Saturday, 28 December 2013

நினைத்துப் பார்க்கிறேன்


 இந்த வருடம் நான் என்ன செய்தேன் என்று நினைத்துப்  பார்த்தால்   சாதனைகள்  லிஸ்ட் டில் நான் இந்த  பிளாக்கை ஆரம்பித்ததை தாராளமாகச் சொல்லலாம்.
 காசா பணமா நம்மளை நாம உற்சாகப் படுத்திக்கிறதிலே
தப்பில்லையே!

எனக்கு பிளாக் ஆரம்பிக்கனுமின்னு ரொம்ப நாளாகவே ஆசை இருந்திச்சு.
ஆனா எப்படீன்னு தெரியாது.


பசங்களுக்கு அம்மாவோட திறமை பத்தி புரியலை .
சொல்லிக்குடுக்க மாட்டங்க

சந்தேகம் கேட்டால் ஒரே தடவையிலே புரிஞ்சுக்கணும் என்பார்கள் .
அது நமக்கு முடியறதில்லே .

 நானும்   ஃ பிரீ லான்சர் என்பதால் இந்த வருடம் ஜூன் வரை ரொம்ப பிசியாக என்று சொல்லமுடியாவிட்டாலும்  continuously   occupied  ஆகத்தான் இருந்தேன்.

பிறகு  நாக்கில் வந்த ஒரு சிறு கொப்புளத்தை  ஒரு பிரபல மருத்துவ மனையின் பல டாக்டர்கள்    கூடி ஒரு வழி ஆக்கி நான் பேச முடியாமல் சாப்பிட முடியாமல் இருந்தேன்.

மீறிப்  பேசினால் என் அறிவார்த்தமான பேச்சு மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமால் போனது.

உதாரணமாக
நான் கீரை  என்று சொன்னால் அது மற்றவர்கள் காதில் கீதை யாக விழுந்தது என் பூர்வ ஜன்ம புண்ணியம் .
அது பற்றி தனி பதிவே போடலாம்.

கம்யுனிகேஷன்  என்பது ரொம்ப கஷ்டமான போதும் , எல்லோரும் ஒரு ஒரு மாதிரிச் சொல்லி குழப்பிய போதும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சமயம் , பதிவர் சந்திப்பு என்ற செய்தியைப் படித்தேன்.

நம்ம ஒரு பதிவாவது எழதினா தானே பதிவர் என்ற வெறியில் திரு தமிழ் வாசி அவர்களின் பதிவு எப்படி ஆரம்பிப்பது என்ற பதிவைப் பார்த்தும் பிறகு திரு திண்டுக்கல் தனபாலனிடம்  இரண்டொரு சந்தேகங்கள் கேட்டும்  முதல் பதிவை சுப யோகம் சுப முகூர்த்தம் எல்லாம் பார்க்காது  3.08.2013 அன்று அரங்கேற்றினேன்

தட்டி முட்டிக் கத்துக்கிட்டதுதான்.

 அப்புறம் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு திரு பழனி கந்தசாமி
( என் சகோதரர் பற்றி  அறிந்தவர் ) திரு செல்லப்பா  (  நானும் அவரும் முன்பே ராம்ஸ்  அபார்ட்மெண்ட் காம்பிலேக்சில்  வசித்தவர்கள்   பரிச்சயமானவர்கள் )
திரு கவியாழி கண்ணதாசன் திருப்பூர் ஜோதிஜி திரு தமிழ்வாசி   திருமதி சசிகலா, ராஜி ,அகிலா போன்ற பலரையும் சந்தித்தேன்.

ஒரு தைரியம் வந்தது.
நம்மளும் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாமின்னு.

முன்பே பத்திரிகைகளில் எழுதிய அனுபவம் உண்டு.'
 ஞான ஆலயம் சிநேகிதி மங்கை, மங்கையர் மலர்  எனப்  பல.

 தமிழில் முதலில் டைப்பிங் அவ்வளவு  ஃ பாஸ்ட் ஆக வரலை.
இப்போ பரவாயில்லை .

நானும் முப்பத்தி ஐந்து பதிவு போட்டுவிட்டேன்.

பதிவுகள் பாபுலர் ஆச்சா என்பதை விட என் மன விரக்தியிலிருந்து மீண்டு
வர  இந்த பதிவு எனக்கு உதவியது என்றே சொல்லலாம்
.
இவற்றை நான் மாத இதழ் களுக்கு அனுப்பியிருந்தால் பணம் கிடைத்திருக்கலாம் ,
உடனே  publish  ஆகாது
ஆனால் எனக்கு  மன திருப்தி இதில் நிறையவே கிடைக்கிறது.

 எனக்கு என் எண்ணங்களைப் பகிர ஒரு மேடை   இது என்ற விதத்தில்
சந்தோஷமே.
  என் உடல் நிலையில்  இன்னும் குழப்பிக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.

இருப்பினும் இந்தப் பதிவுகள் என்னை   occupied  ஆக வைக்கிறது.

தவிர முகமறியா நட்புகள் பல என்னை ஏதொ ஒரு விதத்தில் என்னை  உற்சாகப் படுத்துகிறது.

. பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்திய  அனைவருக்கும்  நன்றி..


Wednesday, 25 December 2013

த்சுன்தொக்கு


 தலைப்பைப் பார்த்தவுடன்  ஏதோ  வெளிநாட்டு  உணவின் பெயர் என்று  நினைக்க வேண்டாம்.

விவரமாகச் சொல்கிறேன்.

நாமெல்லாம்  ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்குவோம் ,
ஆனால் வாங்கிய புத்தகங்கள் அத்தனையையும்  படிக்கிறோமா என்றால் பொய் சொல்லமால்  பதில் சொன்னால் இல்லை என்றே தான் சொல்லவேண்டும்.

