Showing posts with label சமையல். Show all posts
Showing posts with label சமையல். Show all posts

Wednesday, 1 August 2018

குறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க


எனது குழிப்பணியாரச் சட்டி சோதனைகளில்  வெற்றிக்கு மேல் வெற்றியே!
 வடை பண்ணலாம் என்றுதான்  நினைத்தேன் .
ஆனால் சாப்பிட ஆள் வேண்டும் என்பதால் அந்த முயற்சியைச் சிறிது தள்ளிவைத்துள்ளேன் .
.
 சரி என்று ஹோதாவில் இறங்கி சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்து பார்த்தேன்.
சும்மா சொல்லக்கூடாது தேவாமிர்தம் 

இன்று வத்தல் குழம்பு (புளிக்  குழம்பு ) +.சேப்பங்கிழங்கு ரோஸ்ட்  நல்ல காம்பினேஷன் ஆக இருந்ததது .
அதுவும் தயிர் சாதத்துடன்  சகலவிதமான பொருத்தங்களும் அம்சமாகப் பொருந்தியது . 

தேவையான பொருட்கள்:

 வேகவைத்த சேப்பங்கிழங்கு  14 துண்டுகள் (ஏழு குழி என்பதால் )
 காரப் பொடி  தேவைக்கேற்ப
 உப்பு                  தேவைக்கேற்ப 
எண்ணெய்          மிகக் குறைந்த அளவு

 செய்முறை :

 முதலில் சேப்பங்கிழங்குகளைக் கழுவி விட்டு நன்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் .


 பிறகு அதில் காரப் பொடி உப்பு சேர்த்து நன்கு  கலந்து வைக்கவும்.எண்ணெய் தடவ வேண்டாம் .

அதன் சாரம் நன்கு கிழங்கில் சேரும் வரை ஒரு பத்து நிமிடம் ஊறவைக்கவும் .(Marinate )




 பிறகு குழிப்பணியாரச் சட்டியை   அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் ஒவ்வொரு குழியிலும் ஒரு ஒரு சேப்பங்கிழங்கினைப் போடவும் .

ஒரு ஐந்து நிமிடம் ஆனதும் ஃ போர்க் கொண்டு திருப்பி விடவும் .இரண்டே நிமிடத்தில் நன்கு ரோஸ்ட் ஆகிவிடுகிறது .


 முதல் செட் தான் கொஞ்சம் நேரம் பிடிக்கிறது , அடுத்த செட் எல்லாம் சீக்கிரம் ரோஸ்ட் ஆகிறது ,


ஒரு ஒரு கிழங்கும் பர்ஃ பெக்கெட்டாக எல்லாப் பக்கமும் ரோஸ்ட் ஆகி ஒன்றோடொன்று சேர்ந்து குழைந்து போகாமல்  இருந்தது பார்க்க அழகு .எண்ணெய் செலவும் மிக மிகக் குறைவே .என்பது பெரிய பிளஸ் பாய்ண்ட் ።


 சேப்பங்கிழங்கு ரோஸ்டின் அல்டிமேட் என்பதே இது தானோ என்று நினைக்கும் அளவுக்கு டேஸ்ட் ஆக இருந்தது
சூடாகச் சாப்பிடும் போது எனக்கு நானே ஏதாவது ஒரு அவார்டு கொடுத்துக் கொள்ளலாம் போலத் தோணியது.




Monday, 14 August 2017

வெங்காய கப் பீர்க்கங்காய்


இது எனது  மூளையில்      உருவான   சொந்தத்  தயாரிப்பு.

  தேவையான பொருட்கள் :
பீர்க்கங்காய்  மீடியம் சைஸ் 1
உருளைக்கிழங்கு   மீடியம் சைஸ் 2
 கார்ன் ப்ளோர்  2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 1-2 காரத்திற்கேற்ப
உப்பு  தேவைக்கேற்ப
எண்ணெய்   4 டேபிள் ஸ்பூன்

செய்முறை
 முதலில் பீர்க்கங்காயை நன்கு கழுவிவிட்டு   மிக லேசாக வதக்கிவிட்டு
(ஈரம் ,நீர்த்தன்மை போக )
மிக்சியில்  போட்டு பச்சை மிளகாயுடன்மைய அரைக்கவும் .

