Friday, 6 December 2013

டெல்லி அனுபவம் -2

முதுகு வலி காரணமாக  நெட் பக்கம்,பதிவு பக்கம் எல்லாவற்றுக்கும்  கொஞ்சம் வாலண்டரி ஒய்வு .
 சும்மா நம்மளும் கீரோம்ன்னு  (இருக்கோம் ) காமிக்கறதுக்காக  ஒரு  சொதப்பல் பதிவு  போட்டேன்.
சரி , விஷயத்துக்கு வருவோம் .
நான்  டெல்லி போன  புதிதில்  அடிக்கடி  எங்க  அம்மா  மொழி  தெரியாததால் மளிகைக் கடையில்
ஏதெதோ  கலாட்டா  செய்து விட்டு வருவார்கள் .
அவையெல்லாம் சும்மா ஜுஜ்ஜுபி !
மெயின் அயிட்டம் ஒன்னு சூப்பர்!
டெல்லி   போய் ஒரு மூணு நாள் தான் ஆகியிருக்கும்.
வீட்டுக்குப் பக்கத்தில் ஷாப்பிங் காம்பிலெக்ஸ் !
ஒரு  2 நிமிட நடைதான் .
எங்க அம்மாவை அப்பப்போ தெகிரியமா இருக்கணும் .
மொழி தெரியலேன்னு பயம் கூடாது .
கொலம்பஸ் என்ன மொழி தெரிஞ்சா , வழி தெரிஞ்சா  அமெரிக்காவை கண்டு பிடிச்சார் !
கடைக்கெல்லாம்  போங்க ! என்றெல்லாம் உசுப்பிவுட்டிருந்தேன் .
எங்க அம்மாவுக்கு மனப்பாடம் பண்ண பிடிக்கும்
அதோடு  நல்லாவும் மனனம் செய்ய வரும்
எனவே என்ன விலை எங்கே போன்ற முக்கிய வார்த்தைகள் மற்றும் நம்பரெல்லாம்  12வது  படிக்கிற பையன் ரேஞ்சுக்கு  பொட்டை  நெட்டுரு  !

எங்க  அம்மாவுக்கு  தன்  பொண்ணு  என்கரேஜ்  பண்ணுவது பற்றி  ஏகப்  பெருமை !
வீட்டு அட்ரஸ் மட்டும்  ஹிந்தியிலும்  இங்கிலீஷிலும்  எழுதிக் கொடுத்திருந்தேன்
நான்  ஆபீஸ்  போனதும் மளிகைக் கடை விசிட் !
 மளிகை சாமான்  ஒவ்வொண்ணா    கையை  வெச்சு காமிச்சு வெலை  வெவரம் எல்லாம்  கடைக்காரன் கிட்டே கேட்டு ஒரு  நோட்டிலே எழுதிகிட்டு  எது எல்லாம்  தஞ்சாவூர்  விலையோட ஒத்துப்  போச்சோ அது எல்லாம்  வாங்கிகிட்டு  பிறகு கடைசியா  கோதுமை மாவு விலை விசாரிச்சப்போ
அங்கே ஒரு தகராறு!
எங்க அம்மாவுக்கு  ஹிந்தி பச்சாஸ்  (50)க்கும்  பச்சிஸ்  (25))க்கும் ஒரு
கன் பியுஷன்   அப்படின்னாக்க  கடைக்காரனுக்கு   இங்கிலீஷ்  15  மற்றும் 50 க்கும் ஒரு கன் பியுஷன்  .
எங்க அம்மா எடையைப் பத்தி 15  கிலோ   ன்னு சொல்ல அவன் விலை பத்தி பேச ரெண்டு பேருக்கும்  இடையிலான மொழிப் பிரச்னையாலே  கோதுமை மாவு விற்பனை  டீலிங்  படியலே!
எங்க அம்மாவுக்கு அவன் ஏமாத்துறான்னு நெனப்பு !
இல்லப்பா  “எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரிஎன் பொண்ணு .
அதைக் கூட்டிகிட்டு சாயந்திரமா வரேன்னு சொல்லிட்டு
மத்தியானம் கூட்டம் இல்லாததாலே வேறே என்னனமோ   எங்கம்மா இங்கிலீஷில் பேச அவன் ஹிந்தியில் பேச , ஏதோ  பேசி விட்டு 
வீட்டுக்கு வந்திட்டாங்களாம் .

சாயந்திரம்  நான் வந்ததும்  ரொம்ப பெருமை  பொங்க  விவரமெல்லாம் சொல்லிட்டு கோதுமை ஒண்ணுதான்  என்னை  ஏமாத்தப்பாத்தான்,
 நான் ஏமாறுகிற ஆளா என்ன?
 நீ வந்தப்புறம் வாங்குறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் .
கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வா நாம போகலாம்ன்னு சொன்னங்க .

