பரீட்சை என்றால் 60
-70 களில் எல்லாம் சீரியஸான முகத்துடன் நெற்றியில் அவரவர் நம்பிக்கைக்குத் தகுந்தாற்போல்
விபூதி குங்குமம் நாமம் செந்தூரம் போன்றவைகள் நெற்றியில்
வைக்கப்பட்டிருக்கும் . இவற்றை இட்டுக்கொண்டால் நாம் படித்த பாடத்திலிருந்து
மட்டுமே கேள்விகள் வரும் , நாமும் பாஸ் பண்ணிவிடலாம்
என்று பரவலாக நம்பப்பட்டது.
நான் படித்தது திருச்சியில் என்பதால் எஸ் எஸ் எல்
சி பரீட்சை அன்று காலையில் தந்தை/தாய் சகிதம் அல்லது தனியாக பல மாணவர்கள்
மலைக்கோட்டை கீழே உள்ள மாணிக்க விநாயகர் சந்நதியில் ஆஜராகி இருப்பார்கள் . ஹி
ஹி நானும் கூடத் தான் .
நாங்கள் பரீட்சைக்குக் கிளம்பும்போது சகுனங்கள் பார்ப்பார்கள் . பூனை நிச்சயம் கிராஸ் பண்ணக்கூடாது .
பால் கொண்டு வருபவர் எதிரில் வரக்கூடாது போனால் போகட்டும் போன்ற அபசகுமான பாடல்களைத்
தவிர்க்கும் முறையாக ரேடியோ வைக்கமாட்டார்கள் .இன்ன பிற ...
என்னால் மறக்க முடியாத
ஒரு நம்பிக்கை நாம் படிக்கும் போது கழுத்தை
கத்தினால் அந்த chapter லிருந்து கேள்வி வருவது
சர்வ நிச்சயம் .என்று நம்பப்பட்டது. கேள்வி
செட் பண்ணுபவருக்கும் கழுதைக்கும் நாம் படிக்கும் chapter க்கும் என்ன மாதிரி டெலிபதி என்று தெரியவில்லை இப்பொழுது
நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது ( திருச்சியில்
அந்தக் காலத்தில் கழுதைகள் நிறைய இருக்கும்)
பிறகு நான் வேலை கிடைத்து சென்னையில் ஹாஸ்டலில் தங்கி
இருந்தபோது வேறு நல்ல வேலைக்கு முயன்றுகொண்டிருந்தபோது இந்த சகுனங்கள் எல்லாம் பார்க்க
முடியவில்லை , கிட்டத்தட்ட இவையெல்லாம்
மறந்து விட்ட சமாச்சாரங்களாகவே போய் விட்டன
. ஆனாலும் என் அதிர்ஷ்ட பென்சில் பாக்ஸ் மட்டும் எல்லாப்
பரீட்சைகளிலும் எல்லா ஊர்களிலும் என்
கூடவே வந்துவிடும் . இது பற்றி முன்பே ஒரு பதிவில் ஃ போட்டோவுடன் எழுதிவிட்டேன்.
என் மகன்கள் படித்த
காலங்களில் நான் வேலையில் இருந்ததால் இவைகளை எல்லாம் பார்க்கவில்லை .
ஆனால் அவர்கள்
பத்தாவது பன்னிரண்டாவது பரீட்சை எழுதிய எல்லா நாட்களிலும் மூன்று மணி நேரம் சாமி ரூமில்
உட்கார்ந்து அங்கு பரீட்சை ஆரம்பிக்கும் நேரத்திலிருந்து
முடியும் வரை தொடர்ந்து சாமி கும்பிடுவேன்
.
10 மணிக்குப் பரீட்சை
என்றால் பாத் ரூம் எல்லாம் போயிட்டு வந்து வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டி விட்டு உட்காருவேன்
, இது வாலண்டரி ரிட்டையர் மெண்டு
வாங்கியதால் சாத்தியமாயிற்று முடிந்தவரை நடுவில்
எழுந்திருக்க மாட்டேன் , ஏனெனில் என் அம்மா
எங்களுக்கு அப்படிச் செய்த காரணத்தால்.
ஒரு 5 வருடம் முன்பு ஜப்பானிய பரீட்சை எழுதினேன்
, அப்போது என் ஜப்பானியத் தோழி
என்னிடம் சொன்ன விஷயம் .
எந்தக்காரணத்தைக்
கொண்டும் தலைக்குக் குளிக்க வேண்டாம் , அப்படிச் செய்தால் படித்ததெல்லாம் தண்ணியோடு போய்விடுமாம் .
பிறகுதான் தெரிந்தது
ரஷியாவிலும் இந்த நம்பிக்கை உண்டு . பரீட்சை
அன்று தலை குளிக்கமாட்டார்கள் என்று
இரணடாவது டிப்ஸ் மறக்காமல்
கிட்-கேட் (kit -Kat) சாக்லேட் வாங்கிச் சாப்பிடணும் . பாஸ் நிச்சயம் என்றாள். கிட் கேட் என்பதை ஜப்பானியர்கள்
கித்தோ கத்சு என்பார்கள் அப்படி என்றால் நிச்சயம் வெற்றி என்று பொருள் .
என் தோழி ஒருத்தி
ஸ்கூல் படிக்கும் போது தலை வாராமல் வருவாள் , ஏனென்றால் படித்ததை எல்லாம் சீப்பு அப்படியே வாரிக்கொண்டு போய்விடும் அது ரிசல்ட்டை வாரிவிட்டுவிடுமாம்
, முதல் நாள் இரவே தலை சீவி
விட்டுக்கொண்டு விடுவாள்.
சிலர் பரீட்சை க்கு
என்றே தனி பேனா வைத்துக் கொள்வார்கள் .
ஒரு சிலர் பரீட்சைக்கு
என்றே ராசியான டிரஸ் வைத்துக் கொண்டு அதையே
தொடர்ந்து இருக்கும் பரீட்சை நாட்களிலும்
தினமும் போட்டுக் கொண்டுவருவார்கள் ,
இன்னும் சிலர் இட்லி தவிர்ப்பார்கள் , ( வெள்ளை முட்டை மாதிரி இருப்பதால் ) எங்க வீட்டில் வத்தக் குழம்பு ஊற வைத்த பருப்புகள் கொண்டு செய்யும் குழம்பு கூட்டு
கறி,,பாகற்காய் சுண்டைக்காய் கறி செய்ய மாட்டார்கள் .
இதையெல்லாம் என் மகனிடம் சொன்னபோதுஅவன் சொன்ன காமெண்ட் " அப்ப நீ ஒழுங்காகப்
படிக்காமல் இப்படித்தான் கழுதை கத்தின பாடம் , ராசியான பென்சில் டப்பா பாட்டியோட பிரார்த்தனை இதுங்களால தான் பாஸ் பண்ணிட்டே வாழ்க்கையை ஓட்டிட்டியா ?
வெளி வேலைகளும் வீட்டு வேலைகளும் சேர்ந்து கொண்டதால்
பிளாக் பக்கமே வர முடியவில்லை .