Saturday, 24 October 2015

ஜப்பானிய சரஸ்வதிதேவி

  
கிட்டத்தட்ட எல்லா நாட்டுப் புராணக்கதைகளிலும் கல்வி மற்றும் அறிவுக்கென்று தனிக் கடவுள்கள் உள்ளனர் .ஹிந்து மதத்தில் எப்படி சரஸ்வதிதேவியை வணங்குகிறார்களோ அது போலவே ஜப்பானிலும் BENZAITEN என்ற கடவுளை மக்கள் வணங்குகிறார்கள் .இவர் ஷிண்டோ புத்தமதக் கடவுளாக வணங்கப் படுகிறார்.இவர் முக்கிய 7 அதிருஷ்ட கடவுள்களில் ஒருவராகவும் கருதப் படுகிறார்.
இந்த தெய்வமும் அடுக்குத் தாமரையில் அமர்ந்திருக்கிறார்.. சரஸ்வதிதேவி கையில் வீணையோடு இருப்பது போலவே   BENZAITEN தேவியும் கையில் பிவா ( BIWA)  அல்லது ஜப்பானிய மாண்டலின் போன்ற இசைக் கருவி  கிட்டத்தட்ட வீணை போன்ற (வடிவில் மாறுபட்ட)இசைக் கருவியை கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்.
இவரை வழிபட்டால் அறிவு ,வாக்கு வன்மை ,இசை,மொழி  மற்றும் பல கலைகளில் வல்லவராக முடியும் என்று நம்பப்படுகிறது.சில இடங்களில் மழை மற்றும் விவசாய வளத்திற்காகவும் இவரை வணங்குகிறார்கள் .
இவருடைய  உதவியாளர்களாக டிராகன் களும் பாம்புகளும் மட்டுமே ( முக்கியமாக வெள்ளை நிறம் கொண்ட )

ரிக் வேதத்தில் விரித்திரன் என்கிற பாம்பு வடிவ அசுரனை சரஸ்வதி அழித்ததாகக் கூறப்பட்டுள்ளது., ஜப்பானில் BENZAITEN தேவியும் பாம்புகள் மற்றும் டிராகன்களுடன் தொடர்புடையவராகக் கருதப்படுகிறார் இங்கே BENZAITEN தேவிக்கான முக்கிய கோயில், டோக்கியோ நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் எனோஷிமா தீவில் உள்ளது
 File:Benzaiten.jpg





இந்தக் கடவுளின் கோயில்கள் எல்லாமே கிட்டத்தட்ட ஆறு அல்லது ஆறு சார்ந்த இடங்களில் உள்ளது .இவர்  FLOW " பணஓட்டம் " அதாவது பணப் புழக்கம் இவரை வணங்கினால் வளமுறும் என்று நம்பப்படுகிறது.
காமகுரா பகுதியில் உள்ள கோயிலில் மக்கள் தங்களின் பணப் புழக்கம் அதிகரிக்க  நாணயங்கள் அதாவது காசை  அந்த கோயிலில் உள்ள புனித நீரில்  கழுவுகிறார்கள்.பணம் இரட்டிப்பாக ஆகும் என்று நம்புகிறார்கள் 
 (ஒரு சிறிய தொட்டி மாதிரி உள்ள நீர் நிலையில் காசு கழுவப்படுகிறது  இது  ZENI ARAI என்று கூறப் படுகிறது ZENIஎன்றால் காசு  ;ARAI என்றால் கழுவுவது என்று பொருள்)

