Monday 7 August 2017

மறக்க முடியாத நினைவுகள்


வீட்டைச் சுத்தம் செய்து கொண்டு இருக்கிறேன்.

வீட்டில் ஏகத்துக்கும் சாமான்கள் சேர்ந்து விட்டது  .

“எங்கெங்கு நோக்கினும் சக்தியடா “என்று பாரதி மாதிரி பாட முடியாமல் “எங்கெங்கு நோக்கினும் சாமானடா”  என்று பாடுவது தவிர வேறு வழியில்லை என்கிற நிலைமை .

 இந்தக் காரணத்திலாலும்   " பிளாக் விரதம் " இருந்தேன்.
  
சரி வேண்டாதவைகளை   எல்லாம்   தூக்கிப்  போட்டுவிடலாம் என்று தீர்மானம்  பண்ணிக்   காரியத்தில்  இறங்கும்   போதுதான் தெரிகிறது அது   ஒன்றும்   அவ்வளவு   சாதாரணமான ஜுஜுபி   வேலை    அல்ல என்பது .

 கழிக்கும் எண்ணத்துடன் பழையனவற்றில் புகுந்தபோது  கிடைத்த ஒரு  பொக்கிஷம்  ....

.ஆம் ..பொக்கிஷம் தான் அது

என் அம்மா எம்பிராய்ட்டரி ,மற்றும் கை வேலைகளில்  ஆர்வத்துடன் செய்வார்கள் .
திருச்சி ஹோலி கிராஸ்பள்ளியில் மதர் ஃ சோபி  என்பவர்களை நான் சின்னக் குழந்தையாக இருந்தபோது அவரிடம் பிளெஸ்ஸிங்  வாங்க  என் அம்மா அழைத்துச்  சென்றபோது  அவ்வளவு  நாட்கள் கழித்துப் பார்த்தபோதும் எங்க அம்மாவின் எம்பிராய்ட்டரி   திறமை பற்றி  குழந்தையான  என்னிடம்  நினைவு கூர்ந்தார்கள். மதர் ஃ சோபி  அவர்கள். .

என் அம்மாவின் கைவேலைத்  திறமை அவ்வளவு பிரசித்தம்.


சரி  பொக்கிஷமா  என்ன அது என்கிறீர்களா?

இது நிச்சயம் 75  வருடத்துக்கு முந்தியது என்று அடித்துச் சொல்ல முடியும் என்னால்.

ஏனெனில்  என் தாய்  தந்தை திருமணம்   செய்து  கொண்டது  1942 ல் .

தன்  திருமணத்திற்கு முன்பு  இந்த எம்பிராய்ட்டரி  ஒர்க் செய்ததாக என் அம்மா  சொல்லி   இருக்கிறார்கள் .

அது  கூட  முக்கிய  விஷயமில்லை .

அதை  எந்த மாதிரி சூழ்நிலையில்  செய்தார்கள்  என்பது தான்  முக்கியம்.

 பெற்றோர்கள் இருந்தாலும் கிட்டத் தட்ட என் மாமா  குடும்பத்துடனேயே என்  தாயார் வசித்து  வந்தார்கள் .

தனது அண்ணியுடன் ஒற்றுமையாக இருந்து  அண்ணன்குழந்தைகள் எல்லோருடனும் பாசத்தோடு வாழ்ந்த ஒரு அத்தை .

ஒரு நாள் துணிகள்  வெளுப்பவர்  இவங்க வீட்டுத் துணிகளை எடுக்க வந்த போது வேறு எதோ ஒரு  வீட்டு மேசை விரிப்பு மிக அழகான எம்பிராய்ட்டரி டிசைன்  கொண்டதாக  இருந்திருக்கிறது .

அதைப் பார்த்து ஆசைப்பட்ட என் அம்மா அவரிடம்
” இதைக்  கொடுங்க .. நான்    இந்த எம்பிராய்ட்டரியை அப்படியே  போட்ட பிறகு  தரேன் “
என்று சொல்லியிருக்காங்க . 

அதுக்கு அவரோ
” அய்யய்யோ அந்த அம்மா சிங்கப்பூர்காரங்க . அதுக்கெல்லாம் ஒத்துக்க  மாட்டாங்க  “என்றிருக்கிறார் .

