு வந்த சோதனை


  நான் வேலை பார்க்கும் இடத்தில் எனக்கு நான் இந்தியா  மேப்பில்  வடகிழக்கே உட்கார்ந்திருப்பதாக   ஒரு எண்ணம் வரும் . ஏனெனில் எனக்கு அண்டை சீட் ஒரு சைனாக் காரப் பையன் .


அவன் இங்கிலீஷை ப்  புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம் தான்.
 ஆனாலும் பேசுவோம் .
 எனக்கு மொழிகளில் ஆர்வம் இருப்பது கண்டு என்னைச் சீன மொழி கற்றுக் கொள்ளுமாறு கூறினான்.  எனக்கும்   இந்த ஆசை ரொம்ப நாளாக இருந்தது .

ஏனெனில் ஜப்பான் மொழி தெரிந்தால் சீன மொழியை எப்படிப் படிப்பது என்பது தெரியாது ,ஆனால் அந்த எழுத்துக்கள் பார்த்து
(பட வடிவில் உள்ளவற்றை )எனக்கு அர்த்தம் சொல்ல முடியும் .

 உதாரணமாக மாடு வருகிறது என்று சொல்லமுடியும் ) ஆனால் மாடு வந்ததா  (இறந்த காலம் ) வரப் போகிறதா  (எதிர்காலம் )  வரலாம்ன்னு  இருக்கா  அதெல்லாம் சொல்லத் தெரியாது.  ஒரு மையமாக சொல்லப்போனால்  ஒரு குத்து  மதிப்பாகத்தான் அர்த்தம்  சொல்லத்தெரியும்.


 ஏனெனில் மாட்டுக்கு சீன மொழியிலும் ஜப்பான் மொழியிலும் ஒரே மாதிரிதான் எழுதுவார்கள் .வருவது என்பதற்கும் ஒரே மாதிரியான எழுத்து .
 தட்டுத் தடுமாறி அர்த்தம் கண்டு பிடித்து விடலாம்.


 ஏதாவது செல் போன் பிரிண்டர் அல்லது  சில சைனா  மேக்  பரிசுப்  பொருட் கள்  போன்றவற்றை வாங்கினால் அதில் இருக்கும் சீன மொழியைப் பார்த்து  மற்றவர்களுக்கு  எனக்குப் புரிந்த வரை சொல்லுவேன் . அதைக் கேட்டு அவற்றை ஆபரேட் செய்து கொள்வார்கள் . ( அது என்ன , அதை மேலே வை கீழே வை ஏற்றணும் இறக்கணும் ஆன் பண்ணு . இத்யாதி ... )

எனவே சீன மொழி கற்க வேண்டும் என்று இருந்தேன் .

 விசாரித்ததில் சொல்லிக் கொடுக்கும் இடமும் கொஞ்சம் தூரம் .
சொல்லிகொடுப்பவரும் சீனர் அல்ல. நம் தமிழரே . (உச்சரிப்பு சரிவர இல்லாவிட்டால் கஷ்டம் ).

.தவிர பரீக்ஷை எழுத சிங்கப்பூர் அல்லது ஹாங்காங்கு போகணுமாம் .
 அட நம்ம படிக்கிற லட்சணத்துக்கு அங்கே போய்  பரீக்ஷை  எழுதி  ஃ பெயில் ஆயிட்டா நம்மளை எல்லாரும் ஒரு மாதிரியாப்  பாப்பாங்களே...

 வேணாம்  போன்னுட்டு ஒரு புத்தகம் ரெண்டு வருஷம் முந்தி புக் எக்சிபிஷன்ல வாங்கினேன்.  எடுத்துப் படித்தேன் . ஆனால் உச்சரிப்பை  மனதில் நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை . ஒரே எழுத்து வடிவத்திற்கு ஜப்பனீசில் ஒரு மாதிரி உச்சரிப்பு.சைனீசில் வேறு  மாதிரி ....


