Wednesday, 4 August 2021

எலி விஜயம்

 

ஒரு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு  ஒரு பூனை எங்கள் வீட்டுக்கு வந்ததைப் பற்றி எழுதியிருந்தேன் .

அந்தப் பூனை எலியை பார்த்து "என்னய பத்தி பிளாக் எல்லாம் இவங்க எழுதியிருக்காங்க ?அவங்க ரொம்ப ;நல்லவங்க  தெரியுமா "அப்படி என்று பீத்திக் கொண்ட தா  எலியிடம்  என்று தெரியவில்லை அதன் விளைவாகவோ என்னவோ  எலி எங்க வீட்டைத் தேர்ந்து எடுத்து  வந்தது .

எங்கள் வீட்டுக்குக் கீழே ஒரு சூப்பர் மார்க்கெட் இருந்தது அந்த சூப்பர் மார்க்கெட் இருந்தவரை எலிகள் எல்லாம் அங்கேயே சௌகரியமாக இருந்தன  .   ஒரு நல்ல அரசாங்கம் போல அவர்களுக்கு உணவு தங்குமிடம் எல்லாமே இலவசமாக கிடைத்தது.

 இதனால்  மேலே எங்கள் வீட்டுக்கு எல்லாம் வருவதில்லை 

பிறகு இந்த வருடம்  பிப்ரவரி மாதம் அந்த சூப்பர் மார்க்கெட் எதிர்த்தா  மாதிரி உள்ள பில்டிங் கிற்கு   ஜாகை மாற்றிப்   போய்விட்டார்கள்  .சாமான்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போகும் போது இந்த எலிகளை எல்லாம் இங்கே விட்டுவிட்டு போய் விட்டார்கள் போல

எலியாக இருந்தாலும் சரி சோறு முக்கியம் இல்லையா

.எதிர்த்தாப்பல இருக்கும் ரெஸ்டாரண்ட்காரன் ஸ்விக்கி ஜூமாட்டோ மூலம் எலிகளுக்கு  பார்சல் சர்வீஸ் கிடையாது என்று ரூல் வைத்திருக்கிறார்களா என்ன என்று தெரியவில்லை எலிகள் எல்லாம் இரைதேடி எங்கள்  வீடு பக்கத்து அபார்ட்மெண்ட வீடு இதற்கெல்லாம் போக ஆரம்பித்து விட்டன

  

எலி எங்கள் வீட்டிற்கு வருவதற்கு முன்பு மேலே ஒரு மாமி வீட்டிற்கு வந்ததுஅந்த மாமி அந்த எலியை  விரட்டுவதற்காக ஒரு பெரிய டீமையே தயார் பண்ணி வைத்திருந்தார்கள் .எங்கள் வீட்டு வாட்ச்மேன் பக்கத்து வீட்டு வாட்ச்மேன் அப்பார்ட்மெண்ட் கூட்டும் பெண்மணி இவர்கள் எல்லாரும் அதில் மெம்பர் 

புதிதாக இவர்கள் ஒரு எலிப்பொறி வாங்கி எலிக்கோசரம்  மெனக்கெட்டு மசால் வடை எல்லாம்  பண்ணியதாக சொன்னார்கள் .அது சுமார் ஒரு வாரம் இருந்திருக்கும் போலிருக்கிறது அவர்கள் வீட்டில். எலி தினம்  என்ன  செய்கிறது எப்படிச்செய்கிறது என்று என்னிடம் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

 கிட்டத்தட்ட அந்த மாமி எல்லா கதவையும் அடைத்து விட்டு எப்படியாவது அந்த எலியை பிடித்து விடவேண்டும் என்று வீம்பாக இருந்தார்கள் ..இந்திய தரைப்படை கப்பல் படை விமானப்படை இவர்களைக் கூப்பிடாத குறைதான் .

இப்பொழுது  அந்த மாமி வேறு வெளியூர் போய் விட்டார்கள் .அதனால்தானோ என்னவோ தெரியவில்லை எலி எங்கள் வீட்டைத் தேர்வு செய்தது.    எனக்கு எலி வந்தது எப்படி தெரியும் என்றால் என் வீட்டில் டைனிங் டேபிள் மேல் வைத்திருந்த வாழைப்பழம் பாதி சாப்பிட்டு தோல்  எல்லாம் கன்னாபின்னா என்று போட்டிருந்தது.

நான் அந்த வாழைப்பழத்தை தூக்கிப் போட்டுவிட்டு அடுத்த நாள் ஒரு சின்ன பீஸ் வாழைப்பழத்தை கட் பண்ணி டேபிள் மேல் வைத்தேன் .

அடுத்த நாளும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு முதல் நாள் மாதிரியே குப்பை போட்டு விட்டு போய்வட்டது .சரி என்று அடுத்த நாள் நான் கிச்சனில் பழம் வைத்து இருந்தேன் ஆனால் கிச்சனில் பழத்தைச் சாப்பிடவில்லை .

ரொம்ப ஒரு வெஸ்டர்ன் டைப் எலி போல .

டைனிங் டேபிள் மேல் இருந்தால் தான் சாப்பிடும் போலிருக்கிறது என்று நினைத்துக்   கொண்டேன்   வீட்டில் எங்குமே காணவில்லை 

ஆனால் வீட்டில் பகலில் எல்லா கதவையும் திறந்து வைத்து விடுவேன் ஏனெனில் அதுவும் மற்ற நான்கு வீடுகளில் போய் விதவிதமான சாப்பாடு சாப்பிட வேண்டும் அல்லவா? இரவில் மட்டும் கதவுகளை நன்றாக  மூடிவிடுவேன்  ஒரு நான்கு நாள் இருந்தால் கூட அந்த எலி எங்கள் வீட்டில் ரொம்பவே டிசிப்ளினாகத் தான் இருந்திருக்கிறது என்றே சொல்லவேண்டும்  

மேலும் நான்   கவனித்த  முக்கிய விஷயம் என்னவென்றால் 

அது  பால்கனியில் வைத்திருந்த இங்கிலீஷ் பேப்பரை மட்டுமே கொஞ்சம் கடித்து இருந்தது மற்ற தமிழ் புத்தகங்கள் மற்றும் ஜப்பானிய புத்தகங்கள் நோட்டுகள் எதையுமே தொடவில்லை 

இதைப்பற்றி என் பிரண்ட் ஒருவரிடம் விஷயம் எல்லாம் சொன்னேன் ஒரு வழியாக எலியை எந்தவிதமான ஆக்ஷனும் நான் எடுக்காமலேயே போய்விட்டது என்றேன் பெருமையுடன்.

நீங்க வேற போய் நல்லா பாருங்க  "திரும்ப  வருவேன் "அப்படின்னு  எங்கேயாவது எழுதி  வைத்திருக்கும்   அப்படீன்னாங்க .

