Thursday, 30 July 2020
காபி எனும் மந்திரம் (தந்திரம்?)
Saturday, 18 July 2020
குட்டி போடும் சப்பாத்தி
நாமெல்லாம் சின்ன வயசில் புத்தகத்தின் நடுவில் ,மயில் தோகையில் ஒரே ஒரு ஈர்க்கு வைத்து விட்டுக் கொஞ்ச நாள் கழித்துப் புத்தகத்தைத் திறந்து பார்த்தால் மயில் குட்டி போட்டுடுச்சுன்னு குதூகலமாகக் குதிப்போமில்லையா ..
அது மாதிரி இன்னைக்குச் சப்பாத்தி பண்ணி தட்டுல வச்சிட்டு மத்த வேலை எல்லாம் முடிச்சுட்டு வந்து பாத்தா ஒரு மூணு குட்டி போட்டிருந்திச்சு .
சொன்ன யாரும் நம்ப மாட்டாங்கன்னு தான் ஃ போட்டோ போட்டிருக்கேன். அதெல்லாம் நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம் .
இந்த மாதிரி நிறையக் கதைகள் என் பெரிய பையன் குழந்தையாக இருந்தபோது அடிச்சு விட்டிருக்கேன் . அவன் சாப்பிடுவதற்கு எங்களைப் படுத்திய பாடு கொஞ்ச நஞ்சமில்லை . வீட்டை விட்டு வெளியில் கூட்டிக்கொண்டு போனால் தான் சாப்பிடுவான் . ஒருஆறு வயது வரை பயங்கரப் படுத்தல் .
நாங்கள்அவனைச் சாப்பிட
வைக்க ஒரு டப்பாவில் சாப்பாட்டை
எடுத்துப்போட்டுக் கொண்டு அவனைக் கீழே
அழைத்துக் கொண்டு போய் அபார்ட்மெண்டை சுத்திச் சுத்தி
வருவோம்.
சாதம் இட்லி இவைகளை எடுத்துக்கொண்டால் கையெல்லாம் பிசு பிசுப்பாகிவிடும் .
ஸ்பூனால் கொடுப்பது வாகாக இல்லை .எனவே சப்பாத்தி பண்ணி எடுத்துக் கொண்டு போனோம் . இப்படித் தற்சயலாகத் தான் அவனுக்கு சப்பாத்தி பிடிக்கிறது என்பதைக் கண்டு பிடித்தோம்
இதைப் புரிந்து கொள்ளவே எங்களுக்கு அவ்வளவு நாளாச்சு . பிறகு சப்பாத்தி அதன் கூட விதவிதமான வட இந்திய சைடு டிஷு இருந்தால் பிரச்னை இல்லை .
தயிர் அறவே பிடிக்காது.
ஹைதராபாத்தில் குளிர் நாட்களிலும் மழை நாட்களிலும் வெளியே போக முடியாத போது வீட்டுக்குள்ளயே அவனைச் சாப்பிட வைக்க
நாங்க செய்த ஐடியா தான் இந்த டிசைனர் சப்பாத்தி.
சாம்பார் ரசம் இட்லி இவைகள் என்ன பண்ணினாலும் சாப்பிட மாட்டான் . இது மாதிரி டிசைன் டிசைனாகச் சப்பாத்தி செய்து கொடுத்தால் கொஞ்சம் சாப்பிடுவான் .
பிரெட்டில் வித விதமான சான்டவிச் அல்லது வித வித டிசைனில் உதாரணமாக வீடு , யானை, பூனை மரம் இது மாதிரி.
சப்பாத்தியில் வாத்து குருவி தவிர முக்கோணம் சதுரம் இவைகளைக் கொண்டு அந்த நேரத்தில் என்ன தோணுகிறதோ அது மாதிரியெல்லாம் பண்ணிச் சாப்பிட வைப்போம் .
இப்போது என் பேரன் சரிவர சாப்பிட மாட்டேன் என்கிறான் என்று என் பையன் வருத்தப் படுகிறான் .
