Tuesday 25 August 2020

நான் காதலித்த வார்த்தைகள்-2

சரியான புரிதல் இருந்தால் மட்டுமே காதலிக்க முடியும் ஆனால் வார்த்தைகளைக் காதலிக்க  இந்த  ரூல் ஒத்து வராது

அதுவும் என் விஷயத்தில் .

Epistolary எபிஸ்டலோரி என்கிற வார்த்தை .

 நான் படிக்கும் போது அர்த்தம் தெரியாத வார்த்தைகள் வந்தால் அதைக் கடந்து போகிற ஆள் இல்லை . அதே சமயம் உடனே அகராதியை எடுத்துப் பார்க்கும் ரகமும் இல்லை . முதலில் நானே அதன் அர்த்தத்தைக் கண்டு பிடிக்கப் பார்ப்பேன் . ஒரு துப்பறியும் நிபுணர் ரேஞ்சுக்கு .

 படிச்சு முடிச்ச அந்த வரிக்கே ரிவர்ஸ் கியர் எடுப்பேன்  பல சமயங்களில் ஒரு குத்து மதிப்பான அர்த்தம்  கண்டு பிடித்துவிடுவேன் . இந்த வார்த்தைக்கும் அப்படியே செய்யலாமேன்னு பாத்தால்

Epi sto lary என்று மூன்றாகப் பிரித்ததால்  தனித்த தனியாக எதோ புரியுது .

 Epidemic Epi centre மாதிரி  Epi sto lary . ஓகே கொஞ்சம் புரியுது

 Salary Burglary  Vocabulary மாதிரி Epi sto lary., இதுகூட ஓகே

 அட கிட்டவந்துட்டோம் போலெ ... ஆனா

ஆனா அதுகூட  சம்பந்த சம்பந்தமில்லாமல் இது என்னா நடுவாலsto” ?

 இது ஒன்னு   அவசியமேயில்லாமல் வந்து ஒட்டிக்கிட்டு ......

 அதை முன்னையும் சேக்க சேக்கமுடியாம பின்னாடியும்  சேக்கமுடியாம  டார்ச்சர் குடுக்குதே .

ஒன்னாகக்  கூட்டிப் பார்த்தால் கூட்டணி சரிவரலே.

 ம்ஹூம் குழப்பம்  தொடருது ..

சரி கிடக்கு அகராதியைப் பாத்துடுவோம்ன்னு தோல்வியை ஓத்துக்கிட்டு 

அகராதியை எடுத்துப் பார்த்தால் நெனச்சுக்கூட கூட பார்க்கலை 

இப்படி  ஒரு அர்த்தம் இருக்கும்ன்னு .

கடித வடிவிலான கதைகள் புதினங்கள் கட்டுரைகள்  இப்படியாம்.

கடித சம்பந்தமான வார்த்தையின் ஒரு பிட்டு ஒரு  க்ளூ , கூட இல்லையே குழப்பிட்டியே படவான்னு  திட்டினாலும் இந்த வார்த்தையில் ஒரு புதுமை இருப்பது போல தோணிடுச்சு புடிச்சுப் போச்சு

 ஆம்  கடித வடிவிலான இலக்கியங்கள் ஒரு காலத்தில் எல்லா மொழிகளிலும் இருந்தன .

ஆங்கிலத்தில் பல பிரசித்தி பெற்ற புதினங்கள்  ஏராளம் 

இந்திய எழுத்தாளர்களில்  பாரதப் பிரதமர் திரு நேரு அவர்கள்  இந்திராகாந்திக்கு  எழுதிய கடிதங்கள் மிகவும் பிரபலம் .

 தமிழில்  டாக்டர்  மு.வ அவர்கள்  கடித வடிவில் அன்னைக்கு தம்பிக்கு  தங்கைக்கு நண்பருக்கு என எழுதியுள்ளார்.



அறிஞர் அண்ணாவின் கடிதங்கள் கலைஞரின் கடிதங்கள் எல்லாம் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன .  அரசியல் வாதிகளின் கடிதங்கள் அவரவர் கட்சித் தொண்டர்களைப் பெரிதும் கவர்ந்தன .

முனைவர் பட்டம் வாங்க ஆய்வாளர்கள் இந்தத் தலைப்பின் பல பரிமாணங்களை எடுத்துக் கால வாரியாக ஆராய்ந்துள்ளனர் . 