எலிக்கு ஞாபக சக்தி ரொம்பவாம். ஒருக்கா ஒருத்தர் வீட்டுக்கு வந்திட்டா அந்த அட்ரஸ் அதனுடைய மெமரியில் பெர்மனெண்ட் ரெகார்ட்டாக ஆகிவிடும் என்று விஞ்ஞான பூர்வாமாக விளக்கினார்கள்

 கூடப்பழகிறவங்களில் ஒரு சிலர் நமக்கு நல்லது நடந்தால் பிடிக்காதவர்கள் ஆக இருப்பார்கள் அல்லவா அதில் இவர்களும் ஒருவர் போல் இருக்கிறது   என்று நினைத்துக்கொண்டேன்  .

ஆஹா  உனக்கு இப்படி ஒரு நல்ல மனசா அப்படீன்னு      நினைச்சு விட்டுட்டேன்

இதுவரை எலி  இன்னும் திரும்ப வரவில்லை .

எங்கள் வீட்டுக்கு கீழே இருந்த சூப்பர் மார்க்கெட் காலி பண்ணிய பிறகு ஒரு பேக்கரி வந்திருக்கிறது எனவே அந்த பேக்கரிக்கு இந்த எலி போய்விட்டது என்று நினைக்கிறேன்

கிட்டத்தட்ட ஒரு நான்கு நாட்கள் இந்த எலி  அதன் பிஹேவியர் செயல்முறை உணவுப் பழக்க வழக்கம் அதன் மூளைத்திறன் எல்லாவற்றையும் ஒரு பிஎச்டி பண்ணும் அளவிற்கு யோசித்தேன்  . 


ஆய்வின் முடிவில் நான் கண்டு கொண்ட உண்மை என்னவென்றால்

 சூப்பர் மார்க்கெட் மற்றும் பேக்கரிகளில் வளரும் /வளர்க்கப்பட்ட எலிகள் டைனிங் டேபிலில் உள்ளவற்றை மட்டுமே சாப்பிடும் .

அவைகளுக்கு இங்கிலீஷ் மட்டும்தான்  புரியும்.

தமிழ் ஜப்பனீஸ் எல்லாம் புரியாது 


Wednesday, 28 July 2021

Bonzaai ஸ்நாக்ஸ்

 

பச்சை காய்கறிகள் சாப்பிடுகிறேன் என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள். ஜப்பானில் மீனை பச்சையாக சமைக்காமல் சாப்பிடுவார்கள் .அதனால் அவர்கள் சருமம் பள  பள என்று இருக்கும்

ஆனால் எனக்கோ கறிகாய் பச்சையாகச்  சாப்பிடுவதில் அவ்வளவு இஷ்டம் கிடையாது .அதனால் எனக்கு தெரிந்த வழியில் நானும் கெத்து காட்டவேண்டும் என்று நினைத்தேன்.சரி .

 நம்மளும் புதுமாதிரியாக ஏதாவது செய்து சாப்பிட வேண்டும் என்று யோசித்ததன் விளைவுதான் இந்த சுவையான ஸ்நாக் .

 இது ரொம்பவே ஈஸியான ஒரு சிற்றுண்டி.

தேவையான பொருட்கள்:

 கடலை பருப்பு 100 கிராம்

 சிகப்பு  மிளகாய் தேவைக்கேற்ப

 உப்பு   சிறிதளவு

பெருங்காயம்

சிறிதளவு இஞ்சி

 இவை மட்டுமே

 வேறு ஏதாவது சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் அது உங்கள் இஷ்டம்.

 செய்முறை :

 கடலைப்பருப்பு உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது நான் ஒரு ஆளுக்கான  அளவாக ஒரு 100 கிராம் கடலைப்பருப்பு எடுத்து ஊற வைத்தேன்.





 பிறகு இரண்டு மணி நேரம் ஆன பிறகு காய்ந்த மிளகாய் ஒன்று கொஞ்சம் உப்பு பெருங்காயம் இஞ்சி இவற்றைச்  சேர்த்து தண்ணீர் கொஞ்சம் கூட இல்லாமல் அரைக்க வேண்டும் .

அரைத்த பின் அந்தக்  கலவையை சிறிய டம்ளர்களில் இதுபோன்று கொஞ்சம் எண்ணெய் தடவி ஊற்றி வைக்கவும்.


ஊற்றி நீராவியில் வேக வைக்கவும் .வெந்த பிறகு சிறிது நேரம் ஆறவிடவும். பிறகு ஒரு ட்டில் கொட்டிக் கவிழ்த்தால்  இதுபோன்று தொட்டி வடிவில் உங்களுக்கு ஒரு ஸ்நாக் கிடைக்கும் .பிறகு அதில் நடுவே டூத் பிக் கொண்டு சிறிய துவாரம் செய்யவும் .

அந்த துவாரத்தில் கொத்தமல்லி தழை எடுத்து செருகி வைக்கவும் ரெடியாகிவிட்டது. நமது   Bonzaai     ஸ்நாக்ஸ்.





எப்படி இருக்கிறது எனது ஐடியா

 

Wednesday, 7 July 2021

தனபாட்டா நாள் July 7 th

 தனபாட்டா  நாள்

 ஜப்பானில்  இன்று   பல மக்கள் மூங்கில் மரத்தில்  தங்கள் விருப்பங்களை    காகிதத் துண்டு களில் தொங்கவிடுகிறார்கள்

.இந்த “நட்சத்திர விழா”  ( Star Festival )ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா? ஜப்பானிய மக்கள் ஏன் வண்ணமயமான காகிதத் துண்டுகளில் தங்கள் விருப்பங்களை எழுதுகிறார்கள்? 

தனபாட்டாவின்    கதை படியுங்கள் புரியும் .  

தனபாடாவின் கதையின் வரும் முக்கிய கதாபாத்திரம் இளவரசி ஓரிஹைம். அவளது காதலன் ஹிகோபோஷி,.

பால் வெளி (Milky way) என்று அழைக்கப்படும் தெய்வீக நதியில்  துணிகளைத் தயாரிக்கும் அழகிய நெசவாளிப் பெண் ஓரிஹைம் .

எப்பப் பாரு துணிகள் நெய்வதிலேயே அவள் ஈடுபட்டதால் அவளுக்குள் ஒரு சொல்ல முடியாத சோகம் .இப்படியே போய்கிட்டு இருந்தால் ..... ?

யாராவது நாம மேலே அன்பாக இருக்கமாட்டாங்களான்னு ஏங்கிகிட்டு இருந்தாள். 

அவங்க அப்பாதான் சொர்க்கத்தின் கடவுள் .

ரொம்ப வெயிட்டான பார்ட்டிதான் ஆனாலும் கஷ்டப்படணும்ன்னு எழுதியிருக்கு போல . 