பிறகு உருளைக்கிழங்கு களை   வேகவைத்து   நன்கு மசிக்கவும் .
உப்பு சேர்த்து  பீர்க்கங்காய் கலவையுடன் பிசைந்து கொள்ளவும்.
கொஞ்சம் நீர்க்க இருந்தால் கொஞ்சம்  கார்ன்  ப்ளோர்  சேர்த்துப் பிசையவும் .
பிறகு ஒரு  பெரிய வெங்காயம்  ஒன்றை எடுத்துத்  தோல் உரித்தபின் 
பாதியாக வெட்டியபின்  இது போன்ற கப்புகளாக பார்த்துப் பிரித்து எடுக்கவும்.
(ஓரமாக முதலில் விரல்  நகத்தால் பிரித்தால் இதே போன்று எடுக்கலாம் .


 பிறகு இந்த கப்புகளில் பிசைந்த பீர்க்கங்காய் கலவையை நிரப்பவும் .



அடுத்து எண்ணெய் தடவிய ஒரு பாத்திரத்தில் இந்த கப்புகளை ஆவியில் வேக வைக்கவும்.( முன்பே  சூடு  பண்ணிய  இட்லிப் பாத்திரத்தில் பத்து நிமிடங்களுக்கு மட்டும் )

 பிறகு ஆறிய பின்  ஒரு பானில் அல்லது   மேலே உள்ளவாறு  தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு வதக்கவும் .
 நான் கிரில் பானில் வதக்கினேன் .
கோடு கோடாக வரும் என்பதற்காக . பேக்கிங் ஓவன் இருந்தால் பேக் கூட  செய்யலாம் . என்னுடையது இப்போது என் கைவசம்  இல்லை 



டேஸ்ட் என்றால்  டேஸ்ட் அவ்வளவு டேஸ்ட் .

 சாம்பார் சாதம் ,தயிர் சாதம் , தக்காளி சாதம் ,எலுமிச்சை சாதம் முதல் சப்பாத்தி வரை எல்லாத்துக்கும் சைடு டிஷ் என்று சொல்வதை விட பிக் பாஸ் என்றே சொல்லலாம் .




Wednesday, 9 August 2017

பலாக்கொட்டை பொடிமாஸ்


 டேஸ்ட்டான   ஒரு   சைட் டிஷ்
  ரொம்பவே   ஈஸியானதும் கூட .

தேவையான பொருட்கள்
பலாக்கொட்டை  20 
மஞ்சள் தூள்  ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் /காஞ்ச சிவப்பு மிளகாய்       விரும்பும் காரத்திற்கு ஏற்ப
 எலுமிச்சம்பழம்     1
 துருவிய தேங்காய்       இரண்டு மேஜைக் கரண்டி
 பச்சை குட மிளகாய்  1   வேறு கலர் இருந்தாலும் பரவாயில்லை .
உப்பு    தேவையான அளவு .

தாளிக்க :
கடுகு  ஒரு டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
 பெருங்காயம்   வாசனைக்கேற்ப
பொடியாக  நறுக்கிய வெங்காயம்  ஒரு மேஜைக்கரண்டி           
எண்ணெய்  ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை பத்து இலைகள்.



செய்முறை:
 பலாக்கொட்டையை    குக்கரில்   உப்பு   மஞ்சள் தூள்    போட்டு   வேகவைக்கவும் .

நன்கு    ஆறிய பின்   பலாக்கொட்டையின்    பிரவுன் கலர்    தோல்    போகும்படி உரித்துக்கொண்டு    மிக்சியில்   பொடித்தால்  பூ மாதிரி  பொல பொல என வரும்.. 

அதைத் தனியாக ஒரு பாத்திரத்தில்  வைக்கவும்.

அடுப்பில்   வாணலியை   வைத்து   சிறிது   எண்ணெய் விட்டு   கடுகு  உளுத்தம்பருப்பு   கறிவேப்பிலையைத்  தாளிக்க வேண்டும் .
காஞ்ச/பச்சை மிளகாயையும்       நறுக்கிய வெங்காயத்தையும்      
வதக்கிப்       பெருங்காயம்  போட்டு    லேசாக கிளறவும் .

