Tuesday 29 December 2015

தனி ஒரு பெண்ணிற்குகேபிள் கனெக்ஷன் இல்லையேல் .....திருமணத்தை நிச்சயிக்கும் கேபிள் கனெக்ஷன்




 தமிழர்களின் வாழ்வோடு இணைந்த  விஷயங்களில் முக்கியமானவை சினிமாவும்   டிவி யும் என்பதற்கு பட்டி மன்றம் தேவையே இல்லை .
 எனக்கு நன்றாகவே தெரிந்திருந்தாலும் சமீபத்தில் நடந்த ஒரு சுவாரசியமான உரையாடலைக் கேட்டால் நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் .
 நான் எனது இரண்டாவது மகனுக்கு வெகு தீவிரமாகப் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன் .
நான் சொல்லும் பெண்கள் அவனுக்குப் பிடிப்பதில்லை ,மேலும் அவன் நல்ல உயரம் வேறு . எனவே சாய்ஸ் கொஞ்சம் கம்மிதான் .
 ஒரு பெண் போட்டோ பார்த்தேன் , எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது .
நல்ல உயரம் ,நல்ல காலேஜில் படித்திருந்தாள்.. வேலையிலும் இருந்தாள். பிறகு போன் நம்பர் மாட்ரிமோனி ஆபிசிலிருந்து வாங்கி போன் செய்தேன்.

 இதற்கு முன் என் குடும்பத்தைப் பற்றிய ஒரு முன்னுரை இருந்தால்;தான் உங்களுக்கு விவரம் புரியும்..
 பசங்க ஹைதராபாத்தில் இருந்த பொதுவாக  டிவி பற்றி அவ்வளவு ஆர்வம் கிடையாது . அடிக்கடி வெளியில் கூட்டிப் போய் விளையாட விடுவோம். கிரிக்கெட் ஃ புட் பால் இரண்டு மட்டுமே தெரியும் .
இராமாயணம் சீரியல் கிருஷ்ணா சீரியல் மட்டும் தான் பார்ப்பார்கள் .
 நான் டிவி அறவே பார்ப்பது கிடையாது ,  சரியோ தவறோ குழந்தைகளின் கண் பார்வை கெடும் என்ற எண்ணம் எனக்கு . என்னைப் பார்த்தே குழந்தைகளும் டிவியில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள் .
 எனக்கு ஆஸ்த்மா தொந்திரவு ஹைதராபாத் வந்தபின் வந்ததால் தியேட்டர் களுக்கும் அழைத்துப் போனது கிடையாது.
 பிறகு தமிழ் நாட்டுக்கு வந்த பின் கேபிள் டிவி பற்றி தெரிந்து கொண்டு
 கேபிள் கனெக்ஷன் போடு போடு என்றதால் போட்டேன் . அப்போது நான் அரக்கோணம் அருகே உள்ள பிராஞ்சில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன் .  வீட்டுக்கு வர எட்டு மணி ஆகிவிடும் .பிறகுதான் சமையல்  படிப்பு தவிர  பசங்களை யும் கவனிக்கணும் ,  பொதுவாக நான்  வருமுன் ஹோம் ஒர்க் முடித்துவிடுவார்கள்  பாடம் நான் வந்த பின் என் கண்காணிப்பில் .

நன்றாகப் படித்துக் கொண்டிருந்த பசங்க கேபிள் கனெக்ஷன்  வந்தபின் படிக்கவில்லை . மார்க்குகள் குறைந்தது  பெரியவன் நாலாவது சின்னவன் இரண்டாவது . பிறகு நான்  டிப்லாமாட்டிக்காக  பசங்களைத் திட்டவில்லை கேபிள் கனெக்ஷன்  காரனைத் திட்டிக்கொடிருந்தேன் . பிறகு அவர்களாகவே அடுத்த நாள் அம்மா கேபிள் கனெக்ஷன்  வேண்டாம் கோடை விடுமுறையில் மட்டும் போட்டுக்கொள்ளலாம் என்று சொல்லியதும் 2005 வரை எங்கள் வீட்டில் கேபிள் கனெக்ஷன்  கிடையாது.  கோடை விடுமுறையில் ஒரு இரண்டு மாதம் மட்டுமே
  மற்ற நாட்களில் பொதிகை மட்டுமே வரும் . இதனால் எங்கள் வீட்டுக்கு வரும் உறவினர்கள் எல்லோருக்கும்  செம  எரிச்சல் சீரியல் பாக்கமுடியாது ஒரு மாச் பாக்கமுடியாது இதெல்லாம் ஒரு வீடா என்று சகட்டுமேனிக்கு ....அதுவும் என்னைத்தான் திட்டுவார்கள் . நான் மசியவில்லை
 பசங்க சின்ன வசாயிருக்கும் போது என் கணவர் தான் சினிமாவிற்குக் கூடிப் போவார்
. பசங்களுக்கு இன்று வரை அது ஒரு பெரிய குறையாகத் தெரியவில்லை .
இப்போது இருவருமே நன்கு படித்து நல்ல வேலையில் .

