Saturday, 4 January 2014

சர்வேக்களும் படிப்பும்.


 நான் கல்லூரி யில் படிக்கும் நாட்களில் என் ஞாபக சக்தியில் என் ஆசிரியர்களுக்கு நம்பிக்கை உண்டு.
 நான் நிறைய டேட்டா எல்லாம் குடுத்து எழுதுவேன்.

எனக்கு  ஏனென்று  தெரியவில்லை பொதுவாக எண்களின் மீது ஒரு இனம் புரியாத காதல் .

 வேலையை விட்ட பின்னும் சில இன்டரஸ்டிங் சர்வேக்களை நினைவில் இருத்திக் கொள்வேன்.
அதை பேசும்போது கற்பிக்கும்   போது சரியான இடங்களில் மேற்கோள் காண்பிப்பேன்.
 ஜப்பானிய மொழி கற்பிக்கும் போது பார் ஆப்பிள்  , ஒரோண் ஒண்ணு மாதிரியெல்லாம் சொல்லிக்கொடுத்தா  கட்டிய பணம் போனாலும் பரவாயில்லேன்னு ஜகா வாங்கிடுவாங்க!

நல்லா  சொல்லிக்குடுத்தாலும்   ஒரு மாதத்தில்   50%  ஏதொ காரணம் சொல்லிட்டு வரவே மாட்டங்க !
பொதுவாக வகுப்புகள் ஞாயிறு அல்லது வார நாட்கள் என்றால்  மாலை 5 மணிக்குத்தான் இருக்கும் .

எனவே சுவாரசியமாக்க நான் பல விதமான ஐடியா செய்வேன்.
ஜப்பானிய மொழி ஒன்றும்  கஷ்டமே இல்லை யாக்கும் 
.
நாம் உபயோகிக்கும்  மற்றும் தெரிந்த சொற்களோடு தொடர்பு கொண்டால்  செம ஈசி .
உதாரணமாக நமீதா என்றால்  இனிமேல் நீங்க அழணும்  என்பேன்.
(நமீதா   மேடம் ! சீரியஸாக  எடுத்துக்கொள்ள வேண்டாம் )
ஐயய்யோ முடியாது என்பார்கள்.
ஜப்பானிய மொழியில் நமீதா என்றால் அழுகை , கண்ணீர்.
நாம எது செய்யிரோமோ அதுவா மாறணும்.இல்லையா?
என்பேன்.

அது போல தமனா  (தமன்னா அல்ல) என்றால்  முட்டைக்கோஸ் .
 பசங்கள் நிஜமாகவே நோட்ஸ் எல்லாம் எடுத்துப்பாங்க.

சில மாணவர்கள் அப்ப  திரிஷான்னக்க என்னா  ஜோதிகான்னாக்க   என்னா  அப்படியெல்லாம் கேப்பாங்க.

முழுக்க முழுக்க நடிகை பேரை வச்சே ஒரு மொழியை கத்துக்க முடியாதுன்னு திட்ட வட்டமா சொல்லிடுவேன்.

ஒரு இரண்டு வருடம் கழித்து எங்காவது பார்த்தால்  
படித்தது   ஞாபகம்  இருக்கான்னாக்க  நமிதாவும் தமனா வும் மட்டுமே ஞாபகம் இருக்கு என்பார்கள். அது தனிக் கதை.

 சரி.இப்ப சர்வேக்கு வருவோம்.
ஜப்பானிய மொழியில்   Pictorial characters  களை நினைவில் கொள்ள சில கதைகள் சொல்வேன். ஆண்  என்பதற்கான கேரக்டர்
இப்படி இருக்கும்.
இது 1.      2. என்ற இரண்டு கேரக்டர்கள்  அடங்கியது.
.1 என்பது வயலையும், 2 என்பது  பவர் என்பதையும் குறிக்கும்.
 இதை ஞாபகம் வைத்துக்கொள்ள  ஒரு சர்வே பற்றி சொல்வேன்.

 (முதலிலேயே ஆண்கள் கோபம் கொள்ளவேண்டாம் என்று முன் ஜாக்கிரதையாக சொல்லிவிடுவேன்.
கடைசியில் இந்த சர்வேயை ஆண்களும்   like  போடுவார்கள்.. ஜாலி கதையில்  கற்றது மறப்பதில்லை யாதலால் )


20  வருடம் முன்பு .நா  நடத்திய சர்வே படி உலகில் உள்ள 
வேலைகளில்  ( அதாவது வீட்டு வேலை வெளி வேலை   எல்லாம் உள்ளடக்கியது . ) 90% வேலைகளைச் செய்வது பெண்களே ! 10 %   வேலை மட்டுமே ஆண்கள் .செய்கிறார்களாம் 

ஆனால் உலகில் உள்ள சொத்துக்களில் ( அசையும்  மற்றும் அசையா )90% ஆண்கள் பெயரில் தான் உள்ளது..
புரிந்து கொள்ள வேண்டியது என்ன வென்றால்    ஆண் என்றால் அவர்களுக்கு 
வயல்   (1  ) & மற்றும் அதிகாரம் (2 )உள்ளது    என்று ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்அவ்வளவே!
(இதற்கு  என்ன அத்தாட்ச்சி   என்கிற கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது.. மேட்டர்  ஞாபகம் வெச்சுக்கணும்  அதான் முக்கியம் )
 (அது சரியா தப்பா நியாயமா  என்கிற  விவாதம் வேண்டாம்).