பால்வெளிக்கு(Milky way)அந்தண்டைப்பக்கம்  ஒரு நல்ல சின்ன வயசுப் பையனைஅவருக்குத் தெரியும்..அவன் பேருதான்  ஹிகோபோஷி, அவன்  மாடு ஒட்டிக்கிட்டு இருக்கிறவன் .

நான் ஒண்ணு நோட் பண்ணியிருக்கேன்  

 பழைய காலக் கதைகளில் எல்லாம் மாடு  ஓட்டறவங்களுக்கு நல்ல இடத்துலே  அழகான பொண்ணு கிடைச்சு இருக்கு . 

முதல் பார்வையிலேயே  லவ்வு கிளிக் ஆயிடுச்சு .

லவ்  பண்ணிகிட்டே இருந்தாங்க . லவ்வுன்னா லவ்வு அப்படி ஒரு லவ்வு

இந்தப் பொண்ணு துணி நெய்வதையே நிறுத்திடுச்சு  அவன் மாடு ஓட்டறதை நிறுத்திட்டான் . 

மாடெல்லாம் வானத்தில், அதும் பாட்டுக்கு இஷ்டத்துக்கு சுத்தி கிட்டு இருந்துச்சாம் 

உடனே கடவுள் ரொம்ப  கோபம் ஆகிட்டு, இரண்டு காதலர்களும் ஒன்றாக  இருக்கறதுக்கு “தடா” ன்னு சொல்லிட்டாராம்   

பொண்ணு சொல்லிச்சாம் “நானில்லாமல் அவனில்லை அவனில்லாமல் நானில்லை ல லா லல்லா லா “ன்னு 

என்ன இருந்தாலும் அவர் ஓரிஹைமின்  அப்பா இல்லையா ? 

 பொண்ணு மேலயும் பாசம் ஜாஸ்தி . பொண்ணு கண் கலங்கினால் அவருக்குத் தாங்குமா  ?  சரின்னு  ஒரு கண்டிஷன்  போட்டார் .

அதாவது  ஓரிஹைம் தனது நெசவுக்குத்  திரும்பினால் அவர்கள் வருடத்திற்கு ஒரு முறை சந்திக்கலாம் அப்படீன்னு .

ஓவராத்தான் இருக்கு இல்ல ?

அந்த வருஷத்துக்கு ஒரு நாள் என்பது ஜூலை  மாதம் ஏழாம் நாள் . அதாவது சுலபமாக ஞாபகம் வச்சிக்கிற  மாதிரி சொல்லியிருக்கிறார் .

சரின்னு ரெண்டும் ஒத்துக்கிச்சுங்களாம் .

 அப்பா கொஞ்சம் வில்லங்கம் புடிச்ச அப்பா போலெ .

கட்டக் கடைசியா அந்த நாள்  அதாவது , நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நாள் வந்தது, 




ஆனால் பால் வெளியைக் (Milky way)  கடப்பது என்பது அவர்கள்  ரெண்டு பேருக்குமே ரொம்பக் கஷ்டமாக இருந்துச்சாம்   . அப்ப அங்கே இருந்த   magpai  பறவைக் கூட்டம் ஓரிஹைமின் சோகத்தைக் கண்டு ஐயோ பாவம்ன்னு இரக்கப் பட்டு நம்ப குரங்கு அணிலெல்லாம் ராமருக்குப் பாலம் கட்டிக் கொடுத்த மாதிரி  பாலம் கட்டிக்கொடுத்திடுச்சுங்களாம் .

அதனால்  அவங்க ரெண்டு பேரும் மறுபடியும்  ஒண்ணா வருஷத்தில் ஒரு தடவை சந்திச்சுக்கிட்டு இருக்காங்களாம் 

தனபாட்டா நாளில் மழை பெய்யும்போது, பறவைக் கூட்டம் வராது என்றும், அப்படி மழை பெய்தால் காதலர்கள் இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்றும்  கூறுகிறார்கள்.

தனபாட்டா நாளில் மழை பெய்தால்  இந்த  மழையை "ஓரிஹைம் மற்றும் ஹிகோபொஷியின் கண்ணீர்" என்று சொல்கிறார்கள்

அது சரி  தனபாட்டா விருப்பத்தை எப்படி implement செய்வது?

ஒரு அட்டையை உருவாக்கி உங்கள் விருப்பத்தை எழுதுங்கள்

உங்களுக்குத் தேவை. வண்ணக் காகிதம் (ஓரிகமி காகிதம் அல்லது வண்ணக்காகிதம்) 

உங்கள் அட்டையை உருவாக்க காகிதத்தை கார்டு வடிவில்  வெட்டுங்கள். 

நூல் காட்டித் தொங்க விட ஒரு துளை செய்யுங்கள் ..

உங்கள் விருப்பத்தை எழுதுங்கள். 

நூலை  இணைக்கவும். .

இது எல்லா வயதினரும்செய்யலாம் 

 ஒரு விருப்பத்தை நினைத்து , வண்ணமயமான காகிதங்களில் (டான்சாகு) எழுதி, அவற்றை ஒரு மூங்கில் மரத்தில் கட்டுங்கள்.



 இந்த மரம் ஒரு  கோயில் சன்னதியில் இருக்கலாம் அல்லது 

உங்கள்  தோட்டத்தில் உள்ள மரத்தில் கூடக் கட்டி வைக்கலாம்  .

உங்கள் எல்லோருக்கும் தனபாட்டா  நாளின் வாழ்த்துக்கள் 

உங்கள் ஆசைகள் நிறைவேறினால் எல்லாப்  பெருமையும் தனபாட்டா விற்கே

Sunday, 4 July 2021

காலை எழுந்தவுடன் வாத்து பட்டாம்பூச்சி முயல்

 மார்க் ட்வைன் ஒருமுறை கூறினார்  “ஒரு தவளை சாப்பிடுவது உங்கள் வேலை என்றால், காலையில் அதை முதலில் செய்வது நல்லது. இரண்டு தவளைகளைச்  சாப்பிடுவது உங்கள் வேலை என்றால், முதலில் மிகப்பெரியதை சாப்பிடுவது நல்லது. ” என்று 

... தவளையை சாப்பிடுவது என்பது  நமது வேலையைச் செய்வதாகும், இல்லையெனில் தவளை உங்களைச் சாப்பிட்டுவிடும் , அதாவது நீங்கள் நாள் முழுவதும் அதை ஒத்திவைப்பீர்கள்.

காலை எழுந்தவுடன் தவளையைச்   சாப்பிடுங்கள்  என்று சுயமுன்னேற்ற எழுத்தாளர் பிரையன் டிரேசி என்பவர் எழுதிய புத்தகம் மிகவும் பிரபலமான ஒன்று 

அதில் அவர் தவளை என்று குறிப்பிடுவது நாம் அன்றாடம் குளம் குட்டைகளில் காணும்  தவளை அல்ல  தவளை என்று   ஒரு சிம்பாலிக்காக சொல்லியிருக்கிறார் .அவ்வளவுதான் 

மார்க் ட்வைன்  சொன்னது போல  இவரும் தவளை என்று சொல்லுவது நாம் செய்ய வேண்டிய வேலைகளை .

