Tuesday 29 October 2013

கடவுளின் ஏஜண்டும் நானும் .

எனது கணவரின் நண்பனாக ஆரம்பித்து பிறகு குடும்ப நண்பராக ஆனா ஒருவர்
எப்போதுமே தான்  நல்லதை நினைக்கும் யோகி போலவும் அவர் சொல்வதை மற்றவர்கள் மறுமொழி கூறாமல் கடைப் பிடிக்கவேண்டும் .அவர் சொல்வதுவே  அந்த குறிப்பிட்ட விஷயத்தின் இறுதி மொழி என்று நினைப்பவர்.
அவ்வளவு விஷய ஞானம் இல்லாதவர் ,நுனிப்புல் மேயும் டைப் .
வீட்டு வேலைகள் செய்வதில் ஆர்வமில்லை .
அதைத் தவிர்ப்பதற்காகவே
தன்னை ஒரு உண்மை தேடும் ஞானி என்கிற ஒரு  இமேஜு உருவாக்குவதில்
ரொம்பவே முனைப்பு .
மனைவி பாவம் ஏதேதோ  ஆப்பரேஷன்கள் செய்து கொண்டவர்.  
முதலில் எங்களுக்கு அறிமுகமான போது ஒரு யோகாசன பயிற்சி
மையத்தில் சேர்ந்து அதை தினமும் செய்து வந்தார் .
 இதை நெ1 யோகா என்று பெயரிடுவோம் .
நானும் இதற்கு முன்பே ஒரு யோகா கிளாசில் சேர்ந்தேனே தவிர ஒரு இரண்டு மாதம் தான் பயிற்சி செய்தேன் . தொடர்ந்து செய்ய முடியவில்லை .
காரணம் காலை எழுந்தவுடன் பிரஷர் குக்கர் ,பால் குக்கர் இவைகள் தான் என் கண்ணில் தெரிந்ததே தவிர மனமும் உடலும்  மூச்சுப் பயிற்சிப் பக்கம் போக மறுத்தது.
என் மைனஸ் பாயிண்டுகள் எனக்குத் தெரியும் என்பதால் எத்தனையோ யோகா மையங்கள்  தூண்டில்  போட்டு  இழுத்தாலும் நான் அந்த வலையில் சிக்காமல்  அதன் பின் யோகா கிளாஸ் பக்கம் தலை ,கால் எதுவுமே வைத்துப் படுப்பதில்லை .
என்னை ரொம்பவும் கட்டாயப்படுத்தி அழைத்துப் போனார்.
போனேனே தவிர எப்போதும் போல ..........புத்தகம் மட்டுமே கண்ணில் படும்படி கொஞ்ச நாள் வைத்திருந்துவிட்டு பிறகு அதையும் தூக்கி உள்ளே வைத்துவிட்டேன்.
பிறகு கொஞ்ச நாள் கழித்து எங்கோ வேறு ஒரு யோகா கிளாஸ் போனார் .
இப்பொழுது இந்த யோகா  ( நெ 2 என்று பெயரிடுவோமே )
நெ1 யோகா  வை விடவும் சிறந்தது என்றும்  என்னை சேரச்சொல்லியும்
வற்புறுத்தினார் ,
நான் அசையவில்லை .
என் மகன்களிடமும் இது பற்றி பேசினார் .மகன்களிடம் அவரின் பேச்சு எடுபடவில்லை .படிக்க வேறு ஊர் போய்விட்டதால் அவர்கள் தப்பித்தார்கள் ,ஆனால்
என் கணவர் அவர் சொன்னதெல்லாம் செய்தார் .
பிறகு  கொஞ்ச நாள் கழித்து நெ 3 யோகா மையம் .
வழக்கப்படி என்னிடம் மார்க்கெட்டிங் .
நான் மசியவில்லை .
நான்காவதாக நெ 4 யோகா .
மறுபடியும் என்னிடம் விடாப்பிடியாக மார்க்கெட்டிங் .
என் கணவரையும் வீட்டில் வேலை எதுவும் செய்ய விடாது யோகா அது இது என்று  அலைக்கழித்து மூளைச் சலவை செய்தார் .
அவரின் மனைவியிடமும் இது பற்றி விலாவரியாக பேசி என் வீட்டு ஆட்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று சொல்லியும் அந்த அம்மா  நான் ஏதோ பாட்டி வடை சுட்ட கதை சொல்கிறேன் என்கிற பாணியில் தான் கேட்டார் .

,கணவனிடம் பேசிய மாதிரி தெரியவில்லை .

 எனக்குத் தெரியாமல் என் கணவரிடம் கண்ட மேனிக்கு பல விதமான யோகா கிளாசு பற்றி விவாதிப்பது
,ஏதோ இவர் சொன்னதைக் கேட்டால் சொர்க்கத்திற்கு கன்ஃ பர்ம்டு  டிக்கெட் கிடைக்கும் மற்றவர்களுக்கு லெட்ரின்
பக்கம் உட்காந்து போகக் கூட இடம் கிடைக்காது என்கிற பாணியில் பேச்சு.
விடாப்பிடியாக என்னிடம் ஒரு நாள் நீங்கள் என்னைத் தப்பாக புரிந்துகொள்கிறீர்கள் ?
நான் கடவுளிடம் உங்களை அழைத்துச்செல்லும்  ஒரு  வழிகாட்டி போலத்தான்
என்றார் .
என்னைப்  பொருத்தவரை எனக்கும் கடவுளுக்கும் இடையே யாரும் தேவையே இல்லை .
எனக்குத் தோணினால் கடவுளுக்கு நன்றி சொல்வேன் .
நான் நினைத்தபடி காரியங்கள் நடக்கவில்லை என்றால் திட்டி இருக்கிறேன் .
நல்லது செய்தால்   Performance linked bonus

  மாதிரியெல்லாம் கடவுளுக்கு கொடுத்திருக்கிறேன் .
அதைக் கொடு இதைக் கொடு என்றெல்லாம் கேட்டிருக்கிறேன்
நீ மட்டும் இதைச் செய்யலேன்னா  என்கிற தோரணையில்  மிரட்டியும்
இருக்கிறேன் .
எங்க அன்யோன்யம் அப்படி .
எனவே
எந்த ஒரு ஏஜெண்டும் வைத்துக்கொள்ள எனக்கு இஷ்டமில்லை
 என்று திட்ட வட்டமாகக் கூறிவிட்டேன் .
மனிதன் அசரவில்லை .
திரும்பவும் உங்கள் நல்லதிற்குத்தான் சொல்கிறேனே தவிர .......என்று இழுத்தார்
நானும் அசராமல்
" நான் அப்போ  உங்கள் நல்லதிற்கு எது சொன்னாலும் கேட்பீர்களா   "
என்றேன் .
அவரின்  நாக்கி சனி பூந்தது அவருக்குத் தெரியவில்லை .