 வகுப்புகள்  . சுவாரசியமாகப் போகும்..ஐந்து மணிக்குக் களைப்புடன் வந்த மாணவர்கள் கல கல என சிரித்துக் கொண்டே  வீட்டுக்குச்  செல்வார்கள்.

உணர்தற்கு அரியன்



ஆன்மிகம்
 பதிவு என்று எழுத வந்த பின் நாம வெரைட்டி ஆனா மேட்டர்களில்  எழுதணும் .
அதே சமயம் மத்தவங்க  அணுகுமுறையிலிருந்து வேறு பட்டு இருக்கிறது முக்கியம் அப்படின்னு நினைக்கிறேன்.

ஆன்மிகம் பத்தி பத்திரிகைகளில் எழுதியுள்ளேன் .
ஆனால் பதிவில்  இது வரை எழுதியதில்லை .

நமது வாழ்க்கையில்  ஆன்மிகம் கடவுள்  மற்றும்  இவற்றின்  தொடர்பு  என்ன என்பது   பற்றிய ஒரு தெளிவு எனக்கு இன்னும் இல்லை ..

மன முதிர்ச்சி இல்லையா என்றும் புரியவில்லை

 நான்   சாமி   கும்பிடும் டைப்பு என்றாலும் ஆபிஸ்  வேலை  வீட்டு  வேலை என்பவற்றை  ஓரம் கட்டிவிட்டு  சாமி கும்பிடும்  டைப்பு இல்லை .

அந்த  வேலை செய்யும் போதே சாமி பாடல்களை சொல்லிவிட்டு சாமியிடம்  நான் கும்பிட்டு விட்டதாக  டிக்  அடிக்கச் சொல்லிவிடுவேன் .
சாமி  ஒழுங்காக டிக் அடிக்கிறாரா  தெரியவில்லை .

 தூரத்தில்  உள்ள  கோயில்களுக்குப்   போகும்   வழக்கம் கிடையாது.
ஏனெனில்  எனக்கு  ரோடு கிராஸ்  பண்ணுவது  விளக்கெண்ணை  சாப்பிடுவது மாதிரி .
சென்ற ஞாயிறு அன்று  என் மாணவி  ஒருவருடன்  கு றுங்காலீஸ்வரர்  கோயில் ( கோயம்பேடு) சென்றிருந்தேன்.
புரிந்த உண்மை இதுதான் .
என்னதான்  ஆதித்யா  சானல்  சிரிப்பொலி   சானல் போன்றவைகள் இருந்தாலும் மக்களால் மகிழ்ச்சி யோடு இருக்க முடியவில்லை.

அவ்வளவு பிரச்னைகள்  என்பதை அங்கு வந்த  மக்கள் கூட்டம்   சொல்லாமல் சொல்லியது.
கொஞ்சம்   முன்னாடியே  சென்றுவிட்டோம் .

நாலரை மணி   ஆகவில்லை   யாதலால் (அங்கு நாலரை முதல் மணி வரை விசேஷம் ) பக்கத்தில்  உள்ள  சிவன்  கோயிலுக்குப் போனோம் .

அங்கு மக்கள்நமசிவாய”  என்ற மந்திரத்தை 108 முறை எழுதும் பேப்பரை வாங்கி   ஏதோ  போட்டிக்கு எழுதுவது போலே எழுதிக் கொண்டிருந்தனர்.
 கு றுங்காலீஸ்வரர்    கோயிலில்  திரு விளக்கு பூஜை போல !
.நிறையப் பெண்கள்  வாழை இல்லை மீது குத்து விளக்கு வைத்து பூஜை செய்து கொண்டிருந்தனர்.
நாங்கள் சாமி கும்பிட்டு விட்டு வந்த பின் ,
ஒரு  இடத்தில் அவர்களே   நமது  வேண்டுதல் என்னவோ அதை ஒரு   சீட்டில் எழுதித்  தருமாறு சொல்கிறார்கள் .

 நான்  எழுதலாமா  வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே
நான் வெட்டியாக இருக்கேன் என்று நினைத்தாரோ   என்னவோ தெரியவில்லை  ஒரு பெண்மணி என்னருகே  வந்து,ஒரு சீட்டை என்னிடம் கொடுத்து கொஞ்சம் எழுதித் தருகிறீர்களா என்றார்.

அவர் சொன்னதை எழுதித் தந்தேன் .

பிறகு நானும் என் வேண்டுதலை எழுதிக் கொடுத்தேன் .

மற்றவர்கள்  என்ன எழுதுகிறார்கள் என்று  ஒரு ரவுண்டு போய்ப் பார்த்தேன்.

 பரீட்சையில் காப்பி அடித்துப்   பழகியதில்லை என்றாலும் வெகு சீக்கிரம் மேட்டர் என்னவாக   இருக்கு என்று   ஒரு லுக்கில்  புரிந்துகொண்டேன்.

குறைந்தது 30%  பெண்கள் தன் கணவன் திருந்தவேண்டும்  கணவனுக்கு நல்ல புத்தி வர வேண்டும் போன்ற பல  சாலன்ஜிங்  சவால்களை சரபேச்வரருக்கு வேலை யாகக் கொடுத்தனர்.
  பத்திரிகை  ஜோக்குகளிலும்  பதிவுலகத்திலும்  மட்டுமே  மனைவிகள் கணவர்களைக் கொடுமைப் படுத்துவது போன்ற ஒரு  இமேஜு  உலாத்திக் கொண்டிருக்கிறது.

நிஜவுலகத்தில்  அப்படியே உல்டா !