அதைத்தான் ஜப்பானிய மொழியில்  TSUNDOKU ' "த்சுன்தொக்கு"  'என்று சொல்வார்கள்.

 வாங்கிய புத்தகங்களைப் படிக்காமல் அப்படியே கிடப்பில் போடுவது என்ற அர்த்தம்..

ஏன்  இந்த வார்த்தையை  உபயோகிக்கிறேன் என்று  தெரியுமோ ?

படித்துக்கொண்டே வந்தால் காரணம் புரியும்

வேறு எந்த மொழியிலாவது  மனிதனது இந்தப் பழக்கத்தை ஒரே வார்த்தையில் சொல்லமுடியும் என்றால் சொல்லுங்கள்

. நினைவில் இருத்திக் கொள்கிறேன்.



,எதனால் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறோம் என்று பாத்தால் மேலோட்டமாகச்சொன்னால் படிக்க ஆர்வம் .
இதில் 50% உண்மை இல்லாமல் இல்லை .

ஆர்வக்கோளாறின் காரணமாகவும் நிறைய வாங்குகிறோம்

.சீன மொழி கற்பது எப்படி என்று  நான் ஒரு புத்தகம் வாங்கி இரண்டு வருடம் ஆகிறது .
 இது வரை ஒரே ஒரு சீன வார்த்தையாவது கற்ற பாடில்லை.

 ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்கி அதைக் கற்று அதன் படி நின்று நாம் நமது வாழ்க்கையே புரட்டிப் போட்டு நாம்  உலகின் டாப் 10   ஆளில் ஒருவராக வரப்போகிறோம் என்ற  நினைப்பில் வாங்குகிறோம் .

புத்தகத்தில் புதுப் புத்தக வாசனை இருக்கும் வரை ரெண்டு நாள் படிப்போம் ,பிறகு அது கட்டிலுக்குக் கீழே போய் பிறகு இன்னும் எங்கோ தொட்டுவிட இயலாத அளவு எங்கெங்கோ போகும்.

பிறகு வீட்டைசுத்தம் பண்ணும் போது ஒரு நாள் கண்டேடுப்போம்.


அதைத் தவிர வேறே யாராவது பேசும்போதோ நெட்டிலோ இதை அவசியம் படிச்சே ஆகணும் என்று உசுப்பி விட்டால் மறுகணமே வாங்கி விடுவோம்

.அந்தக் காலத்திலாவது வாசலை விட்டு இறங்கி கடைக்குப் போய் வாங்கணும் .
இப்போ உக்காந்த இடத்திலேயே ஆர்டர் பண்ணினாப் போதும் .

 என்னைக்காவது ஒரு நாள் படிக்க என்ற  ரகம்  கூட உண்டு
அந்த என்னிக்காவது அப்படிங்கிற நாள்   இன்று ரொக்கம்  நாளை  கடன்  மாதிரி என்னிக்கு  வருமோ தெரியாது.

 நம்மளைப் பத்தின இமேஜு   கூடணும்ன்னு வாங்கிற சில பேர் இல்லாமல் இல்லை.
ஒருவரின் வீட்டில் உள்ள புத்தகத்திற்கும் அந்த வீட்டில் உள்ளவர்களின் அறிவுக்கும் நேர் விகிதம்  என்ற எண்ணம் நம் எல்லாரிடமும் நீக்கமற  நிறைந்துள்ளது. (அது  தப்பா சரியா என்ற விவாதம் வந்தால்  என் மார்க்கு அகல பாதாளத்துக்குப் போய் விடும் என்பதால் சேஃப்  ஆக  நான் அந்த டாபிக்குப் போகலை) ஹி..........ஹி


 வீட்டு வேலையை  டபாய்க்க ......... ( இது கல்யாணம் ஆகாத பெண்களும் , கல்யாணம் ஆனா ஆண்களும் செய்வது)
இது மாதிரி ஆயிரம் காரணங்களால் புத்தகம் வாங்கிக் குவிக்கிறோம்.

புத்தகங்கள் ஏன் வாங்குகிறோம் என்பதற்கு சுவாரசியமாக ஆயிரம் காரணம் இருக்கிற மாதிரி வாங்கின புத்தகத்தை ஏன் படிப்பதில்லை என்பதற்கும் ஆயிரம் சுவாரசியமான காரணமிருக்கு .

 எனக்கு எங்கே நேரமிருக்கு என்பதுதான் டாப்பில் இருக்கும் காரணமாக இருக்கும் .

 இதுவும் ரொம்ப சென்சிட்டிவ் ஏரியா.

 நான்  கப்சிப்  .
ஜாஸ்தி பேசலை .

 புத்தகம் வாங்கும் போது அதுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதை வாங்கி வீட்டில் வைத்தவுடன் குறைகிறது.
காதலி மனைவி ஆனபின் மவுசு குறையுமே  அது மாதிரி .

 ஓட்டலுக்குப் போனா குடுத்த காசுக்கு ஏன் வீணாக்கனுமின்னு வயித்தை
ஓவர் லோடு பண்ணற நாம புத்தகத்துக்கு செலவு பண்ணிய காசின் மகிமையை புரிஞ்சுக்க  வில்லை.

அந்தக் காலத்தில் ஒரு படிப்பு படிச்சு ஒரு வேலையில் உக்காந்தா அதே வேலையில் கடைசி வரை சுகமாகப் பொழுதை   ஓட்டிடலாம்.
அதனாலே  மத்த புத்தகம் படிக்க நேரம் இருந்திச்சு

இப்ப அப்படியில்லே

 நாளுக்கு நாள் இம்புருவ் ஆயிட்டே இருக்கு .

