Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Friday, 22 December 2017

அமெரிக்காவில் செய்த புளியோதரையால் இந்தியாவில் கடும் பூகம்பம்


 தலைப்பு ஏதோ வெகுஜன நாளிதழ்களில் வரும் தலைப்பு  போல் இருக்கிறதா?

ஆனால் உண்மை .

நான் எப்போதுமே சொல்வேன் ,

மாமியார் மருமகள் ,கணவன் மனைவி சண்டையை ஆரம்பமாகும்  லொகேஷன்களில் மிகுந்த முக்கியத்துவம் வகிப்பது சமையலறை .

நிஜமாகவே நடந்த இந்தக் கதையைக் கேட்டால் இது 1௦௦/1௦௦ உண்மை என்று ஒத்துக்கொள்வீர்கள் .

என் நெருங்கிய தோழி ஒருவரின் தங்கை அமெரிக்க மாப்பிள்ளையைக் கலியாணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றுள்ளார் .

முதல் நாள் செய்த சாதம் மிஞ்சி விடவே அதை வீணாக்க மனமில்லாமல் புளியோதரை   ஆகஉருமாற்றிக்  கணவருக்குப் பரிமாறி இருக்கிறார் .


அன்று சுக்கிரன் புதன் குரு போன்ற கிரகங்கள் எங்கோ  வேறு வேலையாய்ப்  போய் விட சனி பயங்கர உக்கிரப் பார்வை பார்த்திருக்கணும் போல .

கணவருக்கும் புளியோதரைக்கும் என்ன வாய்க்கால் தகராறோ ....அது இந்த மனைவிக்குத் தெரியவில்லை .


கணவன்  இதை வைத்து அமெரிக்காவில் ஒரு குரு க்ஷேத்ரம்  செட் போட்டுவிட்டார்.

பொதுவாகப் பெண்களும் சரி ஆண்களும் சரி கல்யாணம் வரை அம்மா பேச்சைக் கேட்கமாட்டார்கள்
.ஆனால் கல்யாணம் ஆனா உடனே  ஒரு" குபீர் " பாசம் வரும் பாருங்கள் . இது என்ன மாதிரியான டிசைனோ என்று எண்ணத்தோன்றும்.

 ஒரு இருபது வருடத்திற்கும் மேலாக அம்மாவுடன் இருந்திருந்தாலும் அம்மாவுக்கு உதவியாக அடுப்பங்கரை பக்கம் எட்டிக் கூடப்  பாக்காத இவர்கள் ,கல்யாணம்  ஆனபின்னே   "எங்க  அம்மா  எங்க  அம்மா "
என்கிற அலப்பறை ஓவராக இருக்கும்.

இதே போல்  இந்தப் பெண்ணும் எங்க வீட்டிலே இப்படித்தான் என்று பாட

இந்தப் பையனோ  எங்க வீட்டிலே எல்லாம் பழசெல்லாம் சாப்பிடவே மாட்டோம் என்று சொல்ல .....


 இது இத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை  பன்னாட்டுத்  தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தைப் பயன்படுத்தி ...  இருவருமே     இதை இந்தியாவில்இருக்கும்   தத்தம் தாய்மார்களுக்குத் தெரிவித்திருக்கிறார்கள் . (ஏனோ இந்த மேட்டர்களின் first information  ரிப்போர்ட் கள் தந்தை மார்களுக்குப் போவதில்லை ,)

பிறகென்ன இரு பெண் சம்பந்திமார்களும்  இந்த விஷயம் பற்றிக் கொதித்துக்  கொந்தளித்து   எழ .....

கிட்டத்தட்ட ஒரு பெரிய பூகம்பமே .......

ஒரு புளியோதரையால்    வாக்கு வாதங்கள்  ......பல மணி நேரங்கள்.

 ஹி    ஹி ஜியோவுக்கு நன்றி!

கடைசியில்  பெண் வீட்டில் இது வேறு   ஒன்றுமில்லை       சனிப் பெயர்ச்சியின் எபெ ஃ க்ட்  என்று  சொல்லி எண்டு கார்டு போட்டு
முடித்திருக்கிறார்கள் மேட்டரை.


அடுத்த பரபரப்பு வரை  இந்த மேட்டர் உறவினர்கள்  மற்றும்  அவலுக்கு ஏங்கும்  வெறும்  வாய்களால்  அலசப்படும் என்பதில் ஐயமில்லை .

