Tuesday 8 June 2021

உலகப் பெருங்கடல் தினம்

 

இன்று (ஜூன் 8) உலகெங்கிலும் உலகப் பெருங்கடல் தினமாக கொண்டாடப்படுகிறது, நம்  வாழ்க்கையில் பெருங்கடல்கள் வகிக்கும் பங்கின் முக்கியத்துவத்தை அறியும் விதமாக இது  அனுசரிக்கப் படுகிறது 

முக்கியமாகக்  கடல் மற்றும் கடல்சார் உயிரினங்களைப்   பாதுகாக்கவே இந்த  தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'நிலையான பெருங்கடலுக்கான புதிய முயற்சி' என்பதே   இந்த வருடத்தின் தீம் .

 கடல் இல்லாவிடில் சரக்குப் போக்குவரத்து  இல்லை . ஏற்றுமதி இறக்குமதி பிசினஸ் என்பது கடலில்தான் .  உலகில் பலர்  கடல் மற்றும் கடல் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ளனர் .   தெரிந்தோ தெரியாமலோ நாம் எல்லோருடைய வாழ்விலும் கடல்  எதோ ஒரு விதத்தில் சம்பந்தப் பட்டுள்ளது .

 சென்னையில் இருந்த வரை பீச்சுக்குப் போனேன் ,ஜாலியா தண்ணீரில் நின்றேன்  ,தேங்கா  மாங்கா  சுண்டல்  முறுக்கு சாப்பிட்டேன் . 

நடந்தோம் காத்து வாங்கினோம் . அவ்வளவே 

அதை பற்றி ரொம்பப் பெருமையாக வெல்லாம்   நினைத்ததில்லை .

 அதாவது  கடலைப் பார்ப்பது , கடல் தண்ணீரில் நிற்பது எல்லாம் ஒரு வரம் , இது எல்லாருக்கும் கிடைப்பதில்லை என்கிற ஒரு உண்மையை  நான் டெல்லியில் வேலை பார்த்த  போதுதான் அறிந்து கொண்டேன் .

 பொதுவாக மதிய உணவு வேளை நேரத்தில் பல மாநிலத்திலிருந்து வந்தவர்கள் எல்லோரும் ஒன்று கூடி உணவு உண்போம் . எல்லோருமே அவங்க அவங்க மாநிலம் பற்றி புகழ்ந்து கொள்வதோடு மட்டுமில்லாமல் அடுத்த மாநிலத்தைப்  பற்றி கிண்டல் அடிப்போம் . எல்லாமே விளையாட்டுக்காக  மட்டுமே 

 இதில் ஒரு உத்தர பிரதேசத்திலிருந்து வந்த கிளார்க் ஒருத்தர்

 உத்தர பிரதேசம் இந்தியாவின் புண்ணிய பூமி . இராமர் அவதரித்த ஊர் .அங்கே விளையும் கறிகாய்கள் தான் சுவை மிகுந்தவை , பல புண்ணிய நதிகள் உள்ளன . உத்தர பிரதேசம் பற்றி ஓவராக பேசுவார் . 

உத்தர பிரதேசத்தில் பல கோயில்கள் உள்ளன .

அவ்வளவு ஏன் ? இந்தியாவின் அத்தனை பிரதம மந்திரிகளும்  உத்தர பிரதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்று நெஞ்சு கொள்ளாப் பெருமையுடன் சொல்லுவார் . இது நடந்தது 1982ல்

 தொட்டால் சுவரெல்லாம்  சுடுகிற அளவு டெல்லி கோடை வெயில் . 

மதிய உணவு வேளை .

மே மாதத்தில் வெயில் கொடுமை யார் யார் ஊரில் எப்படி இருக்கும் என்று பேச்சு வந்தது .

 சென்னையிலிருந்து  வந்த ஒருவர் எங்க  வீட்டிலே எல்லாம்  சம்மர் என்றால் 

  இரவில் கிட்டத்தட்ட எல்லா நாளும் பீச்சுக்குப் போய்விடுவோம் . சாப்பாடெல்லாம் அங்கேதான் என்று சொல்ல  அந்த உ.பி காரருக்கு  ஒரே வியப்பு . நிஜமாவா நிஜமாவா  என்று ஆச்சரியம் தாங்க வில்லை அவருக்கு . 


இதுக்கு ஏன் இப்படி உணர்ச்சி வசப்படறே அப்படின்னதுக்கு அவர் வாழ்க்கையிலே கடலே பார்த்ததில்லை என்றார் . சினிமாவில் மட்டும் தான் பார்த்திருக்கேன் . ரொம்ப ஆசை பாக்கணுமின்னு . ஆனால் முடியவில்லை . அவங்க குடும்பத்திலே அவங்க தாத்தா மட்டும் அந்தக் காலத்திலே ராமேஸ்வரம் வந்து யாருக்கோ திதி குடுத்து விட்டு அங்கே இருந்து கன்யாகுமரி வரை  வந்து பாத்துட்டுப் போனாராம் .  மூன்று கடல்களும் சங்கமிக்கும்  இடம்.. என்று ரொம்பவே பரவசப் பட்டுப் பேசினார் . 

அதாவது கடந்த மூன்று  நான்கு தலை முறையில் ஒருவருக்கு  மட்டுமே   கடலைக் கண்ணால் காணும் பாக்கியம், கடல் நீரில் காலை நனைக்கும் பாக்கியம், கடற்கரையில் நடக்கும் பாக்கியம், கிடைத்து உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் 

நானும் கன்னியாகுமாரி போயிருக்கிறேன் . எனக்கு எல்லாம் ஒரே கடல் மாதிரித்தான் தெரிந்தது .   மூன்று கடல்கள் கலக்கும் இடம் என்கிற உண்மை புரிந்தது .