ஆனால் இப்போது கடிதம் எழுதும் பழக்கம் அருகி வருகின்றது.  கால மாற்றத்தினால் பல விஷயங்கள் மறைந்து வழக்கொழிந்து   போகின்றன.

 இந்தக் கடித இலக்கியம் என்கிற ஒன்று எதிர் காலங்களில் இருக்குமா அல்லது வாட்சப் இலக்கியம் ,ட்வீட்டர் இலக்கியம்   என்கிற  புது வடிவ இலக்கியம் உருவா குமா?

அவையே முனைவர் பட்டத்திற்குத் தலைப்பாக எடுக்கப்படலாம்.


Saturday 15 August 2020

போளி ஐஸ்கிரீம்

 

போளி  ஐஸ்கிரீம்

   படிக்கிறபோது சயின்சு புத்தகத்தில் ஏதாவது ஒரு விதி அல்லது உபகரணம் ஒன்றின் பட விளக்கத்துடன்    இன்னார்  கண்டு பிடித்தார்கள் என்று பாடம் வரும் . அதில் சைடில் அதைக் கண்டு பிடித்தவர்கள் படம் அதாவது போட்டோ மாதிரி ஒன்று  போடுவார்கள். .  இந்த விதி உபகரணம் பற்றிய கேள்வி ஒன்று கட்டாயம் அதன் நீளம் விவரத்தைப் பொறுத்து  ரெண்டு மார்க்கு அஞ்சு மார்க்கு  கேள்வியில் வரும்        

அதைப் பார்க்கும் போது எல்லாம் எனக்கு நாமளும் வளர்ந்து பெரிய ஆளானதும்  பத்து மார்க்கு    பெரிய     கேள்வியில்    வர  மாதிரி(எல்லாம் அடுத்தவங்க வயித்தெரிச்சலைக் கொட்டிக்கத்தானே தவிர  உலகு க்குப் பெருமை சேக்க எல்லாம் இல்லை ) ஏதாவது கண்டு புடிக்கணும்ன்னு பெரிய பிளான் இருந்தது . படிச்சு முடிக்கிறதுக்கு முன்னாடியே வேலை கிடைச்சிட்டதாலே  இந்த உலகம் ஒரு மாபெரும் கண்டு பிடிப்பை இழந்து விட்டது.

  சரி இந்த லாக் டவுன்  நேரத்தில கூட ஏதாவது கண்டு பிடிச்சு இந்த உலகத்துக்கு ஒரு நல்லது பண்ணனும் என்கிற எண்ணத்தில் கண்டு பிடிச்சதுதான் இந்த   போளி  ஐஸ்கிரீம்

 போளி செய்யும் முறை பற்றித்   தெரிந்து கொள்ள இந்த லிங்கிற்குப் போகவும் என் பழைய பிளாக் இது . http://abayaaruna.blogspot.com/2016/11/3-in-1.html  3 in 1 கலக்கல் பலகாரம்

 

சரி போளி செய்தாகி விட்டது . இனிமேல் ஐஸ்கிரீமை வைக்கணும் . 

இது பெரிய வேலையான்னெல்லாம்  கேட்கக் கூடாது .

அங்கே தான் இருக்கு சூட்சமமே  .

 நானும் முதலில் ஆர்வக் கோளாறில் விஞ்ஞானி நியூட்டன் கண்டுபிடிப்புக்கு நிகரான எதோ  ஒன்றைக் கண்டு பிடிக்கப் போகிறோம் என்று நினைத்துக் கொண்டு அவசர அவசரமாக சூடாக இருக்கிற போளி யில்     நெய் மேலே தடவி  உள்ளே  ஐஸ்கிரீம் வைத்ததும் அது கல்யாண வீடுகளில்  பக்கத்துக்கு இல்லை வரை பாஞ்சு ஓடுற ரசம் மாதிரி ஓடிருச்சு  என்னடா  இது  கொரோனா தடுப்பூசிக்கு நிகரா இப்படி டஃ ப் கொடுக்குதேன்னு நொந்துட்டேன்.