பிறகு ஒரு ஏழரை மணிக்கு ரெண்டு பேரும் போனோம் .

கடையில் சகோதரர்களுக்குள் எதோ சீரியஸாகப் பேசிக்கொண்டிருக்க , மத்தியானம் எங்க  அம்மாகிட்டே பேசிகிட்டு இருந்த ஆள்  கடையின் வெளிப்பக்கம்   (அவனும்  அந்தக்க்கடையின் சகோதரர்களுள்  ஒருவன் ) இருந்தான் . என்னைப்  பார்த்ததும் நான்   ஹிந்தியில் நல்லா  பேசறதைப்  பாத்து சந்தோஷப்பட்டு  தான் .பி இலிருந்து  வந்த கதையை ச் சொன்னான் .
பிறகு  எங்க அம்மா  வந்தது  பற்றி  எல்லாம் சொல்லிவிட்டு  தனக்கு  இங்கிலீஷ் சுத்தம் என்று  வருத்தபடாத வாலிபனாக  சிரித்துக்கொண்டே சொன்னான் .
கடைசியாக  கோதுமை மாவு  மூட்டை கள் 5 கிலோ , 10 கிலோ , 15 கிலோ என்று அடுக்கி வைத்திருந்தார்கள் .
விலை என்ன என்று கேட்டோம் .
என்ன நினைத்தானோ தெரியவில்லை ஏதோ பேச்சு வாக்கிலே  15 கிலொ மூட்டை ரூ  15, என்றான் .
இவன் வெளியே இருந்து பந்திரா  (15)ன்னு  ஹிந்தியில்  கத்த
சரி  என்று  நாங்களும் 15 ரூபாயை  கடை உள்ளே  கொடுத்துவிட்டு 
தூக்க  முடியாமால் தூக்கினோம் .
கடை உள்ள  இருந்தவன்  நாங்க   எந்த மூட்டையைத்  தூக்குகிறோம்ன்னு கவனிக்கலை.
அவனுகளுக்குள்ளே வேறே எதோ கார சாரமான பேச்சு.
15 கிலோவை ரெண்டு பேராலேயும் தூக்க  கொஞ்சம் சிரமமாகத் தான் இருந்தது.
யாராவது பாத்தா என்ன நினைப்பாங்கோ
என்ன நெனச்சா என்ன
 இங்கே என்ன சொந்தமா பந்தமா ன்னு சொல்லிக்கிட்டு  இருபது தப்படி தானே வீட்டுக்கு எடுத்திட்டு வந்திட்டோம்..
எங்க அம்மாமத்தியானம் என்னை 50 ரூபாய் ன்னு சொல்லி ஏமாத்தப் பாத்தான் . வெவரம் தெரிஞ்ச நீ வந்தப்புறம் பாரேன் .”ன்னு எனக்கு ஒரே புகழ் மாலை.
என் ஹிந்தி புலமை (?) பற்றி ஏகத்துக்கும் புகழ்ந்தார்கள்
அடுத்த   நாள் பாங்கில் போய் வேலை செய்யணுமின்னு எங்க அம்மா எனக்கு கையில்   வருமுன்  காக்கும்  விதமாக  அமிர்தாஞ்சனம் எல்லாம்   காப்பு  இட்டு (தடவிவிட்டு )ரொம்பவே சவரட்சணை !
15 ரூபாய் க்கு 15 கிலோ கோதுமை மாவுன்னாக்க  ரொம்பவே சீப்பு .
நம்மூரிலே அரவைகூலி  மட்டுமே 15 ரூபாய் ஆகும்ன்னு ஒரே  சந்தோஷம்
எங்க அம்மாவுக்கு.
எங்க அம்மா அப்பா இருவரின் ஊர் திருவையாறு  பக்கம் .
எப்ப பாத்தாலும் ஊர் பெருமையைப் பத்தி யும் காவிரி ஆற்றுப் பாசனத்தில்  மூணு  போகம் வெளையற பெருமை  பத்தியும்   மூச்சு கூட விடாமல் பேசுற எங்க அம்மா கம்பிலீட்டா பிளேட்டை திருப்பிப் போட்டு அன்னைக்கு ராத்திரி மற்றும் பின் வந்த பல நாட்களிலும் டெல்லி மாதி வேறே ஊர் வரவே வராது, ,ன்னு டெல்லியின் பெருமைதான்.
15 ரூபாய் கோதுமை மாவு பிறந்து வளர்ந்த மண்ணையே மறக்கச் செய்த  கொடுமை !
கோதுமை  மாவு  வாங்கிட்டு வந்த  நாளிலேருந்து   தினமும்  சப்பாத்திதான் .
எங்க அம்மா டயாபடீஸ்  நோயாளி என்பதால் கோதுமை மாவிலேயே என்னென்னவோ விதவிதமாக செய்து சாப்பிட்டார்கள் .
பத்தாததுக்கு  பால் வேறே சீப்பு !
கறிகாய் எல்லாம் 1982ல் ஒரு கிலோ முக்கால் ரூபாய் ,
இல்லாட்டி ஒண்ணேகால் கிலோ ஒரு ரூபாய் .
 பாலும்  கோதுமை மாவும் நவம்பர் மாதக்குளிரும் இயற்கையிலேயே நல்ல சிகப்பான எங்க அம்மா க்கு    உடல்  இன்னும் சிகப்பாக ஆகி  கன்னம் எல்லாம் ரோஸாக ஆனதும் சந்தோஷம்  தாங்கலெ எங்கம்மாக்கு !
முடிஞ்சா இங்கியே  வீடு வாங்கி செட்டில் ஆயிடலாம் .
டெல்லி யிலேயே எனக்கு மாப்பிளை கிடைக்காதா  ங்கிற ஆசை கூட எங்கம்மாக்கு வந்திடுச்சு!
நாரணா நின்னை நினைக்காத நாளே இல்லை என்பது போல்  கோதுமை மாவு பற்றி அம்மா பேசாத நாளே இல்லை எனலாம் .
கோதுமை மாவு தீந்ததும் அடுத்த பதினஞ்சு கிலோ வாங்க கடைக்குப் போனா அவன் என்னடான்னக்க 50 ரூபாய் கொடுங்க என்கிறான் .
இல்லப்பா போன மாசம்தான்  15 ரூபாக்கு வாங்கினோம்ன்னு  சொன்னோம்.
 இளக்காரமா   சிரிச்சுகிட்டே “யாரும்மா சொன்னா ?”
15 ரூபாக்கு 15 கிலொ கோதுமை மாவு எந்த கேனயன் தருவான்னு கேட்டான் .
முண்டம்  நீதான்  கொடுத்தேன்னு  அவன்கிட்டேசொன்னா   பழைய   பாக்கிய  கேட்டுறப்  போரான்னுட்டு  வாய மூடிட்டு  5 கிலோ மூட்டையை தூக்கிட்டு  சோகமா வீடு வந்து சேந்தோம்.


