Monday, 27 March 2017

எண்ணெய் இல்லாக் கீரை பஜ்ஜி தோசை


     
கை நிறையக்         கீரை போட்டு லேசாக பஜ்ஜி மாவில்

முக்கி எண்ணையில் பொரித்த  மொறு மொறு  பஜ்ஜி  

சாப்பிட யாருக்குத்தான் ஆசை இல்லை

ஆனால் அதில் உள்ள எண்ணெய் பலரையும் பயமுறுத்துகிறது .

 நான் எண்ணெய் பலகாரங்கள் என்றாலே கொஞ்சம் 

தள்ளித்தான் காதலிப்பது வழக்கம் .

புத்தர் கொள்கைகள் பிடித்தாலும் பஜ்ஜி

ஆசையை அறவே விட்டொழிக்க முடியவில்லை .

 மூளையைக் கசக்கிக் கொஞ்சம் ஐடியா பண்ணி செய்த பலகாரம் .

  பஜ்ஜி    டேஸ்ட் உள்ள   தோசை .

 எண்ணெய் கொஞ்சமே போதும் .

கடலை மாவும் அரிசி மாவும் 4  :1 என்ற விகிதத்தில்

 ,உப்பு தேவையான அளவு

சோடா மாவு கொஞ்சம்

கீரை பொடிப் பொடியாக நறுக்கியது    ( மாவை விட நிறையவே )

பச்சை மிளகாய் ஜூஸ் உங்கள் காரத்திற்குத் தேவையானது 

( நாலு அஞ்சு பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து ஜூஸ் பண்ணி வைத்துக் கொள்வேன்  எப்பொழுது ம் )

 பச்சை மிளகாய்த் துண்டுகளை விட ஜூஸ் எல்லா

இடத்திலும் சமமாகப் பரவும்

.வாயில் மாட்டி  கடிபட்டு  இம்சை பண்ணாது .

 எல்லாத்தையும்  ஒண்ணாக்  கலந்து தோசைக் கல்லில் மெலிதாக 

வார்த்து எடுத்தால் பஜ்ஜி  டேஸ்ட் உள்ள தோசை ,


தோசைக் கல்லில் ஒட்டிக் கொள்ளும் அபாயம் இருந்தால் 

  ( இரும்பு தோசைக் கல் தான் நான் உபயோகிக்கிறேன் )

ஒரு பெரிய வெங்காயத்தை எண்ணையில் தொட்டு முக்கி, 

கல்லில்  பரவலாகத் தடவிய பின்  தோசை செய்யவும்

ஒட்டாமல் அழகாக வரும் .

  மிக மிகக்  குறைவான எண்ணெய் விட்டால் போதும் .

கீரைக்குப் பதிலாக நான் கேரட் கத்தரிக்காய்  குடை மிளகாய் , முட்டைக் 

கோஸ்  ( கத்தரிப்பூ கலர் கோசில் பார்க்க அழகாக இருக்கும் )

கொத்தமல்லி எனவும் பல விதமாக க் கலந்து கட்டியும் செய்வேன்

நான் வடையைக் கூட இதே மாதிரி   தோசை  வடிவில் செய்து சாப்பிடுவேன் .Saturday, 18 March 2017

ஹோம் ஒர்க் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்பொருளாதார வல்லுனர்கள் "உலகத்தில் தவிர்க்க முடியாத சமாச்சாரங்கள் இரண்டு.
ஒன்று .மரணம், மற்றொன்று அரசாங்க வரி" என்பார்கள். 

என்னைப் பொருத்தவரை வரி ஏய்ப்பது கூட செய்துவிடலாம், 
இந்த ஹோம் ஒர்க் ஒவ்வொருவர் வாழ்விலும்
படுத்தும் பாடு இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. 

ஆனால் அதை ஒவ்வொருவரும் எப்படி எல்லாம் சமாளிக்கிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யமானது.
.
முதலில் என் கதையைப் பார்ப்போம்.

 நான் படிக்கும் போது ஸ்கூல் முடிந்து வந்தால் ஹோம் ஒர்க் செய்தவுடன்தான் விளையாட விடுவார்கள். 
அதனால் அவசர அவசரமாக ஹோம் ஒர்க் சீக்கிரம் செய்துவிட்டு   நோட்டை மூடி பைக்கு நெஞ்சடைக்கிற மாதிரி  உள்ளே திணித்துவிட்டு  விளையாட ஒரே ஓட்டம்தான்.