ஆனால் உணர்ச்சி வசப் படவில்லை .

 சரியாகச் சொன்னால்  கன்னியாகுமாரியைப்  பார்க்காத , தாத்தா  விவரித்த கன்யாகுமாரியைப் பற்றிக் கேட்க மட்டுமே முடிந்த அவர் அடைந்த பரவசம்

 கன்னியாகுமாரியைக் கண்ணால் பார்த்த எனக்கு வரவில்லை .

பாங்கு எல் டி சியில்  அவருக்குச் சென்னைப் பக்கம் வர ஆசை. ஆனால் மொழிப் பிரச்னை தவிர அவருக்கு இரன்டு பெண்கள் . வயதான பெற்றோர் . எனவே  ராமேஸ்வரம் கன்னியாகுமாரியைப்  பார்க்க ஆவல் இருந்தாலும் பயம்.

அவருக்கு ஆங்கிலம் வேறு தகராறு . சொல்ல நினைப்பது ஒன்றாக இருக்கும் ஆனால் சொல்வது வேறாக இருக்கும் . .  அதனால் அவர்  வட இந்தியா மட்டும் அதாவது ஹிந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் தான் போவார்  .மும்பை போகவும் அவருக்குப் பயம் , மராட்டி பேசுவார்கள் என்று ,

வாழ்க்கையில் கடலைப் பார்க்க கடவுள் அருள் புரிந்தால்தான் உண்டு .கொஞ்சம் வருத்தத்தோடுதான் அவர்  சொன்னார் 

இந்த நிகழ்ச்சிக்குப் பின் கணக்கெடுத்துப் பார்த்தால் நிறையப் பேர் (கிளார்க்குகளில் ) குறிப்பாக டெல்லி வாழ் மக்கள் கடலைப் பார்த்ததில்லை என்று . 

அன்று தான் எனக்கு  ஒரு அப்பட்டமான உண்மை .புரிந்தது



நம்   வாழ்க்கையில்  கடலில் காலை நனைப்பது கடல் காற்று மெல்ல நம் உடலை வருடுவது போன்ற நமக்குக்   கிடைத்த சில சிறு  சிறு விஷயங்கள் என்பவை பல  பேருக்கு அது நடக்கவே முடியாத கனவு  என்பதை இந்த உலகப் பெருங்கடல் தினம் அன்று நினைவில் கொள்ள வேண்டும் ..


16 comments:

  1. அத்தனையும் உண்மை.

    ReplyDelete
  2. நல்ல கடல் நினைவலைகள். நாங்க சின்ன வயதில் திருவல்லிக்கேணியில் இருந்ததால் தினமும் பீச்சுக்குப் போவோம். அது ஒன்று தான் செலவில்லாத பொழுது போக்காகவும் இருந்தது. ஒருமுறை வங்காள விரிகுடா என்று பாடத்தில் படித்துக் கொண்டிருந்த போது அப்பா சொன்னார் நாம் தினமும் போகிறோமே அதுதான் பே ஆஃப் பெங்கால் என்னும் வங்காள விரிகுடா என்று. என்னுடைய பரபரப்பிற்கு எல்லையேயில்லை அன்று. அதுவரை கடலை பார்த்த எனது பார்வை முழுமையாக மாறிவிட்டது.அதேபோல நீண்ட கடற்கரை என்ற பெருமையும் கொண்டது நமது கடற்கரை.
    என்னுடைய நினைவலைகளையும் பொங்கச் செய்துவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.கடலை ஆசை தீரக் கண்டு களித்த நாமெல்லாம் இறைவனுக்கு நன்றி சொல்லணும்

      Delete
  3. நினைவுகள் நன்று. உண்மை தான். வட இந்தியாவில் பலர் கடல் பார்த்ததில்லை. சுற்றுலா போன்றவை அதிகரித்த பிறகு தான் அங்கே இருப்பவர்கள் பலர் தமிழகம், கேரளம், கோவா, அந்தமான் என சுற்ற ஆரம்பித்து கடலை பார்த்திருக்கிறார்கள். கடல் பற்றி பேசினாலே இன்னமும் அதிசயமாகப் பேசும், பார்க்கும் பல முதியவர்களை இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.

    இனிமையான நினைவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி. கடலையே இதுவரை பார்க்காத மனிதர்கள் இருக்கும் உண்மை அன்று தான் தமிழ் நாட்டிலிருந்த சென்ற எங்களுக்குப் புரிந்தது

      Delete
  4. கடல் மனதிற்கு மருந்து...

    ReplyDelete
  5. உண்மைதான்
    கடலைப் பார்க்காதவர்கள் அநேகர் உண்டு,

    ReplyDelete
  6. நல்ல பதிவு.ஓயாமல் அலைகள் வருவதைப் பார்க்கும்போது நமக்குள் ஏதோ ரசாயன பரிமாற்றம் நடப்பது போல இருக்கும். கண்கள் இமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க முடியும். வித்தியாசமான அனுபவம் சொல்லும் பதிவு.

    ReplyDelete
  7. அருமையான பதிவு. ஒரு முறை உ.பி.யிலிருந்து அண்ணா பல்கலைகழக நுழைவுத் தேர்வு எழுத என் கணவரின் நண்பரின் பெண்கள் இருவர் சென்னைக்கு வந்து எங்கள் வீட்டில் தங்கியிருந்தார்கள். அந்தப் பெண்கள் கடலை பார்க்க ஆசைப்பட்டால் பெசண்ட் நகர் பீச்சுக்கு அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு ஒரே சந்தோஷம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி.ஆம் கடலைப் பார்க்க எங்கும் மனிதர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்

      Delete