 மக்கள் மாற்றத்தை ஏற்றுக் கொள்வது போல் மனசு .... ம்ஹூம் .....
  மாற மறுத்தது.

 தூக்கமருந்து கொடுக்காமேலேயே  புத்தகம்கும்பகர்ணன் ரேஞ்சுக்கு   தூங்க ஆரம்பித்து விட்டது.

 என் மகனும் அம்மா தெரிந்த மொழிகளிலேயே இன்னும்  ஆழமாகப் படிக்கலாமே . ஏன் இப்படி மாறுகிறாய் ?


தவிர நீ படிக்க ஆரம்பித்தால் புத்தகம் சேர்க்க ஆரம்பித்து  விடுகிறாய் .
 வீட்டில்  இன்னும்  புத்தகங்கள் சேர்ந்து பிறகு மனிதர்கள் வசிக்க  முடியாது .
இப்பவே வீடு பழைய புத்தகக் கடை மாதிரி இருக்கு
நீ வேண்ணா  பாரு  ஒரு நாள் யாராவது அவங்க வீட்டுப் பழைய பேப்பரை இது  காயலங்கடைன்னு நெனச்சுகிட்டு  நம்ம வீட்டில் கொண்டு வந்து விக்க ஆரம்பிச்சுடுவாங்க என்று ஒரு ஸ்பீட் பிரேக்கர் போட்டான்.

  சகுனமே சரிஇல்லைன்னு  என்று விட்டுவிட்டேன்.

ஆனாலும் பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்திருக்கும்      சைனாப் பையன்  எனக்கு வீட்டிற்கே வந்து சொல்லித்தருகிறேன் என்றான்.
 ( எனக்கும் பகுதி நேர வேலை அவனுக்கும் பகுதி நேர வேலை . வேலை இருக்கும் பொழுது தான்  எங்களைக் கூப்பிடுவார்கள் )


  வீட்டிற்கு வருவதனால் ஒரு மூன்று நான்கு பேர் சேர்ந்தால் தான் அவனுக்கு லாபம் .அவனும் அவன் வயதுப் பசங்களுடன் தங்கி இருக்கிறான். எனவே நாம் அங்கு போவதும் சாத்தியம் இல்லை .

 அக்கம் பக்கத்தில் யாரும் சேர்ந்தால் நமக்கு ஒரு துணையாக இருக்குமே என்று நினைத்தால் அந்த எழுத்துக்களைப் பார்த்து மிரண்டு போய்  அவர் களெல்லாம் மாட்டேன் என்று சொல்லிவிட்டனர்.

 பத்தாக்குறைக்கு உச்சரிப்பு வேறு மூக்கால் .... பிறகு தமிழையும் அதே மாதிரி உச்சரிக்க ஆரம்பித்தால்  நல்ல நாளிலேயே நம்ம சொன்னப் புரிஞ்சுக்காத மக்கள் ..இதுதான் சாக்குன்னுட்டு  சுத்தமாப் புரியலேன்னு சொல்லிடுவாங்க
அப்படீன்னு ஜகா வாங்கிட்டாங்க .

 இது ஒரு மாதிரின்னாக்க    இன்னும் சிலர்  30 நாளில் இந்தி மாதிரி

   ஆறு மாசத்திலே பேச வருமா?எழுத வருமா  ? என்ற கேள்விகளை  எதிர் அம்பாகத்  தொடுத்தனர் .


 12 வருஷம் இங்கிலீஷ் படிச்சு அப்புறமும்  இங்கிலீஷ்  ஸ்பீக்கிங் குன்னு  கோச்சிங்கு போறாங்களே , அதுக்கு என்ன பண்றது  அது அவரவர் திறமையைப் பொறுத்த விஷயம் .ன்னு சொன்னேன் .