துருவிய  தேங்காய்       போட்டு    வதக்கவும் .      

பொடித்த   பலாக்கொட்டையையும் சேர்த்து வதக்கவும் .


ஆறிய பின் எலுமிச்சம்பழச் சாறையும் சேர்க்கவும் .

குடை மிளகாயைத் தனியாக  பச்சைக் கலர்     மாறாத     மாதிரி
வதக்கி   மேலே   அலங்காரமாக  வைக்கவும்.

சமையல் ஞானம் பூஜ்யம் என்று சொல்பவர்கள் கூடச் செய்யலாம் .
சொதப்பவே முடியாது







Monday, 27 March 2017

எண்ணெய் இல்லாக் கீரை பஜ்ஜி தோசை


     
கை நிறையக்         கீரை போட்டு லேசாக பஜ்ஜி மாவில்

முக்கி எண்ணையில் பொரித்த  மொறு மொறு  பஜ்ஜி  

சாப்பிட யாருக்குத்தான் ஆசை இல்லை

ஆனால் அதில் உள்ள எண்ணெய் பலரையும் பயமுறுத்துகிறது .

 நான் எண்ணெய் பலகாரங்கள் என்றாலே கொஞ்சம் 

தள்ளித்தான் காதலிப்பது வழக்கம் .

புத்தர் கொள்கைகள் பிடித்தாலும் பஜ்ஜி

ஆசையை அறவே விட்டொழிக்க முடியவில்லை .

 மூளையைக் கசக்கிக் கொஞ்சம் ஐடியா பண்ணி செய்த பலகாரம் .

  பஜ்ஜி    டேஸ்ட் உள்ள   தோசை .

 எண்ணெய் கொஞ்சமே போதும் .

கடலை மாவும் அரிசி மாவும் 4  :1 என்ற விகிதத்தில்

 ,உப்பு தேவையான அளவு

சோடா மாவு கொஞ்சம்

கீரை பொடிப் பொடியாக நறுக்கியது    ( மாவை விட நிறையவே )

பச்சை மிளகாய் ஜூஸ் உங்கள் காரத்திற்குத் தேவையானது 

( நாலு அஞ்சு பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து ஜூஸ் பண்ணி வைத்துக் கொள்வேன்  எப்பொழுது ம் )

 பச்சை மிளகாய்த் துண்டுகளை விட ஜூஸ் எல்லா

இடத்திலும் சமமாகப் பரவும்

.வாயில் மாட்டி  கடிபட்டு  இம்சை பண்ணாது .

 எல்லாத்தையும்  ஒண்ணாக்  கலந்து தோசைக் கல்லில் மெலிதாக 

வார்த்து எடுத்தால் பஜ்ஜி  டேஸ்ட் உள்ள தோசை ,


தோசைக் கல்லில் ஒட்டிக் கொள்ளும் அபாயம் இருந்தால் 

  ( இரும்பு தோசைக் கல் தான் நான் உபயோகிக்கிறேன் )

ஒரு பெரிய வெங்காயத்தை எண்ணையில் தொட்டு முக்கி, 

கல்லில்  பரவலாகத் தடவிய பின்  தோசை செய்யவும்

ஒட்டாமல் அழகாக வரும் .

  மிக மிகக்  குறைவான எண்ணெய் விட்டால் போதும் .

கீரைக்குப் பதிலாக நான் கேரட் கத்தரிக்காய்  குடை மிளகாய் , முட்டைக் 

கோஸ்  ( கத்தரிப்பூ கலர் கோசில் பார்க்க அழகாக இருக்கும் )

கொத்தமல்லி எனவும் பல விதமாக க் கலந்து கட்டியும் செய்வேன்

நான் வடையைக் கூட இதே மாதிரி   தோசை  வடிவில் செய்து சாப்பிடுவேன் .



Sunday, 15 January 2017

வட்ட அப்பம்


 ஒரு   புத்தகத்தைப்   படித்து   முடித்த    பின்னர்தான்   பதிவுப் பக்கம் 

வரவேண்டும்    என்று   எனக்கு நானே  தீர்மானம் 

   நிறைவேற்றிக்கொண்டதால்    பிளாக்    பக்கம்   வரவே இல்லை

அது ஒரு ஜப்பானிய பாடப் புத்தகம் .

