நான் வேலை பார்க்கும் இடத்தில் எனக்கு நான் இந்தியா மேப்பில் வடகிழக்கே உட்கார்ந்திருப்பதாக ஒரு எண்ணம் வரும் . ஏனெனில் எனக்கு அண்டை சீட் ஒரு சைனாக் காரப் பையன் .
அவன் இங்கிலீஷை ப் புரிந்து கொள்வது கொஞ்சம் சிரமம் தான்.
ஆனாலும் பேசுவோம் .
எனக்கு மொழிகளில் ஆர்வம் இருப்பது கண்டு என்னைச் சீன மொழி கற்றுக் கொள்ளுமாறு கூறினான். எனக்கும் இந்த ஆசை ரொம்ப நாளாக இருந்தது .
ஏனெனில் ஜப்பான் மொழி தெரிந்தால் சீன மொழியை எப்படிப் படிப்பது என்பது தெரியாது ,ஆனால் அந்த எழுத்துக்கள் பார்த்து
(பட வடிவில் உள்ளவற்றை )எனக்கு அர்த்தம் சொல்ல முடியும் .
உதாரணமாக மாடு வருகிறது என்று சொல்லமுடியும் ) ஆனால் மாடு வந்ததா (இறந்த காலம் ) வரப் போகிறதா (எதிர்காலம் ) வரலாம்ன்னு இருக்கா அதெல்லாம் சொல்லத் தெரியாது. ஒரு மையமாக சொல்லப்போனால் ஒரு குத்து மதிப்பாகத்தான் அர்த்தம் சொல்லத்தெரியும்.
ஏனெனில் மாட்டுக்கு சீன மொழியிலும் ஜப்பான் மொழியிலும் ஒரே மாதிரிதான் எழுதுவார்கள் .வருவது என்பதற்கும் ஒரே மாதிரியான எழுத்து .
தட்டுத் தடுமாறி அர்த்தம் கண்டு பிடித்து விடலாம்.
ஏதாவது செல் போன் பிரிண்டர் அல்லது சில சைனா மேக் பரிசுப் பொருட் கள் போன்றவற்றை வாங்கினால் அதில் இருக்கும் சீன மொழியைப் பார்த்து மற்றவர்களுக்கு எனக்குப் புரிந்த வரை சொல்லுவேன் . அதைக் கேட்டு அவற்றை ஆபரேட் செய்து கொள்வார்கள் . ( அது என்ன , அதை மேலே வை கீழே வை ஏற்றணும் இறக்கணும் ஆன் பண்ணு . இத்யாதி ... )
எனவே சீன மொழி கற்க வேண்டும் என்று இருந்தேன் .
விசாரித்ததில் சொல்லிக் கொடுக்கும் இடமும் கொஞ்சம் தூரம் .
சொல்லிகொடுப்பவரும் சீனர் அல்ல. நம் தமிழரே . (உச்சரிப்பு சரிவர இல்லாவிட்டால் கஷ்டம் ).
.தவிர பரீக்ஷை எழுத சிங்கப்பூர் அல்லது ஹாங்காங்கு போகணுமாம் .
அட நம்ம படிக்கிற லட்சணத்துக்கு அங்கே போய் பரீக்ஷை எழுதி ஃ பெயில் ஆயிட்டா நம்மளை எல்லாரும் ஒரு மாதிரியாப் பாப்பாங்களே...
வேணாம் போன்னுட்டு ஒரு புத்தகம் ரெண்டு வருஷம் முந்தி புக் எக்சிபிஷன்ல வாங்கினேன். எடுத்துப் படித்தேன் . ஆனால் உச்சரிப்பை மனதில் நிலை நிறுத்திக் கொள்ள முடியவில்லை . ஒரே எழுத்து வடிவத்திற்கு ஜப்பனீசில் ஒரு மாதிரி உச்சரிப்பு.சைனீசில் வேறு மாதிரி ....
மக்கள் மாற்றத்தை ஏற்றுக் கொள்வது போல் மனசு .... ம்ஹூம் .....
மாற மறுத்தது.
தூக்கமருந்து கொடுக்காமேலேயே புத்தகம்கும்பகர்ணன் ரேஞ்சுக்கு தூங்க ஆரம்பித்து விட்டது.