டி.வி  யில் சில சானல்களில் தினமும்  நிலம் வாங்குங்க என்று  கூவிக் கூவி அழைக்கிறார்கள் .
அந்த    அழைப்பினால் கவரப்பட்டு (.ஏமாந்து...?)  நிலம் வாங்கியவர்களில் ஒரு பகுதியினராவது
கடைசியாக சரபேச்வரரிடம் வந்து சரணடைந்து  பேப்பரில் சீட்டு எழுதிக் கொடுக்கிறார்கள் .

இதை நான் என் மாணவியினிடம்  சொன்னேன் .

அவரோ  மேடம் நீங்க   இன்னொன்னு  கவனிச்சீங்களா ?
   இவங்க கொடுத்த சீட்டு  பின் பக்கம்   சாமி படிக்காம வுட்ருவாரோன்னு  நெனச்சிகிட்டு   ஜாக்கிரதையா பக்க முடிவில் வலது  சைடில்
சில பேர்  P.T.O   ல்லாம் போட்டு எழுதறாங்க என்றார் !

முதலில் சிரிப்பு வந்தாலும் 
அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு  என்கிற உண்மையை ஒத்துக்கொண்டே ஆகணும்.

இதே போல திருச்சி அருள்மிகு  வெக்காளி அம்மன் கோயிலுக்குப் போன போது
ஒரு  மனிதர்  பாவம் தன்  கஷ்டங்களை  எல்லாம்  நாலஞ்சு  பக்கத்துக்கு  எழுதி ஸ்டேப்ளர்  பின்  போட்டு  அதைக் கலெக்ஷன்  பண்ணுகிறவரிடம்   கொடுத்தாராம் .

மற்ற யாராவது நம்மை  சாமிக்கு லெட்டர் எழுதித் தரச்சொல்லி சொல்லும் போது   காமெடி  மேட்டர் ரொம்பவே இருக்கும்.

சில பேருக்கு நாம் வேண்டுதல் விண்ணப்பம் எழுதித் தரும்போது மனுஷங்களுக்கு லெட்டர் எழுதும்போது   எழுதற மாதிரி  அன்புள்ள ..........  கடவுளுக்கு என்றெல்லாம் எழுதச் சொல்வாங்க !

 இன்னும்  சில பேர் பாயிண்ட் பாயிண்ட்டா  நம்பரெல்லாம் போட்டு எழுதச் சொல்வாங்க!

ஒரு சிலர் அடிக்கோடு (underline ) போடுமாறு கூட சொல்வார்கள்.

 எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிக்குமாறு கடவுளுக்கு  ஒரு  ரிக்வெஸ்ட் கொடுப்பார்கள் .

ஏதோ எழுதினேன் என்றில்லாமல் ..............  கூட இதில் அடக்கம்

 அடுத்தவர்களுக்கு என்னும் போது காமெடியாத்தான் இருக்கு!

தலை வலியும் காச்சலும் தனக்கு வரும்போதுதான் ..........வேற விதமா இருக்கு .

ம்ஹூம் ....  கடவுளின் ரோல்  அவ்வளவா புரியல!                  

சொல்லப் போனால் கடவுள் என்பவரை  நாம் எல்லோருமே நாம் கேட்டதைக் கொடுப்பவர் ,
இன்னும் சரியாகச் சொன்னால் நமது ஆசைகளை நிறைவேற்றும் கடமை அவருக்கு உண்டு .என்றே நினைக்கிறோம்.

அதைச் சரியாகவும் சீக்கிரமும் செய்யும் பட்சத்தில்  இன்சென்டிவ் போனஸ்  போன்றவை அவருக்கு proportionate to performance   ஆகவும்  நாம்  எதிர்  மொய் எழுதும் பாணியில் செய்கிறோம் என்பதுதான் எனக்குப் புரிகிறது.
performance  சரியில்லாதபோது கார்பொரட்  பாணியில் சொல்வதானால் 
Pinkசீட் கொடுக்கிறோம். 

இப்படித்தான்  ஓர் நாள்   என் மாணவி  ஒருவரிடம் 
என் உடல்நிலை செய்துகொண்ட ஆப்பரேஷன்கள்  பற்றி பேசும்போது நான்  கடந்து  வந்த  பாதை என்பது  ராஜ வீதியாக இல்லாமல்  கற்களும்  முட்களும் நிறைந்த பாதையாக இருந்தது,
கடவுள் ரொம்பவே கஷ்டங்களை எல்லாம் கொடுத்தார் என்றேல்லாம்  
விலா வாரியாக நெஞ்சில் உணர்ச்சி பொங்க  கேட்பவர் மனம் உருக பழைய  அழுகாச்சி  சினிமா  மாதிரி சொல்லிக்கிட்டு இருந்தப்போ
அவர் ரஜனிகாந்த் ஸ்டைலில்
"மேடம் கவலைப்படாதீங்க .
கடவுள்  நல்லவங்களுக்கு   மட்டும்தான்   பரீக்ஷை  வைப்பார் 
பிறகு எல்லாம் நல்ல படியாக முடித்து வைப்பார் .
இதை எல்லாம் நீங்க ஒரு டெஸ்ட் மாதிரின்னு நெனச்சுக் கோங்க "என்றார்  ..

இது என்ன கடவுள் எனக்கு நல்ல ஒரு ஹை போஸ்ட் குடுக்க   என்ட்ரன்ஸ்  எக்சாமா  வைக்கிறார்  .என்றேன் 
கடவுளின் பக்திப் பாடல்களை நான் உச்சரிக்கிறேன் .
ஆனாலும்

என்னால் கடவுளைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அதுதான் உணர்தற்கு  அரியன் என்பதோ ?



