பயணம் என்றால் எல்லோரும் மனிதர்கள் செய்த பயணம் பற்றியே எழுதுவதால் நான் கொஞ்சம் வித்தியாசமாக 1967 முதல் என்னுடன் பயணம் செய்த என் பென்சில் பாக்ஸ் மற்றும் 1976 முதல் பயணம் தொடங்கி இன்று வரை என் கூட இடையறாது விடை பெறாது பயணம் செய்த உண்டியல் பற்றியும் தான் நான் எழுதப் போகிறேன் .
இது என்ன பெரிய ஸ்பெஷல் என்று கேட்கிறீர்களா?
மனிதர்கள் என்றால் ஏதாவது ஆபத்து வந்தால் மூளையை உபயோகித்து உசிரைக் காப்பாத்திக்கலாம். வாயில்லாப் பொருட்கள் இவை .
நிறைய ஊர் நிறைய வீடு சின்னக் குழந்தைகள் கை படும் இடம்வீட்டோடு இருந்த வேலையாட்கள் அடிக்கடி எனக்கு நடந்த ஆஸ்பத்திரி அட்மிஷன்கள் இவையே வேண்டும் என்று அடம்பிடிக்கும் குழந்தைகள் இவை எல்லாவற்றையும் தாண்டி . என்னுடன் கூடவே பயணம்செய்த....... இது சாமானிய விஷயமல்லவே.
குழந்தைகளிடமும் இந்த விஷயத்தைப் பக்குவமாகப் புரியவைத்ததாலும் நான் செண்டிமெண்ட் என்ற ஸ்டிக்கர் ஓட்டியதால் குழந்தைகளும் மதிப்புக் கொடுத்தனர்.
இதில் முதலில் என்ட்ரி ஆனது என் பென்சில் பாக்ஸ்.
நான் ஒன்பதாவது படிக்கும் பொது வாங்கியது . அது முதல் 11வது படிக்கும் வரை வகுப்பில் முதல் ராங்கு வாங்கினேன் . பிறகு கல்லூரியிலும் நன்கு படித்தேன் ,என் அதிருஷ்டம் 1976 ல் எமர்ஜென்சி இருந்ததால் எனக்கு செகரட்டேரியட்டில் வேலை.
அதன் பின் எந்தப் பரீட்சை எழுதினாலும் பரிட்சையில் ஃ பெயில் ஆனதில்லை .
இண்டர்வியூவில் செலக்ட் ஆவதில்லை . பிறகு வங்கியில் நேரடி ஆபீசராகத் தேர்வு ஆனேன் .
பிறகு CAIIB பரீட்சை எழுதியபோதும் நான் படித்த லட்சணத்திற்கு
( நீண்ட நேர அலுவலக வேலை மற்றும் பார்ட் 2 எழுதும்போது குழந்தைகள் பிறந்து விட்டனர் .) என்னைப் பாஸ் செய்ய வைத்ததே இந்த பென்சில் தான் என்ற நினைப்பு எனக்கு .
எத்தனை எத்தனை காலேஜின் எக்ஸாம் ஹால்கள் .
திருச்சி சாவித்ரி வித்யாசாலையின் எத்தனையோ கிளாஸ் ரூம் கள் ,
திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியின் எத்தனயோ கிளாஸ் ரூம் கள் ,செயின்ட் ஜோச ஃ ப் கல்லுரி Laali ஹால் என்று லயோலாவின் betram ஹால்
அக்கவுண்டு டெஸ்ட் எழுதிய காலேஜு . சென்னையில், மும்பையில் டெல்லியில் ஹைதராபாத்தில் CAIIB பரீட்சை எழுதிய காலேஜு மற்றும் ஸ்கூல்கள் ....
பிறகு நான் ஜப்பானிய மொழிப் பரீட்சை எழுதிய மீனாக்ஷி காலேஜு பச்சையப்பா காலேஜு velammal ஸ்கூல்.
இதைத் தவிர என் முதல் மகன் 5 வது வரை சில சமயங்கள்பரிட்சையின் போது .
ஒரு பத்து வயது ஆனதும் என் முதல் மகனுக்கு இதில் நம்பிக்கை போய்விட்டது.
என் இரண்டாவது மகன் அதன் பின் எடுத்துச் சென்றான். 10வது 12வது மற்றும் பல பரீட்சை நடந்த ஸ்கூல்கள் என... பென்சில் பாக்ஸ் சுற்றிப் பார்த்த ஸ்கூல்கள் .... ஏராளம் .
1968ல் இருந்து இவ்வளவு பரீட்சை ஹால் பார்த்தது உலகத்திலேயே இந்த ஒரு பென்சில் பாக்ஸ் மட்டுமே என்று நான் நினைக்கிறேன்.
இவ்வளவு நீண்ட பயணம் செய்தும் இன்னும் சீரிளமைத் திறம் குன்றாது இருக்கும் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். இன்னும் அதைப் பொத்திப் பொத்தித்தான் பீரோவில் வைத்திருக்கிறேன் .
இந்த மண் உண்டியல் எந்த வருடம் வாங்கினேன் என்று ஞாபகமில்லை.
1976 MA பரீட்சை முடிக்கும் முன்பே வேலை கிடைத்தது 1976ல் சென்னை வந்த போது கூடவே எடுத்து வந்தேன் , ஹாஸ்டலில் ஒரு மூன்று முறை ரூம் மாற்றி அதன் பிறகு கோவை மும்பை டெல்லி ( டெல்லியில் இருமுறை வீடு மாறினோம் ) பின் திருமணம் ஆனபின் மறு படியும் மும்பை ( இருமுறை வீடு மாற்றம் ) ஹைதராபாத் (மூன்று முறை வீடு மாற்றம்) சென்னை ( 6 முறை வீடு மாற்றம்) என என் கூடவே பயணம் செய்து. இப்போது இங்கே உள்ளது.
.ஒரு மண் உண்டியலை உடைக்காமல் இத்தனை ஆண்டுகள் அதுவும் என் குழந்தைகள் கையில்கிடைக்காமல் பாது காத்து இவ்வளவு ஊர் தாண்டி வருவது என்பது சாதாரண விஷயமல்ல .
போட்டோ அப்லோடு செய்ய எவ்வளோவோ முயன்றும் முடியவில்லை . ஐ பேடில் இருந்து முயற்சி செய்தேன் . ம்ஹூம் ...
அடுத்த முறை யாரிடமாவது கற்றுக் கொள்ள வேண்டும் .