சரி.எப்படியாகப் பட்ட அறிய கண்டு பிடிப்புகளுக்கும் ஒரு தடை வருவது சகஜம் தானே என்று தாமஸ் ஆல்வா  எடிசன் போன்றவர்களை 

நினைத்து ( இதெல்லாம் டூ மச் அப்படீன்னு எனக்கும் தோணுச்சு)   என்னை நானே  உசுப்பேத்திக்கிட்டு   மறுபடியும் சோதனையைத் தொடர்ந்தேன்

 அப்புறம் யோசிச்சு போளி ஆறியதும்  ஓரு அஞ்சு நிமிஷம்  கழிச்சு ஐஸ்கிரீமை உள்ளே வச்சி ரெண்டா மடிச்சு   ஐஸ்கிரீம் உள்ள இருக்குன்னு தெரியணும்  இல்லையா    லுக்கு வேறே முக்கியம் அப்படீங்கிறதுக்காக இதையும் ரெண்டாக் கட் பண்ணி ஒரு ஃ போட்டோ எடுத்தாச்சு .




சரி சாப்பிட்டுப் பாப்போமேன்னு பார்த்தால் அப்படி ஒரு டேஸ்டு. இனிமே என்னைக்கெல்லாம் போளி பன்றேனோ அன்னைக்கெல்லாம்  கட்டாயம் ஐஸ்கிரீம் கட்டாயம் வாங்கிடணும்ன்னு தீர்மானிச்சாச்சு .

 நான் போளி கோதுமை மாவில் தான் செய்தேன். மைதா  மாவில்  செய்யவில்லை . எனவே மஞ்சள் நிறத்தில் இல்லை . டேஸ்ட் நிஜமாகவே படு பிரமாதம் .  காப்புரிமை வாங்கலாமென்றால் வெளியில் போக முடியாத நிலை .

ஸயன்ஸில் ஒன்றும் பெரிதாகக் கண்டு பிடிக்கவில்லை   என்றாலும்  எதோ செயற்கரிய செய்த ஒரு திருப்தி . 

உலக மாணவர்கள் அத்தனை பேருக்கும் நல்ல காலம் போல தப்பிச்சுட்டாங்க .

நல்லா கவனிச்சுக்கோங்க  ஐஸ்கிரீம் போளி இல்லை

அப்படீன்னாக்க   தேங்கா போளி பருப்பு போளி  காரப் போளி மாதிரி இல்லை

 அதெல்லாம் காரணப் பெயர் .

போளி   உள்ளே அதைப் பூரணமா வச்சுப்   பண்ற அயிட்டம் .அதெல்லாம்

 இது போளி ஐஸ்கிரீம்

அதாகப் பட்டது ஐஸ்கிரீம் உள்ளே இருக்கும்

ஆனால் பூரணமாக இல்லை

.தப்பா சொல்லிடாதீஙங்க

தலைப்பை  ஆராய்ச்சி பண்ணித்தான் கவனமாக வச்சிருக்கேன்

 

 

Tuesday 11 August 2020

நான் காதலித்த வார்த்தைகள்

 

நான் கதையோ கவிதையோ கட்டுரையோ படிக்கும்போது சிலவற்றை ரொம்பவே ரசித்துப் படிப்பேன் . சொல்லப் போனால் தீவிரமாகக் காதலித்தேன்   சில வார்த்தைகள்  கிட்டத்தட்ட ஒரு வாரம் : சில சமயங்களில் பல வருடம் கடந்தும் திரும்பத் திரும்ப மனதில்  ஓடிக்கிட்டு இருக்கும்

அது எங்க அம்மாகிட்டே இருந்து வந்த ஜீன்ஸின் விளைவு. 

இதில் இரு மொழித்திட்டம்  மும்தொழித்திட்டம் என்றெல்லாம் இல்லாமல் எல்லா மொழியிலும் சில வாக்கியங்கள் வார்த்தைகளை நான்  காதலித்தேன் .

உதாரணமாகக் காட்டில் காய்ந்த நிலா என்பதை   ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துறாங்க.. என்று பொருள் கொள்வதில்லை  . மாறாக Full many a flower is born to blush unseen  என்பதன் தமிழக்கமாகத்தான்  நான் நினைப்பதுண்டு .