இன்னும் புது லேப்டாப் பழக்கவரவில்லை  . ஸ்டார்ட் செய்வதிலும் கொஞ்சம் சந்தேகங்கள் உள்ளன
எனவே காமெண்ட் போடவில்லை .

Saturday, 5 August 2017

எங்கே அந்த மிச்ச ஆறு பேர்


  திரு கில்லர்ஜீ அவர்களின் பதிவு  படித்த   பின்    நான்   வெட்டியாக   யோசித்து எழுதும் பதிவே  இது.

 அவர்    மாதிரியே   எல்லாரும்   அவங்கள மாதிரி   இருக்கறதா   சொல்லப்படற மிச்ச   ஆறு பேரைக்   கண்டு பிடிக்க    ஆரம்பிச்சுட்டாங்கன்னாக்க   என்ன  ஆகும் என்று     நினைச்சுப் பார்த்தேன் .

முதலில்    எல்லாரும்   இது பற்றி    பேஸ் புக்கில்  

" இது தான்   என் அழகிய தமிழ் முகம் . யாரெல்லாம் என்னை மாதிரி முகம் கொண்டவர்களாக இருக்கிறீங்க  வாங்க வாங்க  “workers of the  world unite என்று காரல் மார்க்ஸ்  சொன்ன மாதிரி  அறை   கூவல்    விடுவார்கள் .


பிறகு பேஸ் புக்கில்         சில வேலையத்த     குரூப்களில்    எல்லாம்     வித விதமான   கோணங்களில்   செல் பி யாக  நிரம்பி வழியும் .


அது    தவிர வாட் ஸ்   அப்பிலும்     இந்த ஜுரம்  வேகமாகப்   பரவிவிடும் .

அதுக்கப் புறம்   ரோட்டில்   போகும் போது  மக்களெல்லாம்  நம்ம முகம்   மாதிரி  இருக்கறவங்க   போறாங்களான்னு   ரோட்டையோ     போற    வர
வண்டியை யோ  பாக்காம  நடப்பாங்க .

மாலுக்குப்  போனாலும் சரி   மார்கெட்டுக்குப் போனாலும் சரி   சினிமாவுக்குப் போனாலும் சரி   ,வாக்கிங் போனாலும்   சரி  
எல்லாரும்   அடுத்தவங்க முகத்தையே   உற்றுப்    பாக்க   ஆரம்பிச்சுடுவாங்க ....
.அதனால் பல விளைவுகள் வரலாம் .
 காதல் வரலாம் ,
அடிதடி நடக்கலாம்  .
மற்றவை உங்கள் கற்பனைக்கு.

பிறகு   ஒவ்வொரு டி . வி  சானலில்   இது  பற்றிய  ஓசை  மிகு  விவாதங்கள்    நடக்கும்

முக்கியச்   செய்திகள்    பரபரப்புச்    செய்திகள்    பகுதியில்   இதை   ஓட விடுவார்கள் .

தமிழர்களும்    மற்ற முக்கிய   பிரச்னைகளைக்  கொஞ்ச நாளைக்கு   மறந்து விட்டு     இதிலேயே   மும்முரமாக இருப்பார்கள்

மற்ற சீரியல்கள் , ரியாலிட்டி       ஷோக்கள்   டி ஆர் பி ரேட்டில்  பின்னுக்குத் தள்ளப்படலாம் .

சீரியல்கள்   மற்றும்   சினிமாக்கள்    கதையே    தன்னை   மாதிரியே    இருக்கற   மிச்ச பேரைக் கண்டு பிடிக்கும் போது    நடக்கிற போது   நடக்கிற காமெடிவீரச் செயல்கள் , மனதை உருக்கும் அழுகைக்    காட்சிகள்மனத்தைத் தொடும் பாடல்கள் அதில்  பல  டிவிஸ்ட் கள்  கொண்டவையாக இருக்கும்.


பண்டிகை நாட்களில்    டி வி நிகழ்ச்சிகளில்    சினிமா  பிரபலங்கள்    மிச்ச ஆறு பேரைத் தேடியபோது  தமக்கு  நடந்த அனுபவங்களை    விவரிப்பார்கள்..


