Tuesday 24 September 2013

ஹைதராபாத் கடுகு

நாங்கள் ஹைதராபாத்தில் குடியிருந்த போது நானும் வேலைக்குப் போய் கொண்டிருந்த படியால் குழந்தைகளை பார்த்துக் கொள்ள தஞ்சை மாவட்டத்திலிருந்து ஒரு பெண்மணியை அழைத்துக்கொண்டு  வந்திருந்தோம் .அவள் பிறந்து வளர்ந்தது  எல்லாம் தமிழ் நாடாக இருந்த போதிலும்  ஹைதராபாத் அவளுக்கு ரொம்பவே பிடிக்கும்.
ஹைதராபாத்தில் வேர்கடலை நான்கு நான்கு  பருப்புகளாக இருக்கும் . அங்குள்ள துவரம்பருப்பு ரொம்பவே ருசியாக இருக்கு ,அந்த ருசி நம்மூர் பருப்புக்கு வரவே வராது ,அந்தூர் அரிசி அப்படியே சாப்பிடலாம் தொட்டுக்கறதுக்கு ஒன்னும் கூட வேண்டாம் ,என்று சொல்லுவாள்.பிறகு அங்கிருந்து மாற்றல் ஆகி சென்னை வந்த பின் நான் யாரையும் வீட்டோடு வைத்துக்கொள்ளவில்லை .
மறுபடி எனக்கு ஒரு முறை உடல் நலம் குன்றிய போது என் அப்பா அவளை அழைத்துக் கொண்டு வந்திருந்தார்.ஆபிசுக்கு லீவு போட முடியாததால் அவளை ஒரு  மாதம்உதவிக்கென்று வைத்துக்கொண்டேன் . என் கணவர் வெளி மாநிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்ததால் எனக்கும்  உதவி தேவைப்பட்டது.
அப்பாவும் அவளும் ஒரு செவ்வாய்கிழமை வந்தார்கள் .அன்று ஒரு கல்யாண ரிசப்ஷன் இருந்ததால் நான் வீட்டில் சாப்பிடவில்லை.
அவள் இரவு தோசை செய்திருக்கிறாள் .ஆனால் தேங்காய் சட்னி என்னவோ நல்லாவே இல்லை சட்னியில் என்னவோ பிரவுன் கலரில்  மிதந்தது  என்று என் பசங்கள் இருவரும் குற்றப்பத்திரிகை வாசித்தார்கள் .அதற்கு அவள் இந்தூர் கடுகே சரியாகப் பொரியமாட்டெங்குதும்மா  ஹைதராபாத் கடுகு எண்ணையிலே போட்ட என்னமா பட பட என்று பொறியும் .இந்தூர் கடுகு அப்படியே  பூத்து வருதும்மா என்றாள்.
எண்ணையை ஒழுங்கா காய வை அப்புறம் கடுகு போட்டு பொறி ன்னு சொல்லிட்டு நான் பசங்களுக்கு பாடம் சொல்லிகொடுக்க போய்விட்டேன் .
காலையும் மதியமும் எப்போதுமே சப்பாத்திதான் . அது நான் செய்து விடுவேன்
புதன்கிழமை பசங்கள் திட்டவட்டமாக சட்னியில் கடுகு போடாதே என்று சொல்லி விட்டார்கள்
வியாழக்கிழமை அன்று சாயந்திரம் இருவரையும் என் அப்பா கட்டாயப்படுத்தி சாம்பார் சாதம் சாப்பிடவைத்த  போது வேண்டா வெறுப்பாக சாப்பிட்டுவிட்டு என்னிடம் மறுபடியும் கம்பிளைண்டு !
என் அப்பா  வேறு என்னிடம் உன் பசங்களுக்கு சாம்பார் அருமையே புரியவேயில்லை .சாம்பார் வாசனையை அந்த கடுகு வாசனை தூக்கி அடிக்குது என்று சொல்லி அந்த சாம்பாருக்கு ஒரு பாரத ரத்னா அவார்டு குடுக்காத குறை !
வெள்ளிக்கிழமை சாயந்திரம் எங்க அப்பாவின் கொடுமை தாங்காமல் என் பசங்கள் ஏதோ செய்து சாப்பிடாமல் தப்பித்து ஒடி விட்டார்கள் .