காலை எழுந்தவுடன் நாம் அன்று செய்ய வேண்டிய வேலைகள் எதுவோ அதை முதலில் கட்டாயம் முடித்துவிட வேண்டும்   எப்படி என்றால் காலை எழுந்தவுடன் நாம் காலை உணவு உண்பது போல அதிலும் அவர் சொல்லுவது முதலில் பெரிய தவளையை சாப்பிடவேண்டும் என்கிறார்

 மிகக் கடினமான செய்யப் பிடிக்காத வேலைகளை முதலில்      செய்து விடவேண்டும் என்று சொல்கிறார்.

பிரையன் ட்ரேசியின் கூற்றுப்படி, “தவளைகளை உண்ணுதல்” என்பது தள்ளிப்போடுதலைக் கடப்பதற்கான ஒரு வேடிக்கையான வழியாகும்.

வேலைகளைத்  தள்ளிப் போடுவதை  நிறுத்துவதற்கும், குறைந்த நேரத்தில் அதிக வேலைகளைச் செய்வதற்கும் 21 சிறந்த வழிகள்  என்ன என்பதை பற்றின புத்தகம்

இந்த புத்தகமானது நிறைய பிரதிகள் விற்பனையாகி இந்தப் புத்தகத்தால் நிறைய பேர் தங்களது லட்சியத்தை அடைந்திருக்கிறார்கள் .

எனக்கும் இதுபோன்ற சுய முன்னேற்ற நூல்கள் பலவற்றை படித்துப்   படித்து சில விஷயங்கள் மட்டுமே என்னால் பின்பற்ற முடிகிறது.

இந்த புத்தகத்தில் கூறியபடி என்னால்  தவளை எதையும் தேடி அலைய முடியவில்லை ஏனென்றால் நாம் நிறைய ஏரி  குளங்கள் எல்லாவற்றையுமே அழித்து விட்டு அதில் வீடுகளை கட்டி விட்டோம்

அப்படிப்பட்ட நாம் குளம் குட்டை மட்டும் சும்மாவா விட்டு வைப்போம் .

எனவே எனக்கு தவளை எங்கு தேடியும்  கிடைக்கவில்லை 

இருப்பினும் மனம் தளராமல் தவளைக்கு பதிலாக வேறு ஏதாவது ஒன்றை சாப்பிட்டு நாமும் நம் லட்சியத்தை அடைய வேண்டும் என்று ஒரு ஆசை எனவே தவளைக்கு பதிலாக நான் வாத்து முயல் மற்றும் பட்டாம்பூச்சி இவைகளை சாப்பிடுவதற்காக இட்லியில் அதாவது இட்லி மாவில் நான் வாத்து தவளை முயல் பட்டாம்பூச்சி இவைகளை செய்து நான் சாப்பிட்டு சில லட்சியங்களை   அடைந்திருக்கிறேன் 😀

நான் சாப்பிட்ட வாத்து  முயல்  பட்டாம்பூச்சி எல்லாம் என் தட்டில் இருக்கிறது  நீங்களும் என்னைப் பின்பற்றி இதுபோல செய்தால்  உங்கள் வாழ்க்கையின் லட்சியத்தை நிச்சயமாக அடைய முடியும்.

பிரையன் ட்ரேசி சொன்னது இது .




 நான் செய்தது இது .




Friday, 18 June 2021

இட்லி க்கு சாம்பார் பகையானால்

 


 இட்லி  என்றாலே வட இந்தியர்கள் சாம்பாரோடு சேர்ந்த ஒரு செமி திரவ உணவு வகையாகத்தான் பார்ப்பார்கள் . வெள்ளந்தியாகச் சொல்வதென்றால் ரெண்டையும் ஒண்ணா  ராவா மிக்ஸ் அடிச்சுச் சாப்பிடற ஒரு உணவு . என்பதே அவர்களின் திண்ணமான எண்ணமாக இருந்தது ஒரு 40 வருடம் முன்பு 

டெல்லியில் இருக்கும்போது தென்னிந்தியர்கள். லஞ்சுக்கு மிளகாய்ப்  பொடியோ அல்லது சட்னியோ தொட்டுக்கொள்ள எடுத்துக் கொண்டு போனால் என்னவோ செய்யக்க கூடாத ஒன்றை நாங்கள் செய்து விட்ட மாதிரி சொல்லப் போனால் ஜோடி மாற்றி விட்ட குற்றம் புரிந்த மாதிரித் தான் வட இந்தியர் கள் பார்ப்பார்கள் .


ஒரு  நாள் மதியம் லஞ்சுக்கு இட்லி பொடி எடுத்துக் கொண்டு போய் இருந்தேன் .அது பொல பொல எனப் பொடியாக எண்ணெய் எதுவும் விடாமல் சாப்பிடும் ஒரு புது மாதிரியான பொடி . கூட அமர்ந்து சாப்பிட்ட வட இந்திய ஆபீஸ் மக்கள் இது என்ன இப்படி இருக்கு ? என்றனர் .

இது "மோர் மிளாகாப் பொடி" என்றதும் அவர்களால் இதை ஓத்துக்கொள்ளவே முடியவில்லை .

கூட இருந்த தென்னிந்தியர் ஒருவர் சாப்பிட்டு ஆஹா சூப்பர்  டேஸ்ட்டு அற்புதம் என்கிறார் .  என்னென்ன வைத்து செய்தீர்கள் என்றார்.

சொன்னதும்  Ingredients ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாமல் இருக்கு என்று  வட இந்தியர்கள் பொடியைப் புறந்தள்ளிவிட்டார் கள்.

என் பிரகாரம்   இது இட்லி ஃ பிரண்டலி காம்பினேஷன்

எனக்கு சப்போர்ட்டாக தென்னிந்திய   சக ஊழியர் ஒருவர் தமிழனின் அற்புதக் கண்டுபிடிப்பே இந்த இட்லி யும் அதை அரைக்க அவன் கண்டுபிடித்த கிரைண்டரும் தான் . 

அவற்றைக் கண்டு பிடித்த அதே தமிழன் கண்டு பிடித்த delicious  மோர் மிளகாய்ப்பொடியை நீ குறை சொல்வதா? பொங்கி விட்டார் என் சப்போர்ட்டர்.

வட இந்தியர்களோ  பொடிக்கு உபயோகித்த பொருட்கள்  காம்பினேஷன் சரியில்லை என்றனர்  .

உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்த எனது கட்சிக்காரர் நீ” என்ன சாமான்களை வறுத்துக் கொடுத்தாயா அரைத்து கொடுத்தாயா  அவங்க செஞ்ச புரோஸிஜரை நீ பார்த்தாயா     இல்ல சாப்பிட்டுத்தான் பார்த்தாயா  ?

எதுவுமே செய்யாமல் குறை கூறுவதா” ரேஞ்சில்   குமுறிவிட்டார்

இதுவும்  இட்லிக்கு ஏத்த  காம்பினேஷன்  தான் என்று சொன்னாலும்  “பத்தாம் வாய்ப்பாட்டில் கடைசி நம்பர் சைபரில் தான் முடியணும்   இட்லி என்றால் சாம்பாரில் தான் முடியணும்  என்று அடித்து ஆணித்தரமாக வாதிட்ட வட இந்தியர்கள் எதிர்க் கட்சி .

இட்லியை சாம்பாருடன் சேர்த்து.  என்கிற பல்லவியையே  திரும்பத் திரும்ப   கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி வட இந்தியர் கள்  குரூப் சொல்ல

அதாவது  இட்லிக்கு சாம்பார் தவிர  மற்ற கொத்சு பொடி சட்னி எல்லாமே பகை வீடு என்கிற அசைக்க முடியாத நம்பிக்கை   கொண்டமாதிரி   பேசினார்கள்

சாப்பாட்டை விட எங்க ரெண்டு குரூப்போட  காச்சு மூச்சே கார சாரமாக இருந்தது

வாக்கு வாதம் நீடித்தும் அவர்களை கன்வின்ஸ் பண்ணவே முடியவில்லை .

நாங்க சட்னி  பொடிக்கெல்லாம்  சப்போர்ட் பண்றதப் பாத்துட்டு எங்களை எல்லாம் Enemies of Sambar  என்று செல்லப் பேர் வேறு வைத்து விட்டார்கள் 

போகட்டும்   கழுதைக்குத் தெரியுமா என்கிற பழமொழியை நினைவு படுத்திக் கொண்டு அன்றைய லஞ்சை முடித்தோம்

இப்பொழுது எல்லாம் பல இடங்களுக்கும் அவர்கள் குரூப் டூரில்  மற்றும்  கம்பெனி L. T  C யில் தென்னிந்தியா வந்து போனதால்  கொஞ்சம் மாறிவிட்டார்கள் . இதை நான் திரும்பவும் 1998ல் என் கணவரின் டெல்லி ட்ரான்ஸ்பரால் ஒரு மாதம்  குழந்தைகளுடன்  கோடை விடுமுறை க்கு அங்கே தங்கி இருந்த போது அவர்களின் உணவுப் பழக்கங்களில்  Taste களில் பெரிய  மாற்றம் இருப்பதை உணர்ந்தேன்

லஞ்சு பட்டி மன்றத்தில் கார சாரமாக விவாதிக்கப் பட்ட  அந்த இட்லி  பொடி இதுதான் .

தேவையான பொருட்கள் :

தேங்காய்  துருவல்  1 டேபிள் ஸ்பூன்

பொட்டுக்கடலை    3  டேபிள் ஸ்பூன்

அல்லது

வேர்க்கடலை  3  டேபிள் ஸ்பூன்

பூண்டு   10 -15 பற்கள்

மோர் மிளகாய்  காரத்திற்கேற்ப

வெள்ளை எள்ளு              2   டேபிள் ஸ்பூன்

பெருங்காயம்  ஒரு  ஸ்பூன் 


மோர் மிளகாயில்  உப்பு இருப்பதால் உப்பு சேர்க்க வேண்டாம் . தேவைப்பட்டால் மட்டுமே சேர்க்கவும்

இவை எல்லாவற்றையும் தனித்தனியாகக்   கீழே உள்ளபடி  எண்ணெய் விடாமல் சிவக்க ஆனால் தீய்ந்து விடாமல் வறுக்க வேண்டும் .


பிறகு ஆறிய பின் மிக்சியில் இட்டு அரைக்க வேண்டும் .



இதன் ஸ்பெஷல் என்னவென்றால் இதற்கு  நல்லெண்ணெய் போன்ற மிக்சிங் எண்ணெய் தேவை இல்லை .

அப்படியே சாப்பிட்டால் தான் இந்தப் பொடியின் காரம் மணம் குணம் எல்லாவற்றையும் ருசிக்க முடியும்  . .

இந்த சட்னியின் இன்னொரு ஸ்பெஷல் பாயிண்ட் என்னவென்றால் இதிலே தண்ணீர் விட்டு  கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டினால்  சட்னியாக உருமாறிவிடும் ,

சாதத்தில் போட்டுப் பிசைந்தும் சாப்பிடலாம் .ஒரு வாரம் பத்து நாள் வரை இருக்கும். கெடாது

இப்ப சொல்லுங்க இட்லிக்கு சாம்பார் பகையானால்  அதை சாப்பிட வேறே வழி உண்டல்லவா

Thursday, 10 June 2021

தேனீக் கத்திரிக்காய்

 


 பேர் பார்த்தால் எதோ அசைவ உணவு மாதிரி தெரிகிறதே, தேனீ எல்லாம் பிடித்துக் கொண்டு வரணும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம் , பார்ப்பதற்கு தேனீ மாதிரி இருக்கும் அவ்வளவே . இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் நாம் கத்திரிக்காய் பொறுக்கும் போது இது மாதிரியான  கத்திரிக்காய்களாகப் பொறுக்கவேண்டும் . 



நறுக்கும் போதும் கொஞ்சம் கவனத்துடன் பிளந்த மாதிரியாகக் கட் பண்ணனும் .

சரி இப்போது எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.

முதலில் மசாலா நமக்குப் பிடித்த மாதிரி எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் . தக்காளி போடாமல் பிரவுன் கலரிலும் போடலாம்.

எனக்குத் தக்காளி போட்டால் பிடிக்கும் என்பதால் வெங்காயம் தக்காளி பூண்டு இஞ்சி  இவை நான்கையும் நன்றாக  கட் பண்ணி அதை மிக்சியில் அரைத்து   வாணலியில் எண்ணெய் விட்டு  ஒரு அரை மணி நேரம் ஓரங்களில் எண்ணெய் கக்கும் வரை வதக்கி வைத்துக்கொள்ளுவேன் . இது சுமார் ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்து தேவைப் பட்ட போது உபயோகித்துக் கொள்வேன் .

அதைத் தவிர கலர் காம்பினேஷன் நன்றாக எடுப்பாக இருக்கும் எனவே நான் இந்த மசாலாவைத் தேர்ந்தெடுத்தேன்..