இது நான் எப்பவோ மறந்து விட்ட விஷயம் .
 மறுபடி பெண் பார்த்த விஷயத்திற்கு வருவோம்
  பெண்ணின் அப்பாவிடம் போனில் பேசினேன் ,  பெண்ணின் படிப்பு வேலை அவளது தந்தையின் வேலை ஊர் , ( திருச்சி என்பதால் நானும் படித்த இடம் எனவே ரொம்ப வாஞ்சையோடு பேசினேன் ) என் கணவர் மூத்த மகன் பற்றியெல்லாம் பேசியபின் என் உறவினர்கள் பற்றி கேட்டார் . சொன்னேன்


 சொன்னதும்   உன் வீட்டிலே  எவன் பொண்ணு கொடுப்பான் என்கிற தொனியில்"  ஒ!ஓ ! அவங்களா நீங்க ?வீட்டுலே ஒரு கேபிள் கனெக்ஷன் கூட இல்லாம இருக்குமே அவங்களா .... புரியுது புரியுது   " என்றதும் எனக்கு ஒரே ஷாக் !
 நான்  சின்ன வயசில் வங்கியில் நேரடியாக ஆபீசர் வேலைக்குச் சென்றதும் இப்போதும் அதற்கு துளியும் சம்பந்தமில்லாத வேலையில் இருப்பது பற்றி எல்லோராலும் பெருமையாக மட்டுமே பேசப்பட்ட என்னைப் பற்றிய
அந்த மனிதரின் மதிப்பீடு நிஜமாகவே  எனக்கு ஷாக் அடித்த மாதிரி தான் இருந்தது .
ஒரு மனிதரை அவர் வீட்டில் இருக்கும் கேபிள் கனெக்ஷனை ஒரு அளவு கோலாக  வைத்து மதிப்பிடும் மனிதனின் மடமையை நினைத்து ஒரு நிமிடம் எனக்குக் கோபம் வந்தது என்னவோ உண்மைதான் .
பிறகு சுதாகரித்துக் கொண்டு
 " நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் .  ஒத்துக் கொள்கிறேன் .இப்போது எங்கள் வீட்டில் கேபிள் கனெக்ஷன் உள்ளது . ஆனால் நான் என் மகனுக்குப் பெண் பார்க்கும்போது எந்த  பெண்ணின் தந்தையும் உங்க பையன் மாசம் எவ்வளவு கிரிக்கெட் மாச் ஃ புட்பால் மாச் பாக்கிரான்னோ நானும் உங்க பொண்ணு மாசம் எவ்வளவு சீரியல் அல்லது சினிமா பாக்கும்ன்னோ  கேட்டதில்லை.
 என்றதும் வைத்துவிட்டார் போனை .
 ஒரு பொறுப்பான பெண்ணின் தந்தை வரும் மணமகன்  படிப்பு எப்படி வேலை எப்படி தண்ணி அடிப்பானா சிகரெட் பிடிப்பானா வேறு கெட்ட  குணங்கள் உண்டா என்று பார்ப்பதை விட்டு விட்டு கேபிள் கனெக்ஷன் பற்றி கேட்டால் .......... நாடு போகும் பாதை    ?

Thursday 17 December 2015

சென்னை வெள்ளம்



 சென்னை வெள்ளம்
 பற்றி எல்லோருமே எழுதி விட்டார்கள்
ஒரு வாரமாக இருட்டில் வாழ்ந்து கொண்டிருந்தோம்
வீட்டைச் சுத்தம் செய்ய இவ்வளவு நாட்கள் தேவைப் பட்டது .

எங்கள் வீட்டைச் சுற்றி ஒரே வெள்ளம் ... நாங்கள் முதல் மாடியில் இருந்ததினால் வீட்டு உள்ளே இருந்த சாமான்களுக்கு பாதிப்பு இல்லை ,ஆனால் கார் நகர மறுக்கிறது  .

என் மகன்கள் இருவருமே வேறு இடத்தில் இருப்பதால் அவர்கள் ரொம்பவே கவலைப்பட்டுக்கொண்டிருந்தார்கள் . ஒரு வழியாக என் இரண்டாவது மகனின் கிளாஸ்மேட் மற்றும் எம் ஓ பி வைஷ்ணவா கல்லூரியில் நான் பார்ட் டயம் ஆசிரியராக இருந்தபோது என் மாணவியுமான ஒரு பெண்
அவள் பெங்களூரில் வேலை பார்க்கிறாள்  அவளை என் மகன் தொடர்பு கொண்டு
பின் அவள் தன் பெற்றோரைப் பார்க்க சனி ஞாயிறு அன்று சென்னை   வந்தபோது எங்கள் வீட்டுக்கும் வந்து காய் கறிகள் எங்கோ ஸ்கூட்டரில் போய் வாங்கி வந்தாள்.