அது சரி, அந்த  ஹோம் ஒர்க் லட்சணம் எப்படி இருக்கும் தெரியுமோ?

வெளிப்பார்வைக்கு ஹோம் ஒர்க்  செய்த மாதிரிதான் இருக்கும்,  ஆனால் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனுமாம் கதை தான்.

முதல் இரண்டு வரியும் கடைசி இரண்டு வரியும் பக்கா!

எப்படியாகப்பட்ட  கொம்பனாலும் கண்ணில் ஒரு டின் விளக்கெண்ணை விட்டு நோண்டி   நோண்டி பார்த்தாலும்   தப்பே கண்டுபிடிக்க முடியாது. என் எல்லா ஹோம் ஒர்க் நோட்டிலும் டீச்சர் ஒரு சிகப்பு கலர் டிக் பண்ணி இனிஷியல் போட்டு இருப்பார்கள். என் ஹோம் ஒர்க் கில் தப்பு இருந்து டீச்சர்  திருத்தியதற்கான  அடையாளம் அறவே இராது.

நமக்கா தெரியாது  டீச்சரைப் பத்தி! அவங்க வீட்டிலே ஏக வேலைகள்! பேப்பர் கரெக்க்ஷன்,குழந்தையைப் பார்க்கணும் ,வீட்டைப் பார்க்கணும்  மாமியார் கணவன் .......இத்யாதி,இத்யாதி

 பேரைப் பார்த்து கையெழுத்து அழகாக இருந்தால் கட கட என்று டிக் ! 
இப்படியே எஸ் எஸ் எல் சி வரை ஓட்டினேன்.
 ஏதோ படிப்பு கொஞ்சம் நன்றாக இருந்ததால் வண்டி ஓடியது. 

ரொம்ப நாள் வரை நான்தான் செம கில்லாடி என்று  நினைத்துக்கொண்டு இருந்தேன்,

பிறகுதான் தெரிந்தது  நமக்கும் மேலே உள்ளவர் கோடி என்று.

( நினைத்துப் பார்த்தால் நிம்மதி வரவில்லை எனக்கு பொறாமை தான் வந்தது,

 மேலே படித்தால் உங்களுக்கும் பத்திக் கொண்டுதான்  வரும். வரணும் அப்படி  வரவில்லை என்றால் நீங்கள் அக்மார்க் ஞானிதான்.)

 நான் இப்படி டீல் பண்ணினேன் என்றால் ஒரு சிலர் மற்றவர்களின் நோட்டைப் பார்த்து காப்பி அடித்தனர், 
இது ஒன்றும் பெரிய தப்பில்லை என்றாலும் அதே கிளாசில் பல பேரால் காப்பி அடிக்கப்பட்டு கணக்கு பாட நோட்டு காமெடி பீஸாக மாறியது தனிக் கதை. 

உதாரணமாக,19X4=76 என்பது பலராலும் காப்பி அடிக்கப்பட்டு நடுவழியில் 14X4=76
ஆகி, ஆட்கள் ஆடுகளாக மாறி, வேலை நேரம் சேலை நேரம் என்று உருமாறினாலும்  கடைசியில் விடை மட்டும் பக்கா!

 கோலத்திற்கு செம்மண் இடுவது போல்.சிகப்பு மையால் அடிக்கோடிட்டு விடுவதால் அகப்பிழைகள் ஆயிரம் இருந்தாலும் டீச்சரின் கண்ணுக்குள் சிக்காது. காரண்டி!மேல் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்வது போல், ஹோம் ஒர்க்கை அமெரிக்கா 

ஸ்டைலில் தகுந்த சன்மானத்துடன் அந்த இளம் வயதிலேயே

 அவுட் சோர்சிங்க் செய்த மானேஜ்மெண்ட் புலிகளும் இந்தியாவில் ஏகம்.


நான் சொல்லும் என்  காலம் டி.வி, இண்டெர்நெட் என்றால் ஸ்பெல்லிங் கூட என்ன போடுவதோ யாமறியேன் பராபரமே யுகத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ரொம்ப சொன்னால் என் வயதை நானே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி ஆகிவிடும். அது போன நூற்றாண்டு சமாச்சாரம்.

