Thursday, 26 September 2013

பேதி மருந்து

இந்த காலத்து மக்கள் ஸுக்கு இந்த அனுபவம் சுத்தமாக இருக்கவே இருக்காது என்று நம்புகிறேன். நாங்களெல்லாம் சின்னக்குழந்தை ஆக இருந்த போது  எப்படி அரை ஆண்டுத்தேர்வு முழுஆண்டுத் தேர்வுகளிலிருந்து தப்புவது என்பது   முடியாதோ அது போல வருடம் இரு முறை இந்த பேதி மருந்திலிருந்து தப்ப முடியாது  என்பது பிரம்மா தலையில் எழுதிய எழுத்து .எந்த சாஃப்ட் வேராலும்
அழிக்கவே முடியாது.
ஒருசுப யோக ஞாயிற்றுக்கிழமைதான் பொதுவாக இதற்கென்று தேர்ந்து எடுப்பார்கள் .அதாவது யாருக்கும் பரீட்சை  இல்லாத நாள் ,அமாவாசை பரணி கார்த்திகை  போன்ற நாள் நட்சத்திரம்  எல்லாம் பார்த்து முகூர்த்த தேதி குறிப்பதற்கு எவ்வளவு கவனம் எடுப்பார்களோ  அந்த ரேஞ்சுக்கு பேதி மருந்து சாப்பிட  நாள் குறிப்பார்கள் .


எங்க அப்பா ரொம்பவே கோபக்காரர் .மருந்து சாப்பிட தகறாரு பண்ணினால் நம்மளை அடிக்க மாட்டார் ,கையில் அகப்பட்ட சாமானை கீழே போட்டு உடைத்துவிடுவார் .அது முகம் பார்க்கும் கண்ணாடி யாக இருந்தால் அதை அள்ள வேண்டிய வேலை அம்மாவுக்குத்தான் , பாவம் அம்மா.நிறைய முறை கண்ணாடி அள்ளியிருக்கிறார்கள் .

அந்த மருந்தை முழுங்கவே  முடியாது.எங்களைச் சொல்லிக் குற்றம் இல்லை.இது பற்றி பட்டி மன்றம் நடத்தினால்  அது சர்வ நிச்சயமாக மருந்து கம்பெனி செய்த குற்றமே என்று எப்படியாகப் பட்ட நடுவரும் தீர்ப்பு  சொல்வார்கள் ,என் கசப்பு உன் கசப்பு இல்லை அப்படி ஒரு கசப்பு கசக்கும் பாருங்கள். விவரிக்க வார்த்தைகளே இல்லை.

எப்படியோ எங்க பெரிய அக்கா மட்டும் மூக்கை இரண்டு கைகளாலும் பிடித்துக் கொண்டு ( மூக்கை அழுத்திப் பிடித்துக்கொண்டால் வாயில் முழுங்கும்போது கசப்பு தெரியாதாம்.கண்டுபிடிப்பு ஐன்ஸ்டீன் ரேஞ்சுக்கு இருக்கில்லே   )குடித்து விடுவார்கள் .நானும் எங்க சின்ன அக்காவும் அந்த டெக்னிக்கை ட்ரை  பண்ணினோம் .
ம்ஹூம்  தோல்வி தான்.
மூக்கை பிடிப்பதிலும் சில லாவகங்கள் உண்டு என்பதே பிற்பாடுதான் புரிந்தது. மூக்கை  சரியாகப் பிடிக்காவிட்டால் நாக்கில் overstay
பண்ணிகொண்டிருக்கும் மருந்து மூக்கு வழியாக வந்து மூக்கே கசக்க ஆரம்பிப்பது போன்ற ஒரு உணர்வு வரும்.கொஞ்சம் சர்க்கரை குடுப்பார்கள்

