Sunday 26 June 2016

லண்டனில் ஸ்ரீ அரவிந்தர் வாழ்ந்த வீடு



 நான் ஸ்ரீ அரவிந்தர்    மற்றும்ஸ்ரீ  அன்னை இவர்களை வழிபடுவது உண்டு.


 லண்டன்  போனபோது ..ஸ்ரீ அரவிந்தர்  தங்கி  இருந்த வீட்டைப் பார்க்கப் போனோம்
அவர்  லண்டனில் படித்துக் கொண்டிருந்தபோது  இந்த வீட்டில் தான்  1884- முதல் 1887 வரை தங்கி இருந்தாராம் .







இப்போது அந்த வீட்டில் யாரோ குடியிருக்கிறார்கள் .

என் கணவர்  அந்த  வீட்டைப்  பார்க்க  ஆசைப்பட்டதால்  என்  மகன்  அங்கு அழைத்துப் போனான் .  வீட்டின் முன்னே ஸ்ரீ அரவிந்தர் 1884 முதல் 1887 வரை இந்த வீட்டில் தான் குடியிருந்தார் என்று  நீலக் கலர் பேக்கிரவுண்டில் பளிச்சென வெள்ளை எழுத்தில்  எழுதி வைத்துள்ளார்கள்.

 நான்   என் கணவர்  மகன்  மூவரும் அங்கே  நிற்பதைப்  பார்த்து மாடியில் குடியிருக்கும்  ஒரு மனிதர்   கீழே  இறங்கி   வந்து பேசினார் .

 அவர் பாகிஸ்தானியர் .

 நாங்கள் இந்தியர்கள் என்று தெரிந்துதான் கீழே வந்தாராம்.
பிறகு அரவிந்தர் பற்றியெல்லாம் கேட்டார் .
 ஞாயிற்றுக் கிழமையாதலால் அவருக்குப் பொழுது போகவில்லை போல . சொந்த வரலாறு விவரமாகச் சொன்னார்.
1970 களில்  இங்கிலாந்து  வந்து  செட்டில்  ஆகி விட்டாராம்.
அப்போது  மான்சேஸ்டரில்   வீடுகள் 500 பவுண்டுக்கெல்லாம் கிடைத்ததாம்.
 சொந்த மகன்கள்   இருவர்   இருந்தபோதும்  அவர்  யாரிடமும் செல்லாமல்  இங்கேயே  தான் இருக்கிறாராம்..  வயது 70+.

 என்   மகனைப்   பார்த்துப்   பெற்றோர்கள் ஆசை அறிந்து    இந்த   இடத்தைக் காண்பித்தது   பற்றி   வெகுவாகவே   சிலாகித்துப் பேசினார்..
பாசமுள்ள மகன் என்றார் .
நானும் என் மகன் எப்போதுமே அப்படித்தான் என்று கூட மசாலாவெல்லாம் தூவினேன் 
 ( ஏனோ மனதில் கீழே இருக்கிற சூப்பர் மார்க்கெட்டில்அவனிடம்  ஒரு சாமான் வாங்கி வா என்றால்  நிச்சயமாக ஒரு மாதம் கழித்துத் தான் வாங்கி வரும் காட்சி  ஒரு சைடு டிராக் ஆக மனதில் ஓடியதை  நிறுத்த முடியவில்லை ).
நிறைய பேர் வந்து வெளியில் நின்றவாறே பார்த்து விட்டுச் செல்கின்றனர் என்றார் 


காலம் தான் எப்படியெல்லாம் விளையாடுகிறது .

இதே  அரவிந்தரைப்  பழி  சுமத்திய அரசு , ……
விடாமல் . அவருக்குத் தொந்தரவு கொடுத்தது .
அதைத்  தவிர்க்க அரவிந்தர்   வங்காளத்திலிருந்து பாண்டிச்சேரி  வந்தார் .(அது பிரெஞ்சு காலனி என்பதால் )
அதே  பிரிட்டிஷ்  அரசு   இன்று அவர்  இருந்த இடத்தில்  ஸ்ரீ அரபிந்தோ  என்று மரியாதையுடன் எழுதியது மட்டுமின்றி மூன்று வருடங்கள் அவர் தங்கி இருந்த இடத்தை யாவரும் அறியுமாறு எழுதி உள்ளது 
.
ஆன்மபலம் என்பது இதுதானோ?


உங்க பாவ் பாஜியில் கரி( CARBON ) இருக்கிறதா?



இது என்ன  பற்பசை  விளம்பரத்தைக் கட் பேஸ்ட் செய்து  ஜனங்களை பிளாக்  படிக்க வைக்கும் ஒரு உத்தியா என்று நினைக்க வேண்டாம் .

நிஜமாகத்தான் கேட்கிறேன்

உங்க பாவ் பாஜியில் கரி இருக்கிறதா?

 என்னது ?

பாவ் பாஜியில் எந்த மடையன் கரியக் கொண்டு போடுவான் ?
அப்படியே போட்டாலும் எந்த மாங்கா மடையன் சாப்பிடுவான் என்று கேட்கிறீர்கள் இல்லையா ?

நிஜமாகவே பம்பாயில் மசாலா பார் என்னும் ரெஸ்டாரண்ட்டில் கார்பன் பாவ் பாஜி என்ற பெயரில் ஒரு பாவ் பாஜி விற்கிறார்கள் .