மக்களும் அவற்றை பண்டிகை எதற்காகக்  கொண்டாடுகிறோம்  என்பதையே  மறக்கும் அளவுக்கு ஆர்வத்துடன் பார்ப்பார்கள்.

முதலில் தன்னை மாதிரி உள்ள ஆறு பேரைக் கண்டு பிடித்தவர்களுக்குப் பரிசு கிடைக்கலாம் .

 அன்றைய தினப் பலனில் யார் யாருக்கெல்லாம் தன்னை மாதிரி உள்ள ஆறு பேரைக் கண்டு பிடிக்க முடியும் என்று ஒரு வாக்கியம் சேர்க்கப் படலாம் .
.
தவிர
இதற்காக வழிபட வேண்டிய தெய்வங்கள், பரிகாரங்கள் , செய்ய வேண்டிய பூஜைகள் ,எந்த எந்த ராசிக்காரர்கள் எந்தக்  கோயிலில் வழிபாடு செய்யவேண்டும் விவரங்கள் இந்த வார இதழில்.


 இத்யாதி ....... விஷயங்கள்  நடக்கலாம்.

Saturday, 18 March 2017

ஹோம் ஒர்க் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்



பொருளாதார வல்லுனர்கள் "உலகத்தில் தவிர்க்க முடியாத சமாச்சாரங்கள் இரண்டு.
ஒன்று .மரணம், மற்றொன்று அரசாங்க வரி" என்பார்கள். 

என்னைப் பொருத்தவரை வரி ஏய்ப்பது கூட செய்துவிடலாம், 
இந்த ஹோம் ஒர்க் ஒவ்வொருவர் வாழ்விலும்
படுத்தும் பாடு இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. 

ஆனால் அதை ஒவ்வொருவரும் எப்படி எல்லாம் சமாளிக்கிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யமானது.
.
முதலில் என் கதையைப் பார்ப்போம்.

 நான் படிக்கும் போது ஸ்கூல் முடிந்து வந்தால் ஹோம் ஒர்க் செய்தவுடன்தான் விளையாட விடுவார்கள். 
அதனால் அவசர அவசரமாக ஹோம் ஒர்க் சீக்கிரம் செய்துவிட்டு   நோட்டை மூடி பைக்கு நெஞ்சடைக்கிற மாதிரி  உள்ளே திணித்துவிட்டு  விளையாட ஒரே ஓட்டம்தான்.

அது சரி, அந்த  ஹோம் ஒர்க் லட்சணம் எப்படி இருக்கும் தெரியுமோ?

வெளிப்பார்வைக்கு ஹோம் ஒர்க்  செய்த மாதிரிதான் இருக்கும்,  ஆனால் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனுமாம் கதை தான்.

முதல் இரண்டு வரியும் கடைசி இரண்டு வரியும் பக்கா!

எப்படியாகப்பட்ட  கொம்பனாலும் கண்ணில் ஒரு டின் விளக்கெண்ணை விட்டு நோண்டி   நோண்டி பார்த்தாலும்   தப்பே கண்டுபிடிக்க முடியாது. என் எல்லா ஹோம் ஒர்க் நோட்டிலும் டீச்சர் ஒரு சிகப்பு கலர் டிக் பண்ணி இனிஷியல் போட்டு இருப்பார்கள். என் ஹோம் ஒர்க் கில் தப்பு இருந்து டீச்சர்  திருத்தியதற்கான  அடையாளம் அறவே இராது.

நமக்கா தெரியாது  டீச்சரைப் பத்தி! அவங்க வீட்டிலே ஏக வேலைகள்! பேப்பர் கரெக்க்ஷன்,குழந்தையைப் பார்க்கணும் ,வீட்டைப் பார்க்கணும்  மாமியார் கணவன் .......இத்யாதி,இத்யாதி

 பேரைப் பார்த்து கையெழுத்து அழகாக இருந்தால் கட கட என்று டிக் ! 
இப்படியே எஸ் எஸ் எல் சி வரை ஓட்டினேன்.
 ஏதோ படிப்பு கொஞ்சம் நன்றாக இருந்ததால் வண்டி ஓடியது. 

ரொம்ப நாள் வரை நான்தான் செம கில்லாடி என்று  நினைத்துக்கொண்டு இருந்தேன்,

பிறகுதான் தெரிந்தது  நமக்கும் மேலே உள்ளவர் கோடி என்று.