தெலுங்கு இந்தி ஜப்பானிய மொழி எல்லாவற்றிலுமே அழகான வார்த்தைகள் கொட்டிக்கிடக்கின்றன த்சுந்தொக்கு என்ற   ஜப்பானிய மொழி வார்த்தை பற்றி முன்பே ஒரு பதிவு போட்டிருக்கிறேன் . அதன் லிங்க் இதோ . படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம்  http://abayaaruna.blogspot.com/2013/12/blog-post_25.html

இளம் வயதில் அந்த வயதிற்கேற்பப்   புதிதாக( அதான் இங்கிலீஷுலே ஓவரா ஸீன்போடறது  ) ஏதாவது ஆங்கில வார்த்தைகள்  கண்ணில் பட்டால் அதை அடுத்த ஒரு வாரத்திற்குப்  பாக்கிறவங்ககிட்டே வலுக்கட்டாயமாக எப்படியாவது உபயோகிச்சு பந்தா காட்டறது

 அவங்க பேந்த பேந்த முழிக்கிறது ,அட இவ இவ்வளவு அறிவாளியான்னு நம்பள பாத்து ஆச்சரியமாய் பாக்கிறது இதையெல்லாம்ரொம்பப் பெருமையா நெனச்சுக்கிட்டு இருந்தேன் .

டெல்லியிலே இருந்த போதுஎன் கூட வேலை செய்த பாதிப் பேருக்கு  இந்தி மீதுள்ள அதீத பாசத்தால் இங்கிலீஷ் எழுத்து ஆறுக்கு மேலென்னாலே சறுக்கிடுவாங்க . அப்புறம் கல்யாணம் குடும்பம் இத்யாதிகளை நடுப்பறயும் நிறையப்  படிச்சேன்  ஆனால் முரசு கொட்டிக்கிறதை விட்டாச்சு .

 அப்படி நான் ரொம்ப ரசிச்ச வார்த்தைகளில் ஒண்ணுதான். Serendipitous .

இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் எதோ ஒன்று கண்டு பிடிக்க என்று ஒரு ஆராய்ச்சியை ஆரம்பித்தால் தற்சயலாக முக்கியமான  வேறு ஒன்றைக் கண்டு பிடிப்போம் .மைக்ரோவேவ்  கொய்நைன் , எக்ஸ் ரே  பேஸ்மேக்கர் எலெஸ்டி (LSD) எல்லாமே இப்படிப் பட்ட கண்டு பிடிப்புகள்தானாம் .இதுபோலத் தற்செயலாகக் கண்டு பிடிப்பதற்கு இந்த வார்த்தை உபயோகிக்கிறோம்

இந்த வார்த்தையோட ஸ்பெஷாலிட்டியே  உதடுகள் ஒன்றோடு ஒன்று ஓட்டும். நாக்கு யதாஸ்தானத்தை விட்டு மேலே நகர்ந்து மேலண்ணத்தைத் தொடும் அப்படியே மேல் பல் வரிசையின் பின் புறத்தையும் ஒரு தட்டு லேசாத் தட்டிட்டு தான் திரும்ப பழைய பொசிஷனுக்கு வர முடியும் .   நான் காதலித்த வார்த்தை ஒன்னும் லேசுப் பட்ட வார்த்தை இல்லை .நிறைய பேருக்கு இந்த வார்த்தையே தெரியாது , அப்படியே கண்ணில் பட்டாலும் கண்டுக்காமா கடந்து போயிடுவாங்க .

சரி இப்ப எதுக்கு இந்த ஒரு வார்த்தைக்கு இப்படி தோரணம் கட்டி விழா எடுத்து அப்படீங்கிறீங்களா சொல்றேன்

 போன வாரம் ஒரு முகூர்த்த நாளில் நானும் தற்செயலாக ஒரு கண்டுபிடிப்பு செய்தேன் . பேப்பர் டிவி இதிலெல்லாம் வரவில்லை

எனக்குச்    சமையலறையில் டப்பாக்களில் பேர் எழுதி ஒட்டி வைக்கும்   பழக்கம்    உண்டு . மைதா என்று எழுதியிருந்த டப்பா ரொம்ப நாளாகத் திறக்கவே இல்லை . சரி இன்னைக்கு நான் (NAAN ) பண்ணிடனும் என்று நினைத்துக் கொண்டு அந்த மாவை ஒரு பாத்திரத்தில் கொஞ்சமே கொட்டினேன் . நான் ( NAAN )பண்ணலாமென் று கொஞ்சம் உப்பு சர்க்கரை   எண்ணெய் கருப்பு எள்ளு  பேக்கிங் சோடா பேக்கிங் பவுடர் எல்லாம் கர்ம சிரத்தையுடன் போட்டுக் கரண்டி கொண்டு பிசைந்தப்புறம் தான் தெரிந்தது அது மைதா மாவு அல்ல அரிசி மாவு என்று .