லாக் டவுனால் நாங்களும் அங்கே போய் உதவி செய்யமுடியாது .
அவனும் இங்கே வரமுடியாத நிலை .
சரி என்று எனக்குத் தெரிந்த டிசைனில் ஃ போட்டோ அனுப்புகிறேன் .
ஒண்ணரை வயது என்பதால் 15 நாட்களே
அங்கு இருந்த எங்களை மறந்துவிட்டான் . எனவே என்னால் முடிந்தது இது மாதிரியான
டிசைனர் சப்பாத்திதான்
Thursday, 16 July 2020
கடைசி பெஞ்சுக்கு வந்த கடும் சோதனை
கொரோனா இந்த உலகத்தில் தற்போதைக்குப் பல விஷயங்களைக்
காணாமல் போகச்செய்து விட்டது.
அதில் முக்கியமான ஒன்று இந்தக் கடைசி பெஞ்சு .
கடைசி பெஞ்சு பசங்க அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக
இருந்தாலும் சரி கடைசி பெஞ்சு அப்படின்னாலே ஒரு
எளக்காரமதான் பாப்பாங்க .
மக்கு பசங்க எல்லாம் கடைசி பெஞ்சுல தான் இருப்பபாங்க என்பது
இந்தப் பள்ளி மற்றும் கல்லூரி களில் இந்த டிஜிட்டல் யுகத்திலும் கூட
ஒரு எழுதப்படாத ரூல் .
லாஸ்ட் பெஞ்சா நீயெல்லாம் . எருமை மேய்க்கத்தான் லாயக்கு
என்றெல்லாம் கடைசி பெஞ்சு பசங்களைத் திட்டுவாங்க .
ஏ ..கடைசி பெஞ்சு . பசங்களா சத்தம் போடாதீங்கன்னு திட்டுவாங்க .
ஏ கடைசி பெஞ்சு பாடத்தைக்
கவனிக்காம அங்கெ என்னா பண்றே
இதைச் சொல்லாமல் எந்த டீச்சராலும் பாடம் நடத்தியே இருக்க முடியாது .
இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலில் இதையே க் ,ச் ,ப் விடாமல்
இங்கிலீஷில் சொல்லுவாங்க அவ்வளவு தான்.
கடைசி பெஞ்சத் தவிர்த்து நாம் கல்வியின் வரலாற்றை எழுதவே முடியாது
இந்த ஆன்லையன் கிளாஸ் வந்தப்புறம் கடைசி பெஞ்சு காணாமல் போய் விட்டது .
கடைசி பெஞ்சு கடந்து வந்த பாதை ரொம்பவே கரடு முரடான பாதை
டீச்சருங்களும் சில சமயங்களில் கடைசி பெஞ்சு பசங்களைத் திருத்தி
நாட்டையும் திருத்தறோம் அப்படீன்னு நெனெச்சிகிட்டு அப்படியே
கடைசி பெஞ்சு பசங்களை முன் வரிசைக்கு வரச்சொல்லி முன் வரிசை
மாணவர்களைப் பின் வரிசைக்குப் போகச்சொல்லி
தோசை மாதிரித் திருப்பி போட்டு விளையாடற விளையாட்டையும் விளையாடுவாங்க .
அது கடைசியில் எதிர்மறை விளைவாக முன்னாடி ஒழுங்கா
உக்காந்திருந்த பசங்களும் டீச்சருக்கு எப்படியெல்லாம் தண்ணி
காட்டலாம் என்கிற ஆய கலைகளில் அவசியமான அந்தக்
கலையைக் கற்றுக்கொண்டு முதல் பெஞ்சுக்குத்
திரும்பி வந்ததும் செயல் படுத்த ஆரம்பித்து விடுவார்கள் .
அதுவுமில்லாமல் காலம் காலமாக கடைசி பெஞ்சுக்குத் தர வேண்டிய மதிப்பு
மரியாதை ஒரு சமூக அங்கீகரிப்பு இல்லை என்றே சொல்லணும் .