 "நிச்சயமாக மேடம் .நல்லது யார்  சொன்னாலும் கேட்பதுதானே முறை "என்று
சாமர்த்தியமாக  பதில் சொல்கிறதாக நினைத்துக்கொண்டார்.
  அவருக்கு அப்போது வயது 58 தாண்டிவிட்டது .
நீங்கள் ஏன் சீன மொழி அல்லது ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளக்கூடாது ?
அறிவும் வளரும் மார்க்கெட்டில் நல்ல டிமாண்ட்  பணமும் வரும்
ஐயய்யோ .இந்த வயசிலா என்றார் .
ஏன் உங்களை விட வயதானவர்கள் எவ்வளவோ சாதித்து  இருக்கும் போது ஏன் ?
சரி பரவாயில்லை உங்கள் மனைவியிடம் பேசவா இது பற்றி என்றேன்
ஐயய்யோ  வேணாம் அவங்க படிக்கப் போய்ட்டா  அப்புறம் எல்லா வேலையும் என்தலையிலே விழும் வேணாம் மேடம் பிளீஸ் ..
.பிளீஸ்  கெஞ்சல் என்காலில் விழாத குறை ..
அன்னைக்கு பேசினவர்தான்.
மூணு  வருஷம் ஆச்சு . நான் போன் பண்ணினாக் கூட எடுக்கறதே இல்லை 

Sunday 27 October 2013

டெல்லி அனுபவம் -1

நான் என் பணி நிமித்தமாக டெல்லி சென்றபோது என்னை அழைத்துச் சென்று வழிகாட்ட மற்றும் வீடு பிடிக்க என பல விதத்திலும் எனக்கு உதவியது  எங்களது குடும்ப நண்பரின் மகன் . கூட அவரின் நண்பன் ஒரு தமிழ் பேசும் இளைஞன் வந்திருந்தான்.
இருவரும்  ஏதோ  டிஃ பென்சு அலுவலகத்தில் வேலை
செய்துகொண்டிருந்தார்கள் .
அவர்கள்  இருவரும் ஒரு தென்னிந்திய மாமி ஒருவரின் வீட்டில் பேயிங்  கெஸ்டு  போல தங்கி இருந்தார்கள்.
அந்த மாமி எங்களை அவசியம் தன் வீட்டிற்குக்  கூட்டி வருமாறும் தான் எல்லா உதவியும் செய்வதாகவும் சொன்னதால்  என்னையும் என் அம்மாவையும் அவர்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்றார்கள் .
எங்க அம்மாவுக்கு என்னைப் பத்தி நல்லாவே தெரியுமாதலால் முன் கூட்டியே என்னிடம்  நமக்கு காரியம் ஆகணும் எனவே காமெடி எதுவும்  பண்ணாதே என்று எச்சரித்து இருந்தார்கள்
அந்த மாமி மிகவும் நல்ல மாதிரி ,
பிறருக்கு உதவும் பரோபகார எண்ணம் ரொம்பவே உண்டு .
ஆனால் என்ன தில்லியே  தன் கையில்தான் என்பது போல பேசினார்கள்.

அப்போது பிரதம மந்திரியாக இருந்த திருமதி இந்திரா காந்திக்கு கூட தான் தான் நல்ல நாள் பார்த்து  வேறு ஒருவர் மூலம் சொன்னேன் என்று எல்லாம் சொன்னார்கள்
டெல்லியின் சரித்திர ,பூகோள ,அரசியல் ,உணவு ,பால்  கோதுமை மற்றும் உடை  .இவற்றைப் பற்றியெல்லாம்  ஒரு மணி நேரம் விலாவாரியாக எங்களுக்கு ஒன்றுமே தெரியாது  என்று நினைத்துக்கொண்டு   அவர் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார்கள் .
மாமி அப்பப்போ நடுவிலே வரும் டி .வி. விளம்பரம் மாதிரி
 புரியுதா புரியலேன்னாக்க  தாராளமா கேள்வி கேளுங்க என்று எங்களை
உசுப்பி  விட்டுக்கொண்டிருந்தார்கள்
என்னடா இது மாமியே  பேசிக்கொண்டிருக்கிறார்களே  நாமும்  ஏதாவது பேசுவோம் இல்லாங்காட்டி மாமி பேச்சு டீச்சர் கிளாஸ் எடுக்கிற மாதிரி இருக்குதே என்று ஏதாவது கேள்வி கேட்க சான்ஸ் வராதான்னு காத்திருந்தேன்.
என் அம்மாவோ அல்லது அந்த பையன்களோ கேள்வி எந்த நிலையிலும் கேட்கத் தயாரில்லை என்று தீர்மானித்த முக பாவனையுடன் இருந்தனர்.
அந்த சமயம் பாத்து மாமியும்
நாங்களெல்லாம் மெட்ராசை விட்டு தள்ளி இருந்தாலும் எது செய்யறதா இருந்தாலும் நல்ல நாள் முகூர்த்த நாள் பாத்து தான் செய்வோம் .
 உதாரணத்துக்கு  இப்போ பாருங்க ,கோடைக் காலத்திலே நாங்க  எல்லாரும் மொட்டை மாடியிலே போய்த்தான் படுப்போம்.
அது கூட "சும்மா ஏதோ ஒரு நாள்" ன்னு  இல்லாம   அஷ்டமி  நவமி ,பரணி கார்த்திகை எல்லாம் பாத்துதான் போவோம்  “ன்னாக்க பாத்துக்குங்களேன் .என்றார்.
அவரின் கெட்ட காலமோ அல்லது என் நுனிப்புல் ஞானமோ என் நாக்கில் சனி  பூந்து  சமயம் பாத்து சூப்பர் ஸ்பீடில் போய்க் கொண்டிருந்த மாமியின் பேச்சில் ஒரு  ஸ்பீடு பிரேக்கர்  மாதிரி  என்னை ஒரு இடக்கு மடக்கான கேள்விகேட்க வைத்தது .
 " அதுமாதிரி கோடை முடிந்து மறுபடியும் வீட்டுக்குள்ளே வந்து படுக்கவும் நல்ல நாள் பாப்பிங்களா?" என்று அப்பாவித்தனமாக கேட்க மாமியால் என் போட்டுத்தாக்கு டைப் கேள்வியை எதிர் கொள்ளமுடியாமல் ஒரு நிமிடம் பேச்சை நிறுத்திவிட்டார்கள் .
எங்க அம்மா தேவை இல்லாத வெட்டிக்கேள்வி ஏன் என்று கண்ணால் என்னை ஒரு முறை முறைத்தார்கள் .
 அந்த மாமி சொன்ன பதில் என்ன தெரியுமோ?
 அதுக்கு நாளெல்லாம் பாக்க முடியாது .
மழை வந்தால் பாயைச்  சுருட்டிக்கொண்டு உள்ளே வந்துடணும்.

என் குடும்ப நண்பரின் மகனும் அவன் நண்பனும் சிரிப்பை அடக்கமுயன்று விட்டதைப் பார்க்க ஆரம்பித்து விட்டனர் .

Friday 25 October 2013

வாகனங்களும் ஒரு வளர்ந்த பயிரே

 "இன்றைக்கு .........ஊரில் நாலு பஸ்ஸைக்  கொளுத்திட்டாங்களாம்.
மூணு பஸ்ஸை  அடிச்சு நொறுக்கிட்டங்களாம் .
ஒரு ரெண்டு  பஸ்ஸை  மிக்சர் மாதிரி தூள் பண்ணிட்டாங்களாமே   "  


ஒரு பத்து வருடம் முன்பு இது போன்ற வாய் வழிச் செய்திகள் , தொலைக்காட்சியின் காணொளிச்செய்திகள்    மற்றும் செய்தித்தாள் செய்திகள் என்னை சுத்தமாக சொல்லப்போனால்  ஒரு கடுகளவு கூட பாதித்ததில்லை .

ஒரு வேளை நான் சொந்தமாக பஸ்ஸூ எதுவும் வைத்திருக்காத காரணமா  என்னவோ  தெரியவில்லை .
 நான் முதன் முதலில் இது போன்ற வாகனங்களைக் கொளுத்தும்
நிகழ்வுகளைப் படிக்க நேரிட்டது 1960 களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்   போதுதான் .
அப்போது நான் ஏழு அல்லது எட்டு வயதுச்சிறுமி யாக இருந்த காலம் .அப்போதுதான்
" அட !கோபம் வந்தால் பஸ்ஸை நொறுக்கலாம் போலே "
என்ற   உலக மகா உண்மையை உணர்ந்து கொண்டேன்

ஆனாலும் இது வரை எந்த பஸ் மீதும் கல்லை விட்டு எறிந்ததில்லை
.பயமா அல்லது .பஸ்ஸின்  அருகே கல் எதுவும் என் கண்ணுக்கு அகப்படாததும் ஒரு காரணமா  என்றும் தெரியவில்லை .
வாழ்நாளில்  அப்படி ஒரு வீர சாகசம் பண்ணவில்லை என்பது நிஜம்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் பின் பல முறை பல பஸ் எரிக்கும் நிகழ்வுகளைப்  படித்த போதும் கூட
 "இது என்ன புதுசா  ? நார்மலாக நடக்கும் ஒரு நிகழ்வுதானே"  என்று
அந்த செய்தியின் முழு விவரமும் படிக்காமலே அடுத்த பத்திக்கு கண்  ஒரு  லாங் ஜம்ப் செய்துவிடும்.
 அந்த பஸ் எரிப்புகள் பற்றி கவலைப் பட்டதும்  கிடையாது ..