 இங்கிலீஷு  கத்துக்கும் போது இத்தனை வெட்டிக் கேள்வியா கேட்டாங்க ?
வெறுத்து விட்டேன்


நாம என்ன சைனீசில்  பெரிய காப்பியமா எழுதப்போறோம் .
பேச ஒரு ஆள்  கிடைச்சாச்சு
சரி போ  யாரும் வராட்டி என்ன நாமளே புஸ்தகம் யூ டியுபு  சினிமான்னு பார்த்து கத்துக்கலாமுன்னு தீர்மானித்துவிட்டேன் .


அந்தப் பையனிடம்  சைனீசில்  இப்பொழுது வெட்டியாக
 "ஹலோ "
 "நல்லாருக்கியா"
"சாப்பிட்டியா"
"படிச்சியா  "
"சென்று வருகிறேன் -
என்று  பேச ஆரம்பித்துவிட்டேன் .  அவனுக்கும்  ஒரு குட்டி சந்தோஷம்.
 சைனா மொழியில் புலமை பெரும் எண்ணம் கிடையாது.

 வெட்டியாக இருந்தால் மனது கண்ட கண்டதையும் நினைக்கிறது. இரவில் தூக்கம் மூன்று மணிக்கு மேல வரமாடேங்குது.


 எனவே.....


டிஸ்கி : ரேடியோ பீக்கிங்கில் தமிழ் வழியே சைனீஸ்  சொல்லித்தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் . அதன் விபரம் தெரிந்தவர்கள்  ,கற்க ஆர்வமுள்ளவர்கள் கற்கலாம் .

Saturday, 16 April 2016

ஐந்தடிஉயரத் தன்னம்பிக்கை மலை


 
 நான் எப்பொழுதுமே எதிர்மறை எண்ணங்கள் கொண்ட மனிதர்களைத் தவிர்த்து விடுவேன் . அவர்களுடன் பேசுவேன் ஆனால் நீண்ட நாள் நட்புக்குரியவர்களாகத்  தொடர்வதில்லை .


 என் இருபதுகளில் தொடர்ந்த நட்பு . ஒரு தோழி . அவர் எனது அக்காவின் நெருங்கிய தோழியாக இருந்தார் . பிறகு என்  தோழியாக மாறிவிட்டார் .

இன்று அவரின் வளர்ந்த இரு மகள்கள் மற்றும் அவரது கணவர் உடனும் நல்ல நட்பில் உள்ளேன் .
 நானும் அவரும் கிட்டத்தட்ட 36 வருடங்களாக தோழமை கொண்டுள்ளோம் .

 நான் வேலை மற்றும் திருமணம் போன்ற காரணங்களால் வேறு மாநிலங்கள் சென்ற போதும் லெட்டர் போக்கு வரத்து கூட எங்களுக்குக் கிடையாது.

 அவர் கணவர் வேலை பார்த்த நகைக் கடை ஒன்று தான் தொடர்பு

.சென்னை தனியாக வந்தால் மட்டுமே அந்தக் கடைக்குப் போய் வருவேன்.
 பிறகு நானும் என் குடும்ப வேலைகளில்  பிஸி . அவரும் பிஸி.


2001ல் விஆர் எஸ் வாங்கிய பின் மறுபடியும் தொடர்பு கொள்ள ஆரம்பித்தோம் .அவரின் ஆபீஸ் என் வீட்டருகே உள்ளது . ஒரு கிலோ மீட்டர் தூரமே , ஆனால் சுத்தி வர   மெட்ரோ ரயில் வேலை யால் barricade  ,சிக்னல்  , ஒன்  வே அது இதுன்னு எது   எதோ பண்ணியதால்  ஆபீசில் போய்   பார்க்க வேண்டுமென்றால்  ஷேர் ஆட்டோவில் போய் சிறிது தூரம் நடக்கணும்.
இப்பொழுது ரிட்டயர் ஆகி விட்டார் .
 அவரும் எனது  சொந்த ஊரான  திருவையாறு பக்கம் .
 ஆள் உருவம் நெட்டையில் சேர்த்தி இல்லை .
ஒல்லியிலும் சேர்க்க முடியாது.
இதனால்   பிரியத்துடன் ஒட்டிக் கொண்ட முட்டி வலியைப் பற்றி கவலையே படுவதில்லை . அந்த முட்டி வலி தான்  என்னடா இது நாம  கூட இருக்கறதைப் பத்தி ஃ பீல் பண்ண மாட்டேங் ராங் களென்னு  கவலைப் படும்ன்னு எனக்குத் தோணும் .
 உட்காந்து எழுந்திருக்க சிரமம் . வேகமாக நடக்க சிரமம்.ஆனால் பார்ப்பவர்களுக்கு அது மாதிரி ஒரு பிரச்னை இருப்பதே தெரியாது,
 எல்லா வீட்டுக்கும் இருக்கிற வாசப்படி அவங்க வீட்டிலும் உண்டு . கொஞ்சமும்   அது பற்றிக் கவலைப் படுவதே இல்லை