கத்திரிக்காயை முழுவதும் நறுக்காமல் கீறிக்கொள்ளவேண்டும் . கீறிய இடங்களில் இந்த மசாலாவை   கீழே உள்ள படத்தில் காட்டிய படி நிரப்ப வேண்டும்

 நிரப்பும் போதும் ஓவராக லோடு பண்ணாமல் அதாவது கத்திரிக்காய் தெரியாதபடிக்கு எல்லாம் பூசி வைக்கப் படாதுஇந்த ஸ்டேஜில் பார்த்தாலே தேனீ மாதிரி இருக்கணும் .

 



பிறகு இதை வாணலியில் வைத்து வதக்கும் போதும் போட்டு பொங்கல் மாதிரி கிண்டிக் கொண்டு இருந்தால் தேனீ ஷேப் கிடைக்காது கெட்டியான கொத்சு மாதிரி இருக்கும் . அதாவது  தேனீ பறந்து விடும்.😊

நான் இந்த  மசாலா நிரப்பிய கத்திரிக்காயை ஒரு அகலமான பாத்திரத்தில் இட்டு. பானசானிக் குக்கரில்   மூடி போடாமல் வேக வைப்பேன். .

அவ்வளவாகத் திருப்பிப் போட மாட்டேன் . பிறகு கடைசியாக வாணலியில் லேசாக எண்ணெய் விட்டு மிக மிக லேசாக   ஒரு பிரட்டு பிரட்டி எடுத்தால் தேனீ க் கத்திரிக்காய் ரெடி.

 


Tuesday, 8 June 2021

உலகப் பெருங்கடல் தினம்

 

இன்று (ஜூன் 8) உலகெங்கிலும் உலகப் பெருங்கடல் தினமாக கொண்டாடப்படுகிறது, நம்  வாழ்க்கையில் பெருங்கடல்கள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை அறியும் விதமாக இது  அனுசரிக்கப் படுகிறது 

முக்கியமாகக்  கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களைப்   பாதுகாக்கவே இந்த  தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நிலையான பெருங்கடலுக்கான புதிய முயற்சி' என்பதே   இந்த வருடத்தின் தீம் .

 கடல் இல்லாவிடில் சரக்குப் போக்குவரத்து  இல்லை . ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் என்பது கடலில்தான் .  உலகில் பலர்  கடல் மற்றும் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் .   தெரிந்தோ தெரியாமலோ நாம் எல்லோருடைய வாழ்விலும் கடல்  எதோ ஒரு விதத்தில் சம்பந்தப் பட்டுள்ளது .

 சென்னையில் இருந்த வரை பீச்சுக்குப் போனேன் ,ஜாலியா தண்ணீரில் நின்றேன்  ,தேங்கா  மாங்கா  சுண்டல்  முறுக்கு சாப்பிட்டேன் . 

நடந்தோம் காத்து வாங்கினோம் . அவ்வளவே 

அதை பற்றி ரொம்பப் பெருமையாக வெல்லாம்   நினைத்ததில்லை .

 அதாவது  கடலைப் பார்ப்பது , கடல் தண்ணீரில் நிற்பது எல்லாம் ஒரு வரம் , இது எல்லாருக்கும் கிடைப்பதில்லை என்கிற ஒரு உண்மையை  நான் டெல்லியில் வேலை பார்த்த  போதுதான் அறிந்து கொண்டேன் .

 பொதுவாக மதிய உணவு வேளை நேரத்தில் பல மாநிலத்திலிருந்து வந்தவர்கள் எல்லோரும் ஒன்று கூடி உணவு உண்போம் . எல்லோருமே அவங்க அவங்க மாநிலம் பற்றி புகழ்ந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அடுத்த மாநிலத்தைப்  பற்றி கிண்டல் அடிப்போம் . எல்லாமே விளையாட்டுக்காக  மட்டுமே 

 இதில் ஒரு உத்தர பிரதேசத்திலிருந்து வந்த கிளார்க் ஒருத்தர்

 உத்தர பிரதேசம் இந்தியாவின் புண்ணிய பூமி . இராமர் அவதரித்த ஊர் .அங்கே விளையும் கறிகாய்கள் தான் சுவை மிகுந்தவை , பல புண்ணிய நதிகள் உள்ளன . உத்தர பிரதேசம் பற்றி ஓவராக பேசுவார் . 

உத்தர பிரதேசத்தில் பல கோயில்கள் உள்ளன .

அவ்வளவு ஏன் ? இந்தியாவின் அத்தனை பிரதம மந்திரிகளும்  உத்தர பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று நெஞ்சு கொள்ளாப் பெருமையுடன் சொல்லுவார் . இது நடந்தது 1982ல்

 தொட்டால் சுவரெல்லாம்  சுடுகிற அளவு டெல்லி கோடை வெயில் . 

மதிய உணவு வேளை .

மே மாதத்தில் வெயில் கொடுமை யார் யார் ஊரில் எப்படி இருக்கும் என்று பேச்சு வந்தது .

 சென்னையிலிருந்து  வந்த ஒருவர் எங்க  வீட்டிலே எல்லாம்  சம்மர் என்றால் 

  இரவில் கிட்டத்தட்ட எல்லா நாளும் பீச்சுக்குப் போய்விடுவோம் . சாப்பாடெல்லாம் அங்கேதான் என்று சொல்ல  அந்த உ.பி காரருக்கு  ஒரே வியப்பு . நிஜமாவா நிஜமாவா  என்று ஆச்சரியம் தாங்க வில்லை அவருக்கு . 


இதுக்கு ஏன் இப்படி உணர்ச்சி வசப்படறே அப்படின்னதுக்கு அவர் வாழ்க்கையிலே கடலே பார்த்ததில்லை என்றார் . சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கேன் . ரொம்ப ஆசை பாக்கணுமின்னு . ஆனால் முடியவில்லை . அவங்க குடும்பத்திலே அவங்க தாத்தா மட்டும் அந்தக் காலத்திலே ராமேஸ்வரம் வந்து யாருக்கோ திதி குடுத்து விட்டு அங்கே இருந்து கன்யாகுமரி வரை  வந்து பாத்துட்டுப் போனாராம் .  மூன்று கடல்களும் சங்கமிக்கும்  இடம்.. என்று ரொம்பவே பரவசப் பட்டுப் பேசினார் . 

அதாவது கடந்த மூன்று  நான்கு தலை முறையில் ஒருவருக்கு  மட்டுமே   கடலைக் கண்ணால் காணும் பாக்கியம், கடல் நீரில் காலை நனைக்கும் பாக்கியம், கடற்கரையில் நடக்கும் பாக்கியம், கிடைத்து உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் 

நானும் கன்னியாகுமாரி போயிருக்கிறேன் . எனக்கு எல்லாம் ஒரே கடல் மாதிரித்தான் தெரிந்தது .   மூன்று கடல்கள் கலக்கும் இடம் என்கிற உண்மை புரிந்தது .

ஆனால் உணர்ச்சி வசப் படவில்லை .