.மேலும்  பலரால்  இது  சமூக அவலங்கள்  மற்றும் சமூக அநீதியைத்  தட்டி கேட்கும் ஒரு ஜனநாயக முறை என்பது போன்ற எண்ணம் எழுத்துவடிவில் சொல்லப் படாவிட்டாலும் மனதளவில் நினைக்கப் படுவது மறுக்கப் படமுடியாத உண்மை .

ஒரு பத்து வருடம் முன்பு கார் பஸ் போன்ற வாகனங்கள் நம்மை வேண்டும் இடத்திற்கு ஏற்றிச் செல்லும்  நாலு சக்கரம் கொண்ட ஒரு தகரக் கூடு என்ற அளவில் தான் ஆட்டோமொபைல் பற்றிய எனது அறிவு இருந்தது
.அது பற்றி தெரிந்துகொள்ள  ஆர்வம் இல்லாதது
எனது  தொழில் வங்கிப் பணி என்பதாலும்
வாகனங்கள் எதுவுமே ஓட்டத்தெரியாத காரணத்தாலும்
என்று கூடச்  சொல்லலாம் .

ஆனால் நான் ஒரு கார் உற்பத்தி பண்ணும் தொழிற்சாலையில் மொழிபெயர்ப்பாளராக வேலை செய்த போதுதான்  நான்  இதுவரை வாகனங்களின் மீது கொண்ட எண்ணத்தைத்   தலை கீழாய்ப்  புரட்டிப் போட்டு விட்டது .
வாகனங்களின் ஒரு ஒரு சிறிய பாகங்களுக்குக் கூட பல முறை "டிரையல் ரன் கள் " செய்யப்படுகின்றன .
அந்த சரியான சைஸு செய்வதற்குள் எத்தனையோ பேர்  எவ்வளவு பாடு பாடுபடுகின்றனர் .
அதுவும்  பாகங்கள் உற்பத்தி பண்ணும் இடம் என்பது  சுகமான குளிர்சாதனம் உள்ள இடம் கிடையாது.
 ஏப்ரல் ,மே மாதங்களில் ஆஸ்பெஸ்டாஸ்  கூரையின் கீழ் வேலை செய்யும் கடுமை அதுவும் ஆசுவாசமாக உட்கார்ந்து அல்ல நின்று கொண்டே ! வார்த்தைகளில்  விவரிக்க இயலாது.
சுற்றிவர மிஷின்களும் அதன் சத்தமும் சில சமயங்களில் நெருப்பு
உபயோகிக்கும்  பர்னர்களும், எண்ணெய் கசியும் மெஷின்களும் .பெட்ரோல் வாசம் மற்றும் பெயிண்ட் வாசம் இவைகளுக்கிடையில் தான் ஒவ்வொரு  வாகனமும்  தயாரிக்கப் படுகின்றன.
 அதுவும்  வாகனத்தின் கீழ்ப்   பகுதியை  மேல் பகுதியுடன் பொருத்தும் தொழிலாளி கழுத்தை மேலே நோக்கி  வைத்துக்கொண்டு தான் வேலை செய்யவேண்டும் .
அப்பப்பா!
நடுவே ஏதாவது  மனிதத் தவறால் சரியாகப் பொருந்தவில்லை என்றால்  வீண்  என்று மறுக்கப் பட்டுவிடும்.
தொழிற்சாலையில் உள்ள கீழ் மட்டத்திலிருந்து உயர் மட்டம் வரை வெகு கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை .

விவசாயத்தில் எப்படி நடந்துகொண்டே உழவேண்டும் , குனிந்துகொண்டே நாற்று நடவேண்டும் ,களை எடுக்கவேண்டும்
அதுபோல வாகனத் தயாரிப்பிலும்  பல விதமான உடல் உழைப்பும் ,பலரின் உழைப்பும் ,மூளையும்   அடங்கி உள்ளது.
இதைப் பார்த்தபின் ,அதுவும்  நேரிடையாக நானும் இதில் ஒரு பங்களித்தபின் 'எங்கேயாவது
"பஸ்ஸை  அடிச்சு நொறுக்கிட்டங்களாம் .
 மிக்சர் மாதிரி தூள் பண்ணிட்டாங்களாமே "
என்று படித்தால்  நான் சொந்தமாக பஸ் வைத்திருக்கா விட்டாலும் சத்தியமாக மனது வலிக்கிறது.
என் தனி ஒரு மனுஷியால்  முடிந்தது  பலரின் கவனத்தை ஈர்க்கும்  வகையாக ஒரு பதிவு மட்டுமே எழுத முடியும் .
இந்த பதிவால் ஒரு பஸ் மட்டுமாவது சேதம் ஆவதிலிருந்து காக்கப் பட்டால்
இந்த பதிவிற்குப் பெருமை என்பதை விட அந்த பஸ்சிற்கு நன்மை என்பதே நிஜம் .


 இந்த பிரச்னையை  உளவியலாக நோக்கினால்  பொருட்களைப்பற்றிய நமது கற்பித்தலே   என்று நான் நினைக்கிறேன்.
நமது சமூகத்தில் பொதுவாக ஒரு உணவு தானியத்திற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு ஸ்குரூ விற்கோ அல்லது ஆணிக்கோ கொடுப்பதில்லை .நாம் குழந்தையாக இருக்கும்போது நமது வீட்டுப் பெரியவர்களால் அரிசி மணிகள் வீணாக்கக்கூடாது என்று கற்பிக்கப் பட்டோமே தவிர ஒரு குண்டூசி ஆணி இவைகளும் அரிசி மணி போல கருதப்படவேண்டியவை என்று போதிக்கப் படாத காரணமும் அடங்கும்  என்றே நான் நினைக்கிறேன்.
எனவே இனிவரும் தலைமுறைக்காவது இதைப்  பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவோம்

தவிர அரசாங்கமும் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு  அறுபது எழுபதுகளில் விளம்பரம் கொடுத்தது போல வாகன உற்பத்தியில் உள்ள பல விதமான கஷ்டங்களையும் சுருக்கமாக விளக்கி வாகனங்களை சேதப்படுத்துவது தவறு .நிச்சயமாக வீர தீர சாகசச் செயல் அல்ல என்பதை விளம்பரம் மூலம்  புரிய வைக்கலாமே !



Thursday 24 October 2013

நெட் பாஸ்டிங் .

ஒரு துக்க நிகழ்ச்சிக்காக திருச்சி சென்றதால் பதிவுகள் ஏதும் எழுத முடியவில்லை .
மிக மிக வருத்தம் தரக்கூடிய துக்க நிகழ்வு . ஒரு சாலை விபத்தில் ஒரு உறவினர்  இறந்துவிட்டார்.பாசமிக்க  பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கொண்ட குடும்பம் .மனதை மிகவும் உலுக்கிய சம்பவம் .

சுமார் 4 வருடங்கள் கழித்து நான் அங்கு செல்வதாலும்  மற்றும் சில  உறவினர்கள்  இல்லங்களுக்கும் சென்றதாலும்  ஐந்து நாட்களுக்கு நெட் பாஸ்டிங் .ஏனென்றால் நான் தங்கிய உறவினர் இல்லத்தில் இன்டர் நெட் வசதி கிடையாது.மேலும் எனக்கும் நெட் செண்டர் சென்று பார்க்கவும் இஷ்டமில்லை .