 இந்த  நூற்றாண்டில்  அதாவது 1990 மற்றும் 2000களில் எப்படி?

சிலர் "டீச்சர்! செஞ்ச ஹோம் ஒர்க்கை மறந்து வீட்டில் வைத்து விட்டேன், இருந்தாலும் ஒரு பேப்பரில் எழுதி........../அவளின்/அவனின் நோட்டு உள்ளே வைத்திருக்கிறேன் "என்று படு பவ்யமாக கொஞ்சும் தொனியில் சொன்னால் மயங்காத  டீச்சர் யாருமுண்டோ?


டீச்சரிடம் திருத்துவதற்கு கொடுத்த ஹோம் ஒர்க் நோட்டு திரும்ப எனக்கு வரவே இல்லை அதனால்தான் ஹோம் ஒர் பண்ண முடியலை என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கொடுக்கும்  ஓவர்   ஃபீலிங்கும் சில சமயங்களில் கை கொடுக்கத்தான் செய்கிறது.


என் மகன்கள்  படித்த காலத்தில் நானும் வேலைக்குப் போய்க்கொண்டு  இருந்ததால் ஆபீஸூ விட்டு ஏழரை மணிக்கு வந்தபின் சில சமயங்களில் நானே ஒரு ஃபேர் காபி எழுதி அப்படியே அட்ட காபி அடிக்கச் சொன்ன நேரமும் உண்டு.

சயன்சு நோட்டில் டயகரம் மட்டும் நான் போட்டுக் கொடுத்து பாகங்கள் குறிக்க வேண்டியது மட்டும் அவர்களின் வேலைதான் என்ற சட்டத்தை மீறியதாக சரித்திரமே கிடையாது.

 ,ஜாமெட்ரி நோட்டிலும் என் கை வண்ணம்தான். ஏனெனில்  அவ்ர்களுக்கு எட்டரைக்குள் தூக்கம் வந்து விடும்.

  ஹோம் ஒர்க்கே பண்ணிக் கொண்டிருந்தால் படிப்பது எப்போது? மேலே 

சொன்னவைகள் எல்லாம் எனது நேர நிர்வாகத்திறனின் ஒரு அம்சம்தான் என்று 
கொள்ளவேண்டுமே தவிர ஹோம் ஒர்க்கிற்கு தண்ணி காட்டும் உபாயமாகக்  
கொள்ளவேண்டாம்.

என் மகனின் பள்ளித்தோழர்களின் ஒரு சில பெற்றோர்கள் குறிப்பாக 11வது 12வது ரெகார்டு நோட்டில் (ரொம்ப நேரம் பிடிக்கும் வெட்டி வேலைஎன்று முடிவு செய்துவிட்ட காரணத்தால் )ஆரம்ப முதலே  எழுதிக் கொடுக்கும் பரோபகாரி அவர்கள்தான்.

பாதியில் எழுத ஆரம்பித்தால் கையெழுத்து மாறி ஏடா கூடமாகி ......  பெற்றோரான நாம் ஹோம் ஒர்க்கையும் பண்ணிவிட்டு பிரின்சிபல் ரூம் வாசலில்  ஹோம் ஒர்க் பண்ணாத பசங்களுடன் பார்ட்னராகப்    பழியாகக் கிடக்க வேண்டும்.

தேவை இல்லாத பிரச்னைக்கு  நாமே ஏன் பிள்ளையார் சுழி  போடணும் என்கிற படு சாமர்த்தியமான அணுகுமுறைதான் இந்த ரகம்.


என் மகனின் பள்ளியின்  ஒரு மாணவன்  எப்படி ஹோம் ஒர்க் சமாளிபிகேஷன் செய்தான் என்பதைக் கேட்டால் கி.பி 2020க்குள் இந்தியா சைனாவை முந்திக்கொண்டுவிடும் என்பதில் யாருக்கும் ஐயமே இராது.