நம்மளை நாம  அப்டேட் பண்ணிக்கலைன்னாக்க ஆபீசை விட்டுத் துரத்த அதன் எதிரொலியாக வீட்டை விட்டு  என சீரியலாக  இ ஃ பெக்ட்  இருக்கும்.

தவிர டி.வியின் ஆதிக்கம் ஆன் லைன்  பேப்பர் புத்தகம் கூட ஒரு காரணம் .
சரி
இப்ப புத்தகக் கண்காட்சி வருது .
 புத்தகம் வாங்காமயா இருப்போம் .
எப்படி  "த்சுன்தொக்கு" பழக்கத்தில் இருந்து விடுபடுவது ?

 புஸ்தகத்தை முதலில் நம்ம கண்லே படற மாதிரி வச்சு மறக்காம ஒரு நாளைக்கு ரெண்டு பக்கமாவது படிக்க முயற்சி பண்ணுவோம்.

இத்தனை நாளைக்குள்ளே இத்தனை பக்கமாவது படிக்கணும்ன்னு ஒரு திட்டம் போடணும்.

 நாம படிச்சதை யாராவது மாட்டினாங்கன்னா  விடவே கூடாது .
நாம படிச்ச டாபிக்கிலேருந்து  கொஞ்சத்தை  பீலா வுடணும்.

அப்படீன்னு நான் பிளான் பண்ணியிருக்கேன் .

மாட்டிய முதல் பலி ஆடு என்  பதிவைப்  படிப்பவர்களாகிய நீங்கள்தான் .ஏனெனில்  நான் படித்த இந்த வார்த்தை  மறக்காமல்  இருக்கவே  இந்தப் பதிவு..

  இது எப்படி?

Monday, 23 December 2013

மனித நிர்வாகம்


தேவயானி மேட்டர் பத்தி எல்லாரும் ஏதேதோ  பல வித கோணங்களில் பல விதமாக எழுதி வருகிறார்கள் .

 நான் அதைப்  பார்க்கும் கோணமே வேறு.

 ஒவ்வொருவருக்கு  ஒரு திறமை உண்டு .
எனக்கு என்ன திறமை இருக்கோ இல்லையோ  இந்த மனிதர்களை மேனேஜ் பண்ணும் திறமை என்பது அவ்வளவாக சொல்லப்போனால் சுத்தமாகவே கிடையாது.

 மனிதர்கள் என்றால் வீட்டில் உள்ளவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

நாம் இன்று ஒரு வேலை சொன்னால் அதை செய்து தர குறைந்தது  ஒரு மாசமாவது ஆகும் அவ்வளவு திறமை !
அவர்களுக்கா  எனக்கா என்று தீர்மானிப்பது  உங்கள் சாய்ஸ் .

நாம் ஒரு வேலை சொன்னால் நமக்கு அது தொடர்பான   (எதிர் வேலை ) ஓரு வேலை நமக்கு சொல்வார்கள் .

உதரணமாக   போய்  காய்  கறி  வாங்கி வரச்சொன்னால் அதை ஒரு பேப்பரில் எழுதிக்கொடு என்பார்கள் .

மடிச்சு வெச்ச துணியை எடுத்து உள்ளே வை என்றால் அதை வைக்க ஒரு பை   கொடு  என்பார்கள்
. நமக்கோ எரிச்சல் 300 டிகிரியையும்  எகிறும் .

 அதே போல் பாத்திரம் தேக்க ஒரு ஆள் இது வரை எனக்கு செட் ஆகவில்லை .
அவர்கள் பாத்திரம் தேய்க்கும் விதம் பிடிப்பதில்லை .

 சிங்கை( SINK   )கோயில் தெப்பக்குளம் ஆக கன்வெர்ட்  பண்ணி  அதிலேயே  தேய்த்த பாத்திரங்களை  தெப்பமாக்கி ,அந்த அழுக்குத் தண்ணியிலேயே முக்கி முக்கி  பாத்திரங்களை  கழுவும் பாணி எனக்குப் பிடிப்பதில்லை .

இப்படி செய் என்று திருத்திச்  சொன்னாலும் நான் அந்தண்டெ இந்தண்டெ பாக்கும் போது திரும்ப  தன் சொந்த பாணியிலேயே செய்வார்கள் .

 அது போல வீடு துடைக்க என்று வைத்தால்  அரை  பக்கெட் தண்ணியில்  ஒரே ஒரு முறை அந்த மாப்பை முக்கி வீடு முழுக்க துடைக்கும் ஸ்டையில்  எனக்கு ஒத்து வருவதில்லை .

எனக்கும் சும்மா தினம்   தினம்   ருல்ஸ்களை ஒப்பிக்க பிடிப்பதில்லை .
 எனவே நானே எல்லா வேலைகளையும் செய்துவிடுவேன்.
உடம்புக்கு எக்சர்சைஸ்  என்று நினைத்துக்கொண்டு!

 எல்லாரும் என்னை ஒரே ஒரு வேலைக்காரரை மானேஜ்  பண்ண முடியாத நீ என்ன படிச்சு என்ன புண்ணியம் .... இத்யாதி இத்யாதி . எல்லாம் சொல்வார்கள் .

ஆனால் வீட்டோடு ஆள் வைத்தால் செட் ஆகிறது. ( ஏனெனில் நானே பாதி வேலைக்கு மேல் செய்து விடுவேன் . பொறுமை  0%  ).

 எனக்குத்தான் திறமை இல்லையோன்னு இத்தனை நாள் நினைத்து வருத்தப்  பட்டுக்கொன்டிருந்தேன் .
 நானாவது பரவாயில்லை சாதாரண பிரஜை . தேவயானி  ஒரு diplomat !


