Thursday, 16 January 2014

கறை நல்லது என்கிற மாதிரி கடுப்பேத்தறதும் நல்லதே .

  ஆம் .கறை நல்லது என்கிற மாதிரி கடுப்பேத்தறதும் நல்லதே .

முதலில் தியரிப் படி விளக்கம் கொஞ்சம் தேவை .
ஏன்னா கடுப்பேத்தறது பத்தி நிறைய எழுதலாம்ன்னு இருக்கேன்..

பொதுவாக் கடுப்பேத்தறது அப்படின்னு சொன்னா குறைந்த பட்சம் இரண்டு  எதிர் எதிர் அணி   பார்ட்டிங்க தேவை.

.ஆனா அதிக பட்சத்துக்கு அளவே இல்லை .

 என்னா மெம்பருங்க எண்ணிக்கை அதிகமாக அதிகமாக ஆக கடுப்பேத்துவது   கடுப்பேத்தற அணிக்கு சுவாரசியமாக இருக்கும். 

எதிரணிக்கு  பயங்கரமாக கடுப்பு எங்கோ எகிறும்.

சில சமயங்களில் இது கொலை வெறியாக மாறி சிராய்ப்பில் இருந்து ஆரம்பித்து வெட்டுக் காயம் மற்றும் கொலை அளவு வரை கூடப் போக சான்சு இருக்கு.

குடும்ப லெவல்லெ இருந்து    ,பள்ளி ,   ஆபீஸ் , அரசியல் கட்சி  மற்றும்  நாடு தாண்டிய அளவிலும் கடுப்பேத்துவது உண்டு.

 பதிவர்களில் நான் பரம  சாது to the power of n என்பதால் பதிவு மூலம் கடுப்பேத்துவது பற்றி எனக்கு   லவலேசமும் தெரியாது.

 என்னை மாதிரி இல்லாமல்  கடுப்பேத்தாத நாளெல்லாம் வீண் என்று நினைக்கும் மகா நல்லவர்கள் கூட உண்டு.

 முன்னுரை இது போதும் என்று நினைக்கிறேன்.

நான்   ஏழாங்கிளாஸ்  படிச்சுட்டு இருந்த சமயம்.
வயசு என்னவோ பத்துதான்.
 மணி இரவு எட்டு .

அடுத்த நாள் கணக்கு  ஹோம் ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன்.

என்ன காரணமோ தெரியலே  என்ன குட்டிக் கரணம் போட்டாலும்  புஸ்தகம் பின்னாடி அந்த மடையன் கொடுத்த விடை வரலை . கொஞ்சம் பக்கத்திலே விடை இருந்தாக் கூடம் எதையாவது ரவுண்டு போட்டு சமாளிக்கலாமுன்னு பாத்தா என் விடைக்கும் புஸ்தக விடைக்கும் பல கிலோ மீட்டர் தூரம் ..

 நான் அன்னைக்கி  எதும் மூஞ்சில முழிச்சேனோ   தெரியாது.

இல்ல என்  நேரமான்னும் சொல்லத்  தெரியலே.

யோசிச்சு யோசிச்சுப் பாத்துட்டு 
அப்புறம் ஒரு வழியா எங்க பெரிய அக்காகிட்டே  சொல்லிகுடுன்னு கேட்டேன்.

அங்கதான்  புடிச்சுது சனி.

கணக்கு நடுப்பற எதோ  ஒரு நம்பரை 13 ஆல் பெருக்கி 16 ஆல் வகுக்கணும்.

நான் எப்பவுமே  எதோ ஒண்ணாலே பெருக்கி அப்புறம்  3 ஆல்     பெருக்கி  சமாளிச்சுக்குவேன்

நான் அந்தப் 13 ஆல் பெருக்கும் போது சின்னப் புள்ள ராத்திரி எட்டு மணிக்குத் தூக்க கலக்கத்திலே தப்பு பண்ணிட்டேன்  போல ....

 தப்பைக் கரெக்ட் பண்ணி இந்த பாரு விடை அப்படின்னு லட்டு மாதிரிக் கையிலே கொடுக்கறதுதான் ஒரு பெரிய மனுஷங்களுக்கு அழகு.

அதை வுட்டுட்டு  எங்கே 13 ஆம் வாய்ப்பாடு சொல்லுன்னு   தேவையில்லாமல் ஆரம்பிக்க ...


நான் திரு திருன்னு முழிக்க
 செத்த நேரத்திலே வீட்டையே கலவர பூமியாக்கிட்டாங்க !