Sunday, 1 December 2013

கொட்டிக்கிடக்குது காமெடி ! அள்ளுங்க! அள்ளுங்க!

கடந்த இரண்டு வாரங்களாக வேலைப் பளு..
 ( எல்லோரும் சொல்லிக்கிட்டிருக்கிற மாதிரி நம்மளும் சொன்னாதானே ஒரு கெத்து ).
என்னை நிறையப் பேர் கேட்கும் கேள்வி
உனக்கு மட்டும்  எப்படி காமெடி இவ்வளவு நடக்குது என்று .

ஐய்யயோ ! எனக்கும் ஆயிரம் சோக நிகழ்வுகள் நடக்குது .
ஆனா அதை நீங்கள் எல்லாம் அழுதுகிட்டே விவரமா சொல்றீங்க
 .நான் அதை சிரிச்சுகிட்டே சொல்றேன் .
அங்க தான் நான் ...............
.
நம்மை சுத்தி எல்லோருமே காமெடி  காமெடிமட்டும்  தான் பண்றாங்க .
(உருப்படியா ஒன்னும் செஞ்சு கிழிக்கிறதில்லே!.

விவாதங்கள்
 
.ஏன்னா அப்படி ஏதாவது உருப்படியா  செய்திருந்தால்  இந்தியா எங்கியொல்ல போயிருக்கும் )
நாம தான் அந்த காமெடியை ரசிக்கறது இல்லே !