அதனால்தான்  யாருடைய பதிவிற்கும்  பின்னுட்டங்கள் இடவில்லை.

எனது வழக்கமான வேலைகளிலிருந்து ஒரு மாற்றம் .
கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உறவினர் வீட்டுக் குழந்தைகள் பள்ளி செல்ல படுத்தும் பாட்டைப் பார்த்ததும் என் குழந்தைகள் எல் கே ஜி யூ  கே ஜி செல்லும் போது செய்த  குறும்புகள்
நினைவுக்கு வந்தது.
இவற்றை எல்லாம் பற்றி விரிவான பதிவுகள்  விரைவில்.

Saturday 19 October 2013

ஊரோடு ஒத்து வாழ்

நான் ஹைதராபாத்தில்  என் மகன் ஒரு நாலு மாதக் குழந்தையாக  இருந்தபோது அவனை  பக்கத்தில் இருந்த ஒரு மார்வாடிக்
 கடைக்குக் கூட்டிப் போவது வழக்கம்.
அது முழுக்க முழுக்க தெலுங்கு பேசும் மக்கள் நிறைந்த பகுதி .
ஹிந்தி அவ்வளவாக யாரும் பேசுவதில்லை .
எனக்கும் தெலுங்கு பேச வராத காலம் அது.
அந்த மார்வாடிக் கடைக்காரருக்கும் தெலுங்கு பேச வராது.
எனவே நாங்கள் ஹிந்தியில் பேசிக்கொண்டிருப்பது அவருக்கும்  ,அவர் மனைவிக்கும் ஏன் எனக்குமே மன நிறைவைத் தந்தது.

என் மகனும் வெளியே கூட்டிச்சென்றால் அழ மாட்டான் .என்பதால் அடிக்கடி அந்தக் கடைக்குப் போய் பேசிக்கொண்டிருப்பேன்.

 வழக்கமாக மார்வாடிகள் வைத்திருக்கும் சாமி படங்கள் இல்லாமல் அவரின் கடையில் திருப்பதி வெங்கடாசலபதி   பத்மாவதி தாயாருடன் உள்ள படங்களும்,  மற்றும் அந்த மெயின்  படத்தைச் சுற்றி ஆந்திரர்கள் வழிபடும் சாமி படங்களும் சொல்லப்போனால் ஒரு   தனி தெலுங்கானா  ரேஞ்சுக்கான ஆந்திரா கடை மாதிரியே இருக்கும் .
நன்கு பழக ஆரம்பித்ததும் அவர்களிடம் நான்
 " நீங்களோ வட இந்தியர்கள் ,அது எப்படி  உங்கள் கடையில்  தென்னிந்தியர்கள் வழக்கமாக  வணங்கும் மாதிரியான
கடவுளர்  படங்கள் உள்ளனவே "
 என்று கேட்டேன்
இதே நாமாக இருந்தால்
" வடக்கும் தெற்கும் பெருமை , வேற்றுமை காண்பது மடமை "
என்றோ
அல்லது
"வட இந்தியாவும் தென் இந்தியாவும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயிலே மண்ணு " என்பது போன்ற சினிமாத்தனமான ,மொக்கை பதிலை சொல்லிவிட்டு   என்னவோ பெரிய பார் புகழும் பஞ்ச் டயலாக் அடித்த இமோஷனில்
" டப டப டப் டப் "  கைதட்டலுக்கு
வடைக்கு ஆசைப் பட்ட நரி கணக்கா காத்திருப்போம் .
ஆனால் அவர் சொன்ன பதில் என்ன தெரியுமோ?
சூப்பரோ சூப்பர்  பிராக்டிகலான  நெத்தியடி
பதில்.
"இந்த ஊர் கடையிலே இந்த ஊர் சாமிய வச்சதானே காசு கொடுக்கும்.
எங்க ஊர்  சாமியே வெச்சா இந்தூர் சாமி கோச்சுகிட்டு
காசு குடுக்கலேன்னாக்க.........?ஏதாச்சும் ஆச்சுன்னக்க எங்கூர் சாமியா அவ்வளவு தூரத்திலிருந்து ஒடியாரும் ஒதவிக்கு?


பொங்கி வந்த "குபுக்"கை கஷ்டப்பட்டுத்தான்  144 போட்டேன்

பச்சப் புள்ளதனமாவும் ,சாமிக்கே  பூகோள எல்லை வகுத்து பார்டர் போட்ட பதிலாக மேலோட்டமாகத் தெரிந்தாலும் ஒரு உண்மை மட்டும் தெரிந்தது. அதுதான் எந்த ஊரில் உள்ளோமோ அந்த ஊரின் பழக்க வழக்கப் படி நடப்பது.
அதனால்தான் மார்வாடிகளால் பிழைக்கமுடிகிறது.


 அதாவது    ஊரொடு ஒத்து வாழ் பாலிசி 

 இதை  நாமும்  மனப்பாடப் பகுதியாக சிறு வயதில் படித்தோம் .
சரியாக ஒப்புவிக்கவில்லையானால்
 நீயெல்லாம் "பன்னி மேய்க்கத்தான் லாயக்கு "
என்று பெற்றோர்கள் அவர்கள் மனப்பாடப்பகுதியை    குழந்தைகளிடம்
ஒப்புவிபதுதான் பொதுவான நடைமுறை வழக்கம்.
அதை குழந்தை சரியாக எழுதி பாஸ் மார்க் வாங்கிவிட்டால் நாம் சந்தோஷம் அடைந்துவிடுவோமே  தவிர அதை ஒழுங்காக நடைமுறைப் படுத்துவது பற்றி கவலைப்படுவதில்லை . அதன் விளைவு தான் நாம்
பின்னடைந்திருப்பதன்  காரணம் என் நான் நினைக்கிறேன் .

Friday 18 October 2013

அம்மாவின் நினைவு தினம்

இன்று அம்மாவின்  நினைவு தினம் .
எல்லோருக்கும் அவங்க அவங்க அம்மா ஸ்பெஷல்தான் .
ஆனால் நான் எங்க அம்மாவைப்பத்தி ஒரு ஸ்பெஷல்+(பிளஸ் )ஆக நினைப்பது உண்டு.
பல காரணங்கள் இருந்தாலும் என் அம்மா வின் மரணம் சம்பந்தப்பட்ட ஒரு சிலநிகழ்வுகளை  நான் ஒரு Coincident ஆ  அல்லது Pre determinedஆ
  என்ற கோணங்களில் ஆராய்ந்து பார்ப்பதும் உண்டு.
என் முதல் மகனின்  டெலிவரிக்கு என்று எனக்கு ஒத்தாசைக்கு வந்த இடத்தில்  (வட இந்தியாவில் )திடீரென்று மாரடைப்பு வந்து சரியாகி பின் ஒரு நாலு நாள் நன்றாக இருந்து   பின் கடைசியாக ஆசுபத்திரிக்கு கூட்டிக்கொண்டு போகும் வழியிலேயே  எட்டு மாத கர்ப்பிணியான என் நெஞ்சில் சாய்ந்தபடியே    இறந்தார்கள் .
என் நெஞ்சில் அம்மா  சாய்ந்த அந்த உணர்வை  பல வருடம் ஆகியும் ஏதோ நேற்றுதான் நடந்த மாதிரி  என்னால் உடல் உணர்வாலும் மனதாலும்  இன்றும் உணரமுடிகிறது .
கூட இருந்தது நானும் என் கணவரும் மட்டுமே .
என் அப்பா மற்றும் சகோதர பந்தங்கள்  அடுத்த நாள்தான்  சென்னையிலிருந்து  வரமுடிந்தது.