அது அங்கு மட்டும் தான் கிடைக்கும் போல .

நான் சென்னை திரும்பி வரும்போது ( மும்பை வழியாக வந்தேன் )

ஏர் இந்தியா விமானத்தில் கொடுத்த ஒரு  புத்தகத்தில் எந்த எந்த

ரெஸ்டாரண்டில் எந்த எந்த உணவுகள் பிரபலமானவை என ஒரு கட்டுரை
வந்திருந்தது.

அதில் மசாலா பார் ரெஸ்டாரண்ட் -கார்பன் பாவ் பாஜி என்று போட்டிருந்தது
ஆனால் அதன் போட்டோ எதுவும் இல்லை .

சரி என்று அதை என் சிறிய நோட்டுப் புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டேன்.

வீட்டிற்கு வந்ததும் நெட்டில் அது என்ன ரெசிபி என்று தேடினேன் .

ரெசிபி எதுவும் கொடுக்க வில்லை .

ஆனால் போட்டோ மட்டும் உள்ளது .

சுவை நார்மலாக இருக்கும் பாவ் பாஜி சுவையே தானாம் .

அதில் சேர்க்கும் பொருட்கள் உருளைக்கிழங்கு மிளகாய் தக்காளி இவைதானாம்
ஆனால் பன் மற்றும் அதற்குத் தரும் கூட்டு எல்லாம் ஒரே கருப்புக்கலர் ..

 இதன் விலை  ரூபாய் 295/-
யாராவது மும்பை சென்று இதை சாப்பிடும் பட்சத்தில் என்னை நினைத்துக் கொள்ளவும் .

எங்கே இப்ப சொல்லுங்க

உங்க பாவ் பாஜியில் கரி இருக்கிறதா?

.

Saturday 25 June 2016

மிட்சுபிஷி இட்லி

சமையலில்   எனக்கு  ஆர்வம்  உண்டு .
சில புதுமைகள் செய்வேன் .
என் குழந்தைகள் 10 வது படிக்கும் வரை என் ரசிகர்கள் .
பிறகு தோளுக்கு மேல் வளர்ந்த பின் ...
" நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா என்ன ?" ரேஞ்சு பேச்சுதான் .
ரொம்பக் கிண்டல் பண்ணுவார்கள் .
 என் உறவினர் குழந்தை கள்  நான் whatsapp பில் அனுப்பும் சாப்பாட்டு  போட்டோக்களை ரசிப்பார்கள் .

 காலம் காலமாக நாம் சாப்பிடும் இட்லி யை ஒரு பிரபல ஜப்பானியக் கம்பெனியின் லோகோ மாதிரி ஆக்கி "மிட்சுபிஷி இட்லி" என்று பெயர் சூட்டினேன் .


 இதை ரொம்ப ஓவர் என்று சிலர் கலாய்த்தாலும் (எல்லாம் வயித்தெரிச்சல் தான் )

சிறு குழந்தைகளின் அம்மாக்கள் இதை
ஐடியா நன்றாக educative  value வோடு  இருக்கிறது” என்று  புகழ்ந்தனர்.

 காரணம் குழந்தைகள்  " மிட்சுபிஷி " என்றால் என்ன என்று கேட்க ப்
பிறகு
 நெட்டில் அது பற்றி ப் படித்து பசங்களுக்கு விளக்கம் சொன்னதன் மூலம் மிட்சுபிஷி கம்பெனியின் பிரம்மாண்டம் பெற்றோர்கள் குழந்தைகள் இருவருக்குமே புரிந்தது .

இதற்காகவும் ஜப்பானியத்  தொழில் துறையையும்  தென்னிந்தியப் பாரம்பரிய மிக்க உணவையும்  இணைத்துச் செய்த தற்காகவும்
மிட்சுபிஷி கம்பெனி எனக்கு ஒரு ஸ்பெஷல் அவார்ட் கூடத் தரலாம் .

ம்ம் .....அதுக்கெல்லாம் ஆள் வேணும்.

நான் 2010-2012 கால கட்டங்களில்  T. C. S ஸின் மிட்சுபிஷி புராஜெக்டில்  Free Lancer ஆக வேலை பார்த்தபோது தான் அந்தக் கம்பெனியின் அருமை பெருமைகள் எனக்கே தெரிய வந்தது .


 பிறகு அந்தக் கம்பெனியின்  ADMIRER ஆனேன் . (MITSUBHISHI )


 அதனால் வந்த ஐடியா தான் இந்த "மிட்சுபிஷி இட்லி"  .

சரியோ தப்போ   எனக்கு ஒரிஜினாலிட்டி தான் முக்கியம் .

 நாம் ஒரு சமையல் குறிப்பு செய்கிறோம்  பதிவு போடுகிறோம் என்றால்
ரஜினியின் பன்ச் டயலாக்  மாதிரி
"அபயா அருணா " வின் எஸ்க்க்ளுசிவ் டச்  இருக்கணும் இல்லையா ?

(யாரும் தயவு செய்து சிரிக்கவேண்டாம் )

இந்த "மிட்சுபிஷி இட்லி" க்குக்  காப்புரிமை வாங்கணும் என்ற எண்ணமும் உண்டு.

Monday 20 June 2016

சும்மா வெட்டியா .....