புத்தாண்டு புலர்ந்தது



 எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .

எல்லா நாளும் கன்னா பின்னா என்று மூணு மணி மூணரை மணிக்கெல்லாம் முழிப்பு வரும்
.முதல் தேதி அன்று ஐந்தரை மணிக்குத்தான் முழிப்பு வந்தது.
பக்கத்திலே இருக்கற
அசோக் நகர் ஆஞ்சநேயரைப் போய் பார்த்து ஹாப்பி நியூ இயர் ,ஹாப்பி பர்த்டே சொல்லனும்ன்னு முதல் நாளே திட்டம் போட்டேன் .

வேலை எல்லாம் முடிச்சு எட்டு மணிக்குக் கிளம்பலாமான்னு நெனச்சா க்யூ ரெண்டு தெரு தாண்டி நிக்குது.

எங்க வீட்டையும் தாண்டி க்யூ நிக்குது.

போக சோம்பேறித்தனமாக இருந்தது .

பிறகு எதோ பட்டி மன்றம்  பார்த்து ,வந்த மெயிலைப் படிக்க  ,நான்  சிலருக்கு மெயில் அனுப்ப , போனில் பேச என மணி அப்படி இப்படி சாயந்திரம் அஞ்சு மணி ஆச்சு.

கூட்டம் குறையவே இல்லே

அந்த ஆஞ்சநேயர் பெரிய உயரமான விக்ரஹம்.
எனவே  வெளியிலே நின்னே அவரை தரிசனம் பண்ணிவிட்டு  ( அதுக்கும் ஏகக் கூட்டம் )ஒரு வாக் போய்விட்டு வந்தேன்.

ஆஞ்சநேயரை வணங்க வந்தவர்கள் நிச்சயம் ஒரு இரண்டு லட்சத்தையும் தாண்டி இருக்கும் என நினைக்கிறேன்.

2001 வாக்குகளில் நான் பொதுவாக காலையில்இதே  ஆஞ்சநேயரை என்னால் முடிந்தவரை சுற்றிவிட்டு  (108 என்ற எண்ணிக்கை இல்லாமல் ) செய்த சுற்றுக்கேற்ற   Blessings கொடுக்குமாறு சொல்லிருந்த காலமும் உண்டு.

இப்போது  சனிக்கிழமை மட்டுமல்லாது எல்லா நாட்களுமே கூட்டம் இருக்கிறது.
எனவே பாதி நாட்கள் கோயில் உள்ளே செல்லாது வெளியிலிருந்தேதான்   தரிசனம்.
 ஆஞ்சநேயர் அனைவருக்கும்   ஆசி வழங்குவாராக!

Saturday, 28 December 2013

நினைத்துப் பார்க்கிறேன்


 இந்த வருடம் நான் என்ன செய்தேன் என்று நினைத்துப்  பார்த்தால்   சாதனைகள்  லிஸ்ட் டில் நான் இந்த  பிளாக்கை ஆரம்பித்ததை தாராளமாகச் சொல்லலாம்.
 காசா பணமா நம்மளை நாம உற்சாகப் படுத்திக்கிறதிலே
தப்பில்லையே!

எனக்கு பிளாக் ஆரம்பிக்கனுமின்னு ரொம்ப நாளாகவே ஆசை இருந்திச்சு.
ஆனா எப்படீன்னு தெரியாது.


பசங்களுக்கு அம்மாவோட திறமை பத்தி புரியலை .
சொல்லிக்குடுக்க மாட்டங்க

சந்தேகம் கேட்டால் ஒரே தடவையிலே புரிஞ்சுக்கணும் என்பார்கள் .
அது நமக்கு முடியறதில்லே .

 நானும்   ஃ பிரீ லான்சர் என்பதால் இந்த வருடம் ஜூன் வரை ரொம்ப பிசியாக என்று சொல்லமுடியாவிட்டாலும்  continuously   occupied  ஆகத்தான் இருந்தேன்.

பிறகு  நாக்கில் வந்த ஒரு சிறு கொப்புளத்தை  ஒரு பிரபல மருத்துவ மனையின் பல டாக்டர்கள்    கூடி ஒரு வழி ஆக்கி நான் பேச முடியாமல் சாப்பிட முடியாமல் இருந்தேன்.

மீறிப்  பேசினால் என் அறிவார்த்தமான பேச்சு மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமால் போனது.

உதாரணமாக
நான் கீரை  என்று சொன்னால் அது மற்றவர்கள் காதில் கீதை யாக விழுந்தது என் பூர்வ ஜன்ம புண்ணியம் .
அது பற்றி தனி பதிவே போடலாம்.

கம்யுனிகேஷன்  என்பது ரொம்ப கஷ்டமான போதும் , எல்லோரும் ஒரு ஒரு மாதிரிச் சொல்லி குழப்பிய போதும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சமயம் , பதிவர் சந்திப்பு என்ற செய்தியைப் படித்தேன்.

நம்ம ஒரு பதிவாவது எழதினா தானே பதிவர் என்ற வெறியில் திரு தமிழ் வாசி அவர்களின் பதிவு எப்படி ஆரம்பிப்பது என்ற பதிவைப் பார்த்தும் பிறகு திரு திண்டுக்கல் தனபாலனிடம்  இரண்டொரு சந்தேகங்கள் கேட்டும்  முதல் பதிவை சுப யோகம் சுப முகூர்த்தம் எல்லாம் பார்க்காது  3.08.2013 அன்று அரங்கேற்றினேன்

தட்டி முட்டிக் கத்துக்கிட்டதுதான்.