 என் வாழ்க்கையிலேயே முதல் முதலில் ஒரு  இறந்தவர் உடன் அருகில் இருந்து
 ( அதற்கு முன் நான் இறந்த நிகழ்வுகளுக்கு
 போனதே இல்லை )எல்லாவற்றையும் நானே கவனித்தது என்றால் என் அம்மாவின் மரணம்தான்.
மேலும் என் அம்மா தன் அண்ணன் ஒருவர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார்கள் . அவர்  அம்மா இறப்பதற்கு ஒரு 12 வருடம்  முன்பே இறந்து விட்டார் .இங்கு சென்னையில் அவருக்கு திவசம் குடுக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும் போது இந்த சேதி போனதும் அப்படியே நிறுத்திவிட்டார்கள் .
அதே நாளில்  (திதியில் ) என் அம்மா வின் அப்பாவின் (தாத்தா  )  இறந்த நாளும் .
அது போல என் அம்மா இறந்த நாள்  ஆங்கில தேதிப்படி என் பிறந்த நாளும் என் கல்யாண நாளும் ஆகும்.( அந்த வருடம் )..
எனக்குள்  நானே  பல முறை கேட்டுக்கொள்ளும் கேள்வி
 இது  Coincident ஆ  அல்லது Pre determinedஆ?

எனக்கு என்று மூளையுடன் ஏதாவது இன்றெல்லாம் நான் செய்துகொண்டு இருக்கிறேன் என்றால் அதற்கு என் பெற்றோர்கள் ,அதிலும் என் அம்மா என்னை ஸ்கூலுக்கு அனுப்பாமல் வீட்டிலேயே நிறைய  சொல்லிக்கொடுத்தார்கள்.தமிழ் புலவர்  படிப்பு படித்தவர்கள்.
ஹைஸ்கூல் வரை படித்தவர்கள் என்பதால் ஆங்கில மொழியும் நன்கு தெரியும் .
ஆந்திராவில் தன் அண்ணன்  குடும்பத்துடன்  (அந்தக்காலத்தில் ஆந்திரா தமிழ் நாடு எல்லாம் ஒன்றாக இருந்தது.) இருந்ததால் தெலுங்கு
 மொழியும் தெரியும்.
எம்பிராய்டரி ,குரோஷா  போன்ற வேலைகள் நன்கு பண்ணுவார்கள்
நான் வெளிமாநிலங்களில்  வங்கி  வேலைக்கு     போவதற்கு  மற்றவர்கள்  மறைமுக எதிர்ப்பு செய்தபோதும் தைரியமாக அத்தனை எதிர்ப்புகளையும் தூக்கி வீசி எறிந்து , என்னுடன் கூட தங்க வீடு வாடகைக்கு எடுத்து
 என் அப்பாவையும்    நாங்கள்  வீடு பார்த்து செட்டில் ஆன பின் எங்க  கூட வந்து தங்கவைத்து  என் லட்சியத்தை அடைய உதவிய தெய்வம் .


எப்பவுமே எங்க அம்மா  அடிக்கடி  தன்  கடைசிக் காலத்தில் என்னுடன்தான்  இருக்காபோவதாக எல்லாரிடமும் சொல்லிக்கொண்டு இருப்பார்கள் . அதனால்தான் Pre determined டோ  என்றேன்
.அதுபோலவே  கடைசி தருணங்கள் மட்டுமின்றி
 இறந்தபின் அம்மா   அந்த ஸ்தூல சரீரமாக மட்டுமே
இருந்தபோதும் நான்தான் நிறைய நேரம்  அம்மா கூட   இருந்தேன்.      

அம்மா நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் ஆன்மா அமைதியுற
 பிரார்த்திக்கிறோம்  .



.

Thursday 17 October 2013

பெரிய ஹோட்டலில் Nose catching meals

ஒரு கம்பெனி  வேலை விஷயமாக இரண்டு நாட்கள்  பணி செய்தபோது மதிய உணவு இரண்டு நாளுமே ஆடம்பரமான  ஹோட்டலில்தான் .
அதாவது விலை அதிகமாக உள்ள ஹோட்டலில்.
பொதுவாக  வீட்டில் நான் மிகவும் குறைவாகவே சாப்பிடும் ரகம் .
உடம்பு குண்டாகிவிட்டால் எனது அத்தனை உடைகளையும்   சைஸு பெரிதாக்க வேண்டும்  (இது செய்ய என் உடம்பு வளையாது )
அல்லது புது உடை வாங்கணும் . ( இது செய்ய பணம் அதிகம் செலவாகும் . கட்டுப்படியாகாது).
எனவே என் சொந்த செலவில் சூன்யம் ( ஹோட்டல்களில் சாப்பிடுவது ) வைத்துக் கொள்வது கிடையாது.
ஆனால் இது மாதிரி ஓசியில் உணவு என்றால் கொஞ்சம் நன்றாகவே   எண்ணை பதார்த்தங்களை தவிர மற்றவற்றை ஒரு கை  பார்ப்பேன் .
 சென்ற இரண்டு நாட்களும் அது மாதிரித்தான் .
இரவு உணவை அறவே  உண்ணவில்லை .
மேட்டர்  அது இல்லை .
எத்தனை பேரு பாவம் சொந்த காசு போட்டு சாப்பாடு சாப்பிட்டு போட்டோ எல்லாம் புடிச்சு என்ன அம்சமா  பதிவு போடறாங்க ,ஐயய்யோ  நம்ம ஒரு அருமையான சான்சை கையை வுட்டு நழுவ விட்டுட்டோமே அப்படின்னு தான் ஃ பீலிங்கு  வுட்டுக்கிட்டு இருக்கேன் .

இத்தனைக்கும்  கையிலே காமிரா போன் இருந்துச்சு .
என்னவோ  வேலை நெனப்புலே   (உண்மையை சொல்லன்னும்னாக்க  சாப்பாட்டு நெனப்புலே ) நாமளும் ஒரு பதிவர் ஆயிட்டோம் என்கிற விஷயமே மறந்து போய்விட்டது .

   காலை எழுந்தவுடன் பதிவு என்பதுபோல்  தினம்  பதிவு போடும் நெடு நாள் பதிவர்களுக்கு   என் வாழ்த்துக்கள் .
                                                                                                   
நான்  எப்போதுமே செய்யும் வேலையில் கண்ணும் கருத்துமாக இருக்கும்  (?......?) ரகம் என்பதால்தான் இப்படி ஆச்சு என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன் .
ஆனால் ஓன்று மட்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன் .

இனி எங்கு போனாலும் காமெராவில் படம் எடுத்துவிடுவது என்று .
சரி சாப்பாட்டு விஷயத்துக்கு வருவோம் .

முதல் நாள்  சியோல் ரெஸ்டாரன்ட் போனோம் .அங்கு முள்ளங்கி கிம்ச்சியும்
வெஜிடபிள் பிரைடு ரைசும் வேறே ஏதோ வெஜிடபிள் சமாச்சாரங்கள் சாப்பிட்டேன் . கோவைக்காய் மாதிரி ஒரு காய் பச்சையாக ( வேகவைக்காத  மாதிரி டைப்பு உப்பா புளிப்பா இருந்திச்சு .அப்புறம் டம்பிளிங் மாதிரி ஒரு ஐட்டம் .அது அவ்வளவு நல்ல இல்லே .ஐஸ்கிரீம்  சூப்பராக இருந்தது.

அடுத்த  நாள்  சிறுசேரி அருகே உள்ள ஏஷியானா  ஹோட்டலில். மதிய உணவு.
ப ஃ பே உணவு .
முதலில்  மஷ்ரூம் சூப்பு .
பிறகு குட்டி  உளுந்து போண்டா , புதினா சட்னி
கீரை  ( ரொம்பவே சூப்பர் )
தால்.,பனீர் ஃ பிரை.கத்திரிக்கா சாம்ரோட்,பொட்டடோ ஃ பிரை  (சுமார்தான்)கிட்டத்தட்ட ஒரு பதினைந்து விதமான காய்கறிகள் .எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்டு   (டேஸ்டு ?)
பண்ணினேன் .