நானும் என் கணவரும் போன  மாதம் 12 ம் தேதி இந்தியா விலிருந்து கிளம்பினோம்

இவ்வளவு நாட்கள் வீட்டை விட்டு இருந்ததே கிடையாது.

 வங்கியில் வேளையில் இருந்த பொழுது        எங்களுக்கு டிரைனிங்கு என்ற பேரில் வந்து சென்னையில்    இரண்டு வாரம் போல வந்திருக்கிறேன். அப்போவெல்லாம் ஜாலியாக இருக்கும். இத்தனைக்கும் இன்டர்நெட் இல்லாத காலம் அது.

ரொம்பவே ஒல்லியாக இருப்பேன் ரெண்டு பிரேக் ஃ பாஸ்ட் எல்லாம் சாப்பிட்டு குண்டாக இருப்பவர்களின் வயிற்றெரிச்சலை வாங்கிக் க ட்டிக்கொண்டிருக்கிறேன.

 அமெரிக்கன் கல்லூரியில் ஒரு  கோர்ஸ் மூன்று வாரம்  , என்று இரண்டு முறை நான் வகுப்புகள் எடுத்தேன். கிளாஸ்  எடுத்த நேரம் போக மிச்ச நேரம் ஊர் சுற்றுவேன்.
சிம்மக்கல் போய் பழம் வாங்குவேன்.
கடை க்குப் போவேன்.
கோயிலுக்குப் போவேன் .
 என் உறவினர் வீட்டுக்குச் செல்வேன்.
மதுரையில் இருந்த பொழுது எனக்கு நன்கு பொழுது போகும் .
தவிர அது தமிழ் நாடு என்பதால் பிரச்னை இல்லை.
 வீட்டு வேலைகளிருந்து ஒரு மாறுதல் என்று நினைத்துக் கொண்டு சந்தோஷமாகவே இருப்பேன்.

என் மூத்த மகன் உடல் நிலை சரியில்லாமல்  ஹைதராபாத்திலிருந்த  போதும் எனக்கு நன்கு பொழுது போகும். சமையலில் ஆர்வம் உள்ளதால் விவிதவிதமாகச் சமைத்து என் மகனின் உடல் எடையை ஏற்றினேன்.
.


 .அதன் பின் இப்பொழுதுதான் நான்  அதிக நாட்கள் வீட்டை விட்டு இருக்கிறேன்.
 ஊர்  சுற்றினேன் ,
கடைகளுக்குப் போனேன்
 வாக்கிங் போனேன்
ஸ்கைப்பில் தினம் ஒரு மணி நேரம் கிளாஸ் எடுக்கிறேன்.
இருந்தும் வேலை என்பது இல்லாமலிருப்பது செம்ம போரடிக்கிறது.

நெடு நாள் ஆசையான  ட்விட்டர் கணக்கு துவக்கினேன் ..
 சும்மா சும்மா கனடா சுத்தியதையே எழுதி போரடிக்க மனமும் இல்லை..
டி வி பார்க்கவும் பிடிப்பதில்லை.

யு டியுபில் எவ்வளவு நேரம்தான் பார்ப்பது ?

குளிர் வேறு பிடிக்கவில்லை.
 மகனும் ரெஸ்டில் இரு என்கிறான்

 எப்படித்தான் எல்லோரும் வேலையே செய்யாமல் இருக்கிறார்களோ?
அதுவும் ஆய கலைகளில் ஒரு கலைதான்
அவர்களுக்கு ஒரு சல்யூட்
ஆச்சு. இன்னும் இரண்டு நாளில்  ஊருக்குக்
 கிளம்பிடுவோம்.




கனடாவின் நீர்வீழ்ச்சிகள்




   கனடாவின் நீர்வீழ்ச்சி என்றால் உடனே நினைவுக்கு வருவது நயாகராதான்.
 அது பற்றித் தனியாக ஒரு பதிவு போட எண்ணம் .

இப்பொழுது எழுதுவது கிட்டத்தட்ட நயாகரா மாதிரியான நீர்வீழிச்சியே தான் .

அவைகளின்  பிரமாண்டம் என்னை பிரமிக்க வைத்தது.

கிராண்ட் கான்யான் செயின்ட் ஆன் ஃ பால்ஸ் என்பதும்
சூட் மொண்ட்மொரென்சி நீர்வீழ்ச்சி என்பதும் எந்த விதத்திலும்ஓடும்  அழகிலும் தரையை நோக்கிச் சீறிப் பாயும் வேகத்திலும்  நயாகரா
 விற்குக் குறைந்ததில்லை.


 நயாகராவாவது அவ்வளவு உயரத்திலிருந்து விழுவதால் நிச்சயமாக அவ்வளவு ஆர்ப்பரிப்புடன் வருவதை நம் மனது எதிர் பார்க்கிறது . ஆனால் இங்கே நாம் எதிர்பார்க்காமலே  இவ்வளவு வேகமாக விழுகிறது. நீங்களே பாருங்களேன்.
சம தளத்திலிருந்து கொஞ்சமே கீழே உள்ள பகுதியில் விழும்போது என்னமாய் ஆர்ப்பரிக்கிறது பாருங்கள் .