தேவயானி மாதிரியான ஒரு டிப்லாமேட்டால் கூட ஒரு வேலை ஆளை மானேஜ்  பண்ணுவது கஷ்டம் போலே!
எப்படியாகப்பட்ட  உண்மை !
இனிமேல் என்னை யாருமே குறை சொல்லக்கூடாதாக்கும்


Friday, 20 December 2013

பெண் பார்க்கும் படலம



 என் தோழி (சுமார் 30 வருடம் முன்பு) ஒருவர் ஒரு  கதை  சொல்வார்.
 ஒரு கல்யாணம்  ஆன ஆம்பிளை 
 கோழி வெந்துச்சான்னுஅம்மாவைப் பாக்கச்சொன்னா  
அம்மா நா மாட்டேன்"பத்து நிமிஷம்  முன்னாடி பாத்தப்போ  கோழி அடுப்புலேருந்து கத்துச்சு"ன்னு சொன்னாளாம் ,
 சரின்னு ,பொண்டாட்டியைப் போய்
 கோழி  வெந்துச்சான்னு பாக்கச்சொன்னா  பொண்டாட்டி  
 " நா மாட்டேன் ரெண்டு நிமிஷம் முன்னாடி நா பாத்தப்போ  கோழி
கொத்த வந்துச்சு"ன்னு சொன்னாளாம் .

என் மகனுக்குப் பெண் பார்க்கிறேன் .
சரி ஒரு முன்னோடி சர்வே பண்ணலாம்ன்னு  மகனுக்குக் கல்யாணம் பண்ணி முடித்த அம்மாக்களிடம் பண்ணினேன் .
புரிந்த உண்மைகள் :
1. மருமகள்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
2. நான் கல்யாணம் பண்ணும் முன்பு
புகுந்த வீடு எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ  ஏன்னாக்க அது தான் உன் வாழ்க்கையே   என்றார்கள் .
இப்போது
 வர மருமக எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சொச்ச காலத்தை ஒட்டணுமில்ல என்கிறார்கள்  .
சரி ஆண்களிடம் சர்வே செய்யலாமின்னு  சமீபத்தில்  கல்யாணம் பண்ணிக்கொண்ட பையன்களிடம் நிலைமையை விசாரித்தேன்.
அதில் ஒருவர் சொன்ன பதில் எனக்கு காமெடியாக  ( உங்களுக்கு ஷாக் ஆக இருந்தால் நான் பொறுப்பல்ல ) இருந்தது.
அம்மா அப்பா பார்த்து அம்பது  பவுன் நகை  சீர் செனத்தி எல்லாம் வாங்கிக்  கல்யாணம் பண்ணி வைத்த பெண் .
ஆனாலும் கல்யாணம் ஆனா ரெண்டாம் மாசமே நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ளது மாதிரியான சூழ் நிலை .

பையனுக்கு குரு உச்சத்தில் இருக்கும் நாட்களில் அம்மா ஒரு மாதிரி சாப்பாடு மனைவி ஒரு மாதிரியான சாப்பாடு என்று ரெண்டு விதமான சமையல்  ,

பையனுக்கு  என்ன செய்வது என்று தெரியாமல் ரெண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு  வெள்ளைப் புறா வைப் பறக்க விடுவதாக நினைத்திருக்கிறான் .
ஆனால் வீட்டில் நடப்பதென்னவோ 24x 7x 365 காக்கா கூட்டம் போல ஸீன்!

குரு சிலநாள்  சனி கிட்டே சார்ஜ் கொடுத்திட்டு  வாக் கீக் போயிடுவாரோ என்னவோ
 சொல்லி வச்ச மாதிரி சில சமயம்  ரெண்டு பேருமே சாப்பாடு தரமாட்டர்களாம்.
பையன்   வீட்டில்  காலித் தட்டைப் பாத்து ஒரு சோக லுக் வுட்டுட்டு
 ஆபீஸ் காண்டீனில்  உணவு ரொம்பிய  தட்டைப் பாத்து
 வீட்டு சோகத்திலும் ஒரு நல்ல சாப்பாடு கெடெக்குதென்னு  சந்தோஷப் பட்டு கிட்டானாம் .

சில சமயம் இவன்கிட்டே மனவியைப்  பேச விடாமல்  தடுக்க அம்மா ஆபீஸிலெருந்து வர வழியிலேயே மடக்கி அங்கே வா இங்கே வான்னு கூட்டிப்  போவாங்களாம்.

மனவியும் அதற்கு  சளச்சவங்க இல்லே ..
சொல்லப் போனா அதுக்கு மேலே. 
சில சமயம் ஆபீஸ் பக்கமாவே  ஒரு இடம் சொல்லி நீங்க அங்கெ வாங்க நான் உங்களுக்காக வெய்ட் பண்ணறேன் . அப்படீம்பாங்களாம் .

 சில ரெண்டு பேருமே  பேச மாட்டங்களாம் ..

அப்பல்லாம் இவனுக்கு  டி .வி .கண்டு புடிச்ச புண்ணியவானுக்கு கால் வலிக்க வலிக்க ஆயிரம் முறை விழுந்து வணங்கலாம் போலத் தோணுமாம்.