அப்புறம் ஒரு குட்டி கேக் சைசில்  ஒரு பன் வெண்ணையுடன் .
பச்சை காய்கறிகளில் சாம்பிளுக்கு  என்ன இருந்ததோ அதில் எல்லாம் ஒரு ஒரு துண்டு.


வெஜிடபிள் பிரைடு ரைசு ஒரு கரண்டி மட்டுமே சாப்பிட முடிந்தது.
ரோட்டி ,நாண் சாப்பிடவில்லை .
நாக்கு சாப்பிடு என்று சொன்னாலும் வயிறு " stomach ஃ  புல் "   போர்டு  மாட்டிருச்சு  .


 இனிப்பு வகையறாவில்   இதுவரை சாப்பிடாத ஐட்டம்  ரெண்டு மட்டும் .
பேர் மறந்துவிட்டது
 (பேர் எல்லாம்  எழுதியிருந்தார்கள் , எனக்குதான்   வேலை பற்றிய கடமை ........ ஒகே  ஓகே  புரிந்தால் சரி)
கிரிணிப்பழம்.,பைனாப்பிள் ,தர்பூஸ்  எல்லாவற்றிலும் தலா மூன்று துண்டுகள் .

ஜூஸ்  ஒரு கிளாசு .

ஐஸ் கிரீம் வேணுமான்னு கேட்டார்கள் .
டீ., காஃ பி வேணுமான்னு கேட்டார்கள் .

வருத்தத்தில்  மனசு  நொர்....ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் . ( நொறுங்கும் சத்தம் ) .

 உலகத்திலே என்னென்னவோ கண்டு பிடிக்கிறார்கள் .
 (தேவைப்பட்ட போது )அதாவது இது மாதிரி நல்ல உணவு கிடைக்கும்போது
 வயிறு சைஸு  ஜாஸ்தி பண்ணிக்கிற மாதிரியும் ,சாப்பாட்டுக்கு வசதி இல்லாதபோது வயிறு சைஸு டொய்ங் ன்னு உள்ளே அமுங்கிறமாதிரியும் ஒரு   வழி  கண்டுபுடித்தால் மனித குலமே வாழ்த்துமே !

பெரிய மனிதர்களைத் தோற்கடிப்பவர்கள் நிஜமாகவே பெரிய மனிதர்களாக ஆகிவிடுகிறார்களா ?

 ரெண்டு நாளைக்கு முன்பு பஸ்ஸுக்கு காத்திருந்த போது  ரோடில் போய்க்கொண்டு இருந்த இரண்டு பேர்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள் .

அதில் ஒருவர் வீரபாண்டியக்கட்டபொம்மன் ஸ்டைலில்  வீர வசனம் பேசிக்கொண்டு இருந்தார். யாரை என்று சரிவரப் புரியவில்லை சமூகத்தில் பெரிய  அந்தஸ்த்தில் உள்ள   தனது கம்பெனி தலைவராக இருப்பார் போலும்  .ஒரு ஆளை "அவன் என்ன பெரிய  இவனா  இவனை தோக்கடிச்சு  இவனை சீனை வுட்டே ஓட வைக்கிறேன் பாரு ,காணாம போக வைக்கிறேன் பாரு !"    என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார் .
பக்கத்தில் இருந்த ஆளும் கூட  வாயாலே  பெட்ரோல் ஊத்தி ஊத்தி  நல்லாவே கொளுத்தி எரியவிட்டுக்கொண்டிருந்தார்.
 கடைசியா வீரபாண்டியக்கட்டபொம்மன் டயலாக் தன்  நண்பரிடமிருந்து விடை பெற்றுப் போகும்போது ஒரு கொலை வெறியோடு தான் போனார் .

ஏனென்று தெரியவில்லை இந்த பேச்சு என் மனதில் திரும்ப திரும்ப
 டி.வி  விளம்பரம் மாதிரி பல  ( சும்மா ஒரு பேச்சுக்குத்தான் " பல" ன்னு  போட்டேன் ,நான் ரொம்ப பிசி ஆளு ன்னெல்லாம் நினைச்சிடாதீங்க )வேலைகளுக்கு நடுவிலேயும்  என்ட்ரி குடுத்துக்கிட்டே இருந்தது.
 யோசிச்சுப் பாத்தேன்.
பெரிய மனிதர்களைத் தோற்கடிப்பவர்கள் நிஜமாகவே பெரிய மனிதர்களாக ஆகிவிடுகிறார்களா ?

 பெரிய மனுஷன்னு நான் நினைக்கிற மனிதர்களில் நெப்போலியன் பொனபார்ட்  பிரதானமானவர். அவரை வாட்டர்லூ  போரில் தோற்கடித்த டியூக்  ப் வெலிங்டனை   நினைவில் வைத்திருப்பவர்களை விடவும் நெப்போலியன்  போனபார்டை  நினைவில் வைத்திருப்பவர்களே அதிகம் .
நெப்போலியன் பொன்மொழிகள்  என்பதுபோல் டுயூக்  ப் வெலிங்டன் 
பொன்மொழிகள் உள்ளதா என்று தெரியவில்லை .
 பெருந்தலைவர்  காமராஜர்  பற்றி  இன்றளவும் பேசப்படுகிறது. ஆனால் அவரைத் தேர்தலில்  தோற்கடித்தவரைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

 இது போலவே வின்ஸ்டன் சர்ச்சிலை தோற்கடித்தவர் . திருமதி இந்திரா காந்தி .செல்வி ஜெயலலிதா இவர்களைத் தோற்கடித்தவர்களை எல்லாருமே  மறந்துவிட்டனர்.

எனவே ஒரு பெரிய மனிதரைத் தோற்கடிப்பதில் நேரம் செலவு செய்வதை விட   நமது தகுதியை வைத்து நாம் பெரிய ஆளாவது தான் முக்கியம் போலே .  
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

Friday 11 October 2013

வேலை செய்ய ஆரம்பித்த ஆட்டோ மீட்டர் வாழ்க !

ஆட்டோ  மீட்டர் என்ற ஒரு சாதனம் ஆட்டோ வில் இது வரை பொருத்தப்பட்டு இருந்தாலும் அது இது வரை ஆட்டோவின் ஒரு அலங்காரப் பொருளாகவே இருந்தது.
ஆட்டோ வின் உள்ளே ஒரு காலை வைத்தாலே 30 ரூபாய் என்று தான் கேட்பார்கள். ரெண்டு காலையும் வைத்தால் நமது சொத்தையே விற்றால்தான் ஆட்டோ சவாரி செய்யமுடியும் என்பது போல ஒரு ரேட்டு சொல்வார்கள் .

ஒரு முறை நான் ஆட்டோகாரரிடம்   அசோக் பில்லரிலிருந்து சென்ட்ரல் போக எவ்வளவு என்று கேட்டேன்
ரூபாய் 300/- என்றார் .
 என்னப்பா கடைசியில் பாங்கு  லோன் போட்டாத்தான் ஆட்டோவில்  ஏறமுடியும் போல  ரேட்டு சொல்றியே என்றேன்.
ஆட்டோக்காரரே  சிரித்துவிட்டார் .
இல்லம்மா , திரும்பி வரும்போது காலியாத்தானே வரணும் என்பார்கள் .

அது ஏன் அவர்கள் நாம் ஏறும்  அதே இடத்துக்கு திரும்ப வரணும்  என்ற லாஜிக் எனக்கு புரிவதே இல்லை .
இதே போல பஸ்,ரயில் ,விமானம் இவற்றில் இவர்கள் பயணம் செய்யும்போது டபிள் சார்ஜு வாங்கினால் ஒத்துக்கொள்வார்களா ?
வெட்டி விவாதங்களால் நாலு காசு நமக்குப் பிரயோசனம் இல்லை என்ற தெளிவு எனக்கு   உண்டு .
 அதனால்  ஆட்டோவில் ஏற ரொம்பவே யோசித்துதான் ஏறுவேன் .
தவிர்க்க முடியாத காரணம் இருந்தாலொழிய ஆட்டோவை  தவிர்ப்பேன் .