( நினைத்துப் பார்த்தால் நிம்மதி வரவில்லை எனக்கு பொறாமை தான் வந்தது,

 மேலே படித்தால் உங்களுக்கும் பத்திக் கொண்டுதான்  வரும். வரணும் அப்படி  வரவில்லை என்றால் நீங்கள் அக்மார்க் ஞானிதான்.)

 நான் இப்படி டீல் பண்ணினேன் என்றால் ஒரு சிலர் மற்றவர்களின் நோட்டைப் பார்த்து காப்பி அடித்தனர், 
இது ஒன்றும் பெரிய தப்பில்லை என்றாலும் அதே கிளாசில் பல பேரால் காப்பி அடிக்கப்பட்டு கணக்கு பாட நோட்டு காமெடி பீஸாக மாறியது தனிக் கதை. 

உதாரணமாக,19X4=76 என்பது பலராலும் காப்பி அடிக்கப்பட்டு நடுவழியில் 14X4=76
ஆகி, ஆட்கள் ஆடுகளாக மாறி, வேலை நேரம் சேலை நேரம் என்று உருமாறினாலும்  கடைசியில் விடை மட்டும் பக்கா!

 கோலத்திற்கு செம்மண் இடுவது போல்.சிகப்பு மையால் அடிக்கோடிட்டு விடுவதால் அகப்பிழைகள் ஆயிரம் இருந்தாலும் டீச்சரின் கண்ணுக்குள் சிக்காது. காரண்டி!



மேல் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்வது போல், ஹோம் ஒர்க்கை அமெரிக்கா 

ஸ்டைலில் தகுந்த சன்மானத்துடன் அந்த இளம் வயதிலேயே

 அவுட் சோர்சிங்க் செய்த மானேஜ்மெண்ட் புலிகளும் இந்தியாவில் ஏகம்.


நான் சொல்லும் என்  காலம் டி.வி, இண்டெர்நெட் என்றால் ஸ்பெல்லிங் கூட என்ன போடுவதோ யாமறியேன் பராபரமே யுகத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ரொம்ப சொன்னால் என் வயதை நானே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி ஆகிவிடும். அது போன நூற்றாண்டு சமாச்சாரம்.

 இந்த  நூற்றாண்டில்  அதாவது 1990 மற்றும் 2000களில் எப்படி?

சிலர் "டீச்சர்! செஞ்ச ஹோம் ஒர்க்கை மறந்து வீட்டில் வைத்து விட்டேன், இருந்தாலும் ஒரு பேப்பரில் எழுதி........../அவளின்/அவனின் நோட்டு உள்ளே வைத்திருக்கிறேன் "என்று படு பவ்யமாக கொஞ்சும் தொனியில் சொன்னால் மயங்காத  டீச்சர் யாருமுண்டோ?


டீச்சரிடம் திருத்துவதற்கு கொடுத்த ஹோம் ஒர்க் நோட்டு திரும்ப எனக்கு வரவே இல்லை அதனால்தான் ஹோம் ஒர் பண்ண முடியலை என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கொடுக்கும்  ஓவர்   ஃபீலிங்கும் சில சமயங்களில் கை கொடுக்கத்தான் செய்கிறது.


என் மகன்கள்  படித்த காலத்தில் நானும் வேலைக்குப் போய்க்கொண்டு  இருந்ததால் ஆபீஸூ விட்டு ஏழரை மணிக்கு வந்தபின் சில சமயங்களில் நானே ஒரு ஃபேர் காபி எழுதி அப்படியே அட்ட காபி அடிக்கச் சொன்ன நேரமும் உண்டு.

சயன்சு நோட்டில் டயகரம் மட்டும் நான் போட்டுக் கொடுத்து பாகங்கள் குறிக்க வேண்டியது மட்டும் அவர்களின் வேலைதான் என்ற சட்டத்தை மீறியதாக சரித்திரமே கிடையாது.

 ,ஜாமெட்ரி நோட்டிலும் என் கை வண்ணம்தான். ஏனெனில்  அவ்ர்களுக்கு எட்டரைக்குள் தூக்கம் வந்து விடும்.