இருபதுகளில் சினிமா மீது  அவருக்கு ஒரு அதீத காதல் . இப்பொழுதும்  கர்ம சிரத்தையாக அந்தக் காதலைத் தொடர்கிறார். எனக்கு அது அறவே கிடையாது .


அவருக்கு காஃ பி மீது அலாதி ஆசை . எனக்குக் காஃ பி வாசனை சுத்தமாக ஒத்துக் கொள்வதில்லை . என்னைப் பல வருடங்களாக காஃ பி குடிக்கும் படி வற்புறுத்துவார் என்னன்னவோ  சொல்லி செய்து பார்த்தார் . இன்று வரை என்னைக் காஃ பி சாப்பிட வைக்க முடிய வில்லை அவரால் .

 அவருக்கு ஜோசியம் ஜாதகம் இவைகளில் நம்பிக்கை அதிகம்
நான் அதற்கெல்லாம் செலவு செய்யவே மாட்டேன் .

 எங்களுக்குள் நிறைய விஷயங்கள் ஒத்துப் போவதில்லை .


 சில சமயங்களில் காலையில் என் வீட்டருகேதான் பஸ்ஸில் இறங்குவார்கள் அப்போது ஏதாவது கொடுப்பேன் . ஆபீஸ் போகும் அவசரத்தில் அதிகம் பேச முடியாதுதான் ஒரு அஞ்சு நிமிஷம் பேசினாலும் உற்சாகம் கொப்பளிக்கும்.
எதோ இன்ஸ்டண்ட் எனர்ஜி தரும் டானிக் சாப்பிட்ட ஃ பீல்  வரும்..

 இனிமேல் நான் ஃ பிரீயாக இருக்கும் பொது  இருவருமாகச் சேர்ந்து எங்காவாது சுற்றலாம் என்றிருக்கிறோம்

ஜப்பானீஸ் பிளாக்


   ஜப்பானிய மொழி படிக்க ஆரம்பித்த போது கொஞ்சம் நிறையவே மெனக் கேட்டு படித்தேன் .
 படித்தது என்றால் வெறும் பரீட்சையைக் குறிக்கோளாக மட்டுமே வைத்துப் படிக்க வில்லை .  கொஞ்சம் பரீட்சை கொஞ்சம் ஃ பன், கொஞ்சம் ஆராய்ச்சி என்ற முறையில் தான் படித்தேன் .
அதன் விளைவாக  அட இது தமிழ் மாதிரியே  இருக்கே ! இதை இப்படியெல்லாம் புரிஞ்சுக்கலாமே . அட! இவ்வளவுதானா விஷயம்  என்றெல்லாம் நிறைய எனக்குத் தோணியது .
 எனக்குத்  தோணிய  விஷயம் எல்லா வற்றையும்  நோட்ஸ் எடுத்து வைத்திருந்தேன் .
விளைவு வீட்டில் குப்பை சேர்ந்து விட்டது.
 ஆயிரம் சதுர அடி அபார்ட்மெண்டை  வெறும்   ஒத்தை அடிப் பாதையாக மாற்றிய சாமர்த்தியம்  உலகத்தில் உன் ஒரு ஆளுக்கு மட்டுமே உண்டு என்று என் இரண்டாவது மகன் சர்டிபிகேட் பிரிண்ட் பண்ணிக் கையில் கொடுக்காத குறை .
  சரி எல்லாவற்றையும் டாகுமெண்ட் பண்ணி மற்றவர்க்கும் உபயோகமாக இருக்கும் படிச் செய்யலாம் என்று ஒரு தனி பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன் .
 படித்துப்பார்க்கவும். ஆர்வம் உள்ளவர்கள் படிக்கலாம் .
 லிங்க்
http://abayaarunajp.blogspot.in/