ஏனென்றால்  உதாரணமாக   2004ம் வருடத்தில் கும்பகோணத்திலிருந்து
 சென்னை வர ரூபாய் 90 லிருந்து 140 ரூபாய்  பஸ்ஸை பொறுத்து மாறும் .ஆனால் கிண்டி கத்திபாரவிலிருந்து கே.கே,நகர் வர ரூபாய் 100 ஆகும்.
ரொம்ப வேடிக்கை யாக இருக்கும். (வேதனை? )

இப்பொழுது அங்கங்கே
"உங்கள்  வழிப் பயணச்  செலவு
எங்கள் வாழ்க்கைச் செலவு "
என்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் அதையே நாம் பயணிகள்  சொல்வது மாதிரி  திருப்பிப் போட்டுப் படித்துப் பாருங்கள் .

"உங்கள் வாழ்க்கைச் செலவு
எங்கள் பயணச் செலவு "

இதுதான் உண்மை  நிலையாக இருந்தது.

 ஆனால் இப்போது நிலைமை பரவாயில்லை .
அண்ணா பல்கலைக்கழகம்  (கிண்டி) யிலிருந்து அசோக் பில்லர் வர 150/- ரூபாய் கொடுத்து வந்த நான் இப்போது ரூபாய் 75லிருந்து ரூபாய் 85 வரை  கொடுத்து வருகிறேன் . எந்த அளவுக்கு மக்கள் நஷ்டம் அடைந்து  இருக்கிறார்கள்  பாருங்கள் .
மீட்டர் போட்டால்   மட்டுமே ஆட்டோவில் ஏறுகிறேன்.
இதே நிலை தொடர்ந்தால் மக்களும் பயனடைவார்கள் .ஆட்டோ ஓட்டுனர்களும்  பயனடைவார்கள் .

Monday 7 October 2013

தாசில்தார் உத்தியோகம் .

தாசில்தார் உத்தியோகம் என்பது ஒருகாலத்தில் பட்டி தொட்டி பட்டணம்  எல்லாம் ரொம்ப மதிப்பாகப் பேசப்பட்டது.இந்தக் காலத்தில் ஐ.டி கம்பெனிகளும் அம்பானிகளும் வந்தபின்  பட்டணங்களில் பெரிய அளவில் பேசப்படுவதில்லை என்றாலும்   மொ ஃ பசலில்  தாசில்தார் உத்தியோகத்தின் மவுசு அவ்வளவாகக் குறையவில்லை . (பல வெரைட்டி யான சர்டிபிகேட்டும்  வாரி வழங்கும் சூப்பர் மார்கெட்டு  அந்த தாசில்தார் உத்தியோகம் )

ஒரு பழமொழி கூட உண்டு . தான் விதியை  தானே நொந்துக்கும்போது    "ஆசை இருக்கு தாசில் பண்ண அதிஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க " என்று சொல்வார்கள்.
. இந்த தலைப்பில் ஒரு நாடகம் கூட வந்த ஞாபகம் .
அதே போல் வீட்டில் ஏதாவது வேலை சொல்லி நாம் பிசியால் ( சாக்கு போக்கு சொல்லி )செய்யாமல் இருந்தால்  "ஆமா பெரிய தாசில் உத்தியோகம் தட்டுகேட்டு போவுது ,ஒழிசல் பேர்வழி என்று குடைச்சல் குடுப்பார்கள்.

இப்பொழுதெல்லாம்  தாசில்தார் உத்தியோகம் பற்றி அவ்வளவாக  யாரும் பேசுவதில்லை . ஆனால் நான் அடிக்கடி உபயோகிக்கும் ஒரு பழமொழி " தாசில்தாருக்குத்தான்  தாசில் வேலை போச்சு சமையல்காரனுக்கு  சமையல் வேலை போகலையே !" என்பேன் .
இந்தப் பழமொழி யின் பின்னே  ஒரு சுவாரசியமான கதை உண்டு.
ஒரு ஊரில் ஒரு   தாசில்தார்  இருந்தார் . அவருக்குக் கல்யாணம் ஆகலை .அவர்கிட்டே ஒரு சமையல்காரர் இருந்தார் .  தினம் தாசில்தாருக்கு சாம்பார் ,ரசம் ,கூட்டு ,பொரியல்,அப்பளம் வடை இனிப்பு என்று ஒரு ஐட்டத்தில் கூட குறை வைக்காமல் ருசியாக பார்த்து  பார்த்து    சமையல் செய்து போட்டார்.

ஒரு நாள் தாசில்தார்  ரிட்டயர் ஆகிட்டார் .அவருக்கு சம்பளம் குறைந்ததும் ரொம்ப கவலை வந்துவிட்டது.
 அதனால் சமையல்காரரிடம்  இனிமே நாளைலேருந்து  சாம்பார் இல்லாட்டி ரசம் ஏதாச்சும் ஒண்ணு போதும்.அதே  மாதிரி  கூட்டு  பொரியல் ரெண்டும் வேணாம்.ஏதாவது ஒண்ணே போதும்.இனிப்பு வெள்ளிக்கிழமை மட்டும் செஞ்சா  போதும். மத்தபடி அப்பளம் ஞாயித்துக்கிழமை  மட்டும் போதும்.எல்லாம் விவரமா விளக்கமா சொல்லிட்டார்.

ஒருமாசம் கழித்து கணக்கு பாத்தா சாப்பாட்டு செலவு ஒண்ணும் கணிசமா குறையவில்லை .

தாசில்தார்  தலையிலே ஏகப்பட்ட இடியாப்பம் .
குழம்பிட்டார் .

சரி சமையக்காரர் கிட்டே விவாதிக்கலாம் என்று போனால்  தாசில்தாருக்கு ஒரே ஷாக் !
சமையக்காரர்  தலை வாழை   இலையில்    சாம்பார் ,ரசம் ,கூட்டு ,பொரியல்,அப்பளம் வடை இனிப்பு  என்ற சகல  ஐட்டங்களுடன்
 குறை ஒன்றும் இல்லை என்று    சப்பு கொட்டிக்கொண்டு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்   .
தாசில்தார்  சமையக்காரர் கிட்டே
" என்ன சமையல்காரரே , நான் சிக்கனமாக இருக்கனுமின்னு ஐட்டமெல்லாம் குறைச்சுட்டு சாப்பிட்டுகிட்டு இருக்கேன்    நீங்க பாட்டுக்கு கல்யாண விருந்து மாதிரி ஜமாய்ச்சுகிட்டு இருக்கீங்க? ."
சமையல்காரர் சம்பிரதாயப்படி  சாரி பூரி  எல்லாம் சொல்லலை .
கொஞ்சம் கூட அலட்டிக்காம செம கூலாக
"சார் !தாசில்தாருக்குத்தான் தாசில் வேலை போச்சு , சம்பளம் குறைஞ்சு போச்சு அவர் சாப்பாட்டை குறைச்சுகிறது நியாயம் . சமையல்காரருக்கு அவர் வேலையும் சம்பளமும் அப்படியே இருக்கும்போது அவர் ஏன் சாப்பாட்டை குறைச்சுக்கணும்?"
தாசில்தார் வாயே திறக்கலை .
என்னை யாராவது  சம்பந்தா சம்பந்தமில்லாமல்  என்  அடிப்படை சௌகரியத்தை குறைச்சுக்கோ ,என்றால் நான் எப்போதும் தாசில்தாருக்குத்தான்  தாசில் வே
லை போச்சு சமையல்காரனுக்கு  சமையல் வேலை போகலையே !" என்பேன் .
இதே மாதிரி காரியம் முடிஞ்சதும் என்னை டீலில் விட்டு விட்டு கழண்டுக்கும்
பேர்களையும் பார்த்து என்னை  கிணறு இன்ஸுபெக்டு  பண்ண போன    தாசில்தார் மாதிரி விட்டுட்டீங்களே என்பேன்.