ஒரு பையன் 12  வது படிக்கும் போது  ஒரு வருடம் முழுக்க ஹோம் ஒர்க் எழுதவே இல்லையாம் ! இது எப்படி முடியும் எப்படி என்கிறீர்களா? அவன் தான் கிளாசின் லீடராம். நோட்டைக் கலெக்ட் பண்ணி  கிளாசில் வந்தவர்கள் மொத்தம் 40 பேர் ,ஹோம் ஒர்க் நோட்டும் 40 இருக்கு டீச்சர் என்று ஏதோ கம்பெனி பேலன்சு ஷீட் டாலி பண்ணிய மாதிரி
டீச்சர் முன்னாடியே எண்ணிக் காண்பித்துவிட்டு  தானே
அவர் ரூமில் கொண்டு வைப்பானாம்.

 வைக்கு முன், பாதி வழியில்
 ஹோம் ஒர்க் செய்யாத தன் நோட்டை உருவிவிடுவானாம்.

பையன் நன்றாகப் படிப்பவன்.
டியூஷனிலும் ஹோம் ஒர்க் கையை ஒடிக்குமாம்,

 அதனால் பையன் ரூம் போடாமலே இப்படி யோசித்து விட்டான்.

 இது எப்படி இருக்கு? சூப்பராக இல்லை?

அப்படியாகப் பட்ட அறிவாளி யார் என்று தெரியணுமா?

 ஒரு ஹிண்ட் தருகிறேன் .

 புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?


 (பத்திரிகைக்கு ஒரு இரண்டு வருடம் முன்பு அனுப்பினேன் . இன்று வரை பிரசுரமானத்திற்கான அறிவிப்போ புத்தகமோ வீட்டிற்கு வரவில்லை)


Tuesday, 14 March 2017

வேஷம் மாறும் காசு


நான்  பாடப்புத்தகத்தில்  சீனர்கள்  கடல் சிப்பிகள்  சோழிகள்  போன்ற

பலவற்றினையும்    காசு போல  உபயோகித்து  வந்தனர் என்று 

படித்திருக்கிறேன் ..

சில  சமயங்களில்  அவற்றை  முப்பது  நாற்பது என்கிற  மேனிக்கு  கயிற்றில்

கோத்து   மாலைகளாகவும் கட்டி ஒரு unit உதாரணமாக ஒரு டாலர் என்கிற

மாதிரியாக வும் செய்து வைத்திருந்தனர்  என்றெல்லாம்  படித்தருக்கிறேன்..

 கால்  நடைகள்  முதலில்  பணமாக்க கருதப் பட்டதாம்

 ( அப்பொழுதெல்லாம்  ஒட்டுப் போட பணம் கொடுக்கிறதா இருந்தாக்க..... நினைச்சுப் கூட பார்க்க முடியலை  ,  சிரிப்பு வந்தது.)

 ,வெண்கலத்தால்   ஆன   சிறிய கத்திகள்   கூரான ஆயுதங்கள் இவைகளைக்கூட  ஆயுதங்களாக  உபயோகித்திருந்திருக்கின்றனர் .

பிறகுதான்   கூரான   ஆயுதங்கள்   பையைக்   கிழிக்கும்   கையைக்
  கிழிக்கும்  என்பதால்   வட்ட வடிவமான   நாணயங்களைச்   செய்திருக்கின்றனர்.

 அப்போல்லாம் 

என்னடா    இதையெல்லாம்   போய் காசுன்னு  வெச்சுகிட்டு இருந்த்திருக்கிறாங்க தண்டப்  பசங்க ன்னு  நினைத்திருந்திருக்கிறேன் ..

முகமது -பின் -துக்ளக்காலத்தில்-- தோல் --நாணயங்கள் --இருந்ததாகப் --படித்த ஞாபகம் ... (  சரியா தவறா தெரியவில்லை )


நாணயங்கள்   எடுத்துச்   செல்ல   அவ்வளவாக   ஏதுவாக   இல்லையாதலால் பிறகு   கரன்சி    நோட்டுக்கள்   அச்சடித்த போதும்  மக்களால்  உடனே ஏற்றுக் கொள்ளப் படவில்லையாம் .

போயும்   போயும்   காகிதத்தை   எவன்   காசுன்னு   மதிப்பான்   என்ற எண்ணம் இருந்ததால் !

அவ்வளவு என் ?

 ஏ. டி .எம் கார்டுகள்  கூடப் புழக்கத்தில் வர   கொஞ்சம்   நாட்கள்   பிடித்தது .