உடனே எங்க அம்மா " அப்பா ஒரு வாரம் கழிச்சு அந்த துணிய  மறந்துட்டேன்னு சொல்லிட்டு லேட்டாக  கொண்டு கொடுங்க  நான் ஒரு வாரம் கழிச்சுத் தரேன் என்று சொன்னால் அவர் அதற்கும் ஒத்துக்க கொள்ளவில்லை .

பிறகு எங்க அம்மா கெஞ்சிக் கூத்தாடி சரி நானே சுத்தமா தொவச்சுத்  தரேன் .

அவங்களுக்கு டெலிவரி பண்றதுக்கு முதல் நாள் எங்க வீட்டுக்கு வந்து வாங்கிக்கோங்க . அயர்ன் மட்டும்  நீங்க பண்ணிக்கோங்க , என்று பேசி ஒப்பந்தத்தில் ,  கையெழுத்து போடாத  குறை .



உடனே சடுதியில் ஒரு லாங்கிளாத்  துணி மற்றும்   கலர்  எம்பிராய்ட்டரி  நூல்  எல்லாம் என் மாமா  ( என் தாய் மீதும் எங்கள் மீதும் அளவிட முடியாத பாசம் வைத்திருந்தவர் . )வாங்கி வந்து கொடுத்திருக்கிறார் .

என் மாமியோ  இன்னும் ஒரு படி மேலே போய்  ஒரு வாரத்திற்கு என் அம்மாவை நீ எந்த வேலையும் செய்ய வேண்டாம் என்று சொன்னது மட்டுமில்லாமல் அத்தையிடம் பாசமுள்ள என் மாமா குழந்தைகளையும் என் அம்மாவைத்  தொந்திரவு செய்யக்கூடாது  என்று பயங்கரக் கட்டுப்பாடுகள் போட…..


      ஐந்தே நாட்களில் என் அம்மா நடுவில் உள்ள பூ டிஸைனையும்   ஒரே ஒரு ஓரத்தில் உள்ள  இழை எடுத்துச் செய்ய வேண்டிய   டிஸைனையும் ( மிகுந்த கவனமும் உழைப்பும் தேவை  அதற்கு ) செய்து விட்டார்கள் . இரவு பகல் முழுக்க இதே வேலையாக ………

பிறகு தனக்கு ஒன்றும் என் மாமிக்கு ஒன்றும் போட்டுக் கொடுத்ததாகச் சொன்னார்கள் . என் மாமியும் இப்போது இல்லை .

நாங்கள் டெல்லியில் இருந்த போது வேலை அவ்வளவாக இருக்காது எனவே பொழுது போகாமல் இது மாதிரி வேறே டிசைனில் சிறிய அளவில் ஒன்று போடுவதற்காக எடுத்து வந்தார்கள் . 

பிறகு அப்படியே  இது  என்னுடன் குடி வந்து விட்டது.
இல்லாவிடில் இந்த மேசை விரிப்பு.. என்னிடம் வந்திருக்காது .பல மாநிலங்கள் கடந்து தமிழகத்தில் சுமார் 20 வருடங்களாகச் சென்னையில் உள்ளது.



மேலே உள்ளது நூல் இழை எடுத்துச் செய்யவேண்டிய வேலை.

 நடுவில் உள்ள டிசைன் 

.

 பார்க்கும் பொழுதெல்லாம் என் தாயின்  கலையுணர்வு, விடாமுயற்சி ,எடுத்த காரியத்தை முடிக்கும் திண்ணம் எல்லாவற்றுக்கும் மேலே என் தாயையே பார்க்கும் ஒரு உணர்வு வரும்

 மறக்க    முடியாத   நினைவுகள்     சுமந்த    மேசை விரிப்பு..


17 comments:

  1. உண்மைதான் சில பொருள்களுக்கு பின்னே உயிரோட்டமான நினைவலைகள் இருக்கும் ஆனால் இன்றைய தலைமுறையினருக்கு இது புரியவில்லை எனது ஐயா போட்டிருந்த செருப்பு இன்னும் வைத்து இருக்கிறேன் (மரச்செருப்பு) எனக்குப்பிறகு அது குப்பைக்கு போய் விடலாம்.