 அப்புறம் பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு திரு பழனி கந்தசாமி
( என் சகோதரர் பற்றி  அறிந்தவர் ) திரு செல்லப்பா  (  நானும் அவரும் முன்பே ராம்ஸ்  அபார்ட்மெண்ட் காம்பிலேக்சில்  வசித்தவர்கள்   பரிச்சயமானவர்கள் )
திரு கவியாழி கண்ணதாசன் திருப்பூர் ஜோதிஜி திரு தமிழ்வாசி   திருமதி சசிகலா, ராஜி ,அகிலா போன்ற பலரையும் சந்தித்தேன்.

ஒரு தைரியம் வந்தது.
நம்மளும் கொஞ்சம் தாக்குப் பிடிக்கலாமின்னு.

முன்பே பத்திரிகைகளில் எழுதிய அனுபவம் உண்டு.'
 ஞான ஆலயம் சிநேகிதி மங்கை, மங்கையர் மலர்  எனப்  பல.

 தமிழில் முதலில் டைப்பிங் அவ்வளவு  ஃ பாஸ்ட் ஆக வரலை.
இப்போ பரவாயில்லை .

நானும் முப்பத்தி ஐந்து பதிவு போட்டுவிட்டேன்.

பதிவுகள் பாபுலர் ஆச்சா என்பதை விட என் மன விரக்தியிலிருந்து மீண்டு
வர  இந்த பதிவு எனக்கு உதவியது என்றே சொல்லலாம்
.
இவற்றை நான் மாத இதழ் களுக்கு அனுப்பியிருந்தால் பணம் கிடைத்திருக்கலாம் ,
உடனே  publish  ஆகாது
ஆனால் எனக்கு  மன திருப்தி இதில் நிறையவே கிடைக்கிறது.

 எனக்கு என் எண்ணங்களைப் பகிர ஒரு மேடை   இது என்ற விதத்தில்
சந்தோஷமே.
  என் உடல் நிலையில்  இன்னும் குழப்பிக்கொண்டுதான்  இருக்கிறார்கள்.

இருப்பினும் இந்தப் பதிவுகள் என்னை   occupied  ஆக வைக்கிறது.

தவிர முகமறியா நட்புகள் பல என்னை ஏதொ ஒரு விதத்தில் என்னை  உற்சாகப் படுத்துகிறது.

. பின்னூட்டம் போட்டு உற்சாகப்படுத்திய  அனைவருக்கும்  நன்றி..


Wednesday, 25 December 2013

த்சுன்தொக்கு


 தலைப்பைப் பார்த்தவுடன்  ஏதோ  வெளிநாட்டு  உணவின் பெயர் என்று  நினைக்க வேண்டாம்.

விவரமாகச் சொல்கிறேன்.

நாமெல்லாம்  ஏகப்பட்ட புத்தகங்கள் வாங்குவோம் ,
ஆனால் வாங்கிய புத்தகங்கள் அத்தனையையும்  படிக்கிறோமா என்றால் பொய் சொல்லமால்  பதில் சொன்னால் இல்லை என்றே தான் சொல்லவேண்டும்.

அதைத்தான் ஜப்பானிய மொழியில்  TSUNDOKU ' "த்சுன்தொக்கு"  'என்று சொல்வார்கள்.

 வாங்கிய புத்தகங்களைப் படிக்காமல் அப்படியே கிடப்பில் போடுவது என்ற அர்த்தம்..

ஏன்  இந்த வார்த்தையை  உபயோகிக்கிறேன் என்று  தெரியுமோ ?

படித்துக்கொண்டே வந்தால் காரணம் புரியும்

வேறு எந்த மொழியிலாவது  மனிதனது இந்தப் பழக்கத்தை ஒரே வார்த்தையில் சொல்லமுடியும் என்றால் சொல்லுங்கள்

. நினைவில் இருத்திக் கொள்கிறேன்.



,எதனால் புத்தகங்களை வாங்கிக் குவிக்கிறோம் என்று பாத்தால் மேலோட்டமாகச்சொன்னால் படிக்க ஆர்வம் .
இதில் 50% உண்மை இல்லாமல் இல்லை .

ஆர்வக்கோளாறின் காரணமாகவும் நிறைய வாங்குகிறோம்

.சீன மொழி கற்பது எப்படி என்று  நான் ஒரு புத்தகம் வாங்கி இரண்டு வருடம் ஆகிறது .
 இது வரை ஒரே ஒரு சீன வார்த்தையாவது கற்ற பாடில்லை.

 ஒரு குறிப்பிட்ட புத்தகம் வாங்கி அதைக் கற்று அதன் படி நின்று நாம் நமது வாழ்க்கையே புரட்டிப் போட்டு நாம்  உலகின் டாப் 10   ஆளில் ஒருவராக வரப்போகிறோம் என்ற  நினைப்பில் வாங்குகிறோம் .

புத்தகத்தில் புதுப் புத்தக வாசனை இருக்கும் வரை ரெண்டு நாள் படிப்போம் ,பிறகு அது கட்டிலுக்குக் கீழே போய் பிறகு இன்னும் எங்கோ தொட்டுவிட இயலாத அளவு எங்கெங்கோ போகும்.

பிறகு வீட்டைசுத்தம் பண்ணும் போது ஒரு நாள் கண்டேடுப்போம்.