 கடலோரமாக உள்ள தீவுகளில் இந்தBENZAITEN  தெய்வம் குழந்தைகளைக் காக்கும் தெய்வமாகப் பெரிதும் வணங்கப் படுகிறார்.
 இவரைத் தகுந்த துணையோடு சேர்த்து வைக்கும் தேவி எனவும் வணங்குபவர் பலர்.
ஒரு சுவாரசியமான கதை ஒன்று உண்டு .
ஹனாகக்கி பஷு என்று ஒரு இளைஞன் இருந்தான் .
அவன் ஒரு BENZAITENகோயிலின் திருவிழா விற்குப் போயிருந்த போது தண்ணீர் குடிக்க நீர் ஊற்று எதுவும் இருக்குமா என்று தேடிப்போனால் நீர் ஊற்று எதுவும் இல்லை அதற்குப் பதிலாக ஒரு சுனை மட்டுமே இருந்தது .அங்கே ஒரு காகிதம் அவன் காலடியில் காற்றில் இருந்து பறந்து வந்தது . என்னவென்று பார்த்தால் அதில் ஒரு பெண்ணால் கையெழுத்து போடப்பட்ட கவிதை எழுதப் பட்டிருந்தது .கவிதை அவனை வெகுவாகக் கவர ,அதை  எழுதிய பெண்ணையே மணந்துகொள்ள வேண்டும் என்பதில்  வெகு தீவிரமாக ஆகிவிட்டான்.
கலைக்கடவுளை தன்னை அவளுடன் சேர்த்து வைக்குமாறு வணங்கினான்..ஏழு நாட்கள் கோயிலில் இரவு பகல் என்றெல்லாம் பாராது தவமிருந்தான்.பிறகு ஏழாம் நாள் முடிவில் அவனுக்கு ஒரு கோயில் சார்ந்த பெரியவர் வந்து  “:உம் பக்தியை வெகுவாக மெச்சினோம் பாதி முகம் மட்டுமே காட்டிய பெண்ணை அவனுக்குக் காட்டி  .நீ நினைத்த பெண்ணை அடைவாய் என்று கூறி விட்டு மறைந்தார் .பிறகு வெளியில் வந்தால் அந்தப் பெண்ணே அங்கு நிற்க அவளைக் கண்டு மறுபடியும் மயங்கி அவளிடம் கடவுளே உன்னை என்னிடம் சேர்த்து வைத்தார் என்று முழு விவரமும் சொல்ல அவளும் ஒகே சொல்ல அவளின் குலம் கோத்திரம் எதுவும் விசாரிக்காமல்( கடவுளே நேரில் வந்து சேர்த்து  வைத்த காரணத்தால் ) அவளை மணந்து குடித்தனம் நடத்தினான் .ஆனால் அவள் அவன் கண்ணுக்கு மட்டுமே தெரியப் பட்டவளாக இருந்தாள். இது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஒரு நாள் பக்கத்து ஊருக்கு  வேலை விஷயமாக சென்றபோது ஒரு வீட்டின் வேலைக்காரன் தன் எஜமானன் அழைப்பதாகச் சொல்ல இவன் போனான் .கடவுளின் அறிவுரைப் படி தான் நான் உன்னை அழைத்தது .என்று சொன்னான் .தன் மகள் தனக்கு நல்ல துணை வேண்டி BENZAITEN தேவி யிடம்  இறைஞ்சி 
 க்யோதொவில் உள்ள கோயில்களில் தான் எழுதிய கவிதையை அனுப்பியதாகவும் சொன்னான்.பிறகு கடவுள் உனக்கான துணை கிடைத்துவிட்டது என்றும் கடவுள் தன்னிடம் தன் மகளுக்கான மணமகனின் அங்க அடையாளங்கள் பற்றிச் சொன்னதாகவும் கடவுள் சொன்ன மாதிரியே  அவனின் அங்க அடையாளங்கள்  இருந்தது என்றும் அந்தப் பெண்ணின் அப்பா சொல்ல இவன் " இல்லை இல்லை எனக்கு ஏற்கனவே மணமாகிவிட்டது என்று சொல்லி முடிக்கு முன்னரே அந்த அப்பா தன் மகளைக் கூட்டி வந்து காண்பித்தால் என்ன ஆச்சரியம் !இவன் மனைவியே தான் அது.

அதாவது இத்தனை நாளும் அவளின் ஆத்மாவுடன் இவன் வாழ்கை நடத்திக் கொண்டிருந்திருக்கிறான். அதனால் தான் அவளை மற்றவர்கள் பார்க்க முடியவில்லை என்று புரிந்து கொண்டான் . பிறகென்ன ஜப்பானிய டும் டும் ...ஜாம் ஜாம் ...வாழ்க்கை 

Thursday, 22 October 2015

ரோட்டா வீசு வதும் கைப்பழக்கம்



ஓவையார்  21 ம் நூற்றாண்டில் பிறந்திருந்தால் இப்படித்தான் பாடியிருப்பாரோ என்று தோன்றுகிறது 

Wednesday, 21 October 2015

வேஷ்டிக்கும் வாழ்வு வரும்


 லெகிங்க்ஸ் பற்றி யார் கொளுத்திப்போட்டது என்று தெரியாது ஆனால் கொஞ்ச நாளைக்கு அந்த டாபிக்கை வைத்து நிறைய  ட்விட்ட ர்கள்  பதிவுகள் டி.வியில் பேச்சு என்றெல்லாம் வந்தன .
லெகிங்க்ஸ் பற்றி   மாஞ்சு மாஞ்சு கவலைப்பட்ட  இந்தத் தமிழ்  கூறும் நல்லுலகம்   வேஷ்டியை மறந்தது ஏனோ?

