Monday, 31 October 2016

மினி பூரி


  எனக்கு ரொம்ப நாளாக பூரி சாப்பிடவேண்டும் என்று ஆசை .

ஆனால் என்னவோ  நேரம் வரவில்லை .

சின்னவன் பூரி சாப்பிட மாட்டான் .


எப்பவோ ஒரு நாள் வீட்டுக்கு வருபவனைப் போய் கட்டாயப் படுத்திச் சாப்பிட வைக்க இது ஒன்று வைட்டமின்கள் நிறைந்த பண்டம் அல்ல .

பெரியவனும் இங்கே இல்லாததால் கிட்டத்தட்ட ஒரு மூன்று வருடங்கள் செய்யவே இல்லை .

வெளியில் எண்ணெய் பண்டங்கள் சாப்பிடுவதே இல்லை .

என் ஒரு ஆளுக்குச் செய்வதாக இருந்தால் எண்ணெய் மீந்து விடும் ,

அதில் அப்பளம் பொறித்து வைத்து சாப்பிடலாம் என்றால்  நான் ஒரு ஆளே மெனக் கெட்டுச் சாப்பிடணும்

 என்  கணவருக்கு சர்க்கரை பி பி   இதயக் கோளாறு .
 பை  பாஸ் எல்லாம் ஆகிவிட்டது ,

எனவே  இது நாள் வரை செய்யமலே இருந்தேன்.

பிறகு இன்று ஒரு ஐடியா தோணியது . நாம் ஏன் சின்ன சின்ன வட்டமாகச் செய்து பூரி பண்ணைக் கூடாது ? என்று .

உடனே செயலில் இறங்கி விட்டேன் .

சப்பாத்தி செய்து முடித்த பின் நாலு உருண்டை மீதம் இருந்தது .
அதில் சப்பாத்திக்குத் தேய்ப்பது போல தேய்த்து  சின்ன மூடி கொண்டு கட் பண்ணி  மூணே மூணு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பொறித்து     எடுத்தேன் . வாவ் !மினி பூரி ரெடி !

சூப்பராக வந்தது .படத்தில் வந்த பூரிகளை ப் பொறித்து எடுத்த பின்னும் எண்ணெய் மிஞ்சியது . வத்தலைப் பொடித்துப் பொறித்து எடுத்தேன் .

 கற்ற எகனாமிக்ஸ்  படி நிற்க அதற்குத் தக என்பது போல்  எண்ணையும் மிச்சம் பண்ணியாச்சு ! ஆசையையும் நிறைவேத்திக் கிட்டாச்சு !

Sunday, 16 October 2016

காக்கா பிடித்தல் VS சந்தைப் படுத்தல்


 நேற்று  நான் இந்தப் பதிவைப் போட்டபின் என்னுடன் போனில் தொடர்பு கொண்டு என் தோழி ஒருவர் காக்கா பிடிப்பது தப்பு என்று  விவாதம் பண்ணினார் .
கடைசி வரை அவர்  என் கருத்துடன்  ஒத்துக்க கொள்ளவே இல்லை  .

பின்னூட்டாத்திலும் 
திரு கார்த்திக் சரவணன்   தவிர    மற்ற      இருவர்  (திரு அவர்கள் உண்மைகள்  மற்றும் திரு ஸ்ரீராம் ) ஜால்ரா ஓகே என்கிறமாதிரியும் திரு பழனி கந்தசாமி அவர்கள் முயன்று பார்ப்பதாகவும் எழுதி இருந்தார் . அவருக்கு என் வாழ்த்துக்கள் .( கம்பெனி சார்பா சோப்பு டப்பாவெல்லாம் கிடையாது )  .
திரு கில்லர்ஜீ பொத்தம் பொதுவான கமெண்ட் .
 நான் சொல்ல விரும்புவது   “காக்காய் பிடிப்பது ஒரு அருமையான   பயன் தரும் கலை. “
காக்காய் பிடிப்பதற்கும் சந்தைப் படுத்தலுக்கும் ஒரு மயிரிழை வித்தியாசம் ,
அவ்வளவுதான்.


காக்கா        பிடிப்பது தப்பு என்கிறவர்களை நான் கேட்கும் ஒரு கேள்வி ,
கடவுளை வணங்கும் பொழுது
என் கஷ்டம் தீர்ப்பவரே
என் எதிரிகளை அழிப்பவரே
என் உடல் நலம் காப்பவரே
எனக்கு அழிவில்லாத செல்வம் கொடுப்பவரே 
என்றெல்லாம் தானே சொல்கிறோம் ?


கடவுளிடம் போய் 
" எனக்குக் கஷ்டம் கொடுப்பவரே ,
எனக்கு எதிரிகளை உண்டாக்குபவரே ,
எனக்கு வியாதியைக் கொடுப்பவரே
என் செல்வத்தை எல்லாம் சுருட்டிக் கொண்டு போகின்றவரே என்றெல்லாமா கும்பிடுகிறோம் ?