Friday, 8 April 2016

ஏன் வேற்று மொழி படிக்கவேண்டும்? நான் பிளாக் எழுத ஆரம்பித்த பொழுது என்னத்தைச் சாதிக்கப் போகிறோம் என்ற ஒரு யோசனை இருந்தது .

திரு கார்த்திக் சரவணன் அவர்கள் ஜப்பானிய மொழி படிக்க ஆரம்பித்த  போது  குறைந்த பட்சம் ஒருவரையாவது மாற்றி யோசிக்க வைத்தோமே நம் எழுத்தின் மூலம் என்ற சந்தோஷம் கிடைத்தது.
 ஒன்னு வாங்கினா இன்னொன்னு ஃ பிரீ என்கிற மாதிரி அவரின் மனைவியும் படிக்க ஆரம்பித்து விட்டார் .
 அவர் குடும்ப வேலைகள் முடிந்தபின் நினைவு செயல் எல்லாமே ஜப்பானிய மொழி தான் வேறில்லை என்னும்  அளவிற்குப் படிக்கிறார்..கிட்டத்தட்ட 12வது வகுப்பு மாணவர்கள்  லெவலுக்கு ..

அடுத்த மாதிரியாக மதுரைத் தமிழன் அவர்கள் உடனேயே ஸ்பானிஷ் மொழி சிடி வாங்கிவிட்டார்.. ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.

 வேற்று மொழி ஏன் படிக்க வேண்டும் என்பதற்கான காரணங்கள் ஆயிரம் நெட்டில் சொல்லப்பட்டாலும் அவை எத்தனை பேரை உசுப்பேத்தி படிக்க வைக்கும் என்று யாருமே காரண்டி கொடுக்க முடியாது.

 ஆனால் என் இந்த பிளாக்கைப் படிக்கும் ஆதரவாளர்களில்    ( 10 கூட இல்லை . இருந்தாலும் பில்ட் அப் வேணுமில்ல?) 90%  உடனே படிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

வேற்று மொழி படிப்பதால் உள்ள மிகப் பெரிய நன்மை என்னவென்றால் தங்கள்  கணவர் / மனைவி  மகன் / மகள்  உறவினர்கள் பற்றி ... அவர்கள் எதிரிலேயே  வம்படிக்கலாம்

உதாரணமாக என் பையன் நை நை தாங்கவில்லை ஒரேயடியாக கடி .... என்ற விஷயங்கள் பற்றி ஜப்பனீசு மொழி தெரிந்த தோழிகளிடம் பயமே இல்லாமல்  மகன்  எதிரிலேயே மனம் விட்டுப்  பேசுகிறேன் நான் . ( நாம் பேசிப் பழகாவிட்டால் மறந்து விடுவோமில்லையா)


 ஒருவரின் குற்றம் குறைகளைப் பற்றி அவரது முகத்துக்கு நேரேயே  அவருக்குத் தெரியாதபடி நாம் கலாய்க்கும்   போது  கிடைக்கும் இன்பத்தை   அடாடா ....     அதெல்லாம் செய்து அனுபவித்தால் தான் புரியும் .


என் தோழிகளும் தன் மாமியார் ,மாமனார் , நாத்தனார்  கொழுந்தனார் பற்றிய வம்புகளையும் வீட்டில் உள்ளவர்களுக்குப் புரியாதபடி ஜம்மென்று  அவர்கள் எதிரிலேயே பேசுவார்கள்.

