Saturday, 18 March 2017

ஹோம் ஒர்க் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்



பொருளாதார வல்லுனர்கள் "உலகத்தில் தவிர்க்க முடியாத சமாச்சாரங்கள் இரண்டு.
ஒன்று .மரணம், மற்றொன்று அரசாங்க வரி" என்பார்கள். 

என்னைப் பொருத்தவரை வரி ஏய்ப்பது கூட செய்துவிடலாம், 
இந்த ஹோம் ஒர்க் ஒவ்வொருவர் வாழ்விலும்
படுத்தும் பாடு இருக்கிறதே அதைச் சொல்லி மாளாது. 

ஆனால் அதை ஒவ்வொருவரும் எப்படி எல்லாம் சமாளிக்கிறார்கள் என்பதுதான் சுவாரஸ்யமானது.
.
முதலில் என் கதையைப் பார்ப்போம்.

 நான் படிக்கும் போது ஸ்கூல் முடிந்து வந்தால் ஹோம் ஒர்க் செய்தவுடன்தான் விளையாட விடுவார்கள். 
அதனால் அவசர அவசரமாக ஹோம் ஒர்க் சீக்கிரம் செய்துவிட்டு   நோட்டை மூடி பைக்கு நெஞ்சடைக்கிற மாதிரி  உள்ளே திணித்துவிட்டு  விளையாட ஒரே ஓட்டம்தான்.

அது சரி, அந்த  ஹோம் ஒர்க் லட்சணம் எப்படி இருக்கும் தெரியுமோ?

வெளிப்பார்வைக்கு ஹோம் ஒர்க்  செய்த மாதிரிதான் இருக்கும்,  ஆனால் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனுமாம் கதை தான்.

முதல் இரண்டு வரியும் கடைசி இரண்டு வரியும் பக்கா!

எப்படியாகப்பட்ட  கொம்பனாலும் கண்ணில் ஒரு டின் விளக்கெண்ணை விட்டு நோண்டி   நோண்டி பார்த்தாலும்   தப்பே கண்டுபிடிக்க முடியாது. என் எல்லா ஹோம் ஒர்க் நோட்டிலும் டீச்சர் ஒரு சிகப்பு கலர் டிக் பண்ணி இனிஷியல் போட்டு இருப்பார்கள். என் ஹோம் ஒர்க் கில் தப்பு இருந்து டீச்சர்  திருத்தியதற்கான  அடையாளம் அறவே இராது.

நமக்கா தெரியாது  டீச்சரைப் பத்தி! அவங்க வீட்டிலே ஏக வேலைகள்! பேப்பர் கரெக்க்ஷன்,குழந்தையைப் பார்க்கணும் ,வீட்டைப் பார்க்கணும்  மாமியார் கணவன் .......இத்யாதி,இத்யாதி

 பேரைப் பார்த்து கையெழுத்து அழகாக இருந்தால் கட கட என்று டிக் ! 
இப்படியே எஸ் எஸ் எல் சி வரை ஓட்டினேன்.
 ஏதோ படிப்பு கொஞ்சம் நன்றாக இருந்ததால் வண்டி ஓடியது. 

ரொம்ப நாள் வரை நான்தான் செம கில்லாடி என்று  நினைத்துக்கொண்டு இருந்தேன்,

பிறகுதான் தெரிந்தது  நமக்கும் மேலே உள்ளவர் கோடி என்று.

( நினைத்துப் பார்த்தால் நிம்மதி வரவில்லை எனக்கு பொறாமை தான் வந்தது,

 மேலே படித்தால் உங்களுக்கும் பத்திக் கொண்டுதான்  வரும். வரணும் அப்படி  வரவில்லை என்றால் நீங்கள் அக்மார்க் ஞானிதான்.)

 நான் இப்படி டீல் பண்ணினேன் என்றால் ஒரு சிலர் மற்றவர்களின் நோட்டைப் பார்த்து காப்பி அடித்தனர், 
இது ஒன்றும் பெரிய தப்பில்லை என்றாலும் அதே கிளாசில் பல பேரால் காப்பி அடிக்கப்பட்டு கணக்கு பாட நோட்டு காமெடி பீஸாக மாறியது தனிக் கதை. 