அதைத் தவிர வேறே யாராவது பேசும்போதோ நெட்டிலோ இதை அவசியம் படிச்சே ஆகணும் என்று உசுப்பி விட்டால் மறுகணமே வாங்கி விடுவோம்

.அந்தக் காலத்திலாவது வாசலை விட்டு இறங்கி கடைக்குப் போய் வாங்கணும் .
இப்போ உக்காந்த இடத்திலேயே ஆர்டர் பண்ணினாப் போதும் .

 என்னைக்காவது ஒரு நாள் படிக்க என்ற  ரகம்  கூட உண்டு
அந்த என்னிக்காவது அப்படிங்கிற நாள்   இன்று ரொக்கம்  நாளை  கடன்  மாதிரி என்னிக்கு  வருமோ தெரியாது.

 நம்மளைப் பத்தின இமேஜு   கூடணும்ன்னு வாங்கிற சில பேர் இல்லாமல் இல்லை.
ஒருவரின் வீட்டில் உள்ள புத்தகத்திற்கும் அந்த வீட்டில் உள்ளவர்களின் அறிவுக்கும் நேர் விகிதம்  என்ற எண்ணம் நம் எல்லாரிடமும் நீக்கமற  நிறைந்துள்ளது. (அது  தப்பா சரியா என்ற விவாதம் வந்தால்  என் மார்க்கு அகல பாதாளத்துக்குப் போய் விடும் என்பதால் சேஃப்  ஆக  நான் அந்த டாபிக்குப் போகலை) ஹி..........ஹி


 வீட்டு வேலையை  டபாய்க்க ......... ( இது கல்யாணம் ஆகாத பெண்களும் , கல்யாணம் ஆனா ஆண்களும் செய்வது)
இது மாதிரி ஆயிரம் காரணங்களால் புத்தகம் வாங்கிக் குவிக்கிறோம்.

புத்தகங்கள் ஏன் வாங்குகிறோம் என்பதற்கு சுவாரசியமாக ஆயிரம் காரணம் இருக்கிற மாதிரி வாங்கின புத்தகத்தை ஏன் படிப்பதில்லை என்பதற்கும் ஆயிரம் சுவாரசியமான காரணமிருக்கு .

 எனக்கு எங்கே நேரமிருக்கு என்பதுதான் டாப்பில் இருக்கும் காரணமாக இருக்கும் .

 இதுவும் ரொம்ப சென்சிட்டிவ் ஏரியா.

 நான்  கப்சிப்  .
ஜாஸ்தி பேசலை .

 புத்தகம் வாங்கும் போது அதுக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அதை வாங்கி வீட்டில் வைத்தவுடன் குறைகிறது.
காதலி மனைவி ஆனபின் மவுசு குறையுமே  அது மாதிரி .

 ஓட்டலுக்குப் போனா குடுத்த காசுக்கு ஏன் வீணாக்கனுமின்னு வயித்தை
ஓவர் லோடு பண்ணற நாம புத்தகத்துக்கு செலவு பண்ணிய காசின் மகிமையை புரிஞ்சுக்க  வில்லை.

அந்தக் காலத்தில் ஒரு படிப்பு படிச்சு ஒரு வேலையில் உக்காந்தா அதே வேலையில் கடைசி வரை சுகமாகப் பொழுதை   ஓட்டிடலாம்.
அதனாலே  மத்த புத்தகம் படிக்க நேரம் இருந்திச்சு

இப்ப அப்படியில்லே

 நாளுக்கு நாள் இம்புருவ் ஆயிட்டே இருக்கு .

நம்மளை நாம  அப்டேட் பண்ணிக்கலைன்னாக்க ஆபீசை விட்டுத் துரத்த அதன் எதிரொலியாக வீட்டை விட்டு  என சீரியலாக  இ ஃ பெக்ட்  இருக்கும்.

தவிர டி.வியின் ஆதிக்கம் ஆன் லைன்  பேப்பர் புத்தகம் கூட ஒரு காரணம் .
சரி
இப்ப புத்தகக் கண்காட்சி வருது .
 புத்தகம் வாங்காமயா இருப்போம் .
எப்படி  "த்சுன்தொக்கு" பழக்கத்தில் இருந்து விடுபடுவது ?

 புஸ்தகத்தை முதலில் நம்ம கண்லே படற மாதிரி வச்சு மறக்காம ஒரு நாளைக்கு ரெண்டு பக்கமாவது படிக்க முயற்சி பண்ணுவோம்.

இத்தனை நாளைக்குள்ளே இத்தனை பக்கமாவது படிக்கணும்ன்னு ஒரு திட்டம் போடணும்.

 நாம படிச்சதை யாராவது மாட்டினாங்கன்னா  விடவே கூடாது .
நாம படிச்ச டாபிக்கிலேருந்து  கொஞ்சத்தை  பீலா வுடணும்.

அப்படீன்னு நான் பிளான் பண்ணியிருக்கேன் .

மாட்டிய முதல் பலி ஆடு என்  பதிவைப்  படிப்பவர்களாகிய நீங்கள்தான் .ஏனெனில்  நான் படித்த இந்த வார்த்தை  மறக்காமல்  இருக்கவே  இந்தப் பதிவு..

  இது எப்படி?

Monday, 23 December 2013

மனித நிர்வாகம்


தேவயானி மேட்டர் பத்தி எல்லாரும் ஏதேதோ  பல வித கோணங்களில் பல விதமாக எழுதி வருகிறார்கள் .

 நான் அதைப்  பார்க்கும் கோணமே வேறு.