பார்க்கிறவர்கள் எதோ பாட சம்பந்தமாக விவாதிக்கிறார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள் .

வருமானம் ,நமக்கும் பொழுது போகிறது என்பதை விடவும் இது மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் என்று நான் நினைக் கிறேன்


இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூஞ்சியை வம்படிக்கிற தோரணை வைத்துக்கொண்டு பேசி ஏதாவது ஏடா கூடமானால் நானோ இந்த பிளாகோ  பொறுப்பு  ஏற்காது.

கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை

  இந்தி கற்றுக் கொள்வது அவசியமா இல்லையா என்பது பற்றி இன்னும் நிறையப் பேர் விவாதிக்கின்றார்கள் .


 என்னைக் கேட்டால் "கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை ." என்பேன் .
 நான் கற்க ஆரம்பித்த பொது என் வயது 7. என் அப்பாவிற்கு ஹிந்தி ஓரளவு படிக்கத் தெரியும் .ரயில்வேயில் வேலையில் இருந்தார் .ஆனால் வேலை பார்த்தது எல்லாமே தமிழ் நாட்டில் தான் . ஹிந்தி பேசத் தெரியாது . பேசினாலும் புரியாது.


 தனக்கு ஆண் பிள்ளைகள் இல்லை என்பதால் மற்ற உறவினர்கள் எங்கள் வீட்டை லேடிஸ் ஹாஸ்டல் அது இது என்று கேலி பேசியதால் எங்களை அவர்களை விடவும் கல்வியில் சிறக்க வைக்க வேண்டும் என்கிற ஒரு ஆர்வத்தில் என்பதை விட ஒரு வ கொலைவெறியில் எங்களை நன்கு படிக்க வைத்தார்.
என் அக்காக்கள் ஹிந்தி படித்ததால் நானும் படிக்க ஆசைப் பட்டேன் .அப்பொழு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகத் தீவிரமாக இருந்த நேரமும் கூட .

எனக்கு ஹிந்திப் பாடல்கள் மீது ஒரு சொல்லொணாக் காதல் .

என் சகோதரிகளை விடவும் ஹிந்தி குறைந்த அளவே படித்திருந்தாலும் அவர்களை விட நன்றாக ஹிந்தியில்  பேசும் திறமை எனக்கு உண்டு. (உபயம் ,ஹிந்திப் பாடல்கள் )

 இது எனக்கு வட இந்தியாவில் வேலை பார்த்த போது ரொம்பவே உதவியாக இருந்தது.ஒரு 12 வருடம் வேறு வேறு இடங்களில் வேலை பார்த்த போதும் கஸ்டமர்களிடம் பேசும்போதும் சாமான்கள் வாங்கும் போதும் எனக்குப் பிரச்னை வந்ததில்லை .

 சமீபத்தில் ஷீரடி ,அஜந்தா எல்லோரா போன்ற இடங்கள் சென்ற போதும் எனக்கு பிரச்னை என்பது துளியும் கிடையாது .

 அது மட்டுமல்ல எனக்குத் தெலுங்கும் ஆந்திராவில் இருந்த காரணத்தினால் வரும் . அங்கு இருந்தபோது கொஞ்சம் படிக்கக் கூட முடியும் . இப்போது நன்கு பேசுவேன் . ஆனால் படிக்க வரவில்லை .


 மேலும் எந்த மொழியும் கற்க  வேண்டும் என்று தோன்றினால் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர ஆராய்ச்சி பண்ணும் வேலை நான் செய்வதில்லை.