மேலே உள்ள தொங்கும் பாலம் கிட்டத்தட்ட நம் லக்ஷ்மண்  ஜூலா என்பார்களே அது போலத்தான் இருக்கிறது. ஆனால் ரொம்பவே ஸ்ட்ராங்  என்றாலும் நடக்கும் போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடந்தேன் என்பதே உண்மை.





மற்றவர்கள் நடக்கும் போது பாலத்தில் அதிர்வுகள் உண்டாகிறது. பாலம் ஆடுகிறது.

. இவ்வளவு ஆக்ரோஷத்துடன்  கொட்டும் நீர்வீழ்ச்சி குளிர்காலங்களில் அது தனது சக்தி அனைத்தும் இழந்து அப்படியே ஒரு இஞ்சு கூட நகரமுடியாமல் அப்படியே உறைந்து விடிகிறது. கோடைக் காலங்களில் எவராலும் கிட்டே நெருங்க முடியாது இருக்கும் அதே இடத்தில் ஐஸ் ஸ்கேட்டிங்  போகமுடியும் ..

சூட் மொண்ட்மொரென்சி நீர்வீழ்ச்சி

அதன் அருகேயே இன்னொரு நீர்வீழ்ச்சி .சூட் மொண்ட்மொரென்சி நீர்வீழ்ச்சி. இது நயாகராவை விட  உயரம் என்று கூறுகிறார்கள்.
 இது தூரத்தில் இருந்து எடுத்த போட்டோ  .
இங்கே ரோப் கார் வழியாகப் போய் மேலே போகமுடியும்



அங்கே  மேலே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ரோப் கார் இன்றி தொங்கிய நிலையில் வரும் திறமையாளர்கள்  பயிற்சியாளர்கள் நிறைய  உண்டு.





  • இதே நீர்வீழ்ச்சியினை வேறு வேறு கோணங்களில் எடுத்தேன்.
 மேலே  இருந்து விழுந்த நீரருவி  தான் வேகம்  தணிந்து அமைதியாகச் செல்லும் படம் .
 இதே அருவிக்கு நடந்து வருபவர்கள் வரும் பாதை தான் அது.
 அதே அருவி ரயில் பாலத்தை கடந்து அமைதியாக ஓடும் படம் இது.

Sunday 19 June 2016

கனடாவில் கோடைத் திருவிழா



வருடத்தில் கிட்டத்தட்ட பத்து பதினோரு மாதங்கள் ஸ்வெட்டர் போன்ற மேலுடை இல்லாமல் வாழ்வது ரொம்பவே சிரமமான  விஷயம் என்பதால்
கொஞ்சம்  வெயில் வர ஆரம்பித்தவுடன் பல வித கார்நிவல்கள் கொண்டாட்டங்கள் என்று அசத்துகிறார்கள்
எல்லாவற்றுக்கும் என்னால் போக நேரமில்லை
தவிர கும்பல் இருக்கும் இடங்கள் குறிப்பாக சிகரெட் வாசனை சுத்தமாக ஒத்துக் கொள்வதில்லை என்ற காரணத்தால் பலவற்றை ஒதுக்கி விட்டேன் .

என் மகன் வசிக்கும் ஷெர்புரூக் ஏரியா அருகே ,சொல்லப் போனால் அடுத்த தெருவிலேயே ஒரு கொண்டாட்டம் நடந்தது.
 நுழை வாயிலில் இருந்த உருவ பொம்மை .



அங்கே இருந்த கடைகள்.







திரு விழா என்று சொன்னால் சனி ஞாயிறில் தி நகரில் இருக்கும் கூட்டத்தில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லைதான் . ஆனாலும்  இந்த விழா இங்கு நடை பெறுவதால் இந்த வழியில் வரும் பஸ் சர்வீஸ் நிறுத்தப் பட்டு அடுத்த ரோடு வழியாக பஸ் போகிறது.


குழந்தைகளையும் சில பள்ளிகள் கூடி வந்தனபத்து குழந்தைகளுக்கு இரண்டு டீச்சர் என்னும் வகையில் பொறுப்புடன் கூட்டி வந்தனர்.
குழந்தைகளும் ரொம்பவே சொன்ன பேச்சு கேட்டு நடந்தது ஆச்சரியமாக இருந்தது. யாரும் காணாமல் போக ஒரு கயிறு போன்ற பட்டையைக் கையில் கொடுத்து விட்டனர் .அதைக் குழந்தைகள் பிடித்துக் கொண்டு ரோடு கிராஸ் பண்ணுகிறார்கள் .




தவிரவும் ரோடின் நடு வழியில் தற்காலிகமாக பௌண்டன் உருவாக்கி அதில் குழந்தைகள் குளிக்கிறார்கள் விளையாடுகிறார்கள் .


 முதியவர்களும் தனியே வந்து இந்த விழாவைப் பார்வையிட வருகிறார்கள் .அவர்களுக்கும் இது ஒரு பொழுது போக்காக இருக்கிறது.



ஆங்காங்கே அர்பன்  பாரஸ்ட் என்னும் பெயரில் இது மாதிரி பிளாஸ்டிக் டெம்பரரி மரங்கள் செய்து அதன் கீழ் உட்கார்ந்து வெயிலை என்ஜாய் பண்ணுகிறார்கள்.