மற்றபடி    செய்தித்தாள் கூட   ஒதுக்கப் பட்டது

டிவியும் தடா போட்டுக் கொண்டேன் .

முடிச்சாச்சு .

அதனால் தான்   மற்றவர்கள்   பிளாக்கிற்கு    காமெண்ட் கூடப் போடவில்லை 

. கொஞ்சம்     இந்தப்    பக்கம்   வந்தால் கவனம்    சிதறி விடுகிறது.

  இந்த    வட்ட அப்பம்   திரு ஸ்ரீராம்   அவர்களால்(தித்திப்பு தோசை

இன்ஸ்பயர்   செய்யப்பட்டு   செய்து   பார்த்த   ஒரு   பலகாரம் .

இது குழிப்பணியார மாவேதான் .
பச்சரிசி 100  கிராம்
புழுங்கரிசி 100  கிராம்
வெந்தயம் ஒரு சின்ன ஸ்பூன்
உளுந்து 50  கிராம்

 என்னிடம் தராசு உள்ளது

மற்றவர்கள் பச்சரிசி 4 :புழுங்கரிசி 4 :உளுந்து 1

என்கிற விகிதத்தில் ப் போடவும் .

 பிறகு   ஒரு    நான்கு    மணி    நேரம் கழித்து அரைத்து   எடுத்து   


சிறிதளவே   ஆப்ப சோடா ,   உப்பு     எல்லாம்    போட்டுக்    

கலக்கி    வைக்கவும்

ஒரு     நான்கு     அல்லது    ஆறு    மணி    நேரத்திற்குப்    பிறகு 

 இந்தக் கலவையுடன்  வடித்த    வெல்லப் பாகைக்  கலக்கவும் .

 முடிந்தால்   வாழைப்பழமும்   சேர்க்கலாம் .   

நான் சேர்க்கவில்லை.

ஏலக்காய்  தூள் பண்ணிப் போடவும் .

 பிறகு    இந்த மாவை க்  குக்கர்  பாத்திரத்தில்   நெய்  தடவியபின்  

 ஊற்றி  இட்லி    வேகவைக்கிற   மாதிரி   வேக வைக்கணும் .


வெந்து    ஆறிய   பின்    ஒரு சின்ன     வட்ட   வடிவ   எவர்சில்வர்    டப்பா   

 கொண்டு    வட்ட வட்ட மாக வெட்டி எடுத்தல்  வட்ட அப்பம்   ரெடி .

இது ரொம்பவே  ஈஸி..

,ஏனெனில்

1 .'ஆவியில் வேகிறது. ,நான் டயமர் வைத்துவிட்டேன் . நிற்க வேண்டிய அவசியமில்லை .
ஆனால்     குழிப் பணியாரத்திற்கு நின்றுகொண்டு  செய்யவேண்டும் .


2 . மாவு நீர்த்துப் போச்சோ கெட்டியா இருக்கோ  கவலையே வேண்டாம் .
எந்தப் பதமாக இருந்தாலும் வெந்துக்கும் .

3.நமக்குத் பிடித்தமான வடிவங்களில் கூக்கி கட்டர் கொண்டு கூட வெட்டலாம் .

4 . எண்ணைக் கொழுப்பு தவிர்க்கலாம்

Monday, 7 November 2016

3 in 1 கலக்கல் பலகாரம்


 நான் போன வாரம் இது பற்றி எழுதணும் என்றிருந்தேன் .

 கம்பியூட்டரில் உட்கார்ந்தால் இடுப்பிற்குப் பிடிக்கவில்லை போல ,

ஊர் சுற்றினால் வலி இல்லை .

கம்பியூட்டரில்  உட்கார்ந்தால் வலிக்கிறது

சரி   என்று தான் இன்று எழுதுகிறேன் .

இது  நான் அடிக்கடி செய்வேன் .

பூரணம் ஒரே மாதிரி தான் .

அதை முதலில் பண்ணி பிரீசரில் வைத்து விடுவேன் .

இது எல்லாவற்றுக்கும் கை கொடுக்கும் .