என் மகன் ஞாயிற்றுக்கிழமை  (நேத்து ) காலை      மெரீனா கடற்கரைக்கு நண்பர்களுடன் வாக்கிங்  போனபோது பிச்சைக்காரர்கள்  பிச்சை கேட்டிருக்கிறார்கள் .
ஒரு ரெண்டு மூணு பேர் வரைக்கும்  "ம்ஹூம் .. கிடையாது என்று சொல்லிவிட்டான்.
பிறகு அவனுக்கு போர் அடித்து நாலாவது பிச்சைக்காரர் பிச்சை  கேட்ட போது பதிலே சொல்லாமல்  போயிருக்கிறான்.
அவர் கோபம் கொண்டு
 "அவனவன்  ஏ.சி இருக்கிற  ஏ.டி எம் லே பூந்து  காசை அடிச்சுப் புடுங்கறான்.
நம்ப பீச்சோரமா உக்காந்து மழை  வருமோ வருமோன்னு பயந்துகிட்டே பவ்யமா சாமீ பிச்சை போடுன்னு பிச்சை கேட்டா   முடியும் முடியாதுன்னு சொல்ல  கூட இந்த வாலிபப் பசங்களுக்கு வாய் வலிக்கிதாக்கும் .கலிகாலம்டா சாமி ."
பாத்தீங்களா? எப்படி வெவெரமா காமெடி பண்றாங்கோ !
 (கடுப்பேத்தறாங்க)?

Monday, 18 November 2013

சந்தேகங்கள்-1

   
நாளை முதல் ஒரு மாணவருக்குப் பாடம் கற்பிக்கும் வேலை  ( உலகளாவிய ஜப்பானிய மொழி பரீட்சை 2.12.2013 அன்று இருப்பதால் ) மறுபடியும் இரண்டு வாரத்திற்கு திங்கள் முதல் வெள்ளி வரை  பதிவிற்கு விடுமுறை.
எனவே இப்ப  ஒரு சின்ன பதிவு.
எனக்கு  இந்த சமுதாயத்தில் நடக்கும் பல நிகழ்வுகளைப் பார்க்கும் போது பல சந்தேகங்கள் வருகின்றன .
யாராவது முடிந்தால் ஏன் இப்படி என்று பதில் சொல்லுங்கள் .
தகுந்த சன்மானமாக சனி கிரகத்துக்கான போக வர டிக்கெட்டு
தரலாமா என ஆய்வில் உள்ளது.
சனி நம்மகிட்டே வரதுக்கு முன்னாடி  நம்ப சனிகிட்டே போய்ட்டா  சனி வேறே யார்கிட்டேயாவது போயிடும் என்பது ஐதீகம் (  நம்ப  என்ன சொன்னாலும் மக்கள் நம்புவாங்க  என்ற  அசைக்க முடியாத நம்பிக்கைதான் )
சரி .சந்தேகத்துக்கு வருவோம்.

அங்கங்கே பேப்பரில் காய் கறி வெட்ட ,நொடியில் அரைக்க .ஆட்டோமேடிக்கா   சமைக்க என்று பல வித இயந்திரங்களும் சாதனங்களும் விற்கிறார்கள் .
தெருவிலே கடையிலே எல்லாம் அதை விளக்கமாக செய்து வேறு காண்பிக்கிறார்கள். மக்களும் குறிப்பாக ஆண்களும்  நிறையப்பேர்  வாங்கிக் கொண்டு போகிறார்கள்
தொலைக்காட்சி விளம்பரத்திலும் அதை உபயோகிக்கும் பெண்கள் முகத்தில்
லவலேசமும் சமையல் செய்த அயர்ச்சி தெரிவதில்லை .
நாம் சமைக்கும் போது  மட்டும்எரிச்சல் வருது .ஏன்?
அந்த அம்மா  சிரிச்சிட்டே  சமையல்  நொடியில் ஆச்சுங்குது.
குழந்தைங்களைப்  பார்த்து   அன்பா ஒரு லுக் வுடுது .
ஆனா நிஜ வாழ்க்கையில் குழந்தைங்க  திட்டு வாங்குதே  ஏன்?
சரி பெண்களை விடுங்க பாவம்  குயிக் சமையல் சாதனங்களை  வாங்கிப் போன ஆண்கள் அதை என்ன பண்ணினார்கள் ?

அதை விடக் காமெடி என்னன்னாக்க இத்தனை சமையல்  வசதி இருந்தாலும்  எந்த ஓட்டல் போனாலும்  உக்காரவே இடம் கிடைக்க மாட்டேங்குது ..ஏன்?



Sunday, 17 November 2013

அப்பாவும் முப்பத்திரண்டு சோற்று உருண்டைகளும்

சின்ன வயதில் எங்க அப்பா வைத்ததுதான் வீட்டில் சட்டம் .
சாப்பாட்டில் இருந்து படிப்பு வரை .
அதை யாருமே எதிர்த்துக் கேள்வி கேட்கமுடியாது.
நான் மட்டும் டபாய்க்கும் வழி முறைகள் சில தெரிந்து வைத்ததினால்
சில சமயங்களில் எஸ்கேப் !

மற்றும் கடைசிக் குழந்தை என்பதால் செல்லம் வேறு. 

வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்காந்து  சாப்பிடணும்.
அவரோட உட்காந்து சாப்பிடுவதற்குள் போதும் போதும் ன்னு ஆயிடும் .
கையைக் கீழே ஊணக்கூடாது .
சாப்பிடும் போது பேசக்கூடாது.
அதுவும் 32 உருண்டை கட்டாயம்அவங்க அவங்க கை சைசுக்கு  சாப்பிடணும் இல்லாட்டி செத்தப்புறம் சாமி சாப்பிடாமல் விட்ட பாக்கி உருண்டைகளை கணக்கு போட்டு அதற்கு சரிசமமான சாணி உருண்டைகளை சாப்பிடச் சொல்வாராம் .டெய்லி மிச்சம் வெச்ச உருண்டைகளை கியுமுலேட்டிவ் சிஸ்டமில் கணக்கு  வெச்சு தீட்டி டுவார் என்றெல்லாம் சொல்லி கொடுமைப்படுத்திய காலம் .
திட்டவட்டமாக 32 தான் என்கிற  நம்பரை  எங்கே இருந்து புடிச்சார்
 உலகத்தில் இந்த மாதிரி சாப்பாடு  மிச்சம் வக்கிரவங்களுக்காக சாணி ஸ்டாக்கு சாமி எப்படி  மெயிண்டயின் பண்ணும்   என்கிற கேள்வியெல்லாம் கேட்க நினைத்தேன் அவரிடம் கேட்க முடியாது.அம்மாகிட்டே கேட்டேன் .
வாயை மூடிட்டு சாப்பிடு என்கிற தப்பான லாஜிக்கோட மிரட்ட ... நான் கப் சிப்
அப்பொழுது அவர் பாவம் எனக்கு ஒரு மகன் பிறந்து இனிமே எந்தக் குழந்தையையுமே 32 உருண்டை சாப்பிடச் சொல்லமுடியாத படி ஒரு
செம ஆப்பு வெப்பான் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

 இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியாமல் நான் என் அம்மாவிடம் என் அப்பா வருவதற்கு முன்பே அம்மா பசிக்குதே தாயே பசிக்குதே  என்று ஒரு பிச்சைக்கார டயலாக் அடித்து அப்பா  வருவதற்கு முன்னாடியே சாப்பிட்டு முடித்து அவரிடம் இருந்து தப்பித்தேன் .
பிறகு எட்டு ஒன்பது  வயதானதும்அம்மா நீங்களே பாவம் எல்லா வேலையும் செய்யறீங்க  நானே போட்டு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று பொறுப்புள்ள பிள்ளை மாதிரி வசனம் பேசி சுதந்திரம் பெற்றேன் .
அந்த வயசிலேயே அந்தக் காலத்திலேயே எவ்வளவு டிப்லோமேடிக்காக
அணுகியிருக்கிறேன்  பாருங்கள் .

 பிறகு  எனக்கும் மகன் பிறந்தான் .

அவனுக்கு சாப்பாட்டு கொடுப்பதற்கும் போதும் போதும் என்று ஆகிவிடும்.
நான் ஹைதராபாத்  போனால்  இப்பக்கூட  பக்கத்து வீட்டினர்  என் மகனிடம் சாப்பிடுவதற்காக அவன் படுத்திய பாட்டைச்  சொல்வார்கள் .

பெரியவனுக்கு ரெண்டேகால் வயசு இருக்கும் .
சின்னவன் ஒரு நான்கு மாதக் குழந்தை .
நானும் ஆபீசு போக ஆரம்பித்து விட்டேன்.
எங்க அப்பா என் பணிப்பெண் எல்லாருமே எனக்கு குழந்தை வளர்க்கத் தெரியவில்லை
நீ ஆபீசு போனப்புறம் நாங்க எப்படி அவனை சாப்பிட வெச்சு  நல்லா  குண்டாக ஆக்கிடறோம்  பாரேன் ன்னு சவால் .

ஒரு முக்கியமான விஷயம் இந்த இடத்தில்
மத்தியான தூக்கம் இல்லைன்னாக்க எங்க அப்பா வுக்கு மூட் அவுட் ஆயிடும் .
என்னுடன் அவர் வாழ்ந்த 54 வருடங்களில் அவர்  மத்தியான  தூக்கம் தூங்காத நாட்கள் என்றால் ஒரு பத்து நாள் கூட இருக்காது .