Saturday 18 June 2016

நானும்கூட ட்விட்டரில்


 நான் இன்று ட்விட்டர் அக்கவுண்ட் தொடங்கி உள்ளேன்  விருப்பமுள்ளவர் தொடரலாம் .
@abayaaruna

கறை நல்லதுங்கிறது மாதிரி சோம்பல் நல்லது




இது என்ன   சோப்  விளம்பரம் மாதிரின்னு எரிச்சல் படாதீங்க .

இருந்தால் நல்லதுதான் .

 நல்லதா?

காமெடி கீமெடி பண்ணலியே?

நிச்சயமா இல்லே.

நான் அனுபவ பூர்வமா உணர்ந்து சொல்கிறேன்.


கடந்த ஒரு மாதமாக வேலை என்பதே இல்லை .

மூத்த மகன் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து வீட்டு வேலை என்பதே சுத்தமாக இல்லை .

நான் மிகவும் இன்னவேடிவ் ஆகவும்  நன்றாகவும்  சமைப்பேன் .
அதிலும் சப்பாத்தி ஸ்பெஷலிஸ்ட் என்று மற்றவர்கள் சொல்வார்கள் .


என் சாப்பாட்டு சாப்பிட்டு என் மகனுக்கு  என் மீது பாசம் அதிகரிக்கும் என்ற  நினைப்பா என்ன என்று தெரியவில்லை காய் மட்டுமே நறுக்கிக் கொடுத்தால் போதும் .நீங்க ரெஸ்ட் எடுத்துக்கோங்க என்று சொல்லிவிட்டாள் என் மருமகள்..( இந்த அனுபவம் எனக்குப் புதியதில்லை என்  உறவினர்கள் சிலர்  இந்த மாதிரி சொல்லி என்னை ஓரம் கட்டியிருக்கிறார்கள் ).


  IPAD ல் எனக்கு காப்பி பேஸ்ட் வருவதில்லை , என் மகனும் ஆப்பிள் ஷோ ரூமில் கேட்டுப் பார்த்தான் நெட்டில் துழாவினாலும் எது சரிவராது என்றது. பதிவு போடலாமென்றால் மகனின் கம்பியுட்டர் தான்.
அது எப்பவும் பிசி .

எனவே நிறையப் படிக்க ஆரம்பித்தேன் .கம்பியுட்டர்  ஃ பிரீ ஆக  இருக்கும் போது எழுதுவேன்

.நிறைய ஹிண்ட்ஸ் எடுத்து வைத்தேன்
 நிறைய இடங்களுக்குப் போனோம்.


பிறகு இரண்டாம் மகன் வீட்டுக்கு வந்தால் அவன் " அம்மா உன் அவுட் டேட் ஆன சமையல் முறையை விடு நான் சொல்றத நீ செய் போதும் என்கிறான் .


சிதம்பரத்தில் மீனாக்ஷி அவ்வளவாக  வாய் திறக்கக் கூடாது என்ற சட்டப்படி  சொன்னதை மட்டுமே செய்கிறேன் .

 30 வருடத்துக்கு மேல் எனக்கு அனுபவம் உண்டு ,
உன்னை விட நான் சீனியர்
 நீ பிறந்தது முதல் இந்த அம்மா கை சமயலத்தானே  .....
இத்யாதி  டெம்பிளேட் டயலாக்குகள்   இங்கே வேலைக்கு ஆகாது என்பது தீரத் தெளிவு .


 சரி . மூளைக்கு வேலை கொடுப்போம் என்று சில  முறைகளைப் பின் பற்ற ஆரம்பித்தேன்.


  இதில் ஒன்றுதான் ஒரு படத்தை அல்லது ஒரு மேட்டடரைப் பற்றி நன்கு யோசித்து எழுதுவது .
உதாரணமாக இந்தப் படம் இப்பொழுது வாட்சப்பிலும் ஃ பேஸ் புக்கிலும் செம்மா யாகக் காலாய்ச்சுகிட்டு இருக்கு.

"கிழே கிடந்துச்சு இது உங்க மூளையா பாருங்க "


இப்படி ஒரு கேள்வி உங்க கிட்ட யாராவது கேட்ட நீங்க எப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணலாம்


 ( அடி செருப்பால , ,,,பிச்சுப்புடுவேன்   படவா என்கிற வன்முறை களுக்குத் தடா.)
யோசித்துப் பார்த்தேன்

நான் நினைத்தவைகள் இவை ...

 1. டேய்  அது எங்க அண்ணனோடது, அவன்தான் கல்யாணம் ஆனப்புறம் மூளையை எங்கயோ காணாடிச்சுட்டான்.... அவனக் கேளு.

 2. அட முண்டமே அது உன் மூளை தாண்டா 

3.எருமை மாடே  , நீதானே சர்வீசுக்குக் கொடுத்திருந்தே  அதுவே உனக்கு மறந்து போச்சா  விடிஞ்சுது போ


4.இதை எதுக்குக் கையிலே வச்சுகிட்டு ஊரெல்லம் அலையறே , உனக்குத்தான் மூளையே கிடையாதே நீ வச்சுப் பொழச்சிக்கோ ...
.
5.இங்க பாரு இதே மாதிரி   இன்னொரு மூளையைக் கண்டு புடிச்சிட்டு ஒரு மூளை வாங்கினா இன்னொரு மூளை இலவசம்ன்னு சொல்லி விப்பியா ....