 இனி   வரும்   காலங்களில் கார்ட்டுக்குப் பதில்  சிம்  கார்டு  மாதிரி ஒரு


உபகரணம் கரன்சி நோட்டிற்கு மாற்றாக வரலாம் யார் கண்டது ?


அப்போவெல்லாம் நம்ம ஜெனரஷனை என்ன மாதிரி மீம்ஸ் ட்ரொலெல்லாம் 

 போட்டுக் கிழி  கிழிக்கப் போறாங்கன்னு தெரியல 

Sunday, 12 March 2017

வேற்று மொழி படிப்பது Thriller Game போல
பொதுவாக    என்   பதினோரு வருட டீச்சிங்    அனுபவத்தில்   
பெரியவர்களை விடக்    குழந்தைகள்   வெகு சீக்கிரம் 
கற்றுக் கொள்கிறார்கள் .
காரணம் அவர்கள் ஆராய்ச்சிக்குப் போவதில்லை
வளர்ந்து விட்ட நாம் புது மொழியோடு ஆங்கிலத்தையும் ஒப்பிட்டுக் கொண்டு அந்த வித்தியாசத்தைக் கண்டு பிடிப்பதில் மூழ்கி விடுகிறோம் .


நான் விளையாட்டாகக் கற்கும் முறையை  என் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பேன் .

இதனால்   என்   வகுப்புகளில்   DROP OUTS கம்மியாக இருக்கும்

 புது மொழி   கற்கவேண்டுமானால்   முதலில்  அந்த   மொழியில் உள்ள சினிமா அல்லது   டிராமா   ஆகியவற்றை   இங்கிலீஷ்   சப் டைட்டிலோடு   இரண்டு முறை   பார்க்கணும் .
பிறகு   அதே  எபிசோடை மூன்றாவது   முறை சப் டைட்டில் இல்லாமல் பார்க்கணும் .


 அடுத்து அந்த மொழியில் உள்ள நல்ல  Adjectives எல்லாவற்றையும்
நம்   பெயரின் முன் அடைமொழியாகப் போட்டுக் கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம்  வீர வசனம்  பேசணும் (சொல்லவும் .)
அவர்களிடம்  நீ மோசம் , சோம்பேறி , ஆமை வேகம் போன்றவற்றைச்
சொல்லணும்.
அவர்களுக்கு எதுவும் புரியாது . ( புரிந்தால் தான் வினையே ...புரியாமலிருப்பது சாலச் சிறந்தது )


அடுத்தது   வீட்டில் உள்ளவர்களிடம் கற்றுக் கொள்ளும் மொழியில் பேசவும் .
உதாரணமாக   இது   என்ன   சாம்பாரா   ரசமா ?
ரெண்டுமே ஒரே மாதிரியானdensityயான    தண்ணியா இருக்கே ?

ஏன் வெட்டியா இருக்கே?

என்பது போல.

( இது  விளையாட்டல்ல ,  பலமுறை   நாம் இதுவா   அதுவா   என்ற   கேள்வியைக்   கேட்போம் .   அப்போ   சாம்பார்   ரசம்  என்னும் வார்த்தைக்குப் பதில் சம்பந்தப் பட்ட வார்த்தையைப் போட்டுக் கொள்ளணும்)


 (This is book , This is pen என்றெல்லாம் படித்தால் வேலைக்கு ஆகாது .

நம் அன்றாட வாழ்க்கையில் இந்த  ஸ்டேஷனரி சம்பந்தமான வார்த்தைகள் அவ்வளவாகப் பேசுவதில்லை என்பதை மனதில் கொள்ளவேண்டும்.


அடுத்தது   என் வகுப்பில்  (முக்கால் வாசி சனி ,ஞாயிறு அல்லது சாயந்திரம் 

அஞ்சு முதல் ஏழு வரை போன்ற நேரங்களில் தான் இருக்கும் ) சினிமா 

வசனங்கள் மற்றும் பாடல்கள் போன்றவற்றை மொழி பெயர்க்குமாறு 

சொல்வேன் .

கொஞ்சம் கலகலப்பாக இருந்தால்தான் பசங்க கவனிப்பாங்க

வடிவேலு டயலாக்கள் 
 நானும் ரவுடிதான் .... 

மாப்பிளை இவருதான் ஆனா சட்டை இவரது இல்ல .