உதாரணமாக,19X4=76 என்பது பலராலும் காப்பி அடிக்கப்பட்டு நடுவழியில் 14X4=76
ஆகி, ஆட்கள் ஆடுகளாக மாறி, வேலை நேரம் சேலை நேரம் என்று உருமாறினாலும்  கடைசியில் விடை மட்டும் பக்கா!

 கோலத்திற்கு செம்மண் இடுவது போல்.சிகப்பு மையால் அடிக்கோடிட்டு விடுவதால் அகப்பிழைகள் ஆயிரம் இருந்தாலும் டீச்சரின் கண்ணுக்குள் சிக்காது. காரண்டி!



மேல் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்வது போல், ஹோம் ஒர்க்கை அமெரிக்கா 

ஸ்டைலில் தகுந்த சன்மானத்துடன் அந்த இளம் வயதிலேயே

 அவுட் சோர்சிங்க் செய்த மானேஜ்மெண்ட் புலிகளும் இந்தியாவில் ஏகம்.


நான் சொல்லும் என்  காலம் டி.வி, இண்டெர்நெட் என்றால் ஸ்பெல்லிங் கூட என்ன போடுவதோ யாமறியேன் பராபரமே யுகத்தில் சேர்த்துக் கொள்ளலாம். ரொம்ப சொன்னால் என் வயதை நானே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற மாதிரி ஆகிவிடும். அது போன நூற்றாண்டு சமாச்சாரம்.

 இந்த  நூற்றாண்டில்  அதாவது 1990 மற்றும் 2000களில் எப்படி?

சிலர் "டீச்சர்! செஞ்ச ஹோம் ஒர்க்கை மறந்து வீட்டில் வைத்து விட்டேன், இருந்தாலும் ஒரு பேப்பரில் எழுதி........../அவளின்/அவனின் நோட்டு உள்ளே வைத்திருக்கிறேன் "என்று படு பவ்யமாக கொஞ்சும் தொனியில் சொன்னால் மயங்காத  டீச்சர் யாருமுண்டோ?


டீச்சரிடம் திருத்துவதற்கு கொடுத்த ஹோம் ஒர்க் நோட்டு திரும்ப எனக்கு வரவே இல்லை அதனால்தான் ஹோம் ஒர் பண்ண முடியலை என்று முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கொடுக்கும்  ஓவர்   ஃபீலிங்கும் சில சமயங்களில் கை கொடுக்கத்தான் செய்கிறது.


என் மகன்கள்  படித்த காலத்தில் நானும் வேலைக்குப் போய்க்கொண்டு  இருந்ததால் ஆபீஸூ விட்டு ஏழரை மணிக்கு வந்தபின் சில சமயங்களில் நானே ஒரு ஃபேர் காபி எழுதி அப்படியே அட்ட காபி அடிக்கச் சொன்ன நேரமும் உண்டு.

சயன்சு நோட்டில் டயகரம் மட்டும் நான் போட்டுக் கொடுத்து பாகங்கள் குறிக்க வேண்டியது மட்டும் அவர்களின் வேலைதான் என்ற சட்டத்தை மீறியதாக சரித்திரமே கிடையாது.

 ,ஜாமெட்ரி நோட்டிலும் என் கை வண்ணம்தான். ஏனெனில்  அவ்ர்களுக்கு எட்டரைக்குள் தூக்கம் வந்து விடும்.

  ஹோம் ஒர்க்கே பண்ணிக் கொண்டிருந்தால் படிப்பது எப்போது? மேலே 

சொன்னவைகள் எல்லாம் எனது நேர நிர்வாகத்திறனின் ஒரு அம்சம்தான் என்று 
கொள்ளவேண்டுமே தவிர ஹோம் ஒர்க்கிற்கு தண்ணி காட்டும் உபாயமாகக்  
கொள்ளவேண்டாம்.

என் மகனின் பள்ளித்தோழர்களின் ஒரு சில பெற்றோர்கள் குறிப்பாக 11வது 12வது ரெகார்டு நோட்டில் (ரொம்ப நேரம் பிடிக்கும் வெட்டி வேலைஎன்று முடிவு செய்துவிட்ட காரணத்தால் )ஆரம்ப முதலே  எழுதிக் கொடுக்கும் பரோபகாரி அவர்கள்தான்.