    நான் என்றுமே பழைமையை மறப்பதில்லை நான் விபரமறிந்து சேர்த்த சில பொருள்களை இன்னும் வைத்து இருக்கிறேன்.

    உங்கள் தாயாரின் உழைப்பு, திறமை தெரிகிறது.

    கூட்டுக்குடும்பத்தில் இருக்கும் சந்தோஷங்களை, உதவிகளை இன்றைய தலைமுறைகள் உணர மறுக்கின்றார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கில்லர்ஜி....எல்லாக் கூட்டுக்குடும்பங்களும் மகிழ்வானவை அல்ல...ஆனால் அதையும் நாம் பாசிட்டிவாக எடுத்துக்க கொண்டால் நிறைய கற்கலாம்....நான் கற்றவை, பண்பட்டது அப்படி தான்....அதற்கு கொடுத்த விலை அதிகம்..

      கீதா

      Delete
    2. முடிந்தவரை பாதுகாத்து வாருங்கள்

      Delete
  2. போற்றுதலுக்கு உரியவர்

    ReplyDelete
  3. மறக்க முடியாத விஷயங்கள்.... பழையது, வேண்டாம் என நினைப்பதில் பல நினைவுகள் மூழ்கிக்கிடப்பதுண்டு.

    உங்கள் நினைவுகளை மீட்டெடுக்க உதவியது இந்த நாட்கள்....

    ReplyDelete
  4. என் நினைவுகளையும் மீட்டது அருணா. என் அம்மாவும் என் மாமாக்களுடன் தான் நாங்கள் ஒரே கூரையின் கீழ்....அம்மாவின் அம்மா இந்திரா காந்தி ஆட்சியின் கீழ் ராணுவக் கட்டுப்பாட்டில்..குறிப்பாக என் அம்மா அவர்களை சார்ந்திருந்ததால்...எங்களால் எதுவும் செய்ய முடியாது. என் அம்மா இறந்த பின் ஒரு டைரி கிடைத்திட அப்போதான் தெரிஞ்சது என் அம்மா சூப்பராக கார்ட்டூன் வரைவங்கன்னு.....அதுவும் அரசியல் தலைவர்கள் கார்ட்டூன்....கிண்டலாக .நடிகர்கள் கார்ட்டூன்....ரொம்ப. வருத்தம்....இருக்கும் போது அவங்க திறமை தெரியாம போச்சுன்னு.....

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நெகிழ்ச்சியாக இருந்தாலும்நிஜமாகவே வருத்தமாகத் தான் இருக்கிறது . அட்லீஸ்ட் இறந்த பின்னாவது நமக்குத் தெரிந்ததே அது வரை சந்தோஷம்.

      Delete
  5. உமா உங்க அம்மாவின் கைவண்ணம் அருமை....பொறுமையும் தெரிகிறது...
    கீதா

    ReplyDelete
  6. இன்னொன்னு என்னன்னா வேண்டாம்னு க்ளீன் பண்ண னினைச்சு மீண்டும் சென்டி காரணமாகச் சேர்த்தவையும் அதிகம் ஹஹஹ்

    கீதா

    ReplyDelete
  7. என்ன ஒரு பொக்கிஷம். அவ்வளவு பழமையான ஒரு விஷயம் இன்னும் கையில் இருப்பதே பாக்கியம்தான்.

    ReplyDelete
  8. மறக்க முடியாத நினைவலைகளைக் கொண்ட அம்மாவின் பொக்கிஷம். பத்திரமாகவே இருக்கட்டும்.

    ReplyDelete
  9. வருகைக்கு நன்றி

    ReplyDelete
  10. அவருக்கு வாழ்த்துகள். இதுபோன்ற கலைகள் கற்றுக்கொள்வது நேரம் நல்ல நேரத்தைப் போக்கவும், நம் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும் உதவும். இப்போதுள்ள இளம் தலைமுறையினர் இதுபோன்றவற்றில் ஆர்வம் காட்டுவதில்லை.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி

    ReplyDelete