 6. உங்க மூளையக் கடாசிட்டு இந்த மூளைய மண்டைல பொருத்திகிட்டா எப்படியாப்பட்ட மனைவியையும் சமாளிக்கலாம் , லைப்  லாங் கியாரண்டின்னு சொன்னா...... ஒரு வருஷத்துக்குள்ள பில் கேட்ஸ் உனக்கு ஏழை ......


 இன்னும் ஏகத்துக்கு ஐடியா வந்து குவிஞ்சுது .....

ட்ரை பண்ணிப் பாருங்க .
அப்புறம் நீங்களே ஒத்துக்குவீங்க கறை நல்லதுங்கிறது  மாதிரி சோம்பல் நல்லதுன்னு





Friday 17 June 2016

ரயில் பயணங்களில்




 ரயில் பயணம் என்பது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து செய்து வருகிறேன் .

காரணம் என் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்தார்.

அப்போதெல்லாம்   விருத்தச்சலத்திலிருந்து சொந்த ஊரான தஞ்சைக்கு அருகே உள்ள திருக்காட்டுப் பள்ளிக்குச்  செல்லவேண்டுமானால்    திருச்சி
   சென்று   ரயில் மாறி  பூதலூர்      செல்ல வேண்டும் .
 டிரையினில் போவது என்றால் ஒரு பித்தளை கூஜா வில் தண்ணீர் ,கொறிக்க தின்பண்டங்கள் எங்க அம்மா படிக்க தமிழ் வார இதழ்கள் .


டிரையினில் ஊர் போகிறோம் என்றால் ஒரு இரண்டு நாள் முன்பே மனசில் ஏகப்பட்ட சந்தோஷம்இருக்கும் .

டிரையின் கூவு முன்பே நான் கூவி டிரையின் கிளம்பினால் நான் கூவியதை டிரைவர் கேட்டு அதனால் தான் வண்டியை ஸ்டார்ட் செய்கிறார் என்றெல்லாம் பில்டப் கொடுத்திருக்கிறேன் .
( அந்த வயதில் அப்படித்தான் நம்பினேன் ).

பெரியவர்கள்ப க்கத்தில் உட்காந்திருப்பவர்களுடன் ஏகத்துக்கும் அளவளாவி அவர்கள் குடும்ப விவகாரம் நம் குடும்ப விவகாரம்
இவைகளை ச் சொல்லிகொண்டு தான் பயணம் போகும் .

பிறகு கோவைக்கு என் சித்தப்பா வீட்டுக்குப் போகும் போது      எங்க அப்பா ஸ்வெட்டர் போட்டு விட்டு ஒரு "டவல் "லை தலையில் கட்டிவிடுவார். மற்றபடி தண்ணீர் தின்பண்டங்கள் வழக்கப்படி .


  திருச்சி  வந்த பின் அடிக்கடி ரயில் பயணங்களில் நானும் அம்புலி மாமா அந்தக் காலத்தில் அதுதான் காமிக்ஸ்கள் அவ்வளவு இல்லை .

எங்க அப்பா இங்கிலீஷ் பேப்பர் .

அம்மா தமிழ் வார இதழ்கள்

. பக்கத்தில் உள்ளவர்கள் ஆண்களாக இருந்தால் அரசியல் நாட்டு நடப்பு பிரிட்டிஷ் காரன் காலத்தில் எப்படி எல்லாம் ஒரு சிஸ்டமேடிக் ஆக இருந்தது இப்போ நிலவரம் சுத்தமாக சரியில்லை என்ற தினுசில் தான் பேச்சு போகும்


.பெண்களாக இருந்தால் சமையல் கைவேலை இவைகள் பற்றிப் பேசுவார்கள்,


 கொஞ்சம் வளர்ந்த பிறகு சென்னை  டெல்லி பம்பாய் போன்ற நீண்ட தூரம் பயணங்களின் போது நாங்களும் கொஞ்சம் வளர்ந்த படியால் சீட்டுக் கட்டு செஸ் போர்டு இவைகள்கூ ட வந்து ஒட்டிக் கொண்டன

.குழந்தைகள்  ட்ரையினுக்குள்ளேயே ஓடி விளையாடுவார்கள் .
]
  காலையில் ஆபீஸ் வேளைகளில் பெண்கள் வண்டி என்றால் ஸ்லோகங்கள் பாண்டிச்சேரி அன்னையின் மலர் போல பாடல்களையும் பாடிக்கொண்டு செல்வார்கள் .

அரக்கோணம் பக்கம் ரயிலில் செல்லும்போது ஜெயா இஞ்சினீரிங்க் கல்லூரி மாணவர்கள்  (லேடீஸ் காரெஜுக்கு அடுத்த வண்டியில் ) தாளம் விசில் இவைகளுடன் .சினிமாப் பாடல்கள் பாடிக்கொண்டே  செல்வார்கள் .

.
 பம்பாயில் சனிக்கிழமைகளில் நானும் என் கணவரும் ஊர் சுற்றிவிட்டு வி. டி ஸ்டேஷனில் ஏறும்போது (இரவு ஒன்பது ,ஒன்பதரைக்கெல்லாம் ) ஒரு குருப்பில் ஒருவர் ஒடி ரெண்டு சைடு சீட்டும் பிடித்து சீட்டு செஸ் விளையாட இடம் பிடிப்பார்


 ஆனால் இப்போது செல் ஃ போன் அதுவும் ஸ்மார்ட் ஃ போன் வந்தாலும் வந்தது


சீட்டு செஸ் போர்டு வார இதழ்கள் இவையெல்லாம் காணாமல் போன வர்கள் பட்டியலில் சேர்க்கலாம் போல ஆகிவிட்டது நிலைமை .