வெள்ளிக்கிழமை இரவே என்னிடம் சனிக்கிழமை சாயந்திர டிபனுக்கான காசை வாங்கிகொண்டு விட்டார்கள் .
வெள்ளிக்கிழமை  இரவு எங்க அப்பா அவளிடம் ஏதோ பூமத்தியரேகை அட்சரேகை  என்றெல்லாம் சொல்லஇங்கிலீஷ் மீடியத்தில்படிப்பதால்  அது சரிவர புரியாமல்  என் சின்ன மகன்  என்ன சொல்கிறீர்கள்  என்று கேட்டிருக்கிறான் .
என் அப்பாவும் இது ஜாக்ரக்பி ஃ  டா   என்று சொல்லியிருக்கிறார் .
என் பையன் அவளுக்கு ஏன் தாத்தா  ஜாக்ரக்பிஃ  சொல்லித்தருகிறார் போய்
கேளு  கேளு என்று நச்சரித்தான் .
போய்  கேட்டேன்.
பூகோளரீதியாக  ஒரு தாவரத்தின்  /தானியத்தின் தன்மை பூமத்தியரேகை
அட்சரேகை  கடல் மட்டத்திலிருந்து உயரம் ,கடலிலிருந்து உள்ள தூரம்
இவற்றை பொறுத்து மாறும் ,அதனால் தான் சென்னையின் கடுகு சரிவரப் பொரியவில்லை என்ற உலக மஹா கண்டுபிடிப்பை  விளக்கமாக விவரித்துகொண்டிருந்தார்.
எனக்கோ எரிச்சல் ! ஆமா  இப்போ அவ 12வது பரிட்சையா எழுதுகிறாள் .
வெட்டி வேலை ! என்று மனதில் நினைத்தேனே தவிர வாயைத்திறக்கவில்லை.
 ஒரு வழியாக ஞாயிற்றுக்கிழமை  காலையில் பசங்களை எழுந்து படிக்க சொல்லிவிட்டு நான் சமைத்தேன் .
அந்த வீடு மிகவும் சிறியது , நானும்அப்பா வேலைக்காரி மகன்களுடன்  பேசிக்கொண்டே சமைக்கும்பொழுது கடுகு தாளித்தேன். பட பட என சத்தம் கேட்டதும்  என்னங்க  உங்களுக்கு மட்டும் எப்படி  இப்படி பட பட ன்னு
பொரியுது என்று வாயைப்  பிளக்க  எங்கே கடுகை காமிங்க  என்று கேட்டாள்.
கடுகு டப்பாவை காண்பித்தேன் .இந்த டப்பாவா கடுகு டப்பா , நான் அந்த டப்பாவில்  இருந்த கடுகுல்லெ பொறித்தேன்  என்று (Leaf tea)
   டீ இலைகள் இருந்த டப்பவைக்காட்ட  பையன்கள் பயங்கரமாக  வாரினார்கள் .
தாத்தா எப்படி எப்படி கடுகு வாசனை சாம்பார் வாசனையை தூக்கி  அடிக்குதா ?என்று எங்க  அப்பாவை வேறு  கிண்டல் !
எல்லாம் அவளுக்கு வெள்ளெழுத்து  வந்துவிட்டதால்  வந்த வினை !


3 comments:

  1. ஹா ஹா ஹா...... பாவம் பசங்க, ஒரு நல்ல டீ போட்டு குடுங்க, கடுகு போடாம !

    ReplyDelete
  2. குழந்தைகள் அப்போது முறையே எட்டு மற்றும் ஆறு வயது.
    அதில் காமெடி என்னவென்றால் நான் டீ பவுடர் கூட வாங்கி வைக்கவில்லை ( நானும் குழந்தைகளும் பால்தான் )என்று மண்டை காஞ்சு போய் லீப் டீ யை கடுகு என்று நாமகரணம் பண்ணிவிட்டு தனியாக டீ பவுடர் வாங்கியிருக்கிறார்கள் .
    நம்ம ஆளுங்களா கொக்கா !

    ReplyDelete
  3. நல்ல கதை. டீத்தூள் போட்டு சாம்பாரா!!!

    ஒருவழியாக பிரச்சனையை கண்டுபிடிச்சீங்களே....:))

    ReplyDelete