  ஹோம் ஒர்க்கே பண்ணிக் கொண்டிருந்தால் படிப்பது எப்போது? மேலே 

சொன்னவைகள் எல்லாம் எனது நேர நிர்வாகத்திறனின் ஒரு அம்சம்தான் என்று 
கொள்ளவேண்டுமே தவிர ஹோம் ஒர்க்கிற்கு தண்ணி காட்டும் உபாயமாகக்  
கொள்ளவேண்டாம்.

என் மகனின் பள்ளித்தோழர்களின் ஒரு சில பெற்றோர்கள் குறிப்பாக 11வது 12வது ரெகார்டு நோட்டில் (ரொம்ப நேரம் பிடிக்கும் வெட்டி வேலைஎன்று முடிவு செய்துவிட்ட காரணத்தால் )ஆரம்ப முதலே  எழுதிக் கொடுக்கும் பரோபகாரி அவர்கள்தான்.

பாதியில் எழுத ஆரம்பித்தால் கையெழுத்து மாறி ஏடா கூடமாகி ......  பெற்றோரான நாம் ஹோம் ஒர்க்கையும் பண்ணிவிட்டு பிரின்சிபல் ரூம் வாசலில்  ஹோம் ஒர்க் பண்ணாத பசங்களுடன் பார்ட்னராகப்    பழியாகக் கிடக்க வேண்டும்.

தேவை இல்லாத பிரச்னைக்கு  நாமே ஏன் பிள்ளையார் சுழி  போடணும் என்கிற படு சாமர்த்தியமான அணுகுமுறைதான் இந்த ரகம்.


என் மகனின் பள்ளியின்  ஒரு மாணவன்  எப்படி ஹோம் ஒர்க் சமாளிபிகேஷன் செய்தான் என்பதைக் கேட்டால் கி.பி 2020க்குள் இந்தியா சைனாவை முந்திக்கொண்டுவிடும் என்பதில் யாருக்கும் ஐயமே இராது.

ஒரு பையன் 12  வது படிக்கும் போது  ஒரு வருடம் முழுக்க ஹோம் ஒர்க் எழுதவே இல்லையாம் ! இது எப்படி முடியும் எப்படி என்கிறீர்களா? அவன் தான் கிளாசின் லீடராம். நோட்டைக் கலெக்ட் பண்ணி  கிளாசில் வந்தவர்கள் மொத்தம் 40 பேர் ,ஹோம் ஒர்க் நோட்டும் 40 இருக்கு டீச்சர் என்று ஏதோ கம்பெனி பேலன்சு ஷீட் டாலி பண்ணிய மாதிரி
டீச்சர் முன்னாடியே எண்ணிக் காண்பித்துவிட்டு  தானே
அவர் ரூமில் கொண்டு வைப்பானாம்.

 வைக்கு முன், பாதி வழியில்
 ஹோம் ஒர்க் செய்யாத தன் நோட்டை உருவிவிடுவானாம்.

பையன் நன்றாகப் படிப்பவன்.
டியூஷனிலும் ஹோம் ஒர்க் கையை ஒடிக்குமாம்,

 அதனால் பையன் ரூம் போடாமலே இப்படி யோசித்து விட்டான்.

 இது எப்படி இருக்கு? சூப்பராக இல்லை?

அப்படியாகப் பட்ட அறிவாளி யார் என்று தெரியணுமா?

 ஒரு ஹிண்ட் தருகிறேன் .

 புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?


 (பத்திரிகைக்கு ஒரு இரண்டு வருடம் முன்பு அனுப்பினேன் . இன்று வரை பிரசுரமானத்திற்கான அறிவிப்போ புத்தகமோ வீட்டிற்கு வரவில்லை)


Friday, 6 January 2017

பூனை மொழி அறிந்த புதுமைப் பெண் .


  

 பூனை மொழி   எங்கே   சொல்லிக்   கொடுக்கிறார்கள்   என்றெல்லாம் கேட்கவேண்டாம் .

படித்துப்   பார்த்தால்   நீங்களே    ஒத்துக் கொள்வீர்கள்    எனக்குப்  பூனை மொழி   தெரியு ம்  என்று.

 எங்க   வீட்டில்   பூனைக்கு ப்   பிரசவம்   என்று எங்கேயோ      பூனை மொழியில்  எழுதி   வைத்திருக்கிறோம்   போல . எங்க   வீட்டு   பால்கனியில்   உள்ள அலமாரியில்தான்    பூனைகள்   குட்டி போடுகின்றன.