 இது போன்ற வாசனைகளை அடிக்கடி சொல்லிப் பார்க்குமாறு சொல்வேன் .

அந்த மொழி  பெயர்த்த பாடல்களை
 உதாரணமாக என் சமயலறையில் நீ உப்பா     சர்க்கரையா

ஒய் திஸ்  கொலை வெறி ?போன்ற பாடல்களை மனதிற்குள்
 பாடிக்கொண்டு இருக்கும் படிச்
சொல்வேன் . அதுவும் காலையில் எழுந்தவுடன் .....
அந்தப் பாடலே நமது மனதில் பல முறை ரீங்காரம் இடும் என்பதால் .


 அடுத்து   என்   ஐடியா   என்ன வென்றால்  மீம்ஸ் போடுபவர்கள்

 மாதிரி   அந்த   பிரபலமடைந்த   வசனங்களை  உதாரணமாக

" விட்டா நம்மளக் கிறுக்கனாக்கிடுவாங்க போல .. "

“அடிச்சான் பாரு அப்பாயிண்ட் மென்ட் ஆர்டர்”

போன்றவற்றை   மொழி பெயர்த்து அந்த தமிழ் மீம்ஸ்களை எடுத்து விட்டு 

நாம் கற்கும் மொழியில் மொழி பெயர்த்து replace செய்யலாம் .

 இது   குறித்து   நான்  திரு கார்த்திக் சரவணனிடம் கூடப் பேசினேன் .

அது   ரொம்ப ஈஸி  என்கிறார் .

எனக்குப் பிடிபடவில்லை .

யாராவது   ஸ்டெப் பை ஸ்டெப் ஆகச் சொல்லி ஒரு  பிளாக்  போட்டால்
 என் போன்றவர்களுக்கு வசதியாக இருக்கும்

என்னைப்   பொறுத்த வரை  புதிய எதையும்  நம்  மனம் ஏற்க மறுப்பதாலும் , நமக்கு   நேரம்( Polite version of சோம்பேறித்தனம் )   ஒரு   பிரச்சனையாக இருப்பதாலும்   பள்ளியில்   படித்த   முறையிலிருந்து   இது   மாதிரி   மாற்று முறையில் படிக்கலாம் .
 Studying can be made like a Thriller Game

படிப்பதினால் ***********ஆயிரம் உண்டு


படிப்பில்   ஆசை    உள்ளவர்களெல்லாம்   வழக்கமாக    சொல்லும்
படிப்புதான்  வாழ்க்கையில்   முக்கியம் ,   கற்றோர்க்குச்   சென்ற இடமெல்லாம் சிறப்பு   என்கிற  டெம்பிலேட்   காரணங்களுக்காக   நான் என்றுமே  படித்ததில்லை , 1983-1988 வருடங்கள்   மட்டுமே நான் படித்ததில்லை .
 மற்றபடி   கைவினை வகுப்புகள்  உட்பட  நான்  எதோ  ஒரு  மொக்கை  கோர்ஸ் பண்ணிக்கொண்டு      நானும்    படிக்கிறேன் என்று  பந்தா பண்ணிக்கொண்டு இருக்கிறேன் .

அதனாலேயே   நிறையப்  பேர்   என்னை  ஒரு  அறிவாளி  என்கிற  tag  உடன்தான் பார்க்கிறார்கள் .

 சின்ன   வயதிலே   இருந்தே   பிரிக்க   முடியாதது   எதுவோ என்று கேட்டால் என்னையும் புத்தகமும் என்று சொல்லுபடி ஸீன் போடுவேன்.

 நிச்சயமாக    படிப்பின்   மீது   இருந்த   ஆசையால்   அல்ல .
நாங்கள் மூவரும் பெண்கள் என்பதால் வேலை செய்யச் சொல்வார்கள் .

கையில் புத்தகம் இருந்தால்  "  வெட்டியா தானே  இருக்கே  இந்த  வேலையைச் செய்யேன்  என்று  யாரும் நம்மைச் சொல்ல  மாட்டார்கள் ".

 இந்த சூக்சுமத்தை அந்த சின்ன வயதிலேயே புரிந்து கொண்ட  என் அறிவின் மகிமை பற்றிச் சொல்ல வார்த்தைகள்............