 சரியாகச் சொன்னால்  கன்னியாகுமாரியைப்  பார்க்காத , தாத்தா  விவரித்த கன்யாகுமாரியைப் பற்றிக் கேட்க மட்டுமே முடிந்த அவர் அடைந்த பரவசம்

 கன்னியாகுமாரியைக் கண்ணால் பார்த்த எனக்கு வரவில்லை .

பாங்கு எல் டி சியில்  அவருக்குச் சென்னைப் பக்கம் வர ஆசை. ஆனால் மொழிப் பிரச்னை தவிர அவருக்கு இரன்டு பெண்கள் . வயதான பெற்றோர் . எனவே  ராமேஸ்வரம் கன்னியாகுமாரியைப்  பார்க்க ஆவல் இருந்தாலும் பயம்.

அவருக்கு ஆங்கிலம் வேறு தகராறு . சொல்ல நினைப்பது ஒன்றாக இருக்கும் ஆனால் சொல்வது வேறாக இருக்கும் . .  அதனால் அவர்  வட இந்தியா மட்டும் அதாவது ஹிந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் தான் போவார்  .மும்பை போகவும் அவருக்குப் பயம் , மராட்டி பேசுவார்கள் என்று ,

வாழ்க்கையில் கடலைப் பார்க்க கடவுள் அருள் புரிந்தால்தான் உண்டு .கொஞ்சம் வருத்தத்தோடுதான் அவர்  சொன்னார் 

இந்த நிகழ்ச்சிக்குப் பின் கணக்கெடுத்துப் பார்த்தால் நிறையப் பேர் (கிளார்க்குகளில் ) குறிப்பாக டெல்லி வாழ் மக்கள் கடலைப் பார்த்ததில்லை என்று . 

அன்று தான் எனக்கு  ஒரு அப்பட்டமான உண்மை .புரிந்தது



நம்   வாழ்க்கையில்  கடலில் காலை நனைப்பது கடல் காற்று மெல்ல நம் உடலை வருடுவது போன்ற நமக்குக்   கிடைத்த சில சிறு  சிறு விஷயங்கள் என்பவை பல  பேருக்கு அது நடக்கவே முடியாத கனவு  என்பதை இந்த உலகப் பெருங்கடல் தினம் அன்று நினைவில் கொள்ள வேண்டும் ..


Friday, 4 June 2021

வியட்நாமிஸ் ரைஸ் ரோல்

 

 நான் படித்த காலத் திலிருந்தே எனக்கு என்னமோ கீழை நாட்டு சரித்திரம் பற்றி தெரிந்து கொள்ள ஆசை . ஏனெனில் நாம் பள்ளி சிலபஸ் என்பது ஆங்கிலேயர்களால் தயாரிக்கப் பட்டது . அதாவது நாம் உலக சரித்திரத்தில் என்ன படிக்க வேண்டும் என்பது அவர்களால் தீர்ர்மானிக்கப் பட்டது . ஏழாண்டுப் போர் நெப்போலியன் பற்றி எல்லாம் படிக்கும் போது என்னடா வியட்னாம் ஜப்பான் மலேஷியா இங்கே எல்லாம் ஒண்ணுமே சண்டை போடாமல் அமைதிப் புறாவாவா இருந்தாங்களா என்ன ? . ஐரோப்பா அமெரிக்கா இங்கே மட்டும் தான் ஓயாம சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்களா சண்டை எதுவுமே  நடக்கலையா

தென்  கிழக்கு ஆசியா முழுக்க ஒரே அமைதியாஇருந்துச்சா  என்ன அப்படீன்னு நினைப்பேன் .

டீச்சர்  கிட்டே இல்லாட்டி வீட்டிலே கேட்டா என்ன சொல்லுவாங்க ,  பரீட்சைக்கு என்ன இருக்கோ அதை முதலில் படி. அப்பறம் அந்த வெட்டிக் கதை எல்லாம் பாக்கலாம் அப்படீம்பாங்க .

சரி பசங்களோட சேந்து இந்த விஷயம் பத்தி பேசுனா " ஏய் வாயை மூடிக்கிட்டு  கம்முனு கிட . அப்புறம் அந்த டீச்சர் அது பாட்டுக்கு போர்ஷனை ஜாஸ்தி ஆக்கி  உட்டுடுச்சுன்னாக்க வம்பு " அப்படீன்னாங்க

அப்புறம் வளர்ந்தப்புறம் அந்த ஆசை  எல்லாம் ஒரு ஓரம் கட்டி வச்சிருந்தேன் .

வேலைக்கு வந்த பின் சரித்திர ஆசை  எல்லாம் எங்கோ  போய்விட்டது . சமையல் ஆசை சாப்பாட்டு  ஆசை வந்து விட்டது

பிறகு ஜப்பானிய மொழி படித்த போது  அவர்கள் சமையல் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது .

மேலும் அவர்கள்  இங்கு  வரும் போது  எல்லாம்  ஜப்பானிய  உணவகங்களில்   அல்லது கொரியன்  உணவகங்களில் சாப்பிடுவார்கள் .

SEOUL STORE SRIPERUMBUDUR  ல்  கொரியன்  ஜப்பானிய தானியங்கள் மற்றும் சில உணவு வகைகள் வாங்குவார்கள் . பார்த்திருக்கிறேன் . வியட்னாம் உணவு  வகைகளும் பார்த்து இருக்கிறேன் . அதில் எனக்குப் பிடித்தது வியட்நாமிஸ்  ரைஸ் ரோல் .

 செய்வது ரொம்பவே ஈஸி . ரைஸ் ரோல் நட்ஸ் அண்ட் ஸ்பைசசில்

(Nuts and Spices ) கிடைக்கிறது

அந்த அரிசி ரோலை ஒரே ஒரு செகண்டு  மட்டுமே  மிதமான சூடு உள்ள வெந்நீரில் நனைத்து விட்டு அதன் உள்ளே நாம் எதை வேணுமானாலும் 

ஸ்டப் செய்து  விடணும் .

பிறகு சுருட்டி ரோல் மாதிரி பண்ணி விடணும் .

ஜோலி ஆச்சு அவ்வளவே .

 மேலே இருப்பது நான் செய்தது .நான் செய்தது. கொஞ்சம் முன்னே பின்னே தான் இருக்கும்


 நிஜ அதாவது ஒரிஜினல் இருட்டுக்கடை அல்வா மாதிரி ஒரிஜினல் வியட்நாமிஸ்  ரைஸ் ரோல்  கீழே உள்ளது .

வியட்நாமில் செய்யப் பட்டது . அதாகப் பட்டது கூகிளில் இருந்து சுட்டது



Thursday, 3 June 2021

லாக் டவுனில் மக்கள் மனநிலை

 

 என்ன  எப்படி இருக்கீங்க ?  எப்படி பொழுது போகுதா ?