சரி என்னடா பண்றதுன்னுட்டு அதிலேயே கொஞ்சம் குடமிளகாய் பச்சைக் கொத்தமல்லி  தேங்காய்ப்பூ  எல்லாவற்றையும் சரியான அளவில் கொட்டிப்   பிசைந்து ஒரு அரிசி அடை மாதிரிப் பண்ணினேன் .   

பார்த்தால் பார்வைக்கு  எதோ ஒரு புது  மாதிரி  டிபன் போல  இருந்ததும்  இருந்த  டால்  ( நானுக்குத் தொட்டுக்க ணும் என்று பண்ணியது ) கூட்டு எல்லாவற்றையும் அணிவகுப்பு நடத்தும்படி செட் பண்ணி    ஒரு    போட்டோ எடுத்து என் மகன்கள் மருமகள்கள் இருக்கும் வாட்சப் குரூப்புக்கு  அனுப்பிட்டேன் ..போட்டோ    ஷூட்முடிஞ்ச  அப்புறமா எப்படித்தான் இருக்கு என்று சாப்பிட்டுப் பார்த்தால் சூப்பரோ சூப்பர் டேஸ்ட். 

தொட்டுக்கை எல்லாம் இல்லாமையே ஒரு அரிசி வடை   மாதிரி இருந்திச்சு   .

அப்புறம் இந்த வாரமும் ஒரு தடவை பண்ணி ஆசை   தீரச் சாப்பிட்டாச்சு.

.இப்ப சொல்லுங்க  உலக வரலாற்றில் இடம் பெறவில்லை என்றாலும்   என்  கண்டு பிடிப்பு ஒரு அமர்க்களமான  serendipitous கண்டு பிடிப்பு   இல்லையோ?

நான் செய்த serendipitous அடை இதோ


 


 

 

Sunday 9 August 2020

பூ மாதிரி சப்பாத்தி

 


இட்லி  பூ மாதிரி பண்ணினோமே  இதையே கொஞ்சம் விரிவாக்கம் பண்ணி சப்பாத்தி பண்ணிப் பாக்கலாமேன்னு இன்றைக்கு முயற்சி பண்ணினேன் .

சும்மா சொல்லக்கூடாது நல்லாவே வந்திருக்கு , பூ  மாதிரிஇருக்கு

 ஆனால்  வட்ட வடிவச்   சப்பாத்தியைப்   பூ வடிவத்தில்    கொண்டு வருவதற்குக் கொஞ்சம் மெனக்கெட வேண்டியிருக்கு  முதல் சப்பாத்தி ஒரு மாதிரியாக ஆனால் பரவாயில்லை ரகத்தில் சேர்த்தி

இரண்டாவது ஓகே . 



பூ வடிவத்திற்காகச்  சப்பாத்தியை ஆறாகக் கூறு போட்டுக் கொண்டேன் .பிறகு அதில் ஓரங்கள் கூர்மையாக இருக்கும் ஒரு எவர்சில்வர் கப்பு  கொண்டு .நுனிப் பாகத்தால் ஒரு  கால் வட்ட வடிவம் வருமாறு கட் பண்ணினேன் . நடுவில் ஒரு வட்ட வடிவத்திற்கு லிப் ஸ்டிக் டியூப் உபயோகித்து கிட்டத்தட்ட பூ மாதிரி இருக்கிறபடி பார்த்துக்கொண்டேன் .



   நான் உபயோகித்த உபகரணங்கள் இவைதான்  



எனக்குச்   சப்பாத்தி  தேய்க்கும்  கல்லில்   அவ்வளவாக மாவு     பரப்பிச்   சப்பாத்தி தேய்க்கும் வழக்கம் இல்லை  அதனால் சப்பாத்தி கல்லிலிருந்து எடுக்கவே சிரமமாக இருந்தது.  நாளைக்குச்    செய்யும் போது மாவு நிறையச் சேர்த்து தேய்க்கணும் .  