இதுக்கெல்லாம்  சிகரம் வெச்சாப் போலே ஒரு நிகழ்வு நடந்ததாம்  ஒரு நாள் .
பிரஷர் குக்கர் அடுப்பில்   ஆன் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாம் . மாமியார் ப்     பண்ணட்டுமேன்னு  மருமகளும் 
 சின்னவ இவ எழுந்து ஆஃப்  பண்ணக் கூட முடியாதா என்ன?
இவளுக்கு என்ன இவ்வளவு கொழுப்பான்னு
 மாமியாரும் கம் என்று இருக்க  குக்கர் "  ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் "என்கிற மாதிரி  சந்தோஷத்தில்  மானாட மயிலாட பாணியில் டான்ஸை  ஆடிடுச்சாம். 
 எப்படியாப் பட்ட ரிப்பேரும் பண்ண முடியாதுன்னு குக்கர் ரிப்பெர்காரன் டயக்னைஸ் பண்ணிட்டதாலே குக்கர் மூடியை  காயலான் கடைக்கு  பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃ பர்  பண்ணிட்டாங்களாம்.
 (குக்கரை அடுப்பில்   முதலில்  யார் வைத்தது என்ற கேள்வியை   வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில் யாரும் என்னிடம் கேட்கவேண்டாம் .
என் சர்வேக்கு பையன் ஒரு உண்மையை  சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் என் வேலை .
 வெட்டி கேள்வி கேட்க நான் என்ன  இன்வெஸ்டிகெஷன்  ஏஜன்சியா நடத்துகிறேன்? )
 உச்சுச்சு !.ச்சே! நாடு போகிற போக்கு .......ன்னெல்லாம்  உணர்ச்சி வசப்படவேண்டாம் 

 இப்ப  மறுபடியும் முதல் பாராவுக்குப்  போங்க !
என் தோழியின் கதைக்கு அடுத்த வருட சாகித்ய அகாடமி  பரிசுக்கு 
பரிந்துரை செய்யுங்கள் 

Sunday, 15 December 2013

நான் செய்த சுஷி



 லேடீஸ்  எல்லாரும் சமையலில் பொளந்து கட்டும்போது
நம்ம மட்டும் எப்படி சும்மா இருக்கறது?

ஆனா அதுக்குன்னு அப்படியே எல்லாரையும் மாதிரி இல்லாம புது தினுசு சமையல் ஐட்டம் போடனுமின்னு தோணுச்சு.

அதுதான் இந்த சுஷி

இது நான் இப்போ செய்யலை .
2012ல் செய்ததின்.போட்டோ .

பாக்க ஜப்பானிய சுஷி  ஒரிஜினல் மாதிரியே லுக் என்னவோ  அழகாக இருக்கு.

உள்ளே சாதத்துடன்  பீன்ஸ் காரெட் போன்றவைகளை வைத்தேன்.
ஒரிஜினல் சுஷியில் நான் வெஜ்  ஃ பிஷ் போன்றவை வைப்பார்கள்

ஆனால் என் மகனுக்கும்  அவன் ஃ பிரண்டுக்கும்   அவ்வளவாக பிடிக்கவில்லை.
காரணம் அந்த நோரி ஷீட் (வைத்து ரோல் பண்ணிய ஷீட் )டில் மீன் வாசம் வந்ததுதான் காரணம் .


Saturday, 14 December 2013

வாக்கிங் வன்முறைகள்


முதுகு வலியும் வேலைகளும் சேர்ந்து ஜோடியாக வந்ததால் மடிக்கணினியை அவ்வளவாக தொடவில்லை.
பதிவிற்குப் பட்டினி.
சரி எதோ எழுதி பக்கத்தை  பதிவைத் தேத்துவோம் என்ற பதிவு தான் இது.
 நம்மளும் இருக்கோம்ன்னு காமிச்சுக்க த்தான் இந்த பதிவு.

எனக்கும் உடல் எடை இந்த 14 வருடங்களில் 9 கிலோ ஏறிவிட்டது.
  கிட்டத்தட்ட  20 வருடம்   43 கிலோவில்மெயிண்டெயின்  பண்ணிக்கொண்டிருந்தேன்
 43 கிலோவில்  இருந்து இப்போது 52 கிலோவைத் தொட்டுவிட்டது.
முன் போல் வேகமாக நடக்க முடியவில்லை . (வயதும் ஒரு காரணம்).
நம்மளும் பந்தா காமிக்கணுமில்லையா ?

வாக்கிங் போனேன்.
போனால்  அறிவு சாதுர்யத்தில்  நம்மையும் தூக்கி சாப்பிட ஒரு ஆள் இருக்குங்கிற
மாதிரி ஒருத்தங்களைப்  பாத்தேன்.
நொந்து பத்து நாள் பழையது மாதிரி ஆயிட்டேன்.

காலையில் ஒரு ஆறு மணி இருக்கும் .
பக்கத்தில் ஒரு பார்க்கில் வாக்கிங் போனேன்.

ஒரு  இருபத்தி ஐந்து வயது முதல் முப்பது வயதிற்குள் இருக்கும் ஒரு பெண்மணியை அவரது கணவன் ஸ்கூட்டரில்  வாக்கிங் போக கொண்டு வந்து விட்டார் .
கணவன் ஒல்லி என்றே சொல்லலாம்

 மனைவியின்  எடை நிச்சயம் ஒரு நூறைத்   தாண்டியிருக்கும்.
 ஒரு ரெண்டு ரவுண்டு கணவர் உருவம் மறையும் வரை ஸ்பீடுன்னா  என் ஸ்பீடு  உன் ஸ்பீடு இல்லை செம  ஸ்பீடில்  வாக்கிங்  போனார் .
சரியா ரெண்டே ரவுண்டுதான்

பிறகு ஆசுவாசமாக  அந்த பெண்மணி  ஒரு பெஞ்சில் உட்கார்ந்து செல்      போனில்   அம்மா அப்பா மற்றும்  உறவினருடன் விடாமல் புகுந்த வீட்டு வம்பு அடுத்த வீட்டு வம்பு எல்லாவற்றையும்  விலாவாரியாக ஒரு  முக்கால் மணி நேரம்  பேசினார்.