.அது ஏனென்று தெரியவில்லை பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயங்களெல்லாம்  விளம்பரம் அவ்வளவாகத் தேவைப்படாமலே விவாதிக்கப் படுகின்றன.
ஆண்கள் சம்பந்தப்பட்ட உடை ஹேர் ஸ்டைல்  போன்ற  விஷயங்களெல்லாம்  விளம்பரம் கொடுத்தாலும் அவ்வளவாக   விவாதிக்கப்   படுவதில்லை .

மக்கள் திலகம்  எம்ஜிஆர் கட்டினார் , நடிகர்   திலகம் சிவாஜி கணேசன்
கட்டினார்  அறிஞர் அண்ணா  , பெருந்தலைவர் காமராஜ் கட்டினார்
 என்றெல்லாம் டி.வியில்சொல்லி தமிழ்ப் பாரம்பரியத்தை உணர்த்தி

 வேஷ்டியைக்      கட்டச்சொல்கிறார்கள்  .இன்னும் பல பிரபலங்களும் வேஷ்டிக்கான பல பிராண்டு   விளம்பரங்களில்   நடிக்கிறார்கள்
 ( அதைக்கட்டினால் உனக்கும்  கம்பீரம் வரும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள் ).விளம்பரப்படுத்தும் அளவுக்கு  மாநகரங்களில்  வேஷ்டி கட்டும் மக்களின் எண்ணிக்கை  கூடியதாகத் தெரியவில்லை

ரொம்ப நாள் முன்னடி நீயா நானா வில் இந்த  டாபிக்கை வைத்து ஒரு

ரஞ்சகமான  நிகழ்ச்சி   நடத்தினார்கள்(  பங்கேற்க வந்தவர்கள் அனைவரும் ,

 வேஷ்டியில் -- கோபிநாத் உள்பட )
 .முடிவில் வேஷ்டி"நிலைத்து நிற்கும் பெருமை உடைத்து   " என்று முடித்தார்கள் .

என்னுடைய சந்தேகம் என்னவென்றால் என்ன     தான் விளம்பரம் கொடுத்தாலும்
வேஷ்டி விற்பனை அதிகரித்தாலும்  வேஷ்டிகட்டிய மனிதர்களை
ஏன்   பெரிய மால்களிலும் ஷாப்பிங்  ஏரியாவில் அல்லது  அலுவலகத்திலும்

 அவ்வளவாகப் பார்க்க முடிவதில்லை .?

நான் திருச்சியில் படித்துக் கொண்டிருந்த  போது  நேஷனல் காலேஜில்

 மட்டும்  வேஷ்டி கட்டிய மாணவர்கள்  வருவார்கள் .

நான்  TCSஇல் வேலை செய்தபோது  ஒரு வெள்ளிக்கிழமை ஒரு புராஜெக்டில்  வேலை செய்பவர்கள் அனைவரும்    வேஷ்டி மற்றும் புடவை  கட்டிக்கொண்டு   வந்தனர் .
அரசியல் பிரமுகர்கள்    சில பொது நிகழ்ச்சிகளில்  பங்கேற்போர்  மற்றும் கல்யாணத்தின் போது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே வேஷ்டி உடையில் வருகிறார்கள்

 இப்பொழுது பாக்கெட் வைத்த வேஷ்டி கூட வந்துவிட்டது.

வேஷ்டி என்னதான் பாரம்பரிய உடை என்று பெருமையோடு  பேசப்பட்டாலும் , மேலும் சில வசதிகள் மாற்றங்கள் செய்து விற்பனை செய்தாலும் அதைப் பராமரிக்கும் விதம் சற்றே கடினமானது என்ற காரணத்தால் ஜீன்ஸ்    லுங்கி , பேன்ட் போன்ற உடைகளை விடவும் மக்களால்  அணியப்படுகிறது என்றே தோன்றுகிறது  .