கல்யாண வீடோ செத்த வீடோ எதுவானாலும் உட்கார்ந்த நிலையிலேயே அரை மணி தூங்கி விடும் அசகாய சூரர் 

ஒரு ரெண்டு மூணு நாள் எல்லாம் நல்லத்தான் போயிக்கிட்டு இருந்திச்சு .
ஒரு நாள் என் மகனிடமும் இந்த 32 உருண்டை டயலாக்  மற்றும் அதன் விவரங்களை சொல்லியிருக்கார் .
அவருக்கு தெரியலை அன்றைய அவரின் ராசிக்கட்டத்தின்  12 கட்டத்திலிருந்தும் குரு புதன் போன்ற சுப கிரகங்கள்  எல்லாம் காலி பண்ணி போக சனியே 12 கட்டத்திலும் பூந்து விளையாடுகிறார் என்று.

என் மகன் 32 கணக்கு காமிக்க பத்து அப்புறம் இருபது  ஸ்டிரைட்டா முப்பது முப்பத்தி ஒண்ணு முப்பத்தி ரெண்டு என்றெல்லாம்  ஷார்ட் கட் செய்தும் விடவில்லை அப்பாவும் பணிப்பெண்ணும் .

சாப்பிடுடா  சாமி சாணி உருண்டை குடுப்பார் என  தொடர் மிரட்டல் 

பையன் மசியலை 

ராசிக் கட்டத்திலே இருந்த சனி எங்க அப்பா நாக்குக்கு
ஷிஃப்ட்   ஆகி
சாப்பிடுடா கண்ணா  அப்புறம் உனக்கு சாக்கிலேட் தருகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள் .
நான் எட்டடி பாஞ்சா எம்புள்ள 16 இல்ல இல்ல 32 அடி பாய்வான் என்கிற  வெவரம் எங்க அப்பாக்கு கிடையாது.
அவனும் சாப்பிட்டு விட்டு  நல்ல புள்ளயா  (என் புள்ள வேறே எப்படி இருக்குங்கிறீங்களா  அதுவும் சரிதான் )கான்ட்ராக்ட் போட்டபடி சாக்கிலேட் கேட்டு இருக்கிறான் .
ஒன்று மட்டும் குடுத்து இருக்கிறார்கள் .
பையன் 32 சாக்கிலேட் குடு இல்லாட்டி சாமி  32 சாணி உருண்டை குடுத்திடும் என்று சொல்லியிருக்கிறான் .
எங்க அப்பா சாப்பாடு  வேறேடா  சாக்கிலேட் வேறே டா
 சாக்கிலேட் சாணி உருண்டை கணக்கில் சேராது என்று சொல்லியிருக்கிறார் .
பையன் விடவில்லை 
சாப்பாட்டுக்கு ஒரு லாஜிக் சாக்கிலேட்டுக்கு ஒரு லாஜிக்கெல்லாம் சாமி வெச்சுக்காது. என்கிற அர்த்தத்தில்
அம்மாதான் சாமி அந்த மாதிரி வேறுபாடெல்லாம் பாக்காது ன்னு சொல்லியிருக்கங்க . ன்னு லா பாயிண்டு எடுத்து வுட்டுருக்கான்

எப்படி என் வார்த்தை யை தெய்வ வாக்காக மேற்கோள்  காட்டியிருக்கான் பாருங்க
அதுவுமில்லாம  சாணி உருண்டை  நீங்க சாப்பிடனும்ன்னாலும் பரவாயில்ல நானில்ல சாப்பிடணும் என்று ஒரே அழுகை ,
அடம் .
இவன் அழுததில் இரண்டாவது குழந்தையும் அழ யாருமே தூங்க முடியவில்லை .
கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரப் போராட்டம் .
பக்கத்து வீட்டில் உள்ளவர் முயற்சி செய்தும் விடாமல் அதே டயலாக்  அதே அழுகை
அப்புறம் மத்தியானம்  3 மணிக்கு   சாமிக்கு விளக்கு ஏற்றி வைத்து ஊதுபத்தி காமிச்சு   32 சாக்கிலேட் சாப்பிடாததற்க்கான  சரிசமமான    32 சாணி உருண்டை யை எங்க அப்பாவுக்கும் அந்த பணிப்பெண்ணுக்கும்  ஆன சாணி உருண்டை அக்கவுண்டில்
 சேர்க்கும்படியாக வேண்டிக்கொண்டு
சாமி கே சொல்லிடுச்சுடா ன்னு சமாதானம் பண்ணி  இருக்காங்க .
சைக்கிள் கேப்பில என் பையன் என்ன அறிவு பாருங்க
அப்படியே சாமிகிட்டே சாக்லேட் மட்டுமில்ல சாதம் சப்பாத்தி இட்லி தோசை எதுக்குமே 32 வேணாம்ன்னு சொல்லிடுங்கன்னுருக்கான்.
 மத்தியான தூக்கம் போன எரிச்சலில் எங்கப்பா வெறுத்துப் போய் போடா இனிமே 32 நம்பரையே கணக்குலேருந்து எடுத்துடலாம்ன்னு சொல்லிட்டார்

  


Friday, 15 November 2013

பூரிக்கட்டை --->மனைவி----> கணவன்

பூரிக்கட்டையால் மனைவி கணவனை அடிப்பது போல பல ஜோக்குகள்  சின்ன வயதிலிருந்து  படித்திருக்கிறேன் .