 ஆனாலும்   அவைகள்   ஒரு ராணுவக்    கட்டுப் பாட்டுடன் தான்   இருக்கும் .

பால்கனியைத் தாண்டி இது வரை வீட்டு உள்ளே வந்ததில்லை .

நானும்   கதவுகளைச்    சாத்தியே   வைத்திருப்பேன் .

 நேற்று   நான்   வேலை  முடிந்து   வந்த   பின்   பெட் ரூமில்  நுழைந்தால்
 பூனைமியாவ் " என்றது .

பத்துக்குப் பத்து   பெட் ரூமில் 89    சதுர அடிக்குச்    சாமான்கள் உள்ளபடியால்  பூனை    எங்கிருந்து கத்துகிறது   என்று கண்டு பிடிக்க  முடியவில்லை .

எனக்கும்   பயமாக   இருந்தது.

 கதவைச்   சார்த்திவிட்டு   வந்து விட்டேன்.

என்   கணவருக்குப்   போன் பண்ணினேன் .

உடனே   அவர்   பூனை  ” எத்தனை மணிக்கு வந்தது ?”

எப்படி வந்தது ?

எதுக்காக வந்தது ?

ரூமில் என்ன வைத்திருந்தாய்?

ரூமில் பூனை என்ன பண்ணிக்கொண்டிருக்கிறது

 (சமையலா பண்ணும்? )
என்றெல்லாம்   கேள்வி   மேல்   கேள்வி   கேட்டதும்
 நான்   வெறுத்துப்   போய்
எனக்கு   ஜப்பானிய  மொழி தான் தெரியும்  பூனை
மொழியெல்லாம் தெரியாது
என்று சொல்லிவிட்டு போனைக் கட் பண்ணினேன்.

 பிறகு  கொஞ்ச நேரம் கழித்து " கேவலம்    ஒரு   பூனை   நம்   வேலைகளைக்   கெடுக்க  அனுமதிப்பதா ? "என்ற   ஒரு   தன்னம்பிக்கை   வார்த்தையால்   என்னை   நானே   உசுப்பேத்திக் கொண்டு   மீண்டும்
 அந்த ரூமிற்குப் போனேன் .

 "  மியாவ் " என்றேன் .

பூனையும்  "  மியாவ் " என்றது .

 திரும்பவும் நான்  "  மியாவ் ".

பூனையும்  "  மியாவ் "

 இப்படியே   நானும் பூனையும் . முதல் மரியாதை சிவாஜி   ராதா   மாதிரி  எசப்பாட்டு   பாடினோம்   

 நாலஞ்சு    "  மியாவ் " க்கு  அப்புறம்   எனக்கு  பயம்  வந்துடுச்சு .

 பூனை  நம்பளக்   கடிக்க வந்துடுமோன்னுட்டு .

திரும்பக்   கதவை    மூடிட்டு வந்துட்டேன்.

  அரை மணி கழிச்சு ஒரு வேலையாய் ரூமுக்குப் போனேன் ,

நான்   "  மியாவ் "

 பூனை இல்லை போல .

எசப்பாட்டு   மிஸ்ஸிங்

வேலையை முடித்த

 பின் வெளியே வந்து விட்டேன்

 ராத்திரி    ரெண்டு மணிக்கு ரூமுக்குப் போனேன் ,

 என்  "  மியாவ்மொழி கேட்டதும்    பூனையும் ."  மியாவ் "

 வேலைய    முடித்து வந்து விட்டேன் .
கதவை மறக்காமல் சாத்தி விட்டேன் ,


இப்பெல்லாம்  ரூமுக்கு நான் கதவைத் திறந்து  உள்ளே போனதும்  "  மியாவ் " என்கிறேன் .
பூனை ரூமில் இருந்தால்  "  மியாவ் " என்று பதிலளிக்கிறது.
இலை என்றால் நோ  "  மியாவ் "
 என்   பசங்க கூட    நீ என்ன   பண்றேன்னு   கேட்டா   பதில்   சொல்ல மாட்டாங்க .
ஆனால்   பூனை   எனக்கு   ரிப்ளைய்    பண்ணுகிறது   என்றால்
   எனக்குப்  பூனை மொழி   தெரிகிறது   என்று தானே அர்த்தம் .