எங்களது கார் முழுகும் வரை  வெள்ளம் .
இப்போது அதை ரிப்பேர் செய்ய 42000/- கேட்கிறார்கள் .


 இத்தனைக்கும் எங்கள் வீடு மேடான இடத்தில் தான் உள்ளது .
இதனாலேயே மக்கள் கூட்டம் எங்கள் தெருவிலேயே சுற்றிக் கொண்டு இருந்தார்கள் . கிட்டத்தட்ட காணும் பொங்கல் விழா அன்று உள்ள கூட்டம் மாதிரியே இருந்தது .அசோக் பில்லர் அருகே என்பதால் கொஞ்ச நாழிகையில் முழங்கால் அளவு தண்ணீர் ....


 சிலர் பாவம் ஒரு வாடகை டாக்சி பிடித்துக் கொண்டு எங்கு போவது என்று தெரியாமால் சுற்றிக் கொண்டு இருந்தனர் . பெரியதும் சிறியதுமாக ரோடின் இரு புறமும்  ஓரத்தில்  சாய்வாக நிறுத்தப் பட்ட நிலையில் நிறைய வாகனங்கள் .... ( in the car slope ) சில ஆண்கள் காரிலேயே இரவைக் கழித்தனர் .. .... மறுநாள்  காலையில் நட்ஸ் அண்டு ஸ்பைசஸ் கடை திறந்தபின் அங்கே பொருட்களை வாங்கிக்கொண்டனர் .

 ஒரு நாள் கழித்துத் தான் வீதியில் ஒரு முப்பது அடி தூரத்துக்கு நடக்க முடிந்தது .  பக்கத்துத் தெருவில் படகில் மக்கள் சென்றுகொண்டிருந்தனர் . எங்கு சென்றுகொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை .


பல கடைகளில் கீழே உள்ள இரண்டு மூன்று தட்டுக்கள் வரையில் இருந்த பொருட்கள்  கெட்டுப் போனதால் வீதியில் வீசப் பட்டன.
முழுக்க நனைந்த  உடையுடன் இளநீர் விற்கும் பெண்மணி என்னைக் கண்டதும் அழுது கொண்டே அம்மா மாத்துப் புடவை இருந்தால் கொடும்மா என்றாள்.
உடம்பு பாவம் நடுங்குகிறது . வீடு எங்கோ பக்கத்தில் ...ஆனால் அவளால் போகமுடியவில்லை . ஒரு நாள் முழுக்க சாப்பிடவே இல்லையாம் இளநீர்கள் வெள்ளத்தில் கொண்டு போகப் பட்டன என்றாள் .எங்கள்  வீட்டில் கரண்டும் இல்லை ,மெழுகு வத்தியும்  கிடையாது . அகல் விளக்கில் தான் சமையல் . பகலிலும் அகல் விளக்கு தேவைப் பட்டது .
 ஒரு பெரிய பிஸ்கட் பாக்கெட் கொடுத்தேன். மாத்துப் புடவை மட்டும் தான் கொடுக்க முடிந்தது
என் பிளவுசு அவளுக்கு சின்னதாக  இருக்கும் .
இல்லம்மா சட்டை இல்லாட்டியும் பரவாயில்லை என்றாள் .
ஒரு வாரமாகக் கடையும் திறக்கவில்லை .
ஏ டிஎம் வேலை செய்யவில்லை .
 பலரும் கிடைத்த பொருளை அதிக விலைக்கு விற்பதைக் காண முடிந்தது.
ஆறு நாட்கள் கரண்டு இல்லை .
நெட் கனெக்ஷன் கிடைக்க இன்னும் இரண்டு நாள் ஆனது .
 பி எஸ் என் எல் வேலை செய்ததால் திருச்சியில் உள்ள  என் உறவினர்களுடன் பேசி என் மகன்களுக்கு மெயில் அனுப்பச் சொன்னேன்
  வெள்ளம் கற்பித்த பாடம் என்று பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள் .
எனக்குப் புரிந்ததெல்லாம் இது ஒரு கடினமான பாடம் என்று சொல்வேன் .

 பணம் இருந்தவர்களும் , சிக்கனமாக இருந்து பணத்தைச் சேர்த்து வைத்தவர்களும் கஷ்டப்பட்டார்கள் பணத்தைச் சேர்த்து வைக்காதவர்களும் கஷ்டப்பட்டார்கள் .
மளிகை சாமான்கள் வாங்கி வைத்தவர்களும்  கஷ்டப்பட்டார்கள் . ( கீழ் தளத்தில் இருந்தவர்கள் ).
மளிகை சாமான்கள் வாங்கி வைக்காதவர்களும் கஷ்டப்பட்டார்கள் .. ( முதல் மற்றும் இரணடாவது மாடியில் இருந்தவர்கள் ).