 நான் 40 வயதிற்குப் பின் பேங்க்  வேலையை விட்டு வேறே எதுவும் செய்யத்  தெரியாமல் ஜப்பானிய மொழி படிக்க ஆரம்பித்த போது  என்னை யாரும் ஊக்கப் படுத் தாதது  மட்டுமல்ல ,

இது எதுக்கு இந்த வயசிலே போயும் போயும்......  அந்த ஊர்க்காரன் பாஷையை ...... இங்கே யாரு பேசப் போறாங்க .
சப்ப மூக்கு பாஷைப் படிச்ச நம்ம மூக்கும் சப்பை ஆயிடும் ......என்ற காமெண்ட்கள்  தான்.


 ஆனால் நான் கிளாஸ் எடுத்த போதுதான்  விஷயம் தெரிந்த பெற்றோர்கள் செய்யும் உத்தியைக் கண்டேன்.


 அவர்கள்  தன் குழந்தைகளை 4வது படிக்கும் போதே ஒரு வெளி நாட்டு மொழியைக் கற்க வைக்கிறார்கள் .
  ( ஜப்பனீசு, பிரெஞ்சு  அல்லது ஜெர்மன் )
அதனால் அவர்கள் 9 வது வரும் முன் அந்த மொழியில் ஒரு குறிப்பிட்ட லெவல் வரை  படித்து விட்டுப்  பிறகு தன் 10வது 12 வது பாடங்களில் முழு கவனம் செலுத்துகிறார்கள் .  எனது 10 வருட அனுபவத்தில் குறைந்தது 10  குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறேன்..
 மேலும் சிறு குழந்தைகள்  15 வயது தாண்டியவர்களை விடவும் சீக்கிரம் கிரகித்துக் கொள்கிறார்கள் .வெட்டியாக இந்த மொழி இங்கிலீஷ் மாதிரி இல்லை அது இது என்றெல்லாம் நினைப் பதில்லை . (இந்த comparing  syndrome எனக்கும் இருந்தது , )
 விளையாட்டாக நான் கற்க ஆரம்பித்தது இன்று எனக்குஇந்த வயதிலும் பெரிய கம்பெனிகளிலிருந்து வேலைக்கான அழைப்புகள் , வேலை ,வருமானம் , தன்னம்பிக்கை ,பொழுதுபோக்கு ,நிறைய நண்பர்கள் ,வெட்டி நினைப்புகளிளிருந்து விடுதலை, என பல வித நன்மைகளைத் தந்துள்ளது.

ஒரு முறை ஏர் ஹோஸ்டஸ் ஒருவர் நான் ஜப்பானிய மொழிப் புத்தகம் படித்ததைப் பார்த்து விட்டு எனக்கு நிறைய சாக்லேட் ,மற்றும் ஏகப் பட்ட ஸ்நாக்ஸ் பாக்கெட்கள் கொடுத்தார்.

யாராவது என்னைப் பார்த்து அட ஜப்பானிய  மொழி தெரியுமான்னு கேட்டு என்னைப் பாத்து ஒரு ஆச்சரிய லுக் விடும்போது  ஒரு சின்ன கர்வம் உள்ளுக்குள் வருவதை என்னால் உணர முடிகிறது.
( காசா பணமா இல்ல அடுத்தவங்களுக்குத்தான்  இதால நஷ்டமா என்ன , பரவாயில்லை என்று உள்ளுக்குள் என்னை  நானே என்கரேஜ்  பண்ணிக் கொள்வேன் )


 என்னைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி நிறையப் பேர் படிக்கின்றனர்.
அதில் முக்கியமான ஒருவர் என மாணவனின் தாத்தா .  3 வருடம் முன்பு அவர் வயது 65க்கும் மேலே..

 என்  மாணவன் ஒருவன்  student  exchange programme  ல் ஜப்பான் சென்றதும் அவனது தாத்தாவிற்கும் ஆசை வந்து பேரனிடம் அடிப்படை களைக் கற்றபின்  நெட் மூலம் தானே படித்து மூன்று லெவல்கள் முடித்துள்ளார்.

 எனவே எதைக் கற்றாலும் என்றாவது ஒரு நாள் நிச்சயம் கை கொடுக்கும்.
ஒரு மன தைரியத்தைக் கொடுக்கும்.
It is  Never Late .