என் மகனும் அம்மா தெரிந்த மொழிகளிலேயே இன்னும் ஆழமாகப் படிக்கலாமே . ஏன் இப்படி மாறுகிறாய் ?
தவிர நீ படிக்க ஆரம்பித்தால் புத்தகம் சேர்க்க ஆரம்பித்து விடுகிறாய் .
வீட்டில் இன்னும் புத்தகங்கள் சேர்ந்து பிறகு மனிதர்கள் வசிக்க முடியாது .
இப்பவே வீடு பழைய புத்தகக் கடை மாதிரி இருக்கு
நீ வேண்ணா பாரு ஒரு நாள் யாராவது அவங்க வீட்டுப் பழைய பேப்பரை இது காயலங்கடைன்னு நெனச்சுகிட்டு நம்ம வீட்டில் கொண்டு வந்து விக்க ஆரம்பிச்சுடுவாங்க என்று ஒரு ஸ்பீட் பிரேக்கர் போட்டான்.
சகுனமே சரிஇல்லைன்னு என்று விட்டுவிட்டேன்.
ஆனாலும் பக்கத்து சீட்டில் வந்து உட்கார்ந்திருக்கும் சைனாப் பையன் எனக்கு வீட்டிற்கே வந்து சொல்லித்தருகிறேன் என்றான்.
( எனக்கும் பகுதி நேர வேலை அவனுக்கும் பகுதி நேர வேலை . வேலை இருக்கும் பொழுது தான் எங்களைக் கூப்பிடுவார்கள் )
வீட்டிற்கு வருவதனால் ஒரு மூன்று நான்கு பேர் சேர்ந்தால் தான் அவனுக்கு லாபம் .அவனும் அவன் வயதுப் பசங்களுடன் தங்கி இருக்கிறான். எனவே நாம் அங்கு போவதும் சாத்தியம் இல்லை .
அக்கம் பக்கத்தில் யாரும் சேர்ந்தால் நமக்கு ஒரு துணையாக இருக்குமே என்று நினைத்தால் அந்த எழுத்துக்களைப் பார்த்து மிரண்டு போய் அவர் களெல்லாம் மாட்டேன் என்று சொல்லிவிட்டனர்.
பத்தாக்குறைக்கு உச்சரிப்பு வேறு மூக்கால் .... பிறகு தமிழையும் அதே மாதிரி உச்சரிக்க ஆரம்பித்தால் நல்ல நாளிலேயே நம்ம சொன்னப் புரிஞ்சுக்காத மக்கள் ..இதுதான் சாக்குன்னுட்டு சுத்தமாப் புரியலேன்னு சொல்லிடுவாங்க
அப்படீன்னு ஜகா வாங்கிட்டாங்க .
இது ஒரு மாதிரின்னாக்க இன்னும் சிலர் 30 நாளில் இந்தி மாதிரி
ஆறு மாசத்திலே பேச வருமா?எழுத வருமா ? என்ற கேள்விகளை எதிர் அம்பாகத் தொடுத்தனர் .
12 வருஷம் இங்கிலீஷ் படிச்சு அப்புறமும் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் குன்னு கோச்சிங்கு போறாங்களே , அதுக்கு என்ன பண்றது அது அவரவர் திறமையைப் பொறுத்த விஷயம் .ன்னு சொன்னேன் .
இங்கிலீஷு கத்துக்கும் போது இத்தனை வெட்டிக் கேள்வியா கேட்டாங்க ?
வெறுத்து விட்டேன்
நாம என்ன சைனீசில் பெரிய காப்பியமா எழுதப்போறோம் .
பேச ஒரு ஆள் கிடைச்சாச்சு
சரி போ யாரும் வராட்டி என்ன நாமளே புஸ்தகம் யூ டியுபு சினிமான்னு பார்த்து கத்துக்கலாமுன்னு தீர்மானித்துவிட்டேன் .