ஒட்டுப் போட்ட இடங்களில் லேசாகச்  சப்பாத்தி குழுவி கொண்டு தேய்த்தால் நாம் பண்ணின ஒட்டு வேலைகள் தெரியாது     

 இதே போல் ஹார்ட் ஷேப்பிலும் செய்தேன் அது கூட பரவாயில்லை ரகம் தான்.


Sunday 2 August 2020

பூ மாதிரி இட்லி

எங்க பெரிய பையன் சின்ன வயசில் பண்ணிய அலப்பறைக்கு அளவே இல்லை . 
அவனுக்கு இட்லி தயிர் இது ரெண்டும் பிடிக்காது . 

 இட்லியாவது கொஞ்சம் பரவாயில்லை .தயிர் சாதம் பக்கத்தில் உக்காந்து யாராவது சாப்பிட்டால் ஓடிப் போய்விடுவான் . 

ஆனால் இட்லி உடம்புக்கு நல்லது என்று அவனை எப்படியாவது சாப்பிட வைக்கணும் என்று எங்க அப்பா வேறு ஏதேதோ ஜிஞ்ஜின்னாக்கடி வேலை பண்ணிப் பார்த்தார் , எதுவுமே நடக்கலை . 

 என் பையனின் நாக்கின் சுவை அரும்புகள்செம . கொஞ்ச வித்தியாசமான டேஸ்டாக இருந்தாலும் கண்டு பிடிச்சுடுவான் .

தக்காளி  ஜூசுஎன்றால் ரொம்பப் பிடிக்கும். 
 ஒரு தடவை  தக்காளி ஜூசுகேட்டான்
 தக்காளி எங்க ஏரியாவில் சில சமயங்களில் கிடைக்காது .
அப்படியே தக்காளி கிடைத்தாலும் சின்ன சைஸாக இருக்கும் எனவே சாத்துக்குடி ஜூஸில் கேசரிப் பவுடர் கொஞ்சமாகக் கலந்து கொடுத்தோம் .

 வயசு என்னவோ மூணு தான். இது பாத்தா தக்காளி ஜூசு மாதிரி இருக்கு சாப்பிட்டா சாத்துக்குடி ஜூசு மாதிரி இருக்குன்னுட்டு கண்டு பிடிச்சுட்டான்.

  அவனை ஏமாத்தறதும் கஷ்டமாக இருந்திச்சு . 

 எங்க வீட்டில இருந்த பணிமனுஷி வேறே எங்கே இருந்துக்கா இந்தப் புள்ளைய புடிச்சாந்தீங்க என்று விளையாட்டாகக் கேட்பாள் . 

 தினம் ஆபீஸ் முடிந்து வந்ததும் ஒரு பஞ்சாயத்து பண்ண வேண்டியிருக்கும் . சில நாட்கள் வினோதமான வழக்குகள் இருக்கும் பையன் அவளை பத்தியும் அவள் இவனைப் பத்தியும் குறை சொல்வார்கள் . நான் தார்மிக முறைப் படி என் பையனுக்கே சப்போர்ட் பண்ணுவேன் ..

 ஒரு நாள் சாயந்திரம் ஆஃபிஸ்லிருந்து வந்ததும் பையன் இந்த அக்கா இன்னைக்கு என்னை ஏமாத்தப் பாத்துச்சு , தாத்தா வேறே அக்கா சொல்றது தான் சரின்னாங்க பேசாம ரெண்டு பேரையும் ஊருக்கு அனுப்பிச்சுடுன்னான்.

ரெண்டு பேருமா சேந்து என் பையனை ஏமாத்தினீங்களாமே என்ன ஆச்சுன்னேன் .
 ம்....உன் பையனையே கேளுன்னாங்க . 
 எங்க அப்பாவுக்கு அன்னைக்கு எல்லா கிரகமும் நீச்சத்துலே போலிருக்கு 

பையன் அம்மா இன்னைக்கு காலையில என்கிட்டே வந்து தாத்தா “டேய் i தம்பி இட்லி சாப்பிடுடா பூ மாதிரி இருக்கு” ன்னு சொன்னாங்க. 

 பையன் சின்னப்ப புள்ள தானே அவன் எதோ சாமந்திப்பூ ரோஜாப்பூ மாதிரி இருக்கும்ன்னு நெனச்சுக்கிட்டு “சரி குடு”ன்னுருக்கான். 

இவங்க என்னா பண்ணியிருக்காங்க  எப்பவும் பண்ற அதே இட்லியைக் கொண்டாந்து தட்டிலே போட்டுக் குடுத்திருக்காங்க .