சில சமயங்களில் சர்க்கரையை முதலில் சாப்பிட்டு பின் மருந்து சாப்பிடுவோம் .என்ன  ஜாலம் பண்ணினாலும் அந்த கசப்பு வாயிலேயே  குறைந்தது ஒரு மணி சாவகாசம் குடியிருந்து விட்டுத்தான் போகும்.
மருந்து உள்ளே போனதும் வேலை ஆச்சு என்று நிம்மதியாக இருக்க முடியாது.
சில .......... சில என்ன பல சமயங்களில்  வாந்தி வரும் ,
அவ்வளவு தான் .
மறுபடியும்  முதலிலே இருந்துதான் .
அடுத்த படியாக toilet  போனியா போனியா என்று உயிரை வாங்குவார்கள் . அடுத்த படியாக அது தொடர்பான பல கேள்விகளை ( நாகரிகம் கருதி விலாவாரியாக எழுதவில்லை )  கேட்டு மீதம் இருக்கும் உயிரையும் வாங்கிய பிறகு  அடுத்த கொடுமை மிளகு ரசம் போட்ட சாதம் தான் அன்று .
பல முறை toilet யாத்திரை போய் நாமே ஒரு வழியாக ஆகிவிடுவோம் .
நம்மளை ஒரு வழியாக ஆக்கியபின் தான் பெற்றோருக்கே ஒரு நிம்மதி வரும் போலே!
ஒரு ஐந்து ஆறு வயது வரை தான் (விவரம் புரியாத வயதில்லையா)நான் என் பெற்றோர்களை படுத்தினேன் . பிறகு படுத்தவே இல்லை 
எனக்கென்று பேதி மருந்து சாப்பிடுவதில் ஒரு தனி பாணி ஏற்படுத்திக்கொண்டேன் 
.ரொம்ப சமர்த்தாக மருந்து குடித்துவிடுவேன். 
என்னை ஒரு முன் மாதிரியாகக் கூட சொல்லிக்  கொண்டிருந்தார் என் அப்பா.
அதன் ரகசியத்தை எங்க அப்பா விடம் கூட   (93 வயது வரை வாழ்ந்தார்) சொல்லவில்லை .
அந்த டெக்னிக் பற்றி தெரிந்து கொள்ள நீங்களும் ஆவலாக உள்ளீர்கள் இல்லையா ?
உங்களுக்குச் சொல்லாமலா ?
இப்பொழுது சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் .
மருந்தை வாங்கி நாமே வாயில்  ஊற்றிக் கொள்ளவேண்டும் .
அம்மாவையோ அப்பாவையோ இந்த விஷயத்தில் கண்டிப்பாக நம்பவே கூடாது.
 மருந்தை  வாயில்  ஊற்று வது போல் பாசாங்கு செய்ய வேண்டும் .
ஆனால் மருந்தை முழுங்கக் கூடாது .
மருந்து கசந்தால் என்ன மாதிரி நடிக்கணுமோ  அப்படி நடிக்கணும் . சொதப்பினால் நாம் அவுட்டு.
மறக்காமல் மருந்து சாப்பிட்ட டம்ளரை நாம்தான் கழுவி வைக்கணும் .
Out sourcing  கூடவே கூடாது.
மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம் என்ற உண்மையை மறந்திடக்கூடாது.

மூன்றாவது முக்கிய பாயிண்டு      toilet   பக்கம் அடிக்கடி  ஓடவேண்டும்.
டயர்டாக இருப்பது மாதிரி பாவ்லா எல்லாம் காமிக்கணும் .
எப்படியோ நம்ம மேலே சந்தேகம் வராதபடிக்கு சந்தர்ப்பத்தைப் பொறுத்து நடிக்கணும்.
 இப்படியே ஒரு மூன்று வருடம் ஓடியது .
கொஞ்சம் வளர்ந்த பின் டெஸ்ட்  பரிட்சை அது இது என்று தப்பித்தது பெரிய கதை.



8 comments:

  1. அடடா... என்னென்ன யோசனைகள்...!

    ReplyDelete
  2. நாங்களும் இதுபோல் சிறுவயதில் வேப்பிலைக்கு பயந்து ஓடியதுண்டு...

    ReplyDelete
  3. நானும் என் அத்தை வீட்டில் ஓடி பாய்க்குள் சுருண்டு கொண்டதுண்டு. ஆனாலும் வேப்பிலைக்கு தப்பியதில்லை.....:))

    உங்க அனுபவம் சூப்பர். அதுவும் மருந்தை எடுத்துக் கொள்ள நீங்க சொன்ன வழிமுறைகள் அருமை.

    ReplyDelete
  4. அருமையான யோசனைகள். Follwers gadget இணைப்பீர்களேயானால் தொடருவதற்கு உதவியாக இருக்கும்

    ReplyDelete
  5. வணக்கம்
    எப்படிப்பட்ட சிந்தனைகள் ...நினைத்துப்பார்க்க முடியவில்லை.......தொடர வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  6. நல்ல யோசனைகளைச் சொல்லியிருக்கிறீர்கள், அபயா! எங்களுக்கு விளக்கெண்ணையை காபியில் விட்டுக் கொடுத்துவிடுவார்கள். காபியும் குமட்டும்! என் பதிவை வாசித்து உங்கள் பதிவின் இணைப்பு கொடுத்ததற்கு நன்றி.

    ReplyDelete