 ஒவ்வொருவருக்கு  ஒரு திறமை உண்டு .
எனக்கு என்ன திறமை இருக்கோ இல்லையோ  இந்த மனிதர்களை மேனேஜ் பண்ணும் திறமை என்பது அவ்வளவாக சொல்லப்போனால் சுத்தமாகவே கிடையாது.

 மனிதர்கள் என்றால் வீட்டில் உள்ளவர்களையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

நாம் இன்று ஒரு வேலை சொன்னால் அதை செய்து தர குறைந்தது  ஒரு மாசமாவது ஆகும் அவ்வளவு திறமை !
அவர்களுக்கா  எனக்கா என்று தீர்மானிப்பது  உங்கள் சாய்ஸ் .

நாம் ஒரு வேலை சொன்னால் நமக்கு அது தொடர்பான   (எதிர் வேலை ) ஓரு வேலை நமக்கு சொல்வார்கள் .

உதரணமாக   போய்  காய்  கறி  வாங்கி வரச்சொன்னால் அதை ஒரு பேப்பரில் எழுதிக்கொடு என்பார்கள் .

மடிச்சு வெச்ச துணியை எடுத்து உள்ளே வை என்றால் அதை வைக்க ஒரு பை   கொடு  என்பார்கள்
. நமக்கோ எரிச்சல் 300 டிகிரியையும்  எகிறும் .

 அதே போல் பாத்திரம் தேக்க ஒரு ஆள் இது வரை எனக்கு செட் ஆகவில்லை .
அவர்கள் பாத்திரம் தேய்க்கும் விதம் பிடிப்பதில்லை .

 சிங்கை( SINK   )கோயில் தெப்பக்குளம் ஆக கன்வெர்ட்  பண்ணி  அதிலேயே  தேய்த்த பாத்திரங்களை  தெப்பமாக்கி ,அந்த அழுக்குத் தண்ணியிலேயே முக்கி முக்கி  பாத்திரங்களை  கழுவும் பாணி எனக்குப் பிடிப்பதில்லை .

இப்படி செய் என்று திருத்திச்  சொன்னாலும் நான் அந்தண்டெ இந்தண்டெ பாக்கும் போது திரும்ப  தன் சொந்த பாணியிலேயே செய்வார்கள் .

 அது போல வீடு துடைக்க என்று வைத்தால்  அரை  பக்கெட் தண்ணியில்  ஒரே ஒரு முறை அந்த மாப்பை முக்கி வீடு முழுக்க துடைக்கும் ஸ்டையில்  எனக்கு ஒத்து வருவதில்லை .

எனக்கும் சும்மா தினம்   தினம்   ருல்ஸ்களை ஒப்பிக்க பிடிப்பதில்லை .
 எனவே நானே எல்லா வேலைகளையும் செய்துவிடுவேன்.
உடம்புக்கு எக்சர்சைஸ்  என்று நினைத்துக்கொண்டு!

 எல்லாரும் என்னை ஒரே ஒரு வேலைக்காரரை மானேஜ்  பண்ண முடியாத நீ என்ன படிச்சு என்ன புண்ணியம் .... இத்யாதி இத்யாதி . எல்லாம் சொல்வார்கள் .

ஆனால் வீட்டோடு ஆள் வைத்தால் செட் ஆகிறது. ( ஏனெனில் நானே பாதி வேலைக்கு மேல் செய்து விடுவேன் . பொறுமை  0%  ).

 எனக்குத்தான் திறமை இல்லையோன்னு இத்தனை நாள் நினைத்து வருத்தப்  பட்டுக்கொன்டிருந்தேன் .
 நானாவது பரவாயில்லை சாதாரண பிரஜை . தேவயானி  ஒரு diplomat !


தேவயானி மாதிரியான ஒரு டிப்லாமேட்டால் கூட ஒரு வேலை ஆளை மானேஜ்  பண்ணுவது கஷ்டம் போலே!
எப்படியாகப்பட்ட  உண்மை !
இனிமேல் என்னை யாருமே குறை சொல்லக்கூடாதாக்கும்


Friday, 20 December 2013

பெண் பார்க்கும் படலம



 என் தோழி (சுமார் 30 வருடம் முன்பு) ஒருவர் ஒரு  கதை  சொல்வார்.
 ஒரு கல்யாணம்  ஆன ஆம்பிளை 
 கோழி வெந்துச்சான்னுஅம்மாவைப் பாக்கச்சொன்னா  
அம்மா நா மாட்டேன்"பத்து நிமிஷம்  முன்னாடி பாத்தப்போ  கோழி அடுப்புலேருந்து கத்துச்சு"ன்னு சொன்னாளாம் ,
 சரின்னு ,பொண்டாட்டியைப் போய்
 கோழி  வெந்துச்சான்னு பாக்கச்சொன்னா  பொண்டாட்டி  
 " நா மாட்டேன் ரெண்டு நிமிஷம் முன்னாடி நா பாத்தப்போ  கோழி
கொத்த வந்துச்சு"ன்னு சொன்னாளாம் .