 ம்ம்ம் .... பார்ப்போம் ஜீன்ஸுக்கு  ஒரு வாழ்வு வந்தால்   வேஷ்டிக்கும்   ஒரு வாழ்வு வராதா என்ன?


Monday, 12 October 2015

மாறியது நெஞ்சம் !


நானும் ஒரு 15 வருடங்களாக ஜப்பானிய மொழி என்றில்லாமல் எனக்குத் தெரிந்த மற்றும் தெரியாத ஆனால்  டிமாண்டு உள்ள பாடங்களை மாணாக்கர்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கிறேன் .
 எப்பவுமே மாணவர்களின் மன நிலையைக் கூர்ந்து கவனித்துத்தான் நான் பாடம் நடத்துவேன் ..

அதில் நான் உணர்ந்த ,தெரிந்து கொண்ட ஒரு முக்கியமான விஷயம் ஒன்று
 உண்டு  .

சமீப காலங்களில் மாணவர்களின் நடத்தையில் அதாவது பாடம் சொல்லிகொடுக்காமல் ஒரு சிறிய (பிரேக் )இடைவெளி விடும் நேரங்களில் மாணவர்கள் என்ன பண்ணுவார்கள் என்பதில் ஒரு பெரிய மாற்றமே
நிகழ்ந்துள்ளது .

பழைய காலங்களில் சொல்லப்போனால் நான் படித்த காலங்களிலும்  மற்றும் ஒரு 15 வருடம் முன்பு கூட இது போன்ற பிரேக் விடும் நேரங்களில்
 "அப்பாடா !"என்று பக்கத்தில் உள்ளவர்களுடன் பேச ஆரம்பித்து விடுவோம் .வகுப்பே ஒரு சந்தைக்கடை அளவுக்கு கூச்சல் போடும் .

ஆனால் இப்போது ,அப்படி இல்லை .பசங்கள் ரொம்பவே சமத்து .

அடுத்தவனிடம் நொய் நொய் என்று பேசி வம்பு பண்ணுவதில்லை.
முன்பெல்லாம் நான் தயவு செய்து கத்தாதீர்கள் , காது செவிடாகும் போல உள்ளது என்றெல்லாம் நான் அத்தனை பேர் சத்ததிற்கும் மேலே ஹை டெசிபலில் காட்டுக்கத்தல் கத்திய காலமும் உண்டு .
கிளாஸ் நடுவில் கூட பழைய காலம் மாதிரி அவ்வளவாகப் பேசிப் பொழுதைக் கழிப்பதில்லை .
அப்படியானால் மாணவர்கள் என்ன பண்ணுகிறார்கள் என்கிறீர்களா?
வேறே என்ன ?

பிரேக்கிற்காகவே காத்துக்கிட்டிருந்த மாதிரி ....

 ஹஹ்ஹ...ஹா ....டச் ஸ்கிரீன் உள்ள போனில் விரலால் தடவித் தடவி ...........


Saturday, 10 October 2015

வலைப்பதிவர் திருவிழா

புதுக்கோட்டை வலைப்பதிவர் திருவிழா 2015 சிறக்க வாழ்த்துவோம்
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thursday, 1 October 2015

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -
தனி ஒரு மனிதனுக்குச் சுத்தமான காற்று இல்லையேல் ஜகத்தினை   நாம் அழிக்க வேண்டாம் அது தானே அழிந்து விடும் .

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு என்பது  ஒரு ஒய் திஸ் கொலவெறி ரேஞ்சுக்கு    சமீபத்திய நாட்களில் எல்லார் வாயிலும் பூந்து புறப்பட்டு வரும் பேச்சு .இது பற்றி எழுதித் தீர்த்த தாள்கள் பலப்பல .உலகத்தை குறை சொல்லன்னும் என்றால் நாமெல்லாம் தொண்டை கிழியப் பேசுவோமே  தவிர செயலில் என்றும் இறங்குவதில்லை . அதுதான் பெரிய ஆபத்தே .
சுற்றுச் சூழல் மாசைக்  குறைக்க அங்கொன்றும் இங்கொன்றுமாக நாம் இதுவரை  சில மாற்றங்கள் மற்றும்  ஏற்பாடுகள் செய்திருந்தாலும் அவைகள் எல்லாம் 1%கூட சுற்றுச் சூழலில் கணிசமான மாற்றத்தைக் கொண்டுவரவில்லை .
நம்பாவிட்டால் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை  -   குப்பை கொட்டும் இடத்தைச் சென்று பார்த்து வந்தால் புரியும் .