அந்தப் பையனிடம் சைனீசில் இப்பொழுது வெட்டியாக
"ஹலோ "
"நல்லாருக்கியா"
"சாப்பிட்டியா"
"படிச்சியா "
"சென்று வருகிறேன் -
என்று பேச ஆரம்பித்துவிட்டேன் . அவனுக்கும் ஒரு குட்டி சந்தோஷம்.
சைனா மொழியில் புலமை பெரும் எண்ணம் கிடையாது.
வெட்டியாக இருந்தால் மனது கண்ட கண்டதையும் நினைக்கிறது. இரவில் தூக்கம் மூன்று மணிக்கு மேல வரமாடேங்குது.
எனவே.....
டிஸ்கி : ரேடியோ பீக்கிங்கில் தமிழ் வழியே சைனீஸ் சொல்லித்தருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன் . அதன் விபரம் தெரிந்தவர்கள் ,கற்க ஆர்வமுள்ளவர்கள் கற்கலாம் .
அஹஹஹஹ்ஹஹஹ்ஹ் செம ஹுயூமரஸ் வுமன் பா நீங்க!! சத்தியமா ரொமப் சிரித்துவிட்டேன். மிகவும் பாராட்டுகிறேன் உங்கள் பதிவையும் உங்கள் ஹூயூமர் சென்சையும். எனக்கு மிகவும் பிடித்த ஒன்று நகைச்சுவை. அதுதான் முதல் சாய்ஸ்.
ReplyDeleteநகைச்சுவையாகவே யோசித்து வந்த எனக்கு சில சமயம் எழுதும் போது நகைச்சுவை எழுத வேண்டும் என்றால் இப்போது நீங்கள் எழுதியிருப்பது போல் பேச்சுத் தமிழில் எழுதினால்தான் அந்த நகைச்சுவை சற்று மிளிர்வது போல் தெரிகிறது. அதையே நல்ல தழிழில்தான் எழுத வேண்டும் என்றால் அதன் சுவையே மாறுவது போல் உள்ளது. பேச்சுத் தமிழில் எழுதிய போது ஒரு சில எதிர்க்கருத்துகள், வலைப்பக்கத்தில் பின்னூட்டமாக வரவில்லை என்றாலும், என்னைத் தனியாகச் சந்திக்கும் போது சொன்னார்கள். கொஞ்சம் அதில் பெரிய ஸ்பீட் ப்ரேக்கர் வந்துவிட்டது. வீட்டின் நிகழ்வுகளை அதை ஒத்திப் போட்டுவிட்டது.
மதுரைத் தமிழன், விசு இவர்களின் பதிவை வாசிக்கும் போதும் தொற்றிக் கொள்ளும் பின்னர் ஏதேனும் ஒன்று தடை போடும். உங்கள் பதிவை வாசித்ததும் மீண்டும் எனது நகைச்சுவை உணர்வு தொற்றிக் கொண்டுள்ளது. பார்ப்போம் தொடர முடிகின்றதா என்று..
கீதா
அருணா சைனீஸ், ஜப்பனீஸ் உச்சரிப்பை நான் பெரும்பாலும் நெட்டில் தேடிக் கேட்பதுண்டு. அதே போன்று கொரிய மொழியையும். வாக்கியங்களையும் கூட ஆங்கிலத்தில் அடித்துவிட்டு இதை எப்படிச் சொல்லுவார்கள் என்று. இந்த ஆர்வம் எனக்கு கல்லூரிக் காலத்தில் சந்தித்த ஜப்பானியப் பெண்கள், மற்றும் அமெரிக்கா சென்றிருந்த போது கீழ் வீட்டில் தங்கியிருந்த சைனீஸ் குடும்பம் என்று தொற்றியது. ஆனால் கற்கும் வாய்ப்பு இல்லை. சில யதார்த்த சங்கடங்கள். எனவே எனக்கு நெட் தான் நல்ல நண்பர், டீச்சர், ஃபிலாசஃப்ர் என்று ஆகிவிட்டது...
ReplyDeleteஉங்கள் ஆர்வத்தையும், அதைச் செயல்படுத்துவதையும் மிகவும் பாராட்டுகின்றேன். தனித்துவம் உங்கள் அடையாளம்! வாழ்த்துகள், பாராட்டுகள்!
வருகைக்கு நன்றி
ReplyDelete