 இவருக்கு ஒரே ஷாக் . இருக்காதா பின்னே .

“பூ …பூ ன்னு சொல்லிட்டு இட்லியையே கொண்டாந்து வைக்கிறீயே என்னையா ஏமாத்தப் பாக்குறீங்க “அப்படீன்னு லா பாயிண்ட் எடுத்து விட்டிருக்கான் . 

 பணி மனுஷி சின்னப் பையன்னு நாம பேசிகிட்டு இருக்கிற எதிர் பார்ட்டி எவ்வளவு ஸ்ட்ராங்ன்னு தெரியாம “தம்பி இங்க பாரு மல்லிப்பூ மாதிரி சா ஃ ப்டா இருக்கு “ன்னு சொன்னதும் என் பையன் ரொம்பவே கடுப்பாயிட்டான் . 

சாமிகிட்ட இருந்த மல்லிப்பூவை எடுத்துக் கொண்டாந்து காமிச்சு எவிடென்ஸோட அவங்க தப்பா சொல்றாங்க . ஏமாத்தப் பாக்குறாங்க அப்படீன்னு புரூவ் பண்ணிட்டான். 

 மீண்டும் தளராத எங்க அப்பா இது பாருடா பஞ்சு மாதிரி இருக்கு அப்படீன்னுருக்காங்க . 

இவனும் விடப்பிடியா காட்டன் ரோல் கொண்டாந்து காமிச்சு “இது பஞ்சு இது இட்லி”ன்னு தெளிவா அறிவுப் பூர்வமா ஆதாரத்தோட ஒரு சுப்ரீம் கோர்ட் லாயர் ரேஞ்சுக்கு அசராம ஆர்க்யூ பண்ணியிருக்கான் . 

 உங்க அம்மா இட்லி யைப் பஞ்சு மாதிரி பூ மாதிரின்னு எல்லாம் சொன்னதே இல்லையா ன்னு எங்க அப்பா பணிமனுஷி கட்சிக்குத் தாவி விளக்கம் கேட்டிருக்காங்க 

 சிங்கிளா இருந்தாலும் சிங்கமில்லையா என் மகன் 

கொஞ்சம் கூடத் தயக்கமில்லாமல் "எங்க அம்மா பொய்யே சொல்லமாட்டாங்க இட்லியை இட்லிம்பாங்க பூவு பஞ்சுன்னெல்லாம் பொய் சொன்னதே இல்லை"யின்னு ஒரே அடியில் ரெண்டு பேரையும் ஆல் அவுட் ஆக்கிட்டான் .

 நாலு வயசிலேயே களத்திலே கடைசி வரைக்கும் நின்னு கலங்காம விளையாண்டிருக்கான் என் பையன் .

.அது புரியாம என்கிட்டேயே எங்க அப்பா "நான் பெத்த பசங்கள்லாம் இப்படி சரிக்கு சரி பேச மாட்டாங்க அப்படீன்னாங்க . 
 பஞ்சாயத்தில் தீர்ப்பு அடுத்தநாளைக்கு சொல்றேன்னு அவையை ஒத்தி வெச்சாச்சு. 
 அடுத்த நாள் காலையிலே சீக்கிரம் எழுந்து இது போல அழகா பூ மாதிரியான இட்லி பண்ணிவெச்சுட்டேன் . 




 யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிட்டு என் பையன் எழுந்ததும் சம்பந்தப் பட்ட பார்ட்டிங்களைக் கூப்பிட்டு சொம்பில் தண்ணி துண்டு சகிதம் ஒரு கட்டிலில் உட்கார்ந்து நான் பண்ணிய பூ இட்லி யை டிஸ்பிளே பண்ணி.

 “இதோ இது தான் பூ மாதிரி இட்லி. எல்லோரும் நல்லா பாத்துக்கோங்க என் பையன் சொன்ன இட்லி இது தான் தப்பா புரிஞ்சுகிட்டு வெட்டியா என்பையனை வம்புக்கு இழுத்த ஒங்களுக்கு நாலு நாளைக்கு காலை பதினோரு மணி காபி கட் என்று தீர்ப்பு வழங்கினேன். 

தட்டில் இட்லிப்பூ . பையன் முகத்தில் மத்தாப்பு