என்ன மாதிரியான பூஸ்டர் பேக்கேஜ்  என்று தெரியவில்லை

 வீட்டில் கூட மாமியார் இருப்பார்கள் போலே .
ஆசை தீரப் பேசி முடித்த பின்  கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தார்.

பிறகு கணவருக்கு போன் செய்து வரச் சொன்னார் போலும்..
போன் செய்து மறுபடியும்  சின்சியராக  வேக வேகமாக நடக்க ஆரம்பித்தார்.

அந்த அப்பாவி மனுஷன் ஸ்கூட்டரில்  குழந்தையுடன்  வந்து  நின்றார்.

பிறகு கணவனிடம் நான் பாப்பாவை வெச்சுக்கிறேன் .
நீங்க ஒரு 15 நிமிஷமாவது வாக் போங்க உடம்புக்கு நல்லது  என அன்பொழுகச் சொன்னார்.

ஒல்லிப்பிச்சு கணவன் அகமகிழ்ந்து "  நீ தான் பாவம் முக்கால் மணி நேரம் வேகமா நடந்துட்டே . ரெஸ்ட் எடுத்துக்கோ "என்று சொல்லிவிட்டு
குழந்தையையும் ஓடச்சொல்லி இவன் வாக் போனான்.

ஒரு வயதான பெரியவர் "இதுதாங்க நெஜமாவே வன்முறை "என்றார்.

என் பக்கத்தில் இருந்த ஒரு வயதான லேடி
" இந்த   அம்மா இங்கே செம கூலா ரெஸ்ட் எடுக்குது.
மாமியாரம்மா மகனுக்காக வேண்டி சீக்கிரமே எழுந்து சமையல் செய்யுதோ என்னவோ யார் கண்டா" என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

எது உண்மை என்று தெரியாது.

அந்தப் பெண்மணி கணவனை  ஃ பூல் பண்ணுவது .வன்முறையோ  சாமர்த்தியமோ என்னவோ அதுவும்  தெரியாது.
நான் நீதிபதி ஸ்தானத்தில்  அமர விரும்பவில்லை .

ஆனால்  அந்த கணவன் ஏமாறுவதைப் பார்க்க சுவாரஸ்யமாக இருந்தது என்னவோ உண்மை.

எனக்கும் வாக்கிங் போன அலுப்பு தெரியலை .

உலகத்தில் வன்முறைகளுக்கு  மத்தியில் பல நல்ல  (நல்ல?) விஷயங்களும் நடக்கத்தான் செய்கின்றன.

Friday, 6 December 2013

டெல்லி அனுபவம் -2

முதுகு வலி காரணமாக  நெட் பக்கம்,பதிவு பக்கம் எல்லாவற்றுக்கும்  கொஞ்சம் வாலண்டரி ஒய்வு .
 சும்மா நம்மளும் கீரோம்ன்னு  (இருக்கோம் ) காமிக்கறதுக்காக  ஒரு  சொதப்பல் பதிவு  போட்டேன்.
சரி , விஷயத்துக்கு வருவோம் .
நான்  டெல்லி போன  புதிதில்  அடிக்கடி  எங்க  அம்மா  மொழி  தெரியாததால் மளிகைக் கடையில்
ஏதெதோ  கலாட்டா  செய்து விட்டு வருவார்கள் .
அவையெல்லாம் சும்மா ஜுஜ்ஜுபி !
மெயின் அயிட்டம் ஒன்னு சூப்பர்!
டெல்லி   போய் ஒரு மூணு நாள் தான் ஆகியிருக்கும்.
வீட்டுக்குப் பக்கத்தில் ஷாப்பிங் காம்பிலெக்ஸ் !
ஒரு  2 நிமிட நடைதான் .
எங்க அம்மாவை அப்பப்போ தெகிரியமா இருக்கணும் .
மொழி தெரியலேன்னு பயம் கூடாது .
கொலம்பஸ் என்ன மொழி தெரிஞ்சா , வழி தெரிஞ்சா  அமெரிக்காவை கண்டு பிடிச்சார் !
கடைக்கெல்லாம்  போங்க ! என்றெல்லாம் உசுப்பிவுட்டிருந்தேன் .
எங்க அம்மாவுக்கு மனப்பாடம் பண்ண பிடிக்கும்
அதோடு  நல்லாவும் மனனம் செய்ய வரும்
எனவே என்ன விலை எங்கே போன்ற முக்கிய வார்த்தைகள் மற்றும் நம்பரெல்லாம்  12வது  படிக்கிற பையன் ரேஞ்சுக்கு  பொட்டை  நெட்டுரு  !