எல்லாமே  ஸ்மார்ட்  போனுக்குள் அடக்கம் .

குழந்தைகளும் இதற்கு அடிமை ஆகிவிட்டனர். ஸ்மார்ட் ஃ போன்  கொடுத்தால் உச்ச ஸ்தாயியில்  அழுகிற குழந்தை  கூட அழுகையை நிறுத்துகிறது.


 ஸ்மார்ட்  போன்கள்  ரொம்பத்தான் ரயில் பயணங்களை மாற்றிவிட்டது..






A

Thursday 16 June 2016

வரலாறு திரும்புகிறது


என் சின்ன மகன் வீட்டிற்கு வந்திருக்கிறோம்.
நேற்றுத் தான்  வந்தோம்.

அவனும் அவன் கூட வேலை பார்ப்பவரும் ஒரு வீடு எடுத்துத் தங்கி இருக்கிறார்கள்
 நேற்று மட்டும் லீவு போட்டான் .
 நேற்று இருவரும் சேர்ந்து சமைத்தோம் .
 அவ்வப்போது அம்மா உனக்கு இதெல்லாம் தெரியாது என்று சொல்லும் போதும் இப்படிச் செய்யாதே அப்படிச் செய்யாதே என்று திருத்தம் சொல்லும் போது கோபம் வரவில்லை .   .மாறாக சிரிப்புதான்  வந்தது .
வீட்டில் எங்களுடன் இருக்கும் போது சொல்வான் என்னம்மா முப்பது வருடமாக சமைக்கிறாய் ஒரு அஞ்சே நிமிஷத்தில் சமையலை முடிக்கும் வழி கண்டு புடிக்கத் தெரியலே நீயெல்லாம் என்னாத்தப்  படிச்சு என்ன புண்ணியம்  என்று ரொம்பவே கலாய்ப் பான்.மேனேஜ்மேண்ட் கான்செப்ட் சரியில்லை என்பான் .
 நானும் என் அம்மாவை இது மாதிரி வயதில் கலாய்த்திருக்கிறேன்.
எல்லாத்தையும் ஒரு பாத்திரத்தில  போட்டு அடுப்பில
வெச்சா அது  பாட்டுக்க  வெந்துடுது ".நாம அதுக்குன்னு தனியா EFFORT எதுவும் எடுக்கலியே  இதுக்குப் போய் அலட்டிக்கலாமா " ( அப்போது அந்தப் பாட்டு ரஜனி பாடுவது ரொம்பப் பிரபலம் ) "என்னம்மா பொல்லாத சமையல் "என்று பாடி  வேறு கலாய்ப்பேன் .


இன்று அவன் ஆபீஸ் போய்விட்டான் .

அடுப்பு ஆன் பண்ணவது புரியவில்லை ..

ஃ போன்  பண்ணிக் கேட்டேன் .

 இரண்டு மணிக்கொரு தரம் வாட்ஸ் அப்பில் மெசெஜு அனுப்புகிறான் ..ஒன்னும் பிரச்னை இல்லையேன்னு .

இரண்டு குழந்தைகளும் சிறுவர்களாக இருந்தபோது  வேலைக்காரர்கள் அல்லது பெரியவர்கள் இல்லாதபோதும்   கொஞ்சம் வளர்ந்த பின் சனிக்கிழமைகளிலும்   (எங்களுக்கு அரை நாள் வேலை மட்டுமே)அவர்கள் வீட்டில் தனியாக இருப்பார்கள்.
பக்கத்து வீட்டில் எதிர்த்த வீட்டில் எல்லாம் சொல்லி விட்டு ஆபீஸ் போயிருக்கிறோம்.. அவர்களும் படு  சூட்டிகை .
 யாருக்கும் கதவையே திறக்க மாட்டார்கள் .
வீட்டை விட்டும் வெளியே வரமாட்டார்கள்.
   . கணவருக்கு ஆபீஸ் மூணு கிலோ மீட்டர் தான் .
எனக்குத்தான் எட்டு கிலோ மீட்டர் .
மதியம் வீட்டுக்கு என் கணவர் வருவார் . 
நாங்கள் அடிக்கடி வீட்டிற்கு ஃ போன் பண்ணுவோம்.
அதையே இப்போது அவன் பண்ணுகிறான் .
 நினைத்து மனதிற்குள் சிரித்துக் கொள்கிறேன்.
 இதுதான் சரித்திரம் திரும்புகிறது என்பதோ ?

Thursday 9 June 2016

கனடா விஜயம்


 சென்ற மாதம்  13 ம் தேதி அன்று  மாண்ட்ரியலில் என் மருமகளுடன் வசிக்கும் எனது மகன் வீட்டிற்கு நானும் என் கணவரும் வந்தோம் . இரண்டு வாரங்கள் வார விடுமுறையில் ஊர் சுற்றினோம் . பிறகு ஊருக்கு  உள்ளேயே  பல கடைகள்  இடங்கள் போனோம்மாண்ட் ராயல் எனப்படும் ஒரு  சிறிய மலை ஒன்றிற்கு  நாங்கள் சென்றோம் .