( வேலைகள் நிறைய இருப்பதால் வார இறுதி மட்டுமே வர முடிகிறது )

 By Abaya  Aruna

 HOD – Department of  CAT Language


Wednesday, 16 November 2016

வாஸ்து ஷெல்ப் cum பூனை பிரசவ அறை


  வட கிழக்கே அடுப்படி இருக்கக் கூடாது ,கிழக்கே    பாத்து 

  சமைக்கணும் என்பது போன்ற சில முக்கியமான  அடிப்படை
 
விதிகள்  தவிர   எனக்கு வாஸ்துவில் 

அவ்வளவு  நம்பிக்கை இல்லை .

 என் கணவருக்கு அதில்  நம்பிக்கை உண்டு .

அதன் படி  எங்கள் பிளாட்டின் தென் மேற்குப் பகுதியில் 

  உள்ள பால்கனியில் ஒரு ஸ்லாப்     அமைக்கப் பட்டது .

அதில் வேண்டாத சாமான்கள் எல்லாம் போட்டோம்

  ( வேண்டாத    என்ற பிறகுஅதை    ஏன்  வீட்டில் வச்சுக்கணும் என்று 
  
 வக்கீல் மாதிரி யாரும் குறுக்குகேள்வி கேட்கவேண்டாம்

அதற்கு வைத்த  ஒரு  பாதிக் கதவு ஒரு சுப யோக 

 தினத்தில் கையோடு வந்து விட்டது .

அதைப்   பொறுத்த வேண்டி ஆசாரியைக் கூப்பிட்டா



இந்த சின்ன   வேலைக்கெல்லாம்   வருவது  சரிப்படாது

என்றபடியால் அதை நாங்கள் இதுவரை  நாங்கள் பொருத்தவில்லை.

 எனவே ஒரு பாதி  மூடப்படாமல் அப்படியே உள்ளது .

 எங்கள் வீட்டிற்குப் பின்னால் உள்ள பிளாட்டில் ஒரு நடிகை வசிக்கிறார் .

அவர்   ஒரு பூனை வளர்க்கிறார் 

 அது அவர் வீட்டுப் பூனை என்று எங்கள் பிளாட் வாட்ச்மென் சொல்லுகிறான் .
ஆனால் அந்த நடிகையிடம் நான் அது உண்மைதானா

என்றெல்லாம் கேட்டதே இல்லை .

 பத்து வருடங்கள் பக்கத்திலேயே இருந்தாலும் நான் இது வரை

அவரிடம் பேசியதே இல்லை..

 அந்தப் பூனை எப்போ குட்டி போட்டாலும் அது எங்கள் வீட்டு 

பால்கனி     ஸ்லாபில் தான்  குட்டி போடுகிறது .

எங்கள் வீட்டு   ஜன்னல் சன்   ஷேடில் புறாவுக்குப் 

 பருப்பு சாப்பிட வைப்பேன் .

பால்கனிக்கு உள்ளே  புறாக்கள் வரவே வராது,

அம்மா பூனை வெளியே போய் விட்டால்    அவ்வப்போது 

  பூனைக்குட்டி  களை    இந்தப் புறா சீண்டுகிறதா என்னவென்று 

தெரியவில்லை ,


 இப்போது   புறாக்கள் பால்கனி உள்ளே வருகின்றன.

பூனை  வேறு அடிக்கடி பால்கனிக்கு வருகிறது .


பட்டா பிரகாரம் நாங்கள் உரிமை கொண்டாடி

சுதந்திரமாக பால்கனிக்குப்    போக முடியவில்லை.

இரு தரப்பு ஆக்கிரமிப்புத் தொல்லை ... தாங்க முடியவில்லை .


 துணி காய வைக்க பால்கனிக்குப் போகும் போது 

“  மஹா ராணி வருகிறார் பராக் பராக் என்கிற மாதிரி

 “நான் டொக் டொக் என்று சத்தம் போட்டுவிட்டு

அதன் பின்தான் போக முடிகிறது .

இரவில் பூனைக்குட்டிகளின்  சத்தம் .

 ஆனால் நேற்றிலிருந்து  சத்தமே காணோம் .


 பூனைக்குட்டிகளுக்கு என்ன ஆச்சோ தெரியவில்லை .

உரிமைகள்    மீட்க்கப்பட்டு விட்டாலும் மனதை  என்னவோ செய்கிறது.