விளை நிலத்தை நாம் இரசாயன உரங்கள் போட்டு குட்டிச் சுவராக்கியத்தின் விளைவு  இன்று பல வித வியாதிகளும் நம் உடம்பில் வந்து வாடகை இன்றிக் குடி புகுந்துவிட்டன . .அடுத்த தெருவுக்குப் போகணும் என்றால் கூட வாகனம் தான் .1981 ல் கோவையில் நான் இருந்த போது சனிக்கிழமை இரவு என்றால் மக்கள் இரண்டாம் காட்சி  பார்த்து விட்டு பார்த்த சினிமாவினைப் பற்றி  விமரிசனம் பண்ணிக்கொண்டு  நடந்து தான்  வீட்டுக்கு வருவார்கள்  , அது எவ்வளவு தூரமானாலும்  சரி.
 இப்பொழுது யாருமே நடப்பதில்லை , சர்க்கரை வியாதி இரத்தக் கொதிப்பு போன்ற  வாழ்கை முறை சம்பந்தப்பட்ட வியாதிகளின் தலை நகரமாக இந்தியா ஆனது தான் கண்ட பலன் .நாம் சுவாசிக்கும் காற்று உண்ணும் உணவு வசிக்கும் இடம் எல்லாவற்றையும் ஓவர் டயம் வேலை பார்த்து  மாசு படுத்தி விட்டோம்.
குடும்பக் கட்டுப்பாட்டு விளம்பரம் காதில் நாராசமாக ஒலிக்கிறது என்று ஒருகாலத்தில்  (60 மற்றும் 70 களில்)கருதப்பட்டாலும் இப்போது யாரும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை.இது ஒரு வரவேற்க்கத்தக்க மாற்றமே .

அதுபோலவே இப்போதும் குவிந்து கிடக்கும் குப்பை மலைகளின் புகைப்படம் மற்றும் அதனால் விளையும் தீங்குகள் பற்றியும் தொலைக்காட்சி  வானொலி
  பேஸ் புக் மற்றும் செய்தித் தாள் போன்ற ஊடகங்கள் வாயிலாகவும் மக்களுக்குக் காண்பித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தலாம் .

தொழிற்சாலைகள் வெளிவிடும்  சல்பர் டை-ஆக்சைடு     , நைட்ரஜன்    ஆக்சைடு,அம்மோனியா  மற்றும் , வோலடைல் ஆர்கானிக்  காம்பௌண்ட்கள் போன்றவற்றை நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருக்க விதிமுறைகளை கட்டாயம் தொழிற்சாலைகள்  பின்பற்றுமாறு சட்டம் செய்ய வேண்டும் .


வாகனங்களின் எண்ணிக்கை கூடக் கூட அவை வெளி விடும் அசுத்தக் காற்றும் அதிகமாகின்றது எனவே பொது வாகனங்கள் அதாவது public Transport வாகனங்களின் எண்ணிக்கையை அதிகம் செய்தால் தனி மனிதர்கள் உபயோகிக்கும் வாகனங்களும் குறையும்  இது சுற்றுச் சூழலில் ஒரு மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வரும் .
மக்கள் சைக்கிளை உபயோகப்படுத்துவதையும் நடந்து போவதற்கான  வசதிகளையும் கொண்ட  ரோடுகளை நிறைய உண்டாக்கினால்  வரும் நன்மைகள் பலப்பல..
ஒரு 40 வருடம் முன்பு சைக்கிளில் வரும் மாணவர்கள் மிகக் குறைவு .ஸ்கூட்டர் வேன், இவைகள் அறவே கிடையாது. பள்ளியோ கல்லூரியோ நடந்து வரும் மாணவர்களும் ஆசிரியர்களும் தான் அந்தக்  காலத்தில்  நடந்து தான்  வருவார்கள் .