 அதன் முன்னால் உள்ள ஒரு பெரிய சிலை இது . மக்கள் இந்த ஏரியாவைச் சுற்றியும் நடக்கிறார்கள் .


மலை மேலே எல்லோரும் ஏறிப் போகலாம் என்று என் மகன் சொன்னான்மாட்டேன் என்று நான்சொ ல்லிவிட்டேன் . அவனுக்கு மலை ஏறுவதில் ஆசை  உண்டு . இந்தியாவில் இருந்த போதே பல மலைகளில் ஏறிய அனுபவம் உண்டு . ஹைதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அவன் mountaineering கிளப் மூலம் மலையேறுவது 
  பற்றிய போட்டோக்கள்  ஹிந்து பத்திரிகையில் வந்தது . ஆனால் அவன் கங்கோத்ரியிலிருந்து  கிளம்பி களந்திகால்  என்ற  இடத்திற்குச்  சென்ற போது அவன் திரும்பி வரும்  வரை  இரவுகளில்  நான் தூக்கம் வராமல் தவித்தது எனக்குத் தான் தெரியும் .


மலையைச் சுற்றிஇருந்த நடை பாதையில்  நான், என் மருமகள்  என் மகன் மற்றும்   கணவர் கூட  நடந்த போது எதோ . சி  .ரூமில் நடப்பது போல இருந்தது
சுற்றிவர  உயரமான மரங்களும் சில பறவைகளும் சூழ நடை பாதையே ரொம்ப ரம்மியமாக ........

உடலில் அசதி இல்லை .
ஆனால் கால் வலிக்க ஆரம்பித்து விட்டது.
கோடை நாள் என்றாலும் வெயிலே தெரியவே இல்லை .
வெப்ப நிலை  .11 டிகிரி முதல் 17 க்குள் தான் இருக்கிறது . நான் டெல்லி ஹைதராபாத் போன்ற இடங்களில்  வசித்திருந்தாலும் இந்தக் குளிர் கொஞ்சம் ஓவராகவே இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது .இங்கு உள்ள வானிலை மையம்  வெப்ப நிலையைத் தவறாகச்  (அதாவது  4 அல்லது 5 டிகிரி வெப்பநிலையைக் 11-17 என்று கூடுதலாக ) சொல்வது போல உள்ளது . .சொல்லப் போனால் குளிர் காலத்தையே இங்கு இருக்கும் மக்கள் எல்லாரும் தப்பிதமாக கோடை என்று சொல்வதாக என் நினைத்துக் கொண்டிருந்தேன்.
 .
ஆனால் நான் சொல்வதை  யார் ஒத்துக் கொள்வார்கள் என்றெல்லாம் மனதிற்குள் புழுங்கிக் கொண்டிருந்தேன்.

நிஜத்தில் வானிலை மையத்தில் அவர்கள் உண்மை வெப்ப நிலை ,மற்றும் நாம் உணரக் கூடும் வெப்ப நிலை என்று தனித் தனியே அறிவிக்கிறார்கள்.

மலையின்முழு நடைபாதையையும் நாங்கள் நடக்கவில்லை .

கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நடந்து விட்ட படியால்" மெக் ஹில் "பல்கலைக்கழகம் அருகே உள்ள இடத்துக்கருகே  நாங்கள் முடித்துக் கொண்டோம்

ஆனால் பலரும் வேக வேகமாக ஓடுகிறார்கள் ,
சிலர் சைக்கிளில் வேகமாகப் போகிறார்கள் 
அதே பாதையில் ஸ்கேட்டிங் போகிறவர்களும் உண்டு.
நடப்பவர்களில் வயதானவர்களும் அநேகம்  என்பதே என்னை  மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
இதில் நான் கவனித்த ஒன்று என்னவென்றால் யாருமே கஷ்டப் பட்டுக் கொண்டு ஓடவில்லை நடக்கவில்லை .
  ஒரு சந்தோஷத்துடனேயே செய்கிறார்கள் . சென்னை நடைவாசிகளிடம் இந்த சந்தோஷம் மிஸ்ஸிங்கு

இதற்கு நானும் விதி விலக்கல்ல .
ன்னையும் சேர்த்துத் தான் சொல்கிறேன் . நடப்பதையே ஒரு தீராத வேலை என்பது போல் தான் செய்தேன் . நடக்கும் போதே வீட்டில் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றியும் ,மற்ற உப்புப் போறாத விஷயங்கள் என ,யோசனையில் முழுகி எழுந்தாலும் தீர்க்க முடியாத சமாச்சாரம்  பற்றிய  கவலையுடனுமே செய்தேன் இனி சென்னை சென்றதும் நடக்கும் போது இந்த வெட்டிக் கவலைகளையெல்லாம் விட்டொழித்து விட்டு நடையில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று தீர்மானித்துள்ளேன் .

மழைக்காலத்தில் இந்த மலையைச் சுற்றிய பாதை இப்படித் தான் இருக்குமாம் . ஐஸ்  ஸ்கேட்டிங் போகிற இடமாக இது மாறிவிடுமாம்   .

  • மலை மீது ஏறிச் சென்று பார்த்தால்தான் மலையின் முழு அழகும் தெரியும் என்கிறார்கள் எல்லோரும்..கால் வலி பயத்தினால் போகவில்லை