தவிர வடிவேலு சொல்கிற மாதிரி நம்ம  டிசைன் அப்படியோ  என்று நினைக்கிறேன்.   என்னையும் சேர்த்துத் தான் .

இந்த   விஷயத்தில்   எனக்கு   பஞ்சாபிகளைப்    பிடிக்கும் .

தனக்குக் காரியம் ஆகும் வரை   நமக்கு சோப்பு போடுவார்கள் என்பதை விட அப்பிவிடுவார்கள் என்றே சொல்லலாம்.

நான் டெல்லியில் வேலை பார்த்த போது நடந்த நிகழ்வு .
பல மாநில மக்கள் இருந்த போதும் மத்திய சாப்பிட்டு வேளையில் மொழிவாரியாகத் தான் அமர்ந்து சாப்பிடுவோம் .ஆனால் ஒரு பொது அடுப்பு சுடவைத்துக் கொள்ள இருக்கும்குளிர் நாட்களில் ஜில் என்று ஆறிப்போன உணவைச் சுடவைத்துக் கொள்ள எல்லா    அலுவலகங்களிலும்  எலக்டிரிக் அடுப்பு இருக்கும் .

 அப்போது நான் இட்டலியைச் சுடவைக்கும் போது ஒரு பஞ்சாபி கிளார்க் ஒரு வாய் சாப்பிட்டு விட்டு வாவ் ...  எப்படிச் செய்யறது  என்று கேட்டாள்.

ரொம்ப எல்லாம்  எனக்குத் தெரியாது .எங்க அம்மாவுக்குத் தான்  நல்லாத் தெரியும் என்றதும் என் வீட்டுக்கு  சனியன்று வருவதாகச் சொன்னாள் .

 அது நாள் வரை   நான் ப்ரொபெஷன் பீரியட்டில்    இருந்ததால்   என்னை அவ்வளவாக மதிக்க மாட்டாள் . சாதாரணமாகவே ரொம்ப கர்வம்      பிடித்தவள் .

நான் சரி   என்று சொன்னதும் என் மீதான அவளின் போக்கே  மாறிவிட்டது

 புது வெள்ளை மழை இங்கு பொழிகிறது மாதிரி என் மீது பயங்கர ஐஸ் மழை.


 ....நான் சின்னத் தப்பு பண்ணினால் கூட பெரிய  தப்பு என்பது போல அலப்பறை பண்ணும் அவள்  அதன் பின்னர்          டிரையினிங்க் பீரியட்டில் இது போல தப்பு வருவது சகஜம்தானே  என்று பிளேட்டை மாற்ற ஆரம்பித்துவிட்டாள் .

  ஒரு நான்கு  ஐந்து வாரம் ( சில வாரங்கள் விட்டு , தொடர்ச்சி யாக அல்ல )         வந்து என் அம்மாவிடம் தென்னிந்திய உணவுகள் செய் முறை கள்  கற்றுக் கொண்டாள்.

 பிறகு அவள் சனிக் கிழமைகளில் தன் வீட்டிலேயே 
போர்டு மாட்டிவிட்டாள்.அப்போது எங்களுக்கு சனியன்று தான் வார விடுமுறை .

  இங்கு தென்னிந்திய உணவுகள் கற்றுத் தரும் வகுப்புகள்   நடத்தப்படும்.
ஒரு வாரத்திற்கு 10 பேர் மட்டும்
மாதம் ஒரு முறை மட்டுமே ..
வருபவர்களுக்கு   இட்டலி ரெண்டு+ அளவு   சாம்பார் மட்டும்  இலவசம்
 என்று வகுப்புகள் நடத்த ஆரம்பித்து விட்டாள்.

( ஏனெனில்  கனாட் சர்கிளில் உள்ள  மெட்றாஸ் ஹோட்டலில் சாம்பார் அளவில்லாமல் தருவார்கள் .)
அப்போதெல்லாம்   எங்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறைதான்   பஞ்சப்படி ஏறும் .
அவளுக்கு  மட்டும் மாதா மாதம் பஞ்சப்படி ஏறியது .

இப்போது சொல்லுங்கள் .காக்கா பிடிப்பது தவறா ?

எனவே காக்கா பிடிக்கும் கலையைக் கற்போம் .

சந்தை பிடிக்கும் கலையை அறிவோம் .


இந்தப்  பதிவின் விளைவாகஇங்கு ஜால்ரா  அடிப்பது எப்படி" என்று அங்கங்கே வகுப்புகள்  நடத்த நினைப்பவர்கள் என்னை அணுகவும் .டிப்ஸ்   தர ரெடியாக உள்ளேன்.