இதற்கும் பின்புலத்தில் ஒரு காமெடி கதை இருக்கு .

ஒரு படு நேர்மையான தாசில்தார். அவர் வேலை பார்த்த  ஊரிலெ   கிணறு  வெட்டிகிட்டு இருந்தாங்களாம் . இவரு அந்த வேலை எப்படி நடக்குதுன்னு  பாக்க கிணத்துக்குள்ளே இறங்கி பாத்துக்கிட்டே இருக்கார்.கிணற்றின்    மேலே அவரின் கீழ் வேலை பார்ப்பவர்கள்  ஒரு கயிறு கொண்டு அவரைப் பிடித்துகொண்டு இருக்கிறார்கள் . வெளியே  ஏதோ சத்தம் கேக்குது .தாசில்தாருக்கு  என்ன நடக்குதுன்னே புரியலே .
"திடும்"னு  பிடிச்சுக்கிட்டிருந்த கயிறை அப்படியே விட்டுட்டு  ஓடிட்டாங்க .
கீழே விழுந்த தாசில்தாரை அப்புறமா அந்த பக்கம் வந்த அந்த ஊர்  ஆள் ஒருத்தர் காப்பாத்தினாரம்  .
 "ஏன் கயிறை வுட்டுட்டு  ஓடிட்டீங்க" ன்னு  அவரின் கீழ் வேலை பார்ப்பவர்களைக்  கேட்ட  போது அவர்கள் சொன்ன பதில்.
 "புது தாசில்தார் சார்ஜு எடுக்க வந்துட்டார் ன்னு கேள்விப்பட்டோம்  .அதான் அவரை வரவேற்க  ஓடிட்டோம் ."
தாசில்தார் உத்தியோக நிலைமையை பார்த்தீங்களா ?

Saturday 5 October 2013

ரூபனின் தீபாவளிச் சிறப்புக்கவிதை

நாம் சிரித்தால் தீபாவளி .


தெள்ளு தமிழ் பேசும் தமிழகத்தில் 
தீமையை அழிக்க திக்கெட்டும் தீப 
ஒளி ஏற்றும் நாள் தீபாவளி .

கவினுறு காவுடை காஷ்மீரத்தில் 
காவலையும் கட்டுக்களையும் மீறி குண்டு
வைத்து கண்ட மேனிக்கு தீபாவளி .

பல நாடுகளில் பன் முறையும் பாவம் 
பார்க்காது பகைமையாலும்   பதிலடியாலும்   
பரிதவிப்போருக்கு  பன்னாட்கள்  தீபாவளி .

 மக்களை மகிழ்விக்க மருந்துகள் பல
 கொண்டு உருவாக்கும் தொழிலாளிக்கு
கை தவறினால் மரணத் தீபாவளி .
உலகில் 
பகைமை மறைந்து அமைதி நிலவி 
வறுமை ஒழிந்து வளமை பெருகி 
 சிரிக்கும் நாளே  நல்ல தீபாவளி 

 My blog is abayaaruna.blogspot ,com
 Name UmaMaheswari

Friday 4 October 2013

தனி ஒரு மனிதனுக்கு மைதா இல்லையேல் ஜகத்தினை ......

மைதா மாவு உபயோகிக்கலாமா கூடாதா  என்ற  சர்ச்சை மிளகாய் மிளகாக  ஹி ஹி அதான் மிகவும் கார சாரமாக விவாதிக்கப் பட்டு வரும் இந்நாளில் நான்  மைதா மாவுக்கு ஆதரவோ எதிர்ப்போ சொல்லப்போவதில்லை .

 (எப்படி சொன்னாலும் இன்னொரு குரூப்பு
நம்மளை அடிக்கும் . ஏன்னா  இப்ப எல்லாம் ஒரு குரூப்பாத் தானே இருக்காங்க வயசான காலத்திலே எதுக்கு வம்பு ?)


மைதா மாவை  அதற்கு  எதிரான   போராட்டங்களுக்கு  செவி சாய்த்து தடை செய்தால் என்ன ஆகும் என்று தான் நான் ஆராய்ச்சி செய்தேன்.
நிறையப்பேர் புரோட்டா  (பரோட்டா) பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்
 .
 மைதாவை  தடை செய்தால் பலியாவது  புரோட்டா  (பரோட்டா) மட்டுமில்லை.

முதல் முதலில் "ஹேப்பி  பர்த்டே "அன்று கேக்கு சாப்பிடமுடியாது.
ரொம்பவும் கிரியேட்டிவாக செய்யும் பல கேக்குகளுக்கு டைனோசருக்கு ஏற்பட்ட தலை விதியே நேரும்.

 அதை தயார் செய்யும் பல தொழிற்சாலைகளும் மூடும் அபாயம் உள்ளது.பலர்  வேலை இழக்க நேரிடும் .பிறகு திருட்டுத்தனமாக வெளிநாட்டிலிருந்து கேக்குகளை கடத்திக்கொண்டு  கொண்டுவருவார்கள்.
ஏர்போர்ட்டில் கேக்கு கடத்திக்கொண்டு வரும் மக்கள் பிடிபடுவார்கள். (தங்கம் கடத்திக்கொண்டு வந்து பிடிபடுவது போலே )
கேக்குகள் மறைமுகமாக விற்பனை ஆகும் .

இதே போல்  பிரெட்  சான்ட்விச் பிஸ்கெட்டு சமோசா ,பஃப் ,போளி. குலொப்ஜாமூன் ,சூரியகலா ,சந்திரகலா போன்ற மைதாவை மூலப் பொருளாக வைத்து தயார் செய்யும் பல இனிப்பு வகையறாக்களுக்கும் தடா வந்துவிடும்.
அது சம்பந்தமான பல ஓட்டல்களும் நசியும்.அவற்றில் ஈடுபட்டுள்ள  தொழிலாளர்களும் வேலை இழக்க வேண்டிவரும்.


இவற்றுக்கெல்லாம் வயது வித்தியாசமின்றி  பழகிவிட்ட நமது நாக்குகள் இதை வரவேற்குமா?(பிளாஸ்டிக்  பைகளுக்கு  அடிமையாகிவிட்ட  மாதிரி )

யாராவது இதற்கென்று  தனி ஒரு மனிதனுக்கு மைதா இல்லையேல் ஜகத்தினை .அழித்திடுவோம் .....என்று ஒரு பொதுநல வழக்கு ஒன்று போடுவார்கள்.
பஸ் ஸ்டாண்டுகளிலும்  ,ரயில்வே ஸ்டேஷனிலும்  ,வெட்டியாக டைம் பாஸ் செய்ய நேரம் கிடைக்கும்போது இந்த மேட்டர்   நன்றாக அடித்து துவைத்து அலசப்படும்.
பல டி.வி சேனல்களுக்கு சூப்பர் மேட்டர்    கிடைத்தது  .சமுகத்தின் பல தரப்பினரும் இந்த விவாதத்தில் பங்கேற்பார்கள்.

  மூளை உள்ளவர்கள் , மற்றும் பிழைக்கத்  தெரிந்தவர்கள் கருமமே கண்ணாக சர்க்கரைக்கு மாற்று ஒன்று கண்டுபிடித்த மாதிரி மைதாவுக்கும் ஒரு மாற்று மைதா கண்டிபிடிப்பார்கள் .

பிறகு கடைசியில் சிகரெட்டு மாதிரி பொடியான எழுத்துக்களில் "மைதா உடல் நலத்திற்கு கேடு "  என்று " சுபம்  " போடப்பட்டுவிடும்.