எங்க  அம்மாவுக்கு  தன்  பொண்ணு  என்கரேஜ்  பண்ணுவது பற்றி  ஏகப்  பெருமை !
வீட்டு அட்ரஸ் மட்டும்  ஹிந்தியிலும்  இங்கிலீஷிலும்  எழுதிக் கொடுத்திருந்தேன்
நான்  ஆபீஸ்  போனதும் மளிகைக் கடை விசிட் !
 மளிகை சாமான்  ஒவ்வொண்ணா    கையை  வெச்சு காமிச்சு வெலை  வெவரம் எல்லாம்  கடைக்காரன் கிட்டே கேட்டு ஒரு  நோட்டிலே எழுதிகிட்டு  எது எல்லாம்  தஞ்சாவூர்  விலையோட ஒத்துப்  போச்சோ அது எல்லாம்  வாங்கிகிட்டு  பிறகு கடைசியா  கோதுமை மாவு விலை விசாரிச்சப்போ
அங்கே ஒரு தகராறு!
எங்க அம்மாவுக்கு  ஹிந்தி பச்சாஸ்  (50)க்கும்  பச்சிஸ்  (25))க்கும் ஒரு
கன் பியுஷன்   அப்படின்னாக்க  கடைக்காரனுக்கு   இங்கிலீஷ்  15  மற்றும் 50 க்கும் ஒரு கன் பியுஷன்  .
எங்க அம்மா எடையைப் பத்தி 15  கிலோ   ன்னு சொல்ல அவன் விலை பத்தி பேச ரெண்டு பேருக்கும்  இடையிலான மொழிப் பிரச்னையாலே  கோதுமை மாவு விற்பனை  டீலிங்  படியலே!
எங்க அம்மாவுக்கு அவன் ஏமாத்துறான்னு நெனப்பு !
இல்லப்பா  “எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரிஎன் பொண்ணு .
அதைக் கூட்டிகிட்டு சாயந்திரமா வரேன்னு சொல்லிட்டு
மத்தியானம் கூட்டம் இல்லாததாலே வேறே என்னனமோ   எங்கம்மா இங்கிலீஷில் பேச அவன் ஹிந்தியில் பேச , ஏதோ  பேசி விட்டு 
வீட்டுக்கு வந்திட்டாங்களாம் .

சாயந்திரம்  நான் வந்ததும்  ரொம்ப பெருமை  பொங்க  விவரமெல்லாம் சொல்லிட்டு கோதுமை ஒண்ணுதான்  என்னை  ஏமாத்தப்பாத்தான்,
 நான் ஏமாறுகிற ஆளா என்ன?
 நீ வந்தப்புறம் வாங்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் .
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா நாம போகலாம்ன்னு சொன்னங்க .

பிறகு ஒரு ஏழரை மணிக்கு ரெண்டு பேரும் போனோம் .

கடையில் சகோதரர்களுக்குள் எதோ சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்க , மத்தியானம் எங்க  அம்மாகிட்டே பேசிகிட்டு இருந்த ஆள்  கடையின் வெளிப்பக்கம்   (அவனும்  அந்தக்க்கடையின் சகோதரர்களுள்  ஒருவன் ) இருந்தான் . என்னைப்  பார்த்ததும் நான்   ஹிந்தியில் நல்லா  பேசறதைப்  பாத்து சந்தோஷப்பட்டு  தான் .பி இலிருந்து  வந்த கதையை ச் சொன்னான் .
பிறகு  எங்க அம்மா  வந்தது  பற்றி  எல்லாம் சொல்லிவிட்டு  தனக்கு  இங்கிலீஷ் சுத்தம் என்று  வருத்தபடாத வாலிபனாக  சிரித்துக்கொண்டே சொன்னான் .
கடைசியாக  கோதுமை மாவு  மூட்டை கள் 5 கிலோ , 10 கிலோ , 15 கிலோ என்று அடுக்கி வைத்திருந்தார்கள் .
விலை என்ன என்று கேட்டோம் .
என்ன நினைத்தானோ தெரியவில்லை ஏதோ பேச்சு வாக்கிலே  15 கிலொ மூட்டை ரூ  15, என்றான் .
இவன் வெளியே இருந்து பந்திரா  (15)ன்னு  ஹிந்தியில்  கத்த
சரி  என்று  நாங்களும் 15 ரூபாயை  கடை உள்ளே  கொடுத்துவிட்டு 
தூக்க  முடியாமால் தூக்கினோம் .
கடை உள்ள  இருந்தவன்  நாங்க   எந்த மூட்டையைத்  தூக்குகிறோம்ன்னு கவனிக்கலை.
அவனுகளுக்குள்ளே வேறே எதோ கார சாரமான பேச்சு.
15 கிலோவை ரெண்டு பேராலேயும் தூக்க  கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது.
யாராவது பாத்தா என்ன நினைப்பாங்கோ
என்ன நெனச்சா என்ன
 இங்கே என்ன சொந்தமா பந்தமா ன்னு சொல்லிக்கிட்டு  இருபது தப்படி தானே வீட்டுக்கு எடுத்திட்டு வந்திட்டோம்..
எங்க அம்மாமத்தியானம் என்னை 50 ரூபாய் ன்னு சொல்லி ஏமாத்தப் பாத்தான் . வெவரம் தெரிஞ்ச நீ வந்தப்புறம் பாரேன் .”ன்னு எனக்கு ஒரே புகழ் மாலை.
என் ஹிந்தி புலமை (?) பற்றி ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள்
அடுத்த   நாள் பாங்கில் போய் வேலை செய்யணுமின்னு எங்க அம்மா எனக்கு கையில்   வருமுன்  காக்கும்  விதமாக  அமிர்தாஞ்சனம் எல்லாம்   காப்பு  இட்டு (தடவிவிட்டு )ரொம்பவே சவரட்சணை !
15 ரூபாய் க்கு 15 கிலோ கோதுமை மாவுன்னாக்க  ரொம்பவே சீப்பு .
நம்மூரிலே அரவைகூலி  மட்டுமே 15 ரூபாய் ஆகும்ன்னு ஒரே  சந்தோஷம்
எங்க அம்மாவுக்கு.
எங்க அம்மா அப்பா இருவரின் ஊர் திருவையாறு  பக்கம் .
எப்ப பாத்தாலும் ஊர் பெருமையைப் பத்தி யும் காவிரி ஆற்றுப் பாசனத்தில்  மூணு  போகம் வெளையற பெருமை  பத்தியும்   மூச்சு கூட விடாமல் பேசுற எங்க அம்மா கம்பிலீட்டா பிளேட்டை திருப்பிப் போட்டு அன்னைக்கு ராத்திரி மற்றும் பின் வந்த பல நாட்களிலும் டெல்லி மாதி வேறே ஊர் வரவே வராது, ,ன்னு டெல்லியின் பெருமைதான்.
15 ரூபாய் கோதுமை மாவு பிறந்து வளர்ந்த மண்ணையே மறக்கச் செய்த  கொடுமை !
கோதுமை  மாவு  வாங்கிட்டு வந்த  நாளிலேருந்து   தினமும்  சப்பாத்திதான் .
எங்க அம்மா டயாபடீஸ்  நோயாளி என்பதால் கோதுமை மாவிலேயே என்னென்னவோ விதவிதமாக செய்து சாப்பிட்டார்கள் .
பத்தாததுக்கு  பால் வேறே சீப்பு !
கறிகாய் எல்லாம் 1982ல் ஒரு கிலோ முக்கால் ரூபாய் ,
இல்லாட்டி ஒண்ணேகால் கிலோ ஒரு ரூபாய் .
 பாலும்  கோதுமை மாவும் நவம்பர் மாதக்குளிரும் இயற்கையிலேயே நல்ல சிகப்பான எங்க அம்மா க்கு    உடல்  இன்னும் சிகப்பாக ஆகி  கன்னம் எல்லாம் ரோஸாக ஆனதும் சந்தோஷம்  தாங்கலெ எங்கம்மாக்கு !
முடிஞ்சா இங்கியே  வீடு வாங்கி செட்டில் ஆயிடலாம் .
டெல்லி யிலேயே எனக்கு மாப்பிளை கிடைக்காதா  ங்கிற ஆசை கூட எங்கம்மாக்கு வந்திடுச்சு!
நாரணா நின்னை நினைக்காத நாளே இல்லை என்பது போல்  கோதுமை மாவு பற்றி அம்மா பேசாத நாளே இல்லை எனலாம் .
கோதுமை மாவு தீந்ததும் அடுத்த பதினஞ்சு கிலோ வாங்க கடைக்குப் போனா அவன் என்னடான்னக்க 50 ரூபாய் கொடுங்க என்கிறான் .
இல்லப்பா போன மாசம்தான்  15 ரூபாக்கு வாங்கினோம்ன்னு  சொன்னோம்.
 இளக்காரமா   சிரிச்சுகிட்டே “யாரும்மா சொன்னா ?”
15 ரூபாக்கு 15 கிலொ கோதுமை மாவு எந்த கேனயன் தருவான்னு கேட்டான் .
முண்டம்  நீதான்  கொடுத்தேன்னு  அவன்கிட்டேசொன்னா   பழைய   பாக்கிய  கேட்டுறப்  போரான்னுட்டு  வாய மூடிட்டு  5 கிலோ மூட்டையை தூக்கிட்டு  சோகமா வீடு வந்து சேந்தோம்.