முதலில் பூரணம் .

கடலைப்பருப்பை  லேசாக  வறுத்துக் கொண்டு  ஒரு  இரண்டு  மணி நேரம் ஊறவிடவும் .

 பிறகு  பிரஷர்   குக்கரில் ஒரு ஐந்து  ஆறு விசில் வரும்  வரை  வேக வைத்துக் கொண்டு தண்ணீரை நன்கு வடித்து விடவும் .

நான் வேக வைக்கும்போதே   தண்ணீர்    சரியான அளவுடன் வைப்பேன் .
 ஹி.. ஹி …..அனுபவம்

பிறகு  ஒரு தட்டில் பரத்தி   நன்கு  உலரவிட்டு ( அவசரமாகச் செய்யணும் என்றால் ஒரு வாணலியில் போட்டு லேசாக சூடு பண்ணினால் உலர்ந்து விடும் . )
பிறகு மிக்ஸியில் அரைத்தால் பூப்  போல  பொல   பொல  என மாவு வரும் .

.தனியே    எடுத்து    வைத்து விட்டு    வெல்லப் பாகு    காய்ச்சி வடிகட்டவும்

    பிறகு    வடி கட்டிய    வெல்லப் பாகுடன்    கடலைப்பருப்பு    வெந்த மாவையும்   போட்டுக்   கலந்து அடி கனமான பாத்திரத்தில் கொட்டி   அடுப்பில்    சிறிய   தீயில்   வைக்கவும் .  
  ஏலக்காய் பொடித்துப் போடவும்

  துருவிய தேங்காய் இஷ்டமானால் சேர்த்துக் கொள்ளலாம் .

 ஒரு 20 நிமிடம் கிளறிய பின்    பந்து    போல உருண்டு  வரும்.

 ஆறிய  பின் கீழே   உள்ள மாதிரி    உருண்டை களாக   உருட்டிக் கொள்ளவும் .




.
 ப்ரீசரில் வைக்கவும் .





 இதே பூரணத்தை    வைத்து   கொழுக்கட்டை ,   போளி,   சுகியன்    என அசத்தலாம் .


 கொழுக்கட்டை :

தேவைப் பட்டபோது    கொழுக்கட்டை மாவைப் பிசைந்து    இதை உள்ளே வைத்து    மோதகம் செய்யலாம்    வெகு    சீக்கிரத்தில் .



கோதுமை/ மைதா  போளி  :

 நான்   பொதுவாக    இந்தப் பூரணத்தை   வைத்து    கோதுமை மாவு சப்பாத்திக்குள்   வைத்து   குழந்தைகள்   சிறியவர்களாக    இருந்தபோது லஞ்சுக்கு   கொடுத்தனுப்புவேன் . சைடு   டிஷ்   செய்ய   வேண்டிய அவசியம் இருக்காது .( மைதாமாவு முடிந்த வரை தவிர்த்து விடுகிறேன் )





 ஏனெனில்   வேலை   பார்த்துக் கொண்டிருந்த போது    நானும்  ஏழு மணிக்கு கிளம்பணும்

  இதே பூரணத்தை  மைதா மாவில் நனைத்து எண்ணையில் பொறித்து , சுகியன்    ( பதிவர் திரு ஸ்ரீ ராம் செய்த மாதிரி )செய்யலாம் .


இந்தப் படம் கூகுளிலிருந்து  சுட்ட  சுகியன் . எண்ணெய் உணவுகளைத் தவிர்த்து வருவதால் நான் செய்வதில்லை 

சமீபத்தில் நான் இன்டர்பிரட்டேஷன்  வேலை விஷயமாக மறைமலை  நகருக்குச் சென்றிருந்த போது அங்கு அந்தக் கம்பெனியில் வெள்ளிக் கிழமை பூஜைக்கு என்று ஒரு சுவீட்  கொடுத்தார்கள் 
அது எப்படி என்றால்  மைதா மாவைப் பூரி மாதிரி தேய்த்து அதை சின்ன சின்ன வட்டமாக வெட்டி அதில் இந்தப் பூரணத்தை வைத்துப் பொறித்திருந்தார்கள் . அதுவும் நன்றாக இருந்தது