என்ன பண்ணிட்டு இருக்கீங்க ?

என்று போனில் யார்  கேட்டாலும்  வரும் பதில் கிட்டத்தட்ட

என்னமோ போய்கிட்டு இருக்கு  ஒண்ணும்    சொல்லறதுக்கு   இல்லை.

 சலிப்பான பதில் தான் வருது 

லாக் டவுன் ஆரம்பித்து ஒரு வருடம் ஆனபடியால்   வெளியே எங்கும் செல்ல முடிய வில்லை ,பண வசதி இல்லாதவர்களுக்கு  அன்றாடம் வாழ்க்கை நடத்துவதே பெரும் பாடாக இருக்கிறதுவேலை செய்ய மனம் இருக்கிறது .அவர்களுக்கு வேலை கொடுக்க கம்பெனிகள் தயாராக   இருந்தும் அவர்களால் எந்த பிஸினஸும் ஆரம்பிக்க முடியவில்லை . மைண்டு  வேலை செய்ய மாட்டேங்குது

  பண வசதி இருப்பவர்களுக்கு கடைக்கு  எங்கும் சென்று பிடித்த பொருட்கள் வாங்க முடியவில்லை .  ஆசைப் பட்ட தின்பண்டங்கள் வாங்கிச் சாப்பிடமுடியவில்லை  . நண்பர்கள் உறவினர்களை சந்திக்க முடிய வில்லை.ஒரே மாதிரியான வாழ்க்கையிலிருந்து ஒரு மாற்றத்திற்காக ஊர் சுத்த , சினிமா போக கடற்கரைப் பக்கம் போக எதுவும் முடியவில்லை

இப்பொழுதெல்லாம் கிட்டத்தட்ட ஒரு பழகி விட்ட  மன நிலைக்கு வந்து விட்டாலும் ஒரு எரிச்சல் நிறைய பேரிடம் பார்க்க முடிகிறது .

சின்ன வயசுப் பசங்க ஆன்லயன் கிளாசு எல்லாம் போரடிச்சுப்  போச்சு . எப்படா நேர ஸ்கூலிலோ இல்லை  காலேஜில  படிப்போமோ என்கிற மனநிலையில் தான் இருக்கின்றனர்

போன் வந்தாலும் எரிச்சலாக  இருக்கு . போன் வராவிட்டாலும் எரிச்சலாக இருக்கு  

டி   வி  நிகழ்ச்சிகள்  நியூஸ் எல்லாமே போரடிக்குது .

மனம் எதிலுமே ஒன்றாத நிலைமை . குழந்தைகளும்  இதற்கு விதிவிலக்கு இல்லை

சுருங்கச் சொன்னால் 


Sunday, 30 May 2021

செயற்கரிய செயல்

 நம்ம எல்லாருக்குமே இதுவரைக்கும் யாருமே செய்யாத ஒரு காரியம் செய்யணும்ன்னு ஆசை இருந்திருக்கும் . இதை நம்ம தான் கண்டு புடிச்சோம் . உலக வரலாற்றிலேயே முதல் முதலாக   இங்குதான் செய்யப்பட்டது ,

செய்தவர் இவர்தான் என்கிற மாதிரி பேர் வரணும் அப்படியெல்லாம் நிச்சயமாக இருந்திருக்கும் . .

  மத்தவங்க எப்படியோ தெரியாது எனக்கு நிச்சயமா இருந்திருக்கு

 இது நாள் வரை அதற்கான கால நேரம்  ஒத்து வரவில்லையா இல்லை கிரக நிலைகள் கோளாறா என்னவென்று தெரியவில்லை 

 என்னென்னவோ  குட்டிக்கரணம் போட்டும் முடியவில்லை .

 மனித குலம் படும்  துயரங்களைக்  களைய வேண்டும் என்று ஒரு தீராத தாகம் .

எத்தனையோ ஏச்சும் பேச்சும் மனிதர்கள் அனுபவித்தாலும்  எல்லோராலும் நிச்சயமாகக் கேட்கப் பட்டிருக்கும் ஏச்சு

 "உனக்கெல்லாம் மூளையே கிடையாதா "

 "  வாயை இவ்வளோ பெருசுக்கு வச்ச அந்த ஆண்டவன் உனக்கு மூளையை ஏன் வைக்க மறந்தான் ""

“பொறந்த அன்னைக்கே தெரியும் அந்த டாக்டர் ஒழுங்கா செக் பண்ணாமல் என்கிட்டே கொடுத்துட்டா"

இப்படி சம்பந்த சம்பந்தம் இல்லாமல் சகட்டு மேனிக்குத் திட்டுவாங்க

இது தவிர  இந்த இந்த ஊரில் இருக்கறவங்களுக்கு , இந்த நாட்டில் இருக்கிறவங்களுக்கு எல்லாம் மூளையே கிடையாது . அவனுங்களே அப்படித்தான்  மூளை இருந்தா  அவன்  ஏன் இப்படி இருக்கான் ?

அப்படீன்னு மூளையைப் பற்றின அதாவது மூளை இல்லை என்கிற  ஒரு விஷயத்தைப்  பற்றி விலாவாரியப் பேசறாங்களே தவிர அதுக்கு ஒரு தீர்வு இது வரைக்கும் யாரும் கண்டு  பிடிக்க வில்லை . 

அதாவது மூளை இல்லாதவங்களை அப்படியே  நடமாட விட்டால் இது ஒரு சமுதாயத்திற்கு நாட்டுக்கு எவ்வளவு கேடு என்பதை யாரும் உணரவில்லை .

 இப்பக்கூட  பாருங்க மாஸ்க்கை   தாடி மாதிரி வச்சுக்கிட்டே பேசறவங்களைப் பாத்து "மூளை  கெட்ட ஜென்மங்கள் "அப்படி எல்லாம் திட்டுறாங்களே தவிர இதுக்கு என்ன பண்ணனும் அப்படீன்னு யாருமே யோசிக்க வில்லை . கண்டு பிடிக்க  முயற்சி  செய்த மாதிரியும் தெரியவில்லை 

.இப்படி இருந்தால் எப்படி 

 இந்த லாக் டவுன் நேரத்தில்  இதுக்கு  நாமே ஒரு தீர்வு கண்டு பிடிக்கணும் என்று அதி தீவிரமாக யோசித்தேன் .

 முயன்றால் முடியாததும் உண்டோ  /முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்  இப்படியெல்லாம் எனக்கு நானே சொல்லிக் கொண்டு உசுப்பேத்திக்கிட்டேன் . அப்பாடா மனித குலம்   மேம்பட ஒரு வழி பிறந்து விட்டது .  

மூளை  இல்லாதவர்கள் இனியும்  கவலைப் படவேண்டாம் 

இதோ  இங்க பாருங்க

உங்களுக்காகவே பிரத்யேகமாக