பாதியில் எழுத ஆரம்பித்தால் கையெழுத்து மாறி ஏடா கூடமாகி ......  பெற்றோரான நாம் ஹோம் ஒர்க்கையும் பண்ணிவிட்டு பிரின்சிபல் ரூம் வாசலில்  ஹோம் ஒர்க் பண்ணாத பசங்களுடன் பார்ட்னராகப்    பழியாகக் கிடக்க வேண்டும்.

தேவை இல்லாத பிரச்னைக்கு  நாமே ஏன் பிள்ளையார் சுழி  போடணும் என்கிற படு சாமர்த்தியமான அணுகுமுறைதான் இந்த ரகம்.


என் மகனின் பள்ளியின்  ஒரு மாணவன்  எப்படி ஹோம் ஒர்க் சமாளிபிகேஷன் செய்தான் என்பதைக் கேட்டால் கி.பி 2020க்குள் இந்தியா சைனாவை முந்திக்கொண்டுவிடும் என்பதில் யாருக்கும் ஐயமே இராது.

ஒரு பையன் 12  வது படிக்கும் போது  ஒரு வருடம் முழுக்க ஹோம் ஒர்க் எழுதவே இல்லையாம் ! இது எப்படி முடியும் எப்படி என்கிறீர்களா? அவன் தான் கிளாசின் லீடராம். நோட்டைக் கலெக்ட் பண்ணி  கிளாசில் வந்தவர்கள் மொத்தம் 40 பேர் ,ஹோம் ஒர்க் நோட்டும் 40 இருக்கு டீச்சர் என்று ஏதோ கம்பெனி பேலன்சு ஷீட் டாலி பண்ணிய மாதிரி
டீச்சர் முன்னாடியே எண்ணிக் காண்பித்துவிட்டு  தானே
அவர் ரூமில் கொண்டு வைப்பானாம்.

 வைக்கு முன், பாதி வழியில்
 ஹோம் ஒர்க் செய்யாத தன் நோட்டை உருவிவிடுவானாம்.

பையன் நன்றாகப் படிப்பவன்.
டியூஷனிலும் ஹோம் ஒர்க் கையை ஒடிக்குமாம்,

 அதனால் பையன் ரூம் போடாமலே இப்படி யோசித்து விட்டான்.

 இது எப்படி இருக்கு? சூப்பராக இல்லை?

அப்படியாகப் பட்ட அறிவாளி யார் என்று தெரியணுமா?

 ஒரு ஹிண்ட் தருகிறேன் .

 புலிக்குப் பிறந்தது பூனையாகுமா ?


 (பத்திரிகைக்கு ஒரு இரண்டு வருடம் முன்பு அனுப்பினேன் . இன்று வரை பிரசுரமானத்திற்கான அறிவிப்போ புத்தகமோ வீட்டிற்கு வரவில்லை)


7 comments:

  1. சமாளிஃபிகேஷன்ஸ்! புத்திசாலிகள்.

    ReplyDelete
  2. "பையன் நன்றாகப் படிப்பவன்.
    டியூஷனிலும்
    ஹோம் ஒர்க் கையை ஒடிக்குமாம்" என்பதே
    படிக்கிற பிள்ளைகளின் நிலையாச்சே!

    ReplyDelete
  3. அந்த அறிவாளி புலிக்குப் பிறந்த பூனை என்று சொல்லுவதைக் காட்டிலும் புலி 8 அடி பாய்ந்தால் அதன் குட்டி 16 அடி பாயாம இருக்குமா...ஹஹஹஹ் நிஜமாகவே புத்திசாலிதான்...

    கீதா: அதோடு...என் பையன் இருக்கானே அவனுக்கு எழுவதே கஷ்டமாச்சே...ஒரு வரி படிக்கறதே கஷ்டம் அப்புறம் அதை எழுதவும் வேணும்னா...பேப்பர் எல்லாம் சுருட்டி சுருட்டி பேக்குக்குள வைச்சுருப்பான்...பெரும்பான்மையான ஹோம்வொர்க் நான் தான் அவனுக்குப் PA ஹஹஹ்

    ReplyDelete
  4. So nicely narrated
    Enjoyed your sense of humour.

    ReplyDelete
  5. Seriously! As a student nobody would want to do any homework..with the excellent narration you took me back to my school days..nice work..

    ReplyDelete