அதுமட்டுமல்ல சில பதிவுகளிலும் இதை  நிறையப் பேர்கள் மனைவிக்குப் பயந்ததுபோல் ஒரு இமேஜ் உருவாக்கும் பொருட்டு இந்த உதாரணத்தை சொல்லுகிறார்கள் .

இந்தப் பதிவின் நோக்கம்

அவர்கள் சொல்வது நடைமுறையில் சாத்தியமா
இந்த மாதிரி நிஜமாகவே பூரிக்காட்டையால் அடிக்கும் /அடிவாங்கும் ஒரு பாரம்பரியம்  எப்பொழுது ஆரம்பித்தது  , (அதன் வரலாறு )
அதுவும் இட்டிலியை  காலை உணவாகக்கொண்டுள்ள தமிழ் நாட்டில் எப்படி நுழைந்தது
போன்றஇன்ன பிற  பரிமாணங்களில் பார்ப்பதுதான்.


வரலாறு என்றால் எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்துதான் சொல்லமுடியும்
நான் சுமார் 1961ம் வருடத்திலிருந்தே படிக்க ஆரம்பித்து விட்டேன் .
பாடம் என்று அர்த்தம் கொள்ளாதீர்கள் .
குமுதம் விகடன் தினத்தந்தி போன்றவைகளை நான் ஸ்கூலுக்குப் போகாததால் என் அம்மா சமையல் வேலை மற்றும் வீட்டு வேலைகள் செய்தபடியே என்னைப் படிக்கச் சொல்லி அவ்வப்போது  தப்பாகப் படித்தால் திருத்து வார்கள்
.ஆண்டிப்பண்டாரம் பாடுகிறார் என்று ஒரு பகுதி வரும் தினத்தந்தியில் . அதிலும் நான் இதைப் படித்ததாக ஞாபகம் .
அதற்கு பூரிக்கட்டை என்றால் என்ன என்றும் ஜோக்கின் பொழிப்புரை பதவுரை  களை என் அம்மாவிடம் விளக்கம் கேட்டு பூரிக்கட்டை பற்றிய உபயோகங்களை ஹி .....ஹி ....தெரிந்து கொண்டேன்.
சுமாராக ஒரு சிறு குறிப்பு வரைக கேள்விக்கு பதில் எழதும் அளவுக்கு விஷய ஞானம் பெற்றேன் .
எனவே பூரிக்கட்டையால் அடிக்கும் பழக்கம் 1960களில் இருந்ததற்கு ஆதாரமாக 1960ம் வருட தினத்தந்தியில் மேட்டர்  உள்ளது.
வேறு ஏதேனும்  அதற்கு முந்திய ஆதாரம் இருப்பதாக யாராவது தெரிவித்தால் அதை இதில் சேர்த்து  முடிந்தால் விக்கி பீடியாவில் கூட சேர்க்கும் எண்ணம் உள்ளது.

எனக்கு இதில் ஒரு  சந்தேகம் என்னவென்றால்
 பூரி அல்லது சப்பாத்தி செய்து முடித்ததும் பொதுவாக அந்த பூரிக்கட்டையைஅப்பாடா வேலை ஒரு வழியா முடிந்தது என்று  ஒரு கடாசு கடாசுவதுதான் பலரது பழக்கம் .
மறுபடி வேலை செய்யும் போது தேடாமல் இருக்கும் மாதர்கள் ரோம்பக்குறைவு.
அப்படி இருக்கும்போது கோபம் வந்தால் கையில் கிடைப்பதை எடுத்து வீசுவது தானே பாரம்பரியம்?
பூரிக்கட்டையை தேடி ....கண்டுபிடித்து ...அப்புறம் அடிப்பது ....ம்ஹூம் ..சான்சே இல்லை .
ஒரு வேளை ரெகுலராக அடிப்பவர்கள்  அதை ஒழுங்காக  அதாவது தேவைப்பட்டபோது  எடுக்க வசதியான இடத்தில் வைப்பார்களோ என்னவோ யாமறியேன்.
இந்த பாயிண்டிலும் ஃ பீட்  பேக்குகள் வரவேற்கப்படுகின்றன .