சந்தைப் படுத்தல்


   என் லாப் டாப்பில் சில பிரச்னைகள் .
ஐ பேட் இருந்தாலும் எனக்கு லாப் டாப் மாதிரி   டைப்பு அடிக்க வரவில்லை . கட்  பேஸ்ட் சுத்தமாக வருவதில்லை .அதனால் பதிவு எதுவும் போட வில்லை .கமெண்டும் போடவில்லை .

இது என்ன புது வார்த்தை என்று நினைக்க வேண்டாம் .
ஆங்கிலத்தில் உள்ள Marketting என்ற வார்த்தையின் மொழி  பெயர்ப்பு .


மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தவிர்க்க முடியாத ஒன்று சந்தைப் படுத்தல்.
 சின்ன வயசில் மார்க்கெட்டிங் என்றால் வீடு வீடாகச் சென்று சாமான் விற்பது என்ற அளவில்தான் நான் மார்க்கெட்டிங் பற்றி புரிந்து கொண்டிருந்தேன் .


ஆனால் சமீபத்தில் டேவிட் ஓக்லியின் புத்தகம் படித்தபின் தான் அதன் பரிமாணம் ,முக்கியத்துவம் , கவனத்தில் கொள்ள வேண்டியவை எனப் பலவற்றையும் அறிந்து கொண்டேன் . .


 வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றி அடைந்ததற்கு முக்கியமான காரணம் திறமை என்று கூறினாலும் தன் திறமையை சந்தைப் படுத்தத் தெரியவில்லை என்றால் நிச்சயம் வெற்றி அடைய முடியாது .

இது குடும்ப உறவுகள்  முதல் ,சுய தொழில் , அலுவக வேலை , அரசியல் ,சினிமா ,வரை எல்ல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.


 மார்க்கெட்டிங் சரிவரப் பண்ணத்தெரியாமல் கடையின் அலமாரியை விட்டு  ஓடச் செய்யப்பட்ட பிராண்டுகள் பலப்பல.


நானும் எனது அனுபவத்தில் பார்த்திருக்கிறேன் வேலையில் ஒரு மண்ணும் தெரியாத அதி மண்டூகங்களும்   மேல் அதிகாரிகளிடம் தன்னைப் பற்றிய சுய விளம்பரத்தாலேயே  ( இதை நாம் ஜால்றா . காக்கா என்று சொல்வோம் )பதவி உயர்வு வாங்குதல் ,தான் இல்லாவிட்டால்  அந்த அலுவலகம் இயங்காது என்பது போன்ற புரூடாக்களை அள்ளி வீசி முப்பது வருடம் போல  இட மாற்றங்களைத் தவிர்த்த ஆட்களையும் நான் பார்த்திருக்கிறேன் .


அதே  மாதிரிக்   குடும்பத்திலும் உடன் பிறந்தவர்களுக்கு என்று ஒரு நயா பைசா செலவு பண்ணியிருக்க மாட்டார்கள் ஆனாலும் வாய்  ஜாலத்தால் தானே பெற்றவர்களையும் விடத் தான் ரொம்பவே செய்து விட்டதாகவே சொல்லிக்கொள்ளுவார்கள் .


 அதே போல சில தெருவோரக் கடைகள்  பெரிய விளமபரங்கள் செய்யப் படும் ஓட்டல்களை விடவும் சுவையான உணவு தருவார்கள் . இருந்தும் அவ்வளவு டர்ன் ஓவருக்கான லாபம் பெரிய ஓட்டல்களை விடவும் கம்மியாகத் தான் இருக்கும்.

வகுப்பில் கூட வாய் சவடால் விடும் மாணவனைக் கண்டால் டீச்சர்களும் சில சமயங்களில் அவர்களைப் படிப்பு சுமார் ரகம் தான் ஆனாலும் ஸ்மார்ட் என்று சொல்லி முத்திரை குத்தி விடுவார்கள்.இது எல் கே ஜி யில் இருந்து கல்லூரி வரை பொருந்தும் .வெறும் படிப்பு மட்டும் போதாதே என்று சொல்லிவிடுவார்கள் .அந்த டீச்சரை நாம் ஒரே வஞ்சனை என்று  பட்டம் கொடுப்போம் .

 என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால்  என் வேலை குடும்ப உறவுகள் படிப்பு எனப் பல  விஷயத்திலும் கூட நான் மார்க்கெட்டிங் சரிவரப் பண்ணியிருந் தேன் என்றால் இன்னும் நன்றாக வந்திருக்க முடியும் என்று தோணுகிறது .


 எனவே சுய தம்பட்டம் என்று மற்றவர்கள் கூறினாலும்    மார்க்கெட்டிங் எனும் கலையை வளர்த்துக் கொள்ள வைத்து தவறில்லை