Sunday, 1 December 2013

கொட்டிக்கிடக்குது காமெடி ! அள்ளுங்க! அள்ளுங்க!

கடந்த இரண்டு வாரங்களாக வேலைப் பளு..
 ( எல்லோரும் சொல்லிக்கிட்டிருக்கிற மாதிரி நம்மளும் சொன்னாதானே ஒரு கெத்து ).
என்னை நிறையப் பேர் கேட்கும் கேள்வி
உனக்கு மட்டும்  எப்படி காமெடி இவ்வளவு நடக்குது என்று .

ஐய்யயோ ! எனக்கும் ஆயிரம் சோக நிகழ்வுகள் நடக்குது .
ஆனா அதை நீங்கள் எல்லாம் அழுதுகிட்டே விவரமா சொல்றீங்க
 .நான் அதை சிரிச்சுகிட்டே சொல்றேன் .
அங்க தான் நான் ...............
.
நம்மை சுத்தி எல்லோருமே காமெடி  காமெடிமட்டும்  தான் பண்றாங்க .
(உருப்படியா ஒன்னும் செஞ்சு கிழிக்கிறதில்லே!.

விவாதங்கள்
 
.ஏன்னா அப்படி ஏதாவது உருப்படியா  செய்திருந்தால்  இந்தியா எங்கியொல்ல போயிருக்கும் )
நாம தான் அந்த காமெடியை ரசிக்கறது இல்லே !

என் மகன் ஞாயிற்றுக்கிழமை  (நேத்து ) காலை      மெரீனா கடற்கரைக்கு நண்பர்களுடன் வாக்கிங்  போனபோது பிச்சைக்காரர்கள்  பிச்சை கேட்டிருக்கிறார்கள் .
ஒரு ரெண்டு மூணு பேர் வரைக்கும்  "ம்ஹூம் .. கிடையாது என்று சொல்லிவிட்டான்.
பிறகு அவனுக்கு போர் அடித்து நாலாவது பிச்சைக்காரர் பிச்சை  கேட்ட போது பதிலே சொல்லாமல்  போயிருக்கிறான்.
அவர் கோபம் கொண்டு
 "அவனவன்  ஏ.சி இருக்கிற  ஏ.டி எம் லே பூந்து  காசை அடிச்சுப் புடுங்கறான்.
நம்ப பீச்சோரமா உக்காந்து மழை  வருமோ வருமோன்னு பயந்துகிட்டே பவ்யமா சாமீ பிச்சை போடுன்னு பிச்சை கேட்டா   முடியும் முடியாதுன்னு சொல்ல  கூட இந்த வாலிபப் பசங்களுக்கு வாய் வலிக்கிதாக்கும் .கலிகாலம்டா சாமி ."
பாத்தீங்களா? எப்படி வெவெரமா காமெடி பண்றாங்கோ !
 (கடுப்பேத்தறாங்க)?