என் மகனுக்குப் பெண் பார்க்கிறேன் .
சரி ஒரு முன்னோடி சர்வே பண்ணலாம்ன்னு  மகனுக்குக் கல்யாணம் பண்ணி முடித்த அம்மாக்களிடம் பண்ணினேன் .
புரிந்த உண்மைகள் :
1. மருமகள்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்.
2. நான் கல்யாணம் பண்ணும் முன்பு
புகுந்த வீடு எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ  ஏன்னாக்க அது தான் உன் வாழ்க்கையே   என்றார்கள் .
இப்போது
 வர மருமக எப்படி இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ சொச்ச காலத்தை ஒட்டணுமில்ல என்கிறார்கள்  .
சரி ஆண்களிடம் சர்வே செய்யலாமின்னு  சமீபத்தில்  கல்யாணம் பண்ணிக்கொண்ட பையன்களிடம் நிலைமையை விசாரித்தேன்.
அதில் ஒருவர் சொன்ன பதில் எனக்கு காமெடியாக  ( உங்களுக்கு ஷாக் ஆக இருந்தால் நான் பொறுப்பல்ல ) இருந்தது.
அம்மா அப்பா பார்த்து அம்பது  பவுன் நகை  சீர் செனத்தி எல்லாம் வாங்கிக்  கல்யாணம் பண்ணி வைத்த பெண் .
ஆனாலும் கல்யாணம் ஆனா ரெண்டாம் மாசமே நாட்டின் எல்லைப் பகுதியில் உள்ளது மாதிரியான சூழ் நிலை .

பையனுக்கு குரு உச்சத்தில் இருக்கும் நாட்களில் அம்மா ஒரு மாதிரி சாப்பாடு மனைவி ஒரு மாதிரியான சாப்பாடு என்று ரெண்டு விதமான சமையல்  ,

பையனுக்கு  என்ன செய்வது என்று தெரியாமல் ரெண்டிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு  வெள்ளைப் புறா வைப் பறக்க விடுவதாக நினைத்திருக்கிறான் .
ஆனால் வீட்டில் நடப்பதென்னவோ 24x 7x 365 காக்கா கூட்டம் போல ஸீன்!

குரு சிலநாள்  சனி கிட்டே சார்ஜ் கொடுத்திட்டு  வாக் கீக் போயிடுவாரோ என்னவோ
 சொல்லி வச்ச மாதிரி சில சமயம்  ரெண்டு பேருமே சாப்பாடு தரமாட்டர்களாம்.
பையன்   வீட்டில்  காலித் தட்டைப் பாத்து ஒரு சோக லுக் வுட்டுட்டு
 ஆபீஸ் காண்டீனில்  உணவு ரொம்பிய  தட்டைப் பாத்து
 வீட்டு சோகத்திலும் ஒரு நல்ல சாப்பாடு கெடெக்குதென்னு  சந்தோஷப் பட்டு கிட்டானாம் .

சில சமயம் இவன்கிட்டே மனவியைப்  பேச விடாமல்  தடுக்க அம்மா ஆபீஸிலெருந்து வர வழியிலேயே மடக்கி அங்கே வா இங்கே வான்னு கூட்டிப்  போவாங்களாம்.

மனவியும் அதற்கு  சளச்சவங்க இல்லே ..
சொல்லப் போனா அதுக்கு மேலே. 
சில சமயம் ஆபீஸ் பக்கமாவே  ஒரு இடம் சொல்லி நீங்க அங்கெ வாங்க நான் உங்களுக்காக வெய்ட் பண்ணறேன் . அப்படீம்பாங்களாம் .

 சில ரெண்டு பேருமே  பேச மாட்டங்களாம் ..

அப்பல்லாம் இவனுக்கு  டி .வி .கண்டு புடிச்ச புண்ணியவானுக்கு கால் வலிக்க வலிக்க ஆயிரம் முறை விழுந்து வணங்கலாம் போலத் தோணுமாம்.

இதுக்கெல்லாம்  சிகரம் வெச்சாப் போலே ஒரு நிகழ்வு நடந்ததாம்  ஒரு நாள் .
பிரஷர் குக்கர் அடுப்பில்   ஆன் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாம் . மாமியார் ப்     பண்ணட்டுமேன்னு  மருமகளும் 
 சின்னவ இவ எழுந்து ஆஃப்  பண்ணக் கூட முடியாதா என்ன?
இவளுக்கு என்ன இவ்வளவு கொழுப்பான்னு
 மாமியாரும் கம் என்று இருக்க  குக்கர் "  ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் "என்கிற மாதிரி  சந்தோஷத்தில்  மானாட மயிலாட பாணியில் டான்ஸை  ஆடிடுச்சாம். 
 எப்படியாப் பட்ட ரிப்பேரும் பண்ண முடியாதுன்னு குக்கர் ரிப்பெர்காரன் டயக்னைஸ் பண்ணிட்டதாலே குக்கர் மூடியை  காயலான் கடைக்கு  பனிஷ்மெண்ட் டிரான்ஸ்ஃ பர்  பண்ணிட்டாங்களாம்.
 (குக்கரை அடுப்பில்   முதலில்  யார் வைத்தது என்ற கேள்வியை   வெண்ணிற ஆடை மூர்த்தி பாணியில் யாரும் என்னிடம் கேட்கவேண்டாம் .
என் சர்வேக்கு பையன் ஒரு உண்மையை  சொன்னால் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான் என் வேலை .
 வெட்டி கேள்வி கேட்க நான் என்ன  இன்வெஸ்டிகெஷன்  ஏஜன்சியா நடத்துகிறேன்? )
 உச்சுச்சு !.ச்சே! நாடு போகிற போக்கு .......ன்னெல்லாம்  உணர்ச்சி வசப்படவேண்டாம் 

 இப்ப  மறுபடியும் முதல் பாராவுக்குப்  போங்க !
என் தோழியின் கதைக்கு அடுத்த வருட சாகித்ய அகாடமி  பரிசுக்கு 
பரிந்துரை செய்யுங்கள்