.நாட்டில் எல்லாத்துக்கும் டேட்டா இருக்கு
ஆனால் கடைசி பெஞ்சில் படிச்சு பெரிய ஆளானவங்க எத்தனை பேரு
என்கிற டேட்டா இல்லவே இல்லை .பார்க்கப் போனால் ஒருமுக்கிய
வரலாறு மறைக்கப் படுகிறது . இன்னைக்கு ரிசல்ட் கூட
பெண்கள் தேர்ச்சி சதவிகிதம் பையன்கள் தேர்ச்சி சதவிகிதம்
மாவட்ட வாரியாக தேர்ச்சி சதவிகிதம் அரசுப் பள்ளி மாணவர்கள்
தேர்ச்சி சதவிகிதம் என்றெல்லாம் இருக்கிறது
ஆனால் முதல் பெஞ்சு மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம்
கடைசி பெஞ்சுமாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் என்று இல்லவே இல்லை .
அந்த டேட்டா எதுவுமே இல்லாமல் பொத்தாம் பொதுவா
கடைசி பெஞ்சு மாணவர்களை இந்த சமுதாயம் பாரபட்சமாக நடத்துகிறது
கடைசி பெஞ்சு இருந்தவரையாவாது பாடத்தக் கவனிக்காத மக்குப்
மக்குப் பசங்கல்லாம் யாருன்னு தெரிஞ்சுக்க சரியோ தப்போ
காலம் காலமாக கடைசி பெஞ்சு ஒரு அடையாளக் குறியீடாக
(அலகுக் குறியீடாக) இருந்தது
இந்த ஆன்லயன் கிளாசில் யாரு கவனிக்கிறா யாரு
கவனிக்க மாட்டேங்கிறாங்க என்பதைக் கண்டே பிடிக்க முடியவில்லை .
. அப்பப்போ மூஞ்சி திடும்ன்னு காணாப்
போயிடுது
கேட்டா எங்க ஏரியால கரண்டு கட்டு அப்படீங்கிறாங்க .
மொபைல் டேட்டா காலியாயிடுச்சுங்கிறாங்க
வகுப்பறையில் கிளாஸ் நடக்கும்போது டீச்சர் கிட்ட சொல்லாம
வெளியே போகவே முடியாது . ஆனால் இந்த ஆன்லயன் கிளாசில்
டீச்சர் தயவே தேவை இல்லை.
கடைசி
பெஞ்சோட அருமை அது இல்லாதபோது தான் தெரியுது .
இத்தனை கடும் சோதனைக்கு நடுவிலும் கடைசி பெஞ்சுக்கு ஆறுதல்
தரக்கூடிய ஒரு சின்ன விஷயம் எனக்குத் தெரிந்து ஃபேஸ்புக்கில்
தமிழில் "கடைசி பெஞ்ச் மாணவன் " " கடைசி பெஞ்சர்ஸ்" "
கல்லூரியின் கடைசி பெஞ்ச் " என்று ஒரு மூணு குரூப்பு இருக்கு .
இங்கிலீஷில் Last bench
students da ,Last bench students(danger), Last bench trolls,
Last benchers memes என்று ஏகப்பட்ட குரூப்புகள் இருக்கின்றன ,
இங்கிலீஷ் மீடியத்தில் படித்தவர்களா எனத்தெரியவில்லை .
இவ்வளவு சமூக அக்கறையோட கடைசி பெஞ்சு பத்தி எழுதறேனே
அதனாலே நான் கடைசி பெஞ்சான்னு கேக்காதீங்க .
நானெல்லாம் முதல் பெஞ்சாக்கும் .
அறிவாளிங்கிற காரணமோ இல்லை ஆள் குள்ளமா இருந்த காரணமோ
தெரியல எப்படியோ முதல் பெஞ்சிலேயே காலத்தைக் கடத்திட்டேன்.