பட்டப் பகலில் 13 ஆம்   வாய்ப்பாடு சொல்லுன்னு பெரியவங்க கிட்டே கேட்டாலே ததிங்கினத்தோம் !

வெவரம் புரியாத பத்து வயசுப் பாப்பா கிட்டே அதுவும் ராத்திரி எட்டு மணிக்கு தூக்கக் கலக்கத்தில் கேட்பது தப்பு என்று எந்தக் கோர்ட்டும் தீர்ப்பு சொல்லும்.

 ஒரே கத்தல் எங்க அக்கா.

சின்னப் பொண்ணுன்னு ஒரே செல்லம் . 
என்னை மட்டும் எப்படிப் பாடப் படுத்தினீங்க  ஆய் ஊய் ன்னு  ஒவராக் கத்த...

 எங்க அப்பா என் படிப்புப் பக்கம் அவ்வளவா  வராம ஒதுங்கிக்கிற  டைப்பு.


ஆனா எங்க அப்பா பெரிய அக்காவைப்  படுத்தி எடுத்தது  எங்கள் உறவினரிடையே ரொம்பப் பிரசித்தம்.

சும்மா கிடந்த எங்க அப்பாவை உசுப்பி விட்டு அவர் என்னடான்னாக்க சின்னக்  குழந்தைன்னு கூடம் பாக்காம  ரெண்டாம் வாய்ப்பாடுலெருந்து சொல்லுன்னு  வறு  வறுன்னு  வறுக்க.. 


 அஞ்சாம்  வாய்ப்பாட்டு வரை தான் ரீல் ஓடுச்சு.

ஆறாம் வாய்ப்பாட்லேருந்து  ஊத்திகிச்சு.


முதல்ல வாய்ப்பாட்டை படி கணக்குக்கு  அப்பறம் போகலாம்ன்னு  எங்க அப்பா  ஒரு தீர்மானம் போட்டார்.

இந்த சத்தத்தில் எங்க அம்மாவும் சந்திலே பூந்து சிந்து பாடற மாதிரி சாயந்திரம்  ஸ்கூல் விட்டு வந்ததும் பையைத் தூக்கி வீசிட்டு விளையாடப் போ சொல்றேன் உன்னை நாளைலேருந்து கவனிச்சுக்கிறேன் ;
படிச்சு முடிச்சாதான் இனிமே வெளையாட்டெல்லாம் ன்னு  பயமுறுத்த ....
 (பையையும் தூக்கிட்டுப் போயா விளையாட முடியும் )

என்னடா நமக்கு வந்த சோதனைன்னு  நொந்துட்டேன்.

மணி  ஒம்போதாச்சு. ஆறாம் வாய்ப்பாடு மட்டும் ஒப்பேத்திட்டு மிச்சத்தை நாளைக்கு சொல்றேன்னு தப்பிச்சுட்டேன்.

அன்னைக்கு எங்க அக்கா முகத்திலே ஒரு வெற்றிக் களிப்பு  !

இலங்கையில் தோற்ற இராவணன் மாதிரி சோகம் தாளலை எனக்கு !

தூங்கிட்டு மறுநாள் எப்படியோ திட்டிகிட்டே எங்க அப்பா அந்தக் கணக்கைப் போட்டுக் குடுத்தாங்க 
காப்பி அடிச்சு ஹோம் ஒர்க் முடிச்சாச்சு  !


அந்த காலத்தில் சைல்ட் ஹெல்ப் லயன் கூடக் கிடையாது .


இப்படி ஒரு குருப்பாக் கடுப்பேத்தின அன்னைக்கு நான் போட்ட தீர்மானம் என்னன்னாக்க  என்ன ஆனாலும் சரி இதுங்க கிட்டே சந்தேகம் கேக்கவே கூடாதுன்னு ...

  நம்மளே  முட்டி மோதி படிச்சுக்கணும்.

சந்தேகத்தை கேட்டா சொல்லிக்குடுக்க தெரியாம வெட்டிக் கேள்வி கேட்டு நம்ம தூக்கத்தையும்  மனசையும் கெடுக்குதுங்க ....

அதிலேருந்து  படிப்பு  முடியறவரை யாரையுமே சந்தேகம் கேக்கவே மாட்டேன். நல்லாவும் படிச்சேன்.

இப்ப சொல்லுங்க  

கடுப்பேத்துவது  நல்லதுதானே !

3 comments:

  1. இதென்ன 13க்கு வந்த சோதனை... கடுப்பாகாமல் இருப்பது நல்லது தான்... ஹிஹி...

    ReplyDelete
  2. எனக்கு 13ஆம் வாய்ப்பாடெல்லாம் தெரியாது 😂😂

    ReplyDelete