மேலும் பூரிக்கட்டையால் அடிப்பதனால் நாள் வாரியான அல்லது மாதவாரியான ஆசுபத்திரி அட்மிஷன்கள் பற்றிய விவரம் எதுவும்
இருப்பதகாவும் தெரியவில்லை .
உதாரணமாக  தீ விபத்து ,வாகன விபத்து ,போன்று பூரிக்கட்டை விபத்து ,என்ற ஒரு டேட்டா உள்ளதா அதன் சதவிகிதம் என்ன என்றும் எனக்குத் தெரியவில்லை.
ஆதாரம் இருந்தால்  எல்லாவற்றையும் சேர்த்து ஒரு பதிவு தேத்திடலாம்.

பூரிக்காட்டையால் அடிக்கும் /அடிவாங்கும் நபர்கள் இது சம்பந்தமான முழு விவரங்களை முன் வந்து அளிக்கலாம் .
தகுந்த சன்மானமாக பூரிக்கட்டை (உடையாதது ) அளிக்கப் படும்.

எனக்கு ஒரு முக்கிய சந்தேகம் .
தொழில்நுட்பம் பல்கிப் பெருகிவரும் இந்நாளில் சப்பாத்தி மேக்கர் ஏன் ரெடிமேட் சப்பாத்தியே பாக்கெட்களில்  சக்கை போடு போடும் இந்நாளில் கூட
அதே பூரிக்கட்டைதானா?
மாற்றமே இல்லையா?

ஒருவேளை  பூரிக்கட்டையால் ஆயிரம்  அடி வாங்கிய அபூர்வ சிகாமணி தான் பாக்கெட்டுகளில் விற்கப்படும் சப்பாத்திகளைக் கண்டுபிடித்த விஞ்ஞானியோ?
இருக்கலாம்
நதிமூலம் ரிஷிமூலம்  ரொம்பவே சுவாரசியமாக இருக்கும் .
யார் கண்டது?
கடைசியாக
வட இந்தியாவில் பூரிக்கட்டை உடைந்தால் அபசகுனம் என்றும் வீட்டுக்கு ஆகாது என்றும் சொல்வார்கள் .
எனவே சிந்து சமவெளி நாகரிகம் ஆரம்பித்த காலத்தில் என்றெல்லாம் விடும் புரூடா க்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா .
அதனால் வடஇந்தியா விலிருந்து வந்திருக்க முடியாது என்பது என் எண்ணம் .
வடஇந்தியா வில் பூரிக்கட்டைக்கு பதில் வேறு ஏதாவது ஒரு மாற்று சாதனம் உபயோகித்திருந்திருக்கலாம்
மேலும் ஆந்திராவில் பூரிக்கட்டை பிரயோகம் இருந்த மாதிரித் தெரியவில்லை.
 கர்நாடகாவிலும் கேரளாவிலும் இல்லை என்றால் இது முழுக்க முழுக்க
நமது தமிழ்நாட்டுக்கே உரிய பாரம்பரியமாகக்  கொள்ளலாம்

Friday, 8 November 2013

வாங்காத புடவை .

ஒரு  வாரமாக வேலைக்குப்

 போய்கொண்டிருந்ததால்  பிளாக் எதுவும் எழுத முடியவும் இல்லை .;

மற்ற பிளாக்குகளைப் படித்து பின்னூட்டாம் எதுவும் எழுத முடியவில்லை

எழுத நிறைய மேட்டர் இருக்கு ,

காலையில் 7.30 க்குக் கிளம்பினால் வர அதே மாதிரி 7.30 மணி ஆவதால் இந்த நிலைமை .

அடுத்த வாரமும் வேலை இருப்பதால் பதிவிற்கு விடுமுறை.

இருந்தாலும்  ஒரு மினி இட்லி சைஸில்  குட்டியூண்டு  பதிவாவது போடலாம் என்று நினைப்பதால்  என்னால் மறக்கமுடியாத ஒரு கவிதையுடன் ஒரு  பதிவு .

சுமார் 30 வருடம் முன்பு படித்தது .

ஆஹா என்ன ஞாபக சக்தி என்றெல்லாம் நினைத்தால் நான் அதற்குப்
பொறுப்பல்ல .

  ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்தேன்

எழுதியது யார் என்று தெரியவில்லை .

மனதில்  நிறைந்து  கனவில் விரிந்து

உணர்வில் கலந்து  உயரில் அமர்ந்து

பகலிலும் இரவிலும் நினைவில் உறைந்து

பாடாய்ப்  படுத்துவதே வாங்காத புடவை .

சூப்பர்ல்ல!