 பிறகு   படித்த தில் எங்க அம்மாகிட்டே ஒரு சப்ப மாட்டருக்கெல்லாம் சந்தேகம் கேப்பேன் .   இதெல்லாம்   கூட   நீ   படிக்க   ஆரம்பிச்சுட்டியா அப்படீன்னு ஆச்சரிய ப்பட வைக்கிற மாதிரி ஒரு கேள்வி கேப்பேன் .

அம்மா   சொன்னாலும்   எனக்குப்  புரியாட்டியும்  தலையை ஆட்டிடுவேன் . இல்லைன்னாக்க  ரொம்ப விவரிப்பாங்க.

  வேலையை   டபாய்க்க ன்னு   ஆரம்பிச்சு " புத்தகப் புழு "என்று பேர் வாங்கினேன்.

 பிறகு   ஸ்கூல்    காலேஜிலேல்லாம்    மத்தவங்களுக்குத்   தெரியாத விஷயமெல்லாம்   நாம்  சொல்லும்போது   இதெல்லாம்  உனக்கு எப்படித் தெரியும் ன்னு  மத்தவங்க  நமபளைப் பாக்கும் போது  எனக்கே
வெட்டிப்  பெருமை  இருந்ததென்னவோ  உண்மை .


V RS வாங்கியதும்   மற்ற    வங்கிகளில்    வேலை   செய்ய   சந்தர்ப்பங்கள் இருந்தும்   பசங்க   இருவரும்  பத்தாவது  பன்னெண்டாவது  என்ற நிலையில் முழு  நேர  வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.


 யாருமே எதிர் பார்க்கவில்லை  
நான் ஜப்பானிய மொழி படித்தேன்.

. பாதிப் பேர் நம்பவில்லை .
மீதிப்  பேர்  இது எதுக்கு?  இதை   எல்லாம்  எவன்   சீந்துவான்  என்ற நெகட்டிவ் கமெண்டுகள் ஏராளம்
.நான் தளரவில்லை ,

முன் வைத்த காலுக்கு ரிவர்ஸ் கியர் போடும் வழக்கம் கிடையாது என்று சொல்லிவிட்டேன் .

  இப்போதும் படிக்கிறேன்  என்றால் உண்மையான காரணம்
 கிளாஸ் இருக்கு போகணும்   , வேறு ஏதாவது   வெட்டி   வேலையாக   உறவுகள் கூப்பிடுவதை  முற்றிலும் தடுக்கலாம் , இந்தமாதம்  பரிக்ஷை அடுத்த மாதம்  பரிக்ஷை என்று சொல்லிக்கொள்ளலாம் . ( சத்தியமாக    யாரும் தேதியை   செக் பண்ணமாட்டார்கள் ).

 நாமும்   பிசி என்று சொல்லிக்கொள்ளலாம் .

ஏன்  பிளாக் பக்கமே வருவதில்லை ? படிக்கிறேனாக்கும் .
( கடவுளை நம்பாதவர்கள் கூட நம்பிவிடுவார்கள் )

 மற்றவர்கள் முன்னிலையில் நம் இமேஜ் கூடும் .

 தவிர   மற்றவர்களைக் கொடுமைப படுத்தலாம் .
 என் கொடுமையில்   மாட்டித் தவிப்பவர்கள்   சக பிளாக்கர் திருகார்த்திக் சரவணன் (ஸ்கூல் பையன் ) & அவர் மனைவி .

அன்றன்றைக்குப்   பாடத்தை   அன்றைக்கே   படிக்கணுமாக்கும்    என்று நான் சொல்லும் போது   எனக்கு   ஒரு   கெத்து   பீலிங்கு   வரும் பாருங்க .
அதெல்லாம் அனுபவிச்சாத்தான் புரியும்.

நமக்குப் பொழுது போகலைன்னாக்க பாடங்களை
 ஃபோட்டோ   எடுத்து   மெயிலில்   அனுப்பி  போனில் பாடம் 
சொல்லித்தருகிறேன்  என்று  பாடாய்ப்  படுத்தலாம்

நிறையப் பேர் மாட்டி  சுருண்டு  சுண்ணாம்பாகி
யிருக்கிறார்கள். ( மேலே குறிப்பிடப் பட்டவர்கள் உட்பட )


இப்ப  ஒத்துக்கறீங்களாபடிப்பு நல்லது "என்று .