ஒன்று நாம் பிளாஸ்டிக் இல்லாத வாழ்வை வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது  எறியும் பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சிசெய்ய சில மேலை நாடுகளை அப்படியே பின் பற்ற வேண்டும் .
உதாரணமாக சீனாவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொடுத்தால் சப் வே டிக்கட்கள் கொடுக்கிறார்கள் .இதனால் மக்களும்பயனடைகிறார்கள் , பிளாஸ்டிக் பாட்டில்கள் தனியே சேகரிப்பதும் எளிதாக்கப் படுகிறது .பிளாஸ்டிக் பாட்டில்கள் மானாவாரியாக வெளியில் தூக்கி எறிவதும் தடுக்கப் படுகிறது.
. மேலும் விபரங்களுக்கு http://www.beijingrelocation.com/blog/in-beijing-you-can-buy-a-subway-ticket-with-empty-plastic-bottles/என்ற இணைப்பைச் சொடுக்கவும் .
 அதே போல் கோக கோலா பாட்டில்களைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சாமான்கள் ஏற்றிச்செல்ல உதவும்  மிதவைப்படகு கூட யு டியுபில் பார்த்தேன். எந்த நாடு  எந்த மொழி என்று யாமறியேன் பராபரமே  என்றாலும் . https://www.youtube.com/watch?v=mMGDudFMIqA  என்ற இணைப்பைச் சொடுக்கினால் எப்படிப் பண்ணலாம் என்ற விஷயம் புரிகிறது.
மீகாங்கில் கூட பிளாஸ்டிக் பாட்டில் களை உபயோகித்துச் செய்த படகின் வீடியோவினை https://www.youtube.com/watch?v=-WdqCRDCsU0
என்ற இணைப்பில் காணலாம்

நாமும் வீடுகளில் பாட்டில்களைத் தூக்கி எறியாமல் அவற்றை சிறிய சிறிய செடிகளை வைக்க உபயோகப் படுத்தி  சுவர்களில் தோட்டம் அமைக்கலாம். மேலதிக    விபரங்களுக்கு   என்கிற  இணைப்பைப்  பார்க்கவும் . 

காய்கறிகள் வாங்குவோர்களும்  காய்கறி களைத் தனித்   தனியே   வைக்கத்  துணியினால் ஆன  சிறிய சிறிய பைகளை  மட்டுமே உபயோகிக்க வேண்டும்  என்று சட்டம் கொண்டு வர வேண்டும் . கடைகளும் எப்படி பிளாஸ்டிக் பைகளுக்கு என்று தனியே காசு வாங்குகிறார்களோ அதுபோல துணிப்பைகளுக்கும் காசு வாங்க வேண்டும் .  .  பிளாஸ்டிக் பை கிடைக்காது என்ற நிலை வந்தால் தானாகவே துணிப்பைகளை மக்கள் உபயோகிக்க ஆரம்பிப்பார்கள் . ஆரம்பத்தில் ஹெல்மெட்டுக்கு வரும் விமரிசனங்கள்  போல  சொல்லப்போனால்  வழக்கு பதியப்பட்டு கோர்ட்டுக்குப்  போகும் நிலை கூட வரும்
ஆனாலும் தளராது அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனர்களும்  மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும்.

அதேபோல  குழந்தைகளுக்கும் பெரியவர்களும் சாப்பாட்டு டப்பா மற்றும் வீட்டில் மளிகைப் பொருட்கள் வைக்கும் டப்பா  போன்ற வீட்டு    உபயோகப் பொருட்களில் பிளாஸ்டிக்கை   முடிந்த வரை  தவிர்த்து எவர்சில்வரில் வைத்துக் கொள்வதை ஊடகங்கள்  மூலம் மக்களிடையே பரப்ப வேண்டும் .

 சத்தமில்லாத உலகம்  சண்டையில்லா நாட்கள் போல   இரசாயன உரம் இல்லாத பயிர்கள் ,இரசாயனங்கள் கலவாத சுத்தீகரிக்கும் பொருட்கள் (  Home Cleaning products   )போன்றவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்
 முடிந்த வரை ஒவ்வொரு தனி மனிதனும் , விழிப்புணர்வு முகாம்களும் ஊடகங்களும் ஒன்றுபட்டுச் செய்தால்  நிச்சயம் நாம் சுற்றுச் சூழல் மாசைக் கட்டுப்படுத்தலாம் .
எல்லோரும் சேர்ந்து கூவினால் பொழுது விடிய சாத்தியக்  கூறு  நிச்சயம் உள்ளது.

உறுதி மொழி :
(1)இந்தப் படைப்பு  எனது சொந்தப் படைப்பே
(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும்மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது
(3) “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்று உறுதி கூறுகிறேன் .


45 Ideas of How To Recycle Plastic Bottles    DesignRulz.com 45 Ideas of How